செல்வந்தன் என்பவன் பல பூக்கள் இழந்து உருவாக்கும் தேன் கூடு போல, ஏராளமான ஏழைகளின் பணத்தை அவர்களுக்கு தெரியாமலே எடுத்து செல்வத்தை குவிக்கின்றான் என்பதை கண்டு கொண்டது
ஒரு மனிதனின் தேவை அல்லது ஆசையினைப் பயன்படுத்தி அவனிடம் இருப்பதை எடுத்துச் சேர்ப்பதே செல்வம் என அறுதியிட்டு உணர்ந்தது
இதனைத்தான் 19ஆம் நூற்றாண்டில் கார்ல் மார்க்ஸ் சொன்னார்; ஏஞ்சல்ஸ், இங்கர்சால் என யார் யாரோ ஐரோப்பாவில் சொன்னார்கள், இதை பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே உணர்ந்திருந்த மதம் இந்து மதம்.
ஆனால் உடனடியாக புரட்சி செய், அடித்துப் பிடுங்கு, பொதுவுடமை பேசு என அது இறங்கவில்லை, அது மானிட சுபாவத்தை இன்னும் கூர்ந்து நோக்கியது.
இவ்வுலகில் பல விஷயங்கள் புரிந்து கொள்ள முடியாதவை என்பதை உணர்ந்தது அம்மதம், காட்டில் புலிக்கு மான் ஏன் உணவு என்பதில் தொடங்கி மானிடரில் ஒரு சிலருக்கு மட்டும் பெரும் வாய்ப்பும் அதிர்ஷ்டமும் பெருகுவது எப்படி என்பது வரை பல விஷயங்கள் புரிவதில்லை.
ஆனால் ஒரு மானிடன் சக மானிடர்கள் தன் கைப்பொருளை, உழைப்பைக் கொடுத்து அவனைச் செல்வந்தனாக்குவது சூழ்நிலை அல்லது ஒரு அறியாமை என முடிவுக்கு வந்தார்கள்.
இந்தச் சூழலும் அறியாமையும் கர்மாவாலோ கிரகபலன்களாலோ உருவாவதைக் கணித்தார்கள்; செல்வம் சேர்ப்பவனுக்கு தெளிவும் தந்திரமும் இருப்பதை உணர்ந்தார்கள்
இவ்வுலகில் அஷ்ட லஷ்மி என ஏன் இந்துக்கள் சொன்னார்கள் என்றால், ஒவ்வொருவருக்கும் இந்த எட்டு வகை ஆசிகளில் ஏதோ ஒன்று கண்டிப்பாய் இருக்கும்.
அந்த ஆசி இல்லா மனிதனே இல்லை, பரம்பொருள் அப்படித்தான் படைத்திருக்கின்றான்.
நோயில்லா நிலை, தானியம் நிறைந்திருப்பது, எதிர்ப்புகளைச் சமாளிக்கும் தைரியம், வாழ்வின் நற்பேறுகள் (நன்மனைவி, நல்ல பிள்ளைகள் என 16 வகை), தீராப் புகழ், எடுக்கும் காரியத்தில் சித்தி, கலை மனோபாவம், செல்வம் தொடர்ந்து பெருகும் வழி என எட்டு ஆசிகள் உண்டு
இந்த எட்டு வகை செல்வத்தைக் கொடுப்பவளை அஷ்ட லட்சுமி, எட்டு ஆசிகளையும் தரும் லட்சுமி என்றார்கள்.
ஆதிலட்சுமி, தானிய லட்சுமி, வீர லட்சுமி, கஜலட்சுமி (யானை போல அள்ளித் தருபவள்), சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, தனலட்சுமி.
இதில் எல்லோரும் ஒரு ஆசியாவது பெற்றிருக்கின்றார்கள். ஆனால் அது எது என்பதை தெரியாத வகையில் அவர்களின் அறிவு மறைக்கபட்டிருகின்றது, அந்த அறிவினைத் திறந்து கொடுத்தாலும் அவர்கள் கர்மா அதை விடுவதில்லை.
இது கல்வியால் மாறும், அடித்தால் மாறும், தெளிந்த போதனை சொன்னால் மாறும் என்பதல்ல, இது அவரவர் கர்ம பலன்.
உதாரணம், இந்தியாவின் தமிழகத்தில் பல காட்சிகள்.
இங்கே கூலித் தொழிலாளியும் ஒரு நாளுக்கு ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கின்றான், ஆனால் அதில் பாதியினை டாஸ்மாக் கடையிலே அழித்துவிடுகின்றான். மீதி என்னாகின்றது என்பது அவனுக்கே தெரியவில்லை.
