(புதிய பார்வையில் புதிய ஆத்திசூடி)
6. எடுத்த
காரியம் யாவினும் வெற்றி!
இளைஞர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்; அவர்கள் தங்கள்
குணத்தை, வலிமையை, அறிவை, சமூக உணர்வை, நடையழகை, எண்ணத்தை எவ்வாறு வளப்படுத்திக் கொள்ள
வேண்டும் என்றெல்லாம் சொன்ன பாரதி, அவற்றின் மூலமாக செய்ய வேண்டிய கடமைகளையும் பட்டியலிட்டுள்ளார்.
தனி மனித வளர்ச்சியானது அவனது குடும்பத்துக்கும்,
ஊருக்கும், அவன் பிறந்த நாட்டுக்கும், அதனால் இந்த உலகிற்கும் நன்மை தருவதாக அமைய வேண்டும்.
இதுவே பாரத பாரம்பரியம். அந்தக் கண்ணோட்டத்துடன் தான் கீழ்க்கண்ட அறிவுரைகளை பாரதி
வழங்குகிறார்:
எத்தகைய துயரம் வந்தாலும் தருமன் போல, ஹரிசந்திரன்
போல, தனது சுயதர்மத்தைக் கைவிடாமல், கேட்டினை எதிர்த்து நிற்க வேண்டும் (20); கொடுமை
நிகழும்போது அதை வேடிக்கை பார்ப்பதோ, கண்டும் காணாமல் செல்வதோ தகாது. அதனை எதிர்த்து
நிற்க வேண்டும் (22); மனிதரிடத்து அன்பு பரவுவதை எப்பாடுபட்டேனும் காத்தல் வேண்டும்
(41); இந்தத் தேசம் உன்னுடையது. இதனைக் காப்பாற்ற வேண்டியது உனது கடன் (49); நாம் இருக்கும்
நாட்டையோ, நமக்கு உரிமையான பூமியையோ இழக்க சம்மதித்தல் கூடாது (70); உழைப்பால் நாம்
பெற்ற பயன்களை விட்டுத்தரக் கூடாது (24); சூரியன் போல ஓய்வின்றி எல்லா நாளும் கடமையாற்ற
வேண்டும் (55); எந்த ஒரு செயற்களத்திலும் முதன்மையானவனாக நிற்க வேண்டும். போர்முனையில்
நிற்கத் தயங்குதல் கூடாது (79);
பதினாறு பேறுகள் என்று சொல்லப்படும் அனைத்து வகைச்
செல்வங்களையும் முயற்சியால் வென்று இனிதே வாழ வேண்டும் (44); பெண்களைச் சிறப்பிக்க
வேண்டும். சகதர்மினியான மனைவியின் மாண்பை உயர்த்த வேண்டும். பெண்ணடிமைத்தனம் கூடாது
(50); ஊக்கமுடைய வெளிநாட்டவர்கள் சாதனை படைப்பது போல, மனம் தளராது, இடையறாது முயற்சிக்க
வேண்டும் (86); இவ்வுலகம் இயங்கக் காரணமான இல்லற வாழ்வில் ஈடுபட்டு லௌதீகச் செயல்களில்
முழுமை பெற வேண்டும் (102); நல்ல விளைவுக்குத் தேவையான நல்ல விதைகளைத் தேர்வு செய்து
விதைக்க வேண்டும் (105);
பழமையில் பெருமிதம் கொள்ளலாம். எனினும், புதியன
செய்ய விரும்ப வேண்டும் (69); வேதம் கூறும் விழுமிய நற்பொருளை புதுமையாக வெளிப்படுத்த
வேண்டும் (108); நமது லட்சியம் பெரிதாக இருக்க வேண்டும். அமரத்துவமான நமது இலக்கும்
அழிவற்றதாக இருக்க வேண்டும் (71); இறைவனின் திருவிளையாடலில் ஒரு கருவியே நாம் என்பதையும்,
நாம் ஒவ்வொருவரும் கடவுளின் அம்சம் என்பதையும் மறக்கக் கூடாது (48); இந்த உலகிற்கு
தலைமை தாங்கப் பிறந்தவன் நீ என்ற கடமையை (109) உணர்ந்து எந்நாளும் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறாக, தனி மனிதரின் இளைஞரின் கடமையை நினைவுறுத்தும்
மகாகவி பாரதியின் இறுதி இலக்கு, நமது இளைஞர்கள்
வையத் தலைமை கொள்ள வேண்டும் என்பதே.
செயற்கரிய செய்வாரே பெரியர்; சிறியர்
செயர்கரிய செய்கிலா தார்
என்று திருவள்ளுவர் கூறும் திருக்குறள் (26), யாரும்
செய்ய இயலாத அரிய செயலைத் துணிந்து செய்பவனையே பெரியோன் என்று வாழ்த்துகிறது. அத்தகைய
அரும் செயலை ஆற்றுவோரே பாரதி கனவு கண்ட நவயுக இளைஞர்கள்.
