-ராதிகா மணாளன்
சகோதரி நிவேதிதை (1867 அக். 28- 1911 அக். 13) |
“எனக்கு ஒரு கடிகையிலே, மாதாவினது மெய்த்தொண்டின் த்ன்மையையும், துறவுப் பெருமையையும் சொல்லாமல் உணர்த்திய குருமணியும், பகவான் விவேகானந்தருடைய தர்மபுத்திரியும் ஆகிய ஸ்ரீமதி நிவேதிதாதேவிக்கு இந்நூலை ஸமர்ப்பிக்கின்றேன்”
-இது, தனது ‘ஜன்மபூமி’ நூலில் (1908) மகாகவி பாரதி எழுதியுள்ள ஸமர்ப்பண முன்னுரை. தமிழகம் தந்த தேசியகவியான மகாகவி பாரதியால் குருமணி என்று போற்றப்பட்டவர் சகோதரி நிவேதிதை. பாரதிக்கு மட்டுமல்ல, விடுதலைப் போரில் ஈடுபட்ட பல முன்னணித் தலைவர்களுக்கு வழிகாட்டிய பெருந்தகை சகோதரி நிவேதிதை.
சுவாமி விவேகானந்தரின் தர்ம புத்திரியாக, அன்னை சாரதா தேவியின் செல்ல மகளாக, பாரதத்துக்கு அயர்லாந்து தேசம் வழங்கிய புரட்சிப் பெண்ணாக, மகரிஷி அரவிந்தருக்கு அக்னிக்கொழுந்தாக, தாகூருக்கு லோகமாதாவாக விளங்கியவர் சகோதரி நிவேதிதை.
பிறப்பும் வளர்ப்பும்…
இங்கிலாந்தின் ஆளுகைக்கு உள்பட்ட அயர்லாந்து தேசத்தில், டங்கன்னன் என்னும் ஊரில், 1867, அக்டோபர் 28-ஆம் நாள், சாமுவேல் நோபிள்- மேரி ஹாமில்டன் தம்பதிக்கு மகளாகப் பிறந்தார் மார்கரெட் எலிசபெத். அவர்தான் பின்னாளில் சகோதரி நிவேதிதையாக மலர்ந்தவர்!.
மார்கரெட்டின் தந்தை கிறிஸ்தவ மத போதகர். எனவே வீட்டில் சமயப் பற்றுடன் அவள் வளர்க்கப்பட்டாள். இளம் வயதிலேயே கல்வியில் சிறந்து விளங்கிய அவள், ஹாலிபாக்ஸ் கல்லூரியில் முதன்மையானவளாகத் திகழ்ந்தாள். நாட்டுப்பற்று, ஒழுக்கம், சேவை மனப்பான்மை ஆகியவை அவளுடைய உள்ளத்தில் இயல்பாகவே அமைந்திருந்தன.
கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன், மார்கரெட் கெஸ்விக் நகரில் உள்ள ஒரு பள்ளியில் 1884-இல் ஆசிரியையாகச் சேர்ந்தாள். வெவ்வேறு பள்ளிகளில் பணிபுரிந்த அவள், 1892-இல் லண்டனில் சொந்தமாக ஒரு பள்ளியை நிறுவினாள். அது விரைவில் பிரபலமடைந்தது.
ஆசிரியையாகப் பணியாற்றியபடியே, பல பத்திரிகைகளில் மார்கரெட் கட்டுரைகளை எழுதிவந்தாள். அக்கட்டுரைகள் அவளது எழுத்தாற்றலை வெளிப்படுத்தின. அதேசமயம், ஆன்மிக நாட்டத்துடன் பல நூல்களைக் கற்றும் அவளது மனம் நிறைவடையவில்லை.
