பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராய்
(பிறப்பு: 1865 ஜன. 28 - மறைவு: 1928 நவ. 17)
(கண்ணிகள்)
நாடிழந்து மக்களையு நல்லாளை யும்பிரிந்து
வீடிழந் திங்குற்றேன் விதியினையென் சொல்கேனே 1
வேதமுனி போன்றார் விருத்தரா மெந்தையிரு
பாதமலர் கண்டு பரவப் பெறுவேனோ? 2
ஆசைக் குமர நருச்சுனனைப் போல்வான்றன்
மாசற்ற சோதி வதனமினிக் காண்பேனோ? 3
அன்றிலைப்போன் றென்னை யரைக்கணமே னும்பிரிந்தால்
குன்றிமனஞ் சோர்வாளிக் கோலம் பொறுப்பாளோ? 4
வீடு முறவும் வெறுத்தாலு மென்னருமை
ஆதிமறை தோன்றியநல் லாரியநா டெந்நாளு
நீதிமறை வின்றி நிலைத்த திருநாடு 6
சிந்துவெனுந் தெய்வத் திருநதியு மற்றதிற்சேர்
ஐந்துமணி யாறும் அளிக்கும் புனனாடு 7
ஐம்புலனை வென்ற அறவோர்க்கு மாற்றலர்தம்
வெம்புலனை வென்ற எண்ணில் வீரருக்குந் தாய்நாடு 8
நல்லறத்தை நாட்டுதற்கு நம்பெருமான் கெளரவராம்
புல்லரைச் செற்றாழ்த்த புனிதப் பெருநாடு 9
கன்னாணுந் திண்டோட் களவீரன் பார்த்தனொரு
வின்னா ணொலிகேட்ட மேன்மைத் திருநாடு 10
கன்ன னிருந்த கருணைநிலம் தர்மனெனு
மன்ன னறங்கள் வளர்த்த புகழ்நாடு 11
ஆரியர்தந் தர்மநிலை யாதரிப்பான் வீட்டுமனார்
நாரியர்தங் காதல் துறந்திருந்த நன்னாடு. 12
வீமன் வளர்ந்த விறனாடு வில்லசுவத்
தாம னிருந்து சமர்புரிந்த வீரநிலம் 13
சீக்கரெனு மெங்கள் விறற்சிங்கங்கள் வாழதரு நல்
லாக்கமுயர் குன்ற மடர்ந்திருக்கும் பொன்னாடு 14
ஆரியர் பாழாகா தருமறையின் உண்மைதந்த
சீரியர் மெய்ஞ் ஞான தயாநந்தர் திருநாடு 15
என்னருமைப் பாஞ்சால மென்றேனும் காண்பேனோ?
பன்னரிய துன்பம் படர்ந்திங்கே மாய்வேனோ? 16
ஏதெல்லாம் பாரதத்தே இந்நாள் நடப்பனவோ?
ஏதெல்லாம் யானறியா தென்மனிதர் பட்டனரோ? 17
என்னை நினைந்து மிரங்குவரோ? அல்லாது
பின்னைத் துயர்களி லென் பேரு மறந்திட்டாரோ? 18
தொண்டுபட்டு வாடு மென்றன் தூய பெரு நாட்டிற்
கொண்டுவிட்டங் கென்னையுடன் கொன்றாலு மின்புறுவேன் 19
எத்தனைஜன் மங்கள் இருட்சிறையி லிட்டாலும்
தத்துபுனற் பாஞ்சாலந் தன்னில் வைத்தால் வாடுகிலேன். 20
குறிப்பு:பஞ்சநதத்தின் சிங்கமாக விடுதலைப் போராட்டக் காலத்தில் கர்ஜித்த தலைவர் லாலா லஜபத் ராய். அவர் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டபோது, மகாகவி பாரதி எழுதிய அற்புதமான கவிதை இது.
No comments:
Post a Comment