-எம்.கல்பனா
மதுரை அ.வைத்தியநாத ஐயர்
(1890 மே16 - 1955 பிப். 23)
தமிழ்நாட்டில்
தாழ்த்தப்பட்டோருக்காக பாடுபட்டவர்களுள் முதன்மையானவர் மதுரை வைத்தியநாத ஐயர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஹரிஜன
மக்கள் வழிபடுவதற்காக அவர் நடத்திய ஆலய நுழைவுப் போராட்டம், சரித்திரத்தின் பொன்னேடுகளில்
பொறிக்கப்பட்டதாகும்.
தஞ்சை
மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த
விஷ்ணம்பேட்டை, கொள்ளிடக்கரை
என்னும் ஊரில்
அருணாசலம் - லட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு 1890 மே 16இல் இரண்டாவது மகனாகப்
பிறந்தார் வைத்தியநாதன்.
வைத்தியநாதனின் தந்தைக்கு
புதுக்கோட்டை மகாராஜாவின் பள்ளியில் கணித ஆசிரியராகப்
பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்ததால் குடும்பத்துடன் புதுக்கோட்டைக்குக்
குடியேறினர்.
வைத்தியநாதய்யர் மதுரை
சேதுபதி உயர்நிலைப்பள்ளியில்
படித்தார். படிப்பிலும்
ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கினார். 1909ஆம் ஆண்டு
SSLC தேர்வில் மாகாணத்தில் இரண்டாவது இடமும் கணிதப்
பாடத்தில் முதலிடமும்
பெற்று வெற்றி
அடைந்தார். பள்ளி நிர்வாகம் அவருக்கு தங்கப்
பதக்கம் கொடுத்து சிறப்பித்தது.
மதுரைக் கல்லூரியில்
மேற்படிப்பைத் தொடர்ந்தார். FA படித்து மாகாணத்தில்
நான்காம் இடத்தையும்
கணிதப் பாடத்தில்
முதலிடமும் பெற்றார். அவருக்கு நீலகண்ட சாஸ்திரி தங்கப்பதக்கமும், ஃபிஷெர் தங்கப்
பதக்கமும் வழங்கப்பட்டன.
சென்னை மாநிலக்
கல்லூரியில் BA வகுப்பில் சேர்ந்தார்.
1914ஆம் ஆண்டு BA படிப்பிலும் முதல்
வகுப்பில் தேர்ச்சி
பெற்றார். பிறகு
பிஷப் ஹீபர் உயர்நிலைப் பள்ளியில் ஓராண்டு
காலமும், மசூலிப்பட்டிணம்
ஹிந்து உயர்நிலைப்
பள்ளியில் ஓராண்டு காலமும் கணித
ஆசிரியராகப் பணியாற்றினார். அத்தருணத்தில் தனிப்பட்ட
முறையில் சட்டப்
படிப்பு படிக்கலானார். அரசாங்கம்
நடத்திய தேர்வில்
வெற்றி பெற்று
வழக்கறிஞர் ஆனார்.
இதனிடையேவைத்தியநாதனுக்கு 18 வயதான போது
9 வயதே ஆன
அகிலாண்டம்மாளை பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். அன்று தொட்டு இறுதிவரை
அகிலாண்டம்மாள் வைத்தியநாத ஐயருக்கு ஏற்ற துணையாகத் திகழ்ந்தார்.
அவர்களுக்கு சுந்தரராஜன், சங்கரன், சதாசிவம் என
மூன்று மகன்களும்,
சுலோசனா, சாவித்ரி
என இரண்டு
மகள்களும் பிறந்தனர்.
மதுரையில் புகழ்பெற்ற வழக்கறிஞராக விளங்கிய வைத்தியநாதன், செல்வம்
ஈட்ட வாய்ப்பு
கிடைத்த போதும்
அதனை விடுத்து
நாட்டின் சுதந்திரப்
போராட்டத்தில் தன்னையும் தனது குடும்பத்தையும் ஈடுபடுத்திக்கொண்டார்.
மதுரை மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் அவர் செயல்பட்டார்.
மகாத்மா காந்தி நிறுவிய ஹரிஜன சேவா சங்கத்தின் தமிழகத் தலைவராகவும் அவர் இருந்தார்.
வேதாரண்யத்தில் நடந்த
உப்பு சத்தியாகிரகத்தில் ராஜாஜி கைதான
போது அங்கு
நடந்த கூட்டத்தில்
வைத்தியநாத ஐயர் தடையை மீறிப் பேசினார். அவரை ஆங்கிலேயர்கள் புளியமர விளாறால் ஐயரைத் தாக்கினர்.