சத்குருவின் சந்திப்பு…
அந்தச் சமயத்தில்தான், சுவாமி விவேகானந்தர் லண்டன் சென்றார். 1893-இல் சிகாகோவில் நடைபெற்ற சர்வமத சபையில் உரையாற்றி உலகப் புகழ் பெற்றிருந்த சுவாமிஜி அப்போது பல வெளிநாடுகளில் பயணித்து ஹிந்து தர்மத்தைப் பரப்பி வந்தார். லண்டன் சென்ற சுவாமிஜியின் உரையை மார்கரெட் கேட்டாள். தொடர்ந்து எட்டு மாதங்கள் இங்கிலாந்தில் சுவாமிஜி பல இடங்களில் நிகழ்த்திய உரைகள் மார்கரெட்டின் மனதில் ஆழப் பதிந்தன. தவிர, சுவாமிஜியுடன் நேரில் விவாதித்தும் அவர் தெளிவு பெற்றாள்.
ஒருநாள், சுவாமிஜி தனது சொற்பொழிவில், “இறைச்செல்வம் தவிர வேறு எதுவும் வேண்டாத தீரத்துடன் முன்வரும் இருபது ஆண்களும் பெண்களுமே இந்த உலகுக்கு இப்போது தேவை” என்று முழங்கினார். அந்த அறிவுரை மார்கரெட்டைச் சிந்திக்க வைத்தது. அவள் சிறுகச் சிறுக, சுவாமி விவேகானந்தரின் பிரதம சிஷ்யையாக மாறி வந்தாள்.
ஒருநாள் நேரடியாகவே, “என் நாட்டுப் பெண்களின் கல்விக்காக நான் சில திட்டங்களை வைத்திருக்கிறேன். அவற்றைச் செயல்படுத்த நீ உதவியாக இருக்க முடியும்” என்றார் சுவாமிஜி. இந்த மொழிகள் மார்கரெட்டின் உள்ளத்தில் ஓர் எழுச்சியை ஏற்படுத்தின.
சுவாமிஜி நாடு திரும்பியபோது, மார்கரெட்டும் பாரதம் வர விரும்பினாள். ஆனால், சிறிதுகாலம் லண்டனில் இருந்து, நன்கு ஆராய்ந்த பிறகே இந்தியா வருமாறு சுவாமிஜி கூறிவிட்டார். பாரதம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அவளிடம் உறுதிப்பட்டபோது சுவாமிஜிக்கு கடிதம் எழுதினாள். அப்போது சுவாமிஜி எழுதிய கடிதம் மகத்தானது.
பாரதத்துக்குப் பயணம்…
“இந்தியாவுக்கான பணியில் எதிர்காலத்தில் உனக்கு மகத்தான பங்கு உள்ளது என்று உறுதியாக நான் நம்புகிறேன்… இந்தியப் பெண்களிடையே வேலை செய்ய இப்போது பெண் சிங்கமே தேவை… ஆனால், இந்தியாவில் பல இடர்ப்பாடுகளை நீ சந்திக்க வேண்டியிருக்கும்… அதை மீறும் துணிவு இருந்தால் உன்னை வரவேற்கிறேன்” என்றார் சுவாமிஜி. அதையேற்று, உள்ள உறுதியுடன் மார்கரெட் இந்தியா வந்தாள். அந்த நன்னாள்: 1898, ஜனவரி 28.
இந்தியா வந்த மார்கரெட்டுக்கு 1898, மார்ச் 25-இல் ‘நிவேதிதை’ என்று பெயர் சூட்டினார் குருநாதர் சுவாமி விவேகானந்தர். அது மட்டுமல்ல, சுவாமிஜியின் குருமாதாவான அன்னை சாரதாதேவியின் பரிபூரண ஆசியும் அவருக்குக் கிட்டின.
கொல்கத்தாவில் சுவாமிஜியின் ஆன்மிகப் பணிகளில் உதவி வந்த சகோதரி நிவேதிதை, அதே ஆண்டில் ஆயுதபூஜை நன்னாளில் ஒரு பள்ளியைத் துவங்கினார். அப்பள்ளியில் வங்கப் பெண்களின் முன்னேற்றத்துக்காக பல பணிகளை நிவேதிதை மேற்கொண்டார்.
1899-இல் கொல்கத்தாவை பிளேக் நோய் தாக்கியபோது, தொற்றுநோய் அச்சமின்றி, மருத்துவ, சுகாதாரப் பணிகளில் நிவேதிதை ஈடுபட்டார். அதன் மூலம் தனது குருநாதரின் ‘ஜீவசேவையே சிவசேவை’ என்ற உபதேசத்தை நடைமுறைப்படுத்தினார்.
