17/10/2020

சிவஞானபோதம் (கவிதை)

-மெய்கண்டார்

சிறப்புப் பாயிரம்

நேரிசை ஆசிரியப்பா

மலர்தலை உலகின் மாயிருள் துமியப்
பலர்புகழ் ஞாயிறு படரின் அல்லதைக்
காண்டல் செல்லாக் கண்போல் ஈண்டிய
பெரும்பெயர்க் கடவுளிற் கண்டுகண் இருள்தீர்ந்து
அருந்துயர்க் குரம்பையின் ஆன்மா நாடி
மயர்வுஅற நந்தி முனிகணத்து அளித்த
உயர்சிவ ஞான போதம் உரைத்தோன்
பெண்ணைப் புனல்சூழ் வெண்ணெய்ச் சுவேதவனன்
பொய்கண்டு அகன்ற மெய்கண்ட தேவன்
பவநனி வன்பகை கடந்த
தவரடி புனைந்த தலைமை யோனே. 

மங்கல வாழ்த்து

கல்லால் நிழன்மலை
வில்லார் அருளிய
பொல்லார் இணைமலர்
நல்லார் புனைவரே

அவையடக்கம்

தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்
எம்மை உடைமை எமை இகழார் - தம்மை
உணரார் உணரார் உடங்குஇயைந்து தம்மில்
புணராமை கேளாம் புறன். 

பொதுவதிகாரம்: பிரமாணவியல்

முதல் சூத்திரம்

அவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையின்
தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்

இரண்டாம் சூத்திரம்

அவையே தானே ஆய், இரு வினையிற்
போக்கு வரவு புரிய ஆணையின்
நீக்கம் இன்றி நிற்கும் அன்றே

மூன்றாம் சூத்திரம்

உளதுஇலது என்றலின் எனதுடல் என்றலின்
ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் கண்படின்
உண்டிவினை இன்மையின் உணர்த்த உணர்தலின்
மாயா இயந்திரத் தனுவினுள் ஆன்மா

பொதுவதிகாரம்: இலக்கணவியல்

நான்காம் சூத்திரம்

அந்தக் கரணம் அவற்றினொன்று அன்று அவை
சந்தித்தது ஆன்மாச் சகச மலத்து உணராது
அமைச்சுஅரசு ஏய்ப்பநின்று அஞ்ச அவத்தைத்தே

ஐந்தாம் சூத்திரம்

விளம்பிய உள்ளத்து மெய்வாய் கண்மூக்கு
அளந்து அறிந்து அறியா ஆங்குஅவை போலத்
தாம்தம் உணர்வின் தமியருள்
காந்தம் கண்ட பசாசத்து அவையே

ஆறாம் சூத்திரம்

உணருரு அசத்து எனின் உணராது இன்மையின்
இருதிறன் அல்லது சிவசத்தாம் என
இரண்டு வகையின் இசைக்குமன் உலகே

உண்மை அதிகாரம்: சாதனாவியல்

ஏழாம் சூத்திரம்

யாவையும் சூனியம் சத்துஎதிர் ஆகலின்
சத்தே யறியாது அசத்துஇலது அறியா
இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா

எட்டாம் சூத்திரம்

ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே

ஒன்பதாம் சூத்திரம்

ஊனக்கண் பாசம் உணராப் பதியை
ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி
உராத்துனைத் தேர்த்து எனப் பாசம் ஒருவத்
தண் நிழலாம் பதிவிதி எண்ணும் அஞ் செழுத்தே

உண்மை அதிகாரம் : பயனியல்

பத்தாம் சூத்திரம்

அவனே தானே ஆகிய அந்நெறி
ஏகன் ஆகி இறைபணி நிற்க
மலமாயை தன்னொடு வல்வினை இன்றே

பதினொன்றாம் சூத்திரம்

காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்
காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்
அயரா அன்பின் அரன்கழல் செலுமே

பன்னிரண்டாம் சூத்திரம்

செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா
அம்மலங் கழீஇ அன்பரொடு மரீஇ
மால்அற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயம் தாமும் அரன் எனத் தொழுமே


***

மெய்கண்ட தேவர்


சைவர்களால் 'புறச் சந்தான குரவர்கள்' எனப் போற்றப்படும் நால்வருள் முதன்மையானவர் மெய்கண்ட தேவர். சைவ சித்தாந்த நூல்களுள் தலையாயதான சிவஞான போதத்தை இயற்றியவர் இவரே.

மெய்கண்ட தேவர், திருவெண்ணெய்நல்லூரில், வேளாண் குடியில் பிறந்தவர். 13-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்  (பொ.யு.பி. 1232) வாழ்ந்தவராகக் கருதப்படுகிறது. 

இவர் பரஞ்சோதி முனிவர் என்னும் பெரியாரிடம் ஞானோபதேசம் பெற்றவர். இவர் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளைத் தமிழில் வெளிக்கொணர்ந்த மாணவர் பரம்பரையை உருவாக்கியவர். இவரிடம் 49 மாணவர்கள் கல்வி கற்றனர். இவர்களுள் அருணந்தி சிவாச்சாரியார் தலை சிறந்தவர்.

இவர் தனது குருவின் சிவஞான போதத்தை அடியொற்றிச் சிவஞான சித்தியார், இருபா இருபஃது என்னும் இரு நூல்களை இயற்றினார். மெய்கண்டாரின் இன்னொரு மாணவரான மனவாசகம் கடந்தார் என்பவர் உண்மை விளக்கம் என்னும் சித்தாந்த நூலை இயற்றினார். 

தமக்குப்பின் சிவஞானத்தைப் பரப்பி, சைவ ஆசாரிய பரம்பரையை வளர்த்துவர அருணந்தி சிவாசாரியாரைப் பணித்துவிட்டு மெய்கண்டார் இறைவன் திருவடியடைந்தார்.

சிவஞானபோதம்- அமைப்பு

சிவபெருமானைப் பற்றிய ஞானத்தை நமக்குப் போதிக்கும் (உணர்த்தும்) நூல் சிவஞானபோதம் எனப்படும். இதுவே தமிழில் வெளிவந்த முதல் சித்தாந்த சாத்திர நூல். 

சிவஞானபோதம், நூற்பாவால் ஆகிய 12 சூத்திரங்களும் (40 வரிகள்), பொல்லாப்பிள்ளையார் வணக்கம், அவையடக்கம் என்ற இரு பாடல்களும் கொண்டது. 

இரண்டு அதிகாரங்கள், நான்கு இயல்கள், பன்னிரண்டு சூத்திரங்கள் என இந்நூல் பகுக்கப்பட்டுள்ளது. அவை:

அ. பொது அதிகாரம்:
1. பிரமாண இயல் - 3 சூத்திரங்கள்
2. இலக்கண இயல் - 3 சூத்திரங்கள்

ஆ. உண்மை அதிகாரம்: 
3. சாதனா இயல் - 3 சூத்திரங்கள்
4. பயனியல் - 3 சூத்திரங்கள்.

சைவ சித்தாந்தத்தின் குறுகத் தரித்த குறள்கள் போல, மாபெரும் ஆலமரத்தை அடக்கியுள்ள சிறு வித்துகள் போல, சிவஞானபோதத்தின் சூத்திரங்கள் விள்ஙகுகின்றன. இதனை விளக்கி சிவஞானசித்தியார் என்ற பெரும் நூலை, மெய்கண்டாரின் சீடர் அருணந்தி சிவாசாரியார் படைத்தார்.



 

No comments:

Post a Comment