0.5 கி.மீ. தூரம் தரையில்
இழுத்துச் சென்று
சித்ரவதை செய்து
உடலெங்கும் காயங்களுடன் சிறையில் அடைத்தனர்.
அவர் கள்ளுக்கடை மறியல், சட்டமறுப்பு
இயக்கம் போன்ற
போராட்டங்களில் ஈடுபட்டு, ஆங்கிலேயர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு
பலமுறை சிறை
சென்றுள்ளார். விடுதலைப்
போராட்டச் செலவுக்காக தனது மனைவியின்
நகைகளையும், வீட்டுப் பொருள்களையும் விற்றுப் பணம்
அளித்தவர். நீதிமன்ற
அபராதத்துக்காக ஆங்கிலேய அரசு அவரது காரையும்
சட்டப் புத்தகங்களை ஜப்தி செய்தது.
காங்கிரஸ் கட்சி அறிவித்த தனிநபர் சத்தியாகிரகம் போராட்டத்தில்
தனது மனைவி
அகிலாண்டம்மாளை ஈடுபடச் செய்தார் ஐயர். இதனால்
அகிலாண்டம்மாள் பல மாதங்கள் வேலூர் சிறையில்
சிறைத் தண்டனையை
அனுபவித்தார். தனது இளைய மகன் சங்கரனையும்
போராட்டத்தில் ஈடுபட வைத்தார். அவரும் பல மாதங்கள்
சிறையில் வாடினார். வைத்தியநாத ஐயர்
அலிப்புரம் சிறையில் இருந்தபோது அவரது மூத்தமகன்
இறந்தார். மகனின்
இறுதிச் சடங்கில்
கூட பங்கேற்க
முடியவில்லை. இவரது மகளின் திருமணம்
கூட சிறைத்
தண்டனை பரோல்
காலத்திலேயே நடந்து முடிந்தது.
ஹரிஜன
சேவா சங்கத்தின் தலைவராக இருந்த வைத்தியநாத
ஐயர் தனது வீட்டிலேயே சானார் (நாடார்),
ஆதி திராவிட
(ஹரிஜனம்) மாணவர்கள் தங்கியிருந்தனர். அவர் காந்தி அடிகள் வலியுறித்திய தீண்டாமை ஒழிப்பை முதன்மை நோக்கமாகக் கொண்டிருந்தார்.
அதற்காக தாழ்த்தப்பட்ட மக்களை ஆலயத்துக்குள் அழைத்துச்
செல்வதில் தீவிரமாக
இருந்தார்.
1934ல்
மதுரையிலிருந்து நாகர்கோவிலுக்கு நாடார் (சானார்), ஆதி திராவிட மக்களை
தம்மோடு அழைத்துச்
சென்ற அவர்
நாகநாத சுவாமி கோயிலை தரிசனம் செய்யவைத்தார். இதுபோல
பல கோயில்களுக்கும்
மக்களை அவர்
அழைத்துச் சென்றார்.
1936-ல் சென்னை மாகாணத்
தேர்தலில் வென்று ராஜாஜி முதல்வர் பதவி
ஏற்றதும், தாழ்த்தப்பட்ட மக்கள்
அனைத்து ஹிந்து ஆலயங்களிலும் தடையின்றி வழிபட ஏதுவாக ஆலயப் பிரவேசச் சட்டம் கொண்டுவந்தார். ஆயினும், எல்லா
ஆலயங்களிலும் தாழ்த்தப்பட்டவர்கள் வழிபடப் போராட
வேண்டி இருந்தது. இதனை உயர்ஜாதி
எனத் தங்கலைக் கருதிக்கொள்கிற மக்களே முன்னின்று சாதிக்க வேண்டும் என்பது காந்தி அடிகளின்
விருப்பமாக இருந்தது.
1937இல்
மகாத்மா காந்தி தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தபோது குற்றால அருவிக்குச்
சென்றுவிட்டு அங்கிருந்த குற்றாலநாத சுவாமி
ஆலயத்திற்குச் சென்றார். அங்கு தாழ்த்தப்பட்ட மக்கள்
உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அதேபோல
மதுரை மீனாட்சியம்மன்
கோயிலுக்குள்ளும் ஆதி திராவிட மக்களை அனுமதிக்கவில்லை. எனவே காந்தியடிகளும் கோயிலுக்குள்
நுழைய மறுத்து, தில்லி திரும்பினார். காங்கிரசாரிடமும்,
ஆச்சாரக் காப்பாளர்களிடமும்
பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிகழ்வாக
காந்தியடிகளின் ஆலய நுழைவு மறுப்பு அமைந்தது.