1902, ஜூலை 4-இல் சுவாமிஜி உலக வாழ்வை நீத்தார். அதுவரை குருவின் வழிகாட்டலில் சேவையாற்றிவந்த நிவேதிதைக்கு, சுயமாகச் செயல்பட வேண்டிய நிலை வந்தது. அப்போது அவரது கவனம் ஆன்மிகம் மட்டுமல்லாது, பிற துறைகளிலும் திரும்பியது. குறிப்பாக, இந்திய விடுதலைப் போராட்டம் அவரை ஈர்த்தது.
சுதந்திர கர்ஜனை…
நிவேதிதையின் தாய்நாடான அயர்லாந்தும் இங்கிலாந்தின் ஆதிக்கத்திலிருந்து விடுபடப் போராடி வந்ததால், இந்தியர்களின் விடுதலை உணர்வை அவரால் எளிதாகப் புரிந்துகொள்ள முடிந்தது. ஒரு பெண் துறவியாக அவர் பல இடங்களில் உரை நிகழ்த்தி விடுதலைப் போருக்கு ஊக்கமூட்டினார். ‘வந்தேமாதரம்’ அவரது பள்ளியின் பிரார்த்தனை கீதமானது.
விடுதலைப் போராட்ட வீரர்கள் பலரும் சகோதரி நிவேதிதையின் நண்பர்களாயினர். அவர்கள் நிவேதிதையிடம் விவாதித்து நல்வழி பெற்றுச் சென்றனர். மகரிஷி அரவிந்தர், பூபேந்திர பாலர், ராஷ் பிஹாரி கோஷ், சுரேந்திரநாத் பானர்ஜி, பாலகங்காதர திலகர், பிபின் சந்திர பாலர், ரவீந்திரநாத் தாகூர், மகாகவி பாரதி, கோபாலகிருஷ்ண கோகலே போன்ற தேசத் தலைவர்களுக்கு அவர் உறுதுணையாக இருந்தார். அதனால் ஆங்கிலேய அரசின் கண்காணிப்புக்கும் அவர் உள்ளானார்.
1906-இல் கொல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற மகாகவி பாரதி சகோதரி நிவேதிதையைச் சந்தித்தார். அப்போது பாரதியிடம் அவர் நடத்திய விவாதமே, தேசபக்தியும், பெண்ணுரிமையும் அவரது பாடல்களில் வெளிப்படக் காரணமானது. 1908-இல் தனது ‘ஸ்வதேச கீதங்கள்’ நூலை நிவேதிதைக்கு சமர்ப்பணம் செய்தார். அப்போது, தனக்கு பாரத தேவியின் ஸம்பூர்ண ரூபத்தைக் காட்டி அருளியவர் நிவேதிதை என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தனது ஆன்மிகப் பணியின் அங்கமாக, பாட்னா, லக்னௌ, காசி, மும்பை, நாக்பூர், சென்னை, சேலம் உள்ளிட்ட பல இடங்களுக்குப் பயணித்து, சகோதரி நிவேதிதை உரையாற்றினார். அப்போதும் அவரது உரைகளில் விடுதலை உணர்வே மேலோங்கி இருந்தது.
சுவாமி விவேகானந்தரின் இளவலும் புரட்சி வீரருமான பூபேந்திர பாலருக்கும் அவர் உதவி வந்தார். அனுசீலன் சமிதி போன்ற புரட்சிகர இயக்கங்களுடன் நிவேதிதைக்குத் தொடர்பு இருந்தது. தனது விடுதலைப் போராட்டத் தொடர்பு காரணமாக ராமகிருஷ்ண மடத்துக்கு ஆங்கிலேய அரசால் நெருக்கடி ஏற்பட்டபோது, மடத்தின் பணிகளிலிருந்து தன்னை அவர் விடுவித்துக் கொண்டார்.