நல்லதோர் வீணை செய்தே – அதை
நலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி- எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்!
வல்லமை தாராயோ- இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி சிவசக்தி- நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
-என்ற பாடலில் (வேண்டுவன) பாரதியின் ஆன்மவேகம்
வெளிப்படுகிறது. அவர் விரும்பிய இளைய சமுதாயம் பூமிக்கு பாரமானது அல்லர்; எமது இளைஞர்கள்
இந்த பூமியைப் புதுப்பிக்கப் பிறந்தவர்கள். இந்த உலகம் பயனுற வாழ்வதற்காக வல்லமையைத்
தவமிருந்து பெற்றவர்கள் என்பதே மகாகவி பாரதியின் புதிய ஆத்திசூடி விளக்கம்.
7. புதிய
பார்வையும் புதிய பாதையும்…
காலந்தோறும் இலக்கியங்கள் பிறக்கின்றன. காலம் மாறுவதற்கேற்ப
இலக்கியங்களிலும் காட்சிகள் மாறுகின்றன. எனினும் அவற்றின் அடிநாதம் மானுடகுல உயர்வே.
பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல, கால வகையினானே
என்பது நன்னூல் நூற்பா (462) கூறும் இலக்கணம்.
அதன்படியே பாலர் வகுப்பில் பயிலும் ஆத்திசூடியை புதிய பார்வையில் மீண்டும் படைத்திருக்கிறார்
மகாகவி பாரதி. இதில் பெரும்பாலான பகுதிகளில் அவர் ஔவையுடன் ஒரே பாதையில் தான் பயணிக்கிறார்.
சோம்பித் திரியேல் (ஔவை- 54)- கெடுப்பது சோர்வு
(பாரதி- 19); நூல் பல கல் (ஔவை- 71)- நூலினைப் பகுத்துணர் (பாரதி- 59); இளமையில் கல்
(ஔவை- 29)-, கற்றது ஒழுகு (பாரதி- 13); நயம்பட உரை (ஔவை- 17)- சொல்வது தெளிந்து சொல்
(பாரதி- 34); கீழ்மை அகற்று (ஔவை- 35)- கீழோர்க்கு அஞ்சேல் (பாரதி- 16); நோய்க்கு இடங்கொடேல்
(ஔவை- 76)- மூப்பினுக்கு இடங்கொடேல் (பாரதி- 80); நெற்பயிர் விளை (ஔவை-72)- மேழி போற்று
(பாரதி- 82).
-என, ஔவையும் பாரதியும் ஒத்த கருத்துடன் ஒரே பாதையில்
பயணிக்கும் இடங்கள் மிகவே உள்ளன.
எனினும், அடிமைப்பட்ட நாட்டில் இருந்த பாரதியின்
காலம் சில இடங்களில் ஔவையுடன் அவரை மாறுபடச் செய்வதையும் காண்கிறோம்.
ஆறுவது சினம் (ஔவை- 2)- ரௌத்திரம் பழகு (பாரதி-
96); தையல் சொல் கேளேல் (ஔவை- 63)- தையலை உயர்வு செய் (பாரதி- 50); மீதூண் விரும்பேல்
(ஔவை- 91)- ஊண் மிக விரும்பு (பாரதி- 6); தொன்மை மறவேல் (ஔவை- 64)- தொன்மைக்கு அஞ்சேல்
(பாரதி- 51); போர்த்தொழில் புரியேல் (ஔவை- 87)- போர்த்தொழில் பழகு (பாரதி74); முனை
முகத்து நில்லேல் (ஔவை- 92) – முனையிலே முகத்து நில் (பாரதி- 79).
மேற்கண்டவாறு ஔவைப்பாட்டியுடன் பேரன் பாரதி கருத்து
மாறுபடும் இடங்கள் எண்ணி மகிழத் தக்கன. அதேபோல, ஔவை சொன்னதைவிட ஒருபடி மேலாக பாரதி
செல்லும் இடங்களும் உள்ளன.
தேசத்தோடு ஒட்டி வாழ் (ஔவை- 62)- தேசத்தைக் காத்தல்
செய் (பாரதி- 49); தெய்வம் இகழேல் (ஔவை- 61)- தெய்வம் நீயென்று உணர் (பாரதி- 48). ஆகிய
வரிகளில் இருவரின் உயர்ந்த நோக்கம் ஒன்றுடன் ஒன்று போட்டியிடுவதைக் காண முடிகிறது.
ஔவையின் ஆத்திசூடி, தமிழ்ப் பேரரசுகளின் வீழ்ச்சிக்
காலத்தில் எழுதப்பட்டது. சமுதாயத்தில் ஒரு கட்டமைப்பையும் ஒழுங்கையும் உருவாக்கவே நீதிநூல்கள்
எழுதப்பட்டன. அக்காலத்தில் அதனை ஆத்திசூடி முழுமையாக செய்தது.
பாரதியின் காலம், தாய்நாடு மிலேச்சர்தம் கொடுங்கரங்களில்
சிக்கித் தவித்த காலம். எனவே, சில இடங்களில் அவர் முந்தைய கட்டுக்களைத் தகர்க்கத் துணிகிறார்.
இதுவே பாரதி சில இடங்களில் ஔவையுடன் மாறுபடக் காரணம். இது அவரது புதிய பார்வை. அதனால்
தமிழ் இலக்கியத்தில் விளைந்தது புதிய பாதை.
பாரதியின் முதல் இலக்கு அச்சம் தவிர்ப்பது. அதன்
இறுதி இலக்கு வையத் தலைமை கொள்வது. அதற்கான கருவிகளை மிகத் தெளிவாக வரையறுத்திருக்கிறார்
மகாகவி.
பாரத பூமி பழம்பெரும் பூமி.
நீரதன் புதல்வர், இந்நினைவு அகற்றாதீர்!
என்று ‘சிவாஜி’ கவிதையில் பாரதப் புதல்வர்களுக்கு நினைவுறுத்தும்
மகாகவி பாரதி,
“எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்”
என்றுரைத்தான் கண்ண பெருமான்;
எல்லாரும் அமரநிலை எய்து நன்முறையை
இந்தியா உலகிற்கு அளிக்கும்- ஆம்
இந்தியா உலகிற்கு அளிக்கும்- ஆம் ஆம்
இந்தியா உலகிற்கு அளிக்கும்!
என்று ‘பாரத சமுதாயம்’ கவிதையில் முழங்குகிறார். இதுவே அவரது இதயகீதம்.
உலகில் அமைதி தவழ வேண்டுமானால், பாரதம் உலகத் தலைமை கொள்ள வேண்டும் என்பதே பாரதியின்
அடிநாதம். வையத் தலைமை கொள் என்று பாரத இளைஞனுக்கு அவர் ஆணையிடுவதன் தாத்பரியம் அதுவே.
இதனையே சுவாமி விவேகானந்தரும் தீர்க்கதரிசனமாக
உரைத்திருக்கிறார்:
எனது வீர இளைஞர்களே! செயலில் ஈடுபடத் தொடங்குங்கள். தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்….
நம்புங்கள்! உறுதியாக நம்புங்கள்! இந்தியா கண்விழித்து எழுந்திருக்க வேண்டும் என்று ஆண்டவன் கட்டளை பிறந்துவிட்டது. இந்தியா எழுச்சி பெற்று முன்னேற்றப் பாதையில்தான் செல்ல வேண்டும் என்று இறைவன் ஆணை பிறப்பித்தாகிவிட்டது.
இப்போதிருக்கும் இந்தக் குழப்பத்திலிருந்தும், போராட்டத்திலிருந்தும் மகிமை பொருந்திய பரிபூரண எதிர்கால இந்தியா கிளம்பி எழுவதை நான் என் மனக்கண்ணால் பார்க்கிறேன். அது எவராலும் வெல்ல முடியாததாகக் கிளம்பி எழும்புவதை நான் என் மனக்கண்ணால் பார்க்கிறேன்…
புராதன பாரத அன்னை மீண்டும் ஒரு முறை விழிப்படைந்துவிட்டாள். தனது அரியணையில் அவள் அமர்ந்திருக்கிறாள். புத்திளமை பெற்று, என்றுமே இல்லாத அரும்பெரும் மகிமைகளோடும் அவள் திகழ்கிறாள். இந்தக் காட்சியைப் பட்டப்பகல் வெளிச்சத்தைப் போல் நான் தெளிவாகப் பார்க்கிறேன். அமைதியும் வாழ்த்தும் நிறைந்த குரலில் இந்த பாரத அன்னையை உலகம் முழுவதிலும் பிரகடனப்படுத்துங்கள்!
மகான்களின்
வாழ்த்துகள் பொய்ப்பதில்லை. மகாகவியின் கவிதை வரிகளோ மந்திரம் போன்றவை. எனவே, சுவாமி
விவேகானந்தரின் அடியொற்றி, மகாகவி பாரதியின் வழிகாட்டுதலில் பாரத இளைஞன் நடையிடட்டும்!
அவனுக்காக ஒளிபொருந்திய காலம் உறுதியாகக் காத்திருக்கிறது. ஏனெனில் அதை உருவாக்கப்
போவதே அவன்தான்!
பாரத அன்னை வெல்க!
(நிறைவு)
No comments:
Post a Comment