அதையடுத்து, வைத்தியநாத ஐயரிடம் மதுரை மீனாட்சி
அம்மன் ஆலயத்தில்
ஆலயப் பிரவேசம் நடத்தும் பொறுப்பு ராஜாஜியால் அளிக்கப்பட்டது. அவரும், நண்பர்
கோபால்சுவாமியுடனும், பின்னாளில் அமைச்சராக
இருந்த
மேலூர் திரு.கக்கன், முருகானந்தம், சின்னையா,
பூரணலிங்கம், முத்து ஆகிய ஹரிஜன சகோதரர்களுடனும் ஆலயத்தில் நுழைய முடிவு செய்தார்.
அவர்களைத் தாக்க சிலர் திட்டமிட்டிருந்தனர். இச்செய்தி
ராஜாஜிக்குத் தெரிந்தவிடன், அவர் தேவர் ஜாதி மக்களிடையே
செல்வாக்குப் பெற்ற காங்கிரஸ் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உதவியை
நாடினார்.
ராஜாஜியின்
வேண்டுதலுக்கு இணங்க முத்துராமலிங்கத் தேவரின் முழு ஆதரவும்
வைத்தியநாத ஐயருக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும்
பக்கபலமாக அமைந்தது.
ஐயர் தலைமையிலான ஆலயத்துக்குள் நுழையத் தயாரான
சமயம் எதிர்த்தரப்பில்
ஆயுதங்களுடன்
மற்றொரு கூட்டம்
அவர்களைத் தடுக்கத்
தயாராக இருந்தது. தேவர் தலைமையில்
அவரது ஆதரவாளர்கள் அங்கு வந்து நின்றதைப்
பார்த்தவுடன் அந்த வன்முறைக் கும்பல் ஓடி ஒளிந்தது.
1939 ஜூலை 8ஆம்
நாள் காலை
10 மணியளவில் பசும்பொன் முத்துராமலிங்கத்
தேவரின் பாதுகாப்புடன்,
சானார், ஆதிதிராவிடர் ஜாதிகளைச்
சார்ந்த மக்களுடன், காங்கிரஸ் ஆதரவாளர் புடைசூழ
மதுரை ஆலயப் பிரவேசம் செய்தார் வைத்தியநாத ஐயர்.
அதற்காக அவர் பிராமணர்களால் ஜாதி
விலக்கமும் செய்யப்பட்டார். ஆனாலும் மக்களின் வழிபாட்டு
உரிமைக்காக அவர் தீவிரமாகப் போராடினார். குறிப்பிட்ட
சமூகத்தினரை கோயிலுக்குள் வரவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தவர்கள்,
வைத்தியநாத ஐயரின் போராட்டம் அடைந்த வெற்றியைக் கண்டு,
மதுரை
தமிழ்ச் சங்கம் சாலையில் ஒரு பங்களாவில் சில
அர்ச்சகர்கள் மீனாட்சி கோயிலை அமைத்து தனி வழிபாடு
நடத்திவந்தனர். 1945-வரை இந்த
பூஜை நீடித்து
பிறகு சிதைந்து
போனது.
பின்னர் பழையபடி மீனாட்சியம்மன் கோயிலுக்கே அனைத்து
அர்ச்கர்களும் திரும்பினர்.
பின்னாளில் ஹரிஜன மக்களும் தாழ்த்தப்பட பிர ஜாதியினரும்
சுதந்திரமாக வழிபடும் நிலைமை இயல்பாக உருவானது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தங்கள்
வாழ்க்கை முழுவதும்
போராடினார் வைத்தியநாத ஐயர்.
மேலூர் சட்டப்பேரவை
உறுப்பினராக சிறிதுகாலம் வைத்தியநாத ஐயர் மக்கள்
நலப்பணிகளைச் செய்துள்ளார். தியாகசீலரான வைத்தியநாத
ஐயர் உடல்நலக்குறைவால் 1955 பிப்ரவரி 23ஆம்
நாள் காலமானார்.
அவர்தம் நினைவாக இந்திய அரசு 1999இல் அஞ்சல்தலையை வெளியிட்டு கௌரவித்துள்ளது.
குறிப்பு:
திருமதி. எம்.கல்பனா, ஆசிரியை. தேசிய சிந்தனைக் கழகத்தின் மதுரை கிளை உறுப்பினர்.
No comments:
Post a Comment