பன்முக சேவையும், மண்ணுலக மறைவும்…
இயற்பியல் விஞ்ஞானி ஜெகதீஸ சந்திரபோஸின் அறிவாற்றலை ஆரம்பத்திலேயே உணர்ந்து அவருக்கு ஆதரவு நல்கியவர் நிவேதிதை. தனது கண்டுபிடிப்புகளுக்கு போஸ் காப்புரிமை பெறக் காரணமாகவும் நிவேதிதை இருந்தார்.
இவையல்லாது, எழுத்துப் பணிகளிலும் நிவேதிதை ஈடுபட்டார். அரவிந்தரின் ‘கர்மயோகி’ பத்திரிகையில் அவர் பணிபுரிந்தார். சுவாமி விவேகானந்தர் குறித்த ‘நான் கண்ட குருநாதர்’ என்ற அவரது நூல் புகழ் பெற்றது. இந்திய தேசிய உருவாக்கத்துக்கு அடிப்படையான பல நூல்களையும், ஆன்மிக நூல்களையும் அவர் எழுதியுள்ளார்.
அபனீந்திரநாத் தாகூர், ஆனந்த குமாரசாமி போன்ற இந்திய மேதைகள் அவரைச் சந்தித்ததால் சுதேசிக் கலையுணர்வு பெற்று, தங்கள் துறைகளில் அதை வளர்த்தனர்.
1906-இல் கிழக்கு வங்கத்தில் பஞ்சமும் வெள்ளச் சேதமும் ஏற்பட்டபோது, தனது உடல்நலிவைப் பொருட்படுத்தாமல் சேவைப் பணிகளில் நிவேதிதை ஈடுபட்டார். தொடர்ந்த கடும் உழைப்பால், அவரது உடல்நலம் பாதிப்புற்றது. அவர் தனது பள்ளியை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்துக்கு எழுதி வைத்தார்.
பிறகு ஓய்வெடுக்கச் சென்றபோது, டார்ஜிலிங்கில், 1911, அக்டோபர் 13-இல் சகோதரி நிவேதிதை மறைந்தார். பாரதம், தனக்காகவே உழைத்த ஓர் அரும்புதல்வியை இழந்தது.
வாழ்வே அர்ப்பணம்…
சகோதரி நிவேதிதை பிறப்பால் வெளிநாட்டவர் ஆயினும், பாரதத்தைத் தனது தாய்நாடாக வரித்துக் கொண்டவர்; இந்நாட்டுக்காக தனது உடல், பொருள், ஆவி, அனைத்தையும் அர்ப்பணித்தவர்.
தனது குருவின் ஆணையைச் சிரமேற்று பாரதம் வந்த அவர், பாரதத்தின் புதல்வியாகவே தன்னை மாற்றிக்கொண்டார். இந்திய பெண்களின் முன்னேற்றத்துக்காக மட்டுமல்லாது, இந்திய விடுதலைக்காகவும் அவர் பாடுபட்டார். ஒரு துறவி அரசியல் இயக்கங்களில் ஈடுபடலாமா என்ற கேள்வி எழுந்தபோது, சுதந்திரமற்றவர்களுக்கு விழிப்புணர்வூட்டுவதும் ஆன்மிகமே என்றார் அவர்.
தன்னை நேரில் சந்தித்த அனைவரிடமும் தன்னிடமிருந்த கனலை ஏற்றிவைக்கும் திறன் வாய்க்கப் பெற்றவராக சகோதரி நிவேதிதை ஒளிர்ந்தார்; சேவை மனப்பான்மையை வளர்ப்பதிலும் அவர் சிறப்புடன் மிளிர்ந்தார். நிவேதிதையிடம் சுதந்திரக் கனலைப் பெற்ற பாரதி, அரவிந்தர் போன்ற தலைவர்கள் அவரது மாசற்ற ஒளியை பதிவு செய்திருக்கிறார்கள்.
சந்தனம் தன்னைத் தேய்த்து நறுமணம் வழங்குவது போன்றது சகோதரி நிவேதிதையின் தியாக வாழ்க்கை. பெயருக்கு ஏற்றபடியே, பாரதத்தின் எழுச்சிக்காக அவர் நிவேதனமானார். இன்று நாடு நாடுவதும் நிவேதிதை போன்ற இளம் பெண் சிங்கங்களையே!
பாரத அன்னை வெல்க!
No comments:
Post a Comment