இந்தியா சுதந்திர நாடு, அவன் அரசைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவனுக்கு உண்டு. ஆனால் காசுக்கும் பிரியாணிக்கும் மயங்கி தன் வோட்டினை நாசமாக்குகின்றான். இது நம்மை ஆளும் அரசைத் தேர்ந்தெடுக்கும் காரியமல்லவா எனும் அறிவு அவனுக்கு இல்லை, அதைச் சொன்னாலும் புரியாது.
சினிமா நட்சத்திரங்கள் நம்மைப் போல மனிதர்கள் தான் என்பதை அறியாமல், ஆயிரமாயிரம் ரூபாய்களை அள்ளி எறிகின்றான், அந்த நடிகனும் நடிகையும் இயக்குரும் கோடியில் குளிக்கின்றார்கள், இதெல்லாம் யார் பணம்?
ஆம், நடிகரும் நடிகையரும் தமிழ்நாட்டில் ரசிகர்களை ஒருவித மயக்கத்தில் வைத்திருக்கின்றார்கள் அல்லவா? சொன்னாலும் ரசிகனுக்குப் புரியாது அல்லவா? இதுதான் நடிகனுக்கு வாய்த்த லட்சுமி கடாட்சம்.
தமிழகக் கட்சிகள் இன்னும் மிகப் பெரிய உதாரணம்.
(ஆனால் அவர்கள் மனசாட்சி உள்ளவர்கள். அதனால்தான் மக்கள் பணம் மக்களுக்கே என தேர்தல் நேரம் கொஞ்சமாவது கொடுக்கின்றார்கள்; இந்தத் திரை நட்சத்திரங்கள்தான் மகா மோசம்.)
இன்னும் ஏராளம் சொல்லலாம், வெளிநாட்டு மது முதல் கார் வரை தன் உழைப்பை எல்லாம் கொட்டி வாங்கும் இந்தியர்களின் நிலை அதுதான்; வெள்ளையனின் வியாபாரத் தந்திரம் அது
காபி முதல் குளிர்பானம் வரை- அத்தகைய தேவையே இல்லாமல் மனிதன் வாழமுடியும், ஆனால் இந்தியர்கள் வெள்ளையனுக்கு அளவிடும் பணம் என்ன?
இன்னும் தெளிவாகச் சொல்ல உலக விஷயங்களுக்குச் செல்லலாம்.
அரபு நாடுகள், செல்வந்த நாடுகள். ஆனால் அவர்கள் பணமெல்லாம் அமெரிக்க ஆயுதங்கள் வாங்கவும் பாதுகாப்பு வாங்கவும் செலவழிக்கப்படுகின்றது. ஏன் என அவர்கள் சிந்திப்பதே இல்லை. அவர்கள் அறிவு அவ்வளவு மயங்கிற்று. நமக்குள்ளே ஒற்றுமை என்றால் ஏன் இந்தச் செல்வம் அமெரிக்காவுக்குச் செல்லும் என சிந்திப்பார்களா?
ஆப்ரிக்கா, ஆப்கன் முதல் எல்லா நாட்டின் நிலமை அதுதான்.
ஆம், எவ்வளவு சொன்னாலும் புரிகின்றவனுக்குத்தான் புரியும் இதன் பெயர்தான் லட்சுமி கடாட்சம்.
ஆனால் இப்படி அறியாமையிலும் சில தேவையிலும் இருப்பவர்களிடம் சம்பாதிப்பது தவறு என உணர்ந்த இந்து மதம், அந்தப் பாவத்தைப் போக்க சில வழிகளை போதித்தது.
‘செல்வத்தின் பயன் ஈதல்’ என அது சொல்லிற்று. செல்வம் அறக்காரியங்களுக்கும் இறைப்பணிக்கும் செலவழிக்கப்படாவிட்டால் அதனால் பலனில்லை என சொல்லிற்று.
இந்து மதம் பலவித அறங்களை, கொடைகளை, தான தர்மங்களைச் செய்ய ஊக்குவிப்பது, செல்வந்தரிடம் உள்ள பாவங்கள் கரையவே.
அறம் செய்யா செல்வம் குலநாசம் செய்யும் - இதை சிலப்பதிகாரம் தெளிவாய் சொல்லும்.
‘ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்’ என இளங்கோவடிகள் சொன்னது கோவலனின் முற்பிறவியினை அல்ல, அது அவன் வம்சம் செய்த வினை.
அவன் முன்னோர்கள் வணிகர்கள். கண்ணகியும் வணிகப் பரம்பரையே. அவர்கள் ஏமாற்றி சம்பாதிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் அறியாமல் வரும் பாவம் வணிகம். அந்த வணிகப் பலனை முறையாக தானம் செய்து பாவக் கணக்கைத் தீர்க்காவிட்டால் அது பெருகி வம்சத்தைப் பாதிக்கும்.
கோவலனுக்கும் கண்ணகிக்கும் நடந்தது, பட்டினத்தாருக்கு நடந்தது, இன்னும் யார் யாருக்கெல்லாமோ வரலாற்றில் நடந்தது. சாட்சிகள் ஏராளம்.
ஆம், வணிகத்தில் பெருகும் செல்வம், இன்னும் பல விஷயத்தில் பெருகும் செல்வம், பாவம் நிறைந்தது. யாருடைய அறியாமையிலோ இங்கே குவிவது. அதை முறையாக தான தர்மம் செய்யாவிட்டால் குல நாசம் செய்யும்.
இதனாலே எந்த மதத்திலும் இல்லாதபடி இந்து ஆலயச் சடங்குகளும் வழிபாடும் மிகப் பிரமாண்ட செலவு பிடிக்கும் விஷயங்களாயின.
அன்னதானம், உபயம் என செல்வந்தனின் பணத்தைச் செலவழிக்க வழிகளை சொல்லிக் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்
சத்திரம் கட்டுதல், உணவளித்தல், கல்வி கொடுத்தல், ஏழைப் பெண்களுக்கு தாலி தானம், அந்தணருக்குக் கொடைகள், முன்னோர் வழிபாடு என தான தர்மங்கள் செய்தல், கோயில் கட்டுதல், குளம் வெட்டுதல் என - குவிந்த செல்வம் நல்வழியில் சென்று பாவத்தைத் தீர்க்க அது வழியும் சொன்னது.
ஆம், லட்சுமியின் அருளில் செல்வம் குவியும்.குவிந்த செல்வத்தை நல்வழியில் செயல்படுத்தினால் காலத்தை வென்று நிலைக்கலாம், மாறாக சுயநலத்தில் தனக்கும் தன் வம்சத்துக்கும் எனக் குவித்து தான தர்மங்களை மறந்தால் அது நாசமே விளைவிக்கும்.
நல்வழியில் செலவழிக்காத செல்வம் என்னவாகும் என்பதை ‘நாய் பெற்ற தேங்காய்’ என இந்துமதம் சொல்லிவிட்டு நகரவில்லை, அச்செல்வம் என்னாகும் என்பதை பல இடங்களில் சொல்லிற்று. இந்த விவேக சிந்தாமணி பாடல் கூட அதுதான்.
‘சிந்தாமணி செல்வம்’ என்றொரு சிறு நூல் உண்டு. அதிலொரு பாடல் இப்படி வரும். பரத்தை தோழியிடம் கேட்பாள்:
அன்னையே அனைய தோழி!அறந்தனை வளர்க்கும் மாதே!உன்னையோர் உண்மை கேட்பேன்உரை தெளிந்து உரைத்தல் வேண்டும்.என்னையோ புணருவோர்கள் எனக்குப்பேரின்பம் நல்கிபொன்னையும் கொடுத்துப் பாதப்போதினில் வீழ்வ தேனோ?
அதாவது, ‘ஏ தோழியே, நீ உண்மை அறிந்தவள் என்பதால் ஒன்று கேட்பேன் தெளிவாய் சொல்வாய். என்னிடம் வருபவர்கள் எனக்கு உடல் இன்பத்தையும் கொடுத்து எனக்கு பொருளும் கொடுத்து என் காலில் விழுந்து கிடப்பது ஏன்?’
தோழியின் பதில் இப்படி வரும்:
பொம்மெனப் புடைத்து விம்மிப்போர்மதன் மயங்கி வீழும்கொம்மை சேர் முலையினாளே!கூறுவேன் ஒன்று கேண்மோ!செம்மையில் அறம் செய்யாதார்திரவியம் சிதற வேண்டிநம்மையும் கள்ளும் சூதும்நான்முகன் படைத்தவாறே.
அதாவது, ‘மன்மதனும் மயங்கும் அழகானவளே, அதன் பொருள் கேள். செம்மையான தானம் தர்மம் அறசெயல்கள் செய்யாதோர் செல்வம் சிதறி அழிய வேண்டி பரத்தையராகிய நம்மையும், கள்ளையும், சூதையும் பிரம்மன் படைத்தான். நல் வழியில் செலவழிக்கா செல்வம் இப்படித்தான் அழியும்.’
ஆம், இதில் கள், மது, மாது மட்டுமல்ல, அரசு ஆசை, பதவி வெறி, தகப்பன் சொத்து, வெட்டுகுத்து என காட்சிகள் நீளும்.
இதை அறுதியிட்டுச் சொல்லும் இந்து மதம். அது அக்காலம் முதல் எக்காலமும் உண்டு. பழைய வரலாற்றைப் புரட்டுங்கள், தெருவுக்கு 4 சாட்சி உண்டு, நீதிமன்றங்களில் கோடி சாட்சி உண்டு.
இதனாலே ‘அறம் செய்ய விரும்பு’ என்றார்கள் இந்துக்கள்.
அதற்காக தகுதி இல்லாதோருக்கு அது அள்ளி கொடுக்க சொல்லவில்லை ‘பாத்திரம் அறிந்து பிச்சையிடு’ என்றது; தகுதி உள்ளோருக்கு மட்டும் கொடுக்கச் சொன்னது.
காரணம் செல்வந்தனை சுற்றிலும் காக்காக் கூட்டம் போல் துதிபாடிகளும் வஞ்சக நரிகளும் சூழ்ந்திருப்பார்கள். அவர்கள் செல்வந்தனின் செல்வத்தினை கொத்திப் போக தயாராய் இருப்பார்கள். அவர்களைத் தாண்டி யாருக்கு உதவி தேவையோ அவர்களுக்கு உதவச் சொன்னது இந்துமதம். இதனாலேதான் கோயில் காரியங்களை அது முன்னிறுத்திற்று
லட்சுமி கடாட்சம் என்பது ஒரு சோதனை. கொடுக்கும் செல்வத்தில் ஒருவன் தான தருமம் செய்கின்றானா, இறை காரியம் செய்கின்றானா என வைக்கப்படும் சோதனை.
அதில் ராஜராஜ சோழனைப் போல கோயில் கட்டியவர்கள், குளம் வெட்டியவர்கள், சுலோச்சன முதலியார் போல் பாலம் கட்டியவர்கள், வ.உ.சிதம்பரம் போல நாட்டுக்கு உழைத்து சொத்துகளை இழந்தவர்கள், செட்டிநாட்டுத் தனவான்களை போ திருப்பணிகள், கல்விப்பணி செய்தால் காலமும் நிலைப்பார்கள்.
எத்தனையோ தொழிலதிபர்கள் இன்று இருக்கலாம். ஆனால் காலம் அடுத்த சில தசாப்தங்களில் அவர்களை வீசி எறியும். ஆனால் அவர்கள் இறைப்பணியோ அறப்பணியோ செய்திருந்தால் காலத்தால் கூட அவர்களைத் தொட முடியாது.
சினிமா தயாரிப்பாளர் ஆயிரம் இருந்தாலும் சின்னப்ப தேவர் போன்றோர் அவர்கள்களது கோயில்பணியில்தான் வாழ்கின்றார்களே அன்றி செல்வத்தின் பெயரால் அல்ல.
இதனால் செல்வத்தின் பலன் வறியோருக்கு ஈகை செய்து பலனடைவதே என வலியுறுத்தியது இந்து மதம்.
ஆம், மானிடனுக்கு பலவீனம் உண்டு. இங்கு செல்வம் என்பது அறியாமை மக்களிடம் இருந்து பெறப்படுவது. அவர்களை சொல்லித் திருத்த முடியாது, அடித்தும் திருத்த முடியாது. அவன் அறிவும் அறியாமையும் கர்ம பலனும் அப்படி
இதனாலேயே வலிய பொதுவுடமை என திணிக்கப்பட்ட சோவியத் ரஷ்யா சிதறியது;வடகொரியா அழுகின்றது; சீனா உடைய காலம் பார்க்கின்றது; கியூபா திணறுகின்றது.
ஏன் இப்படி ஆயிற்று? மானிட சுபாவத்துக்கு எதிரான எதுவும் நிலைக்காது.
இந்து மதமோ மானிடனின் சுபாவம், சிந்தனை, மனோபாவம் என எல்லாம் உணர்ந்து போதித்த மதம் என்பதால் செல்வத்தின் பலன் ஈவது என காலத்துக்கும் பொருந்திய தத்துவத்தைச் சொன்னது.
செல்வம் என்பது கீதையில் வரும் ‘தமஸ்’ எனும் சோம்பேறிக் குணத்தைக் கொடுத்துவிடும். எமக்கு எல்லாம் உண்டு இனி என்ன வேண்டும் எனும் மமதையினைக் கொடுக்கும். அந்த மமதை ஞானத்தினை அருளாது.
அதை நீர்போல ஓடவிட்டு தேடிக்கொண்டே இருந்தால் ஓர் இடத்தில் ஞானம் கிடைக்கும். பணத்தாலும் செல்வத்தாலும் வாங்க முடியாத விஷயம் உண்டு. அது பிரபஞ்சத்தால் மட்டும் கிடைக்கும் எனும் தெளிவு கிடைக்கும்.
சில நேரங்களில் தகுதியற்றோருக்கு செல்வம் குவியும். அவர்கள் பாவம் மேல் பாவம் செய்தாலும் செல்வம் குறையாது. அந்நேரம் சிலர் தெய்வமில்லை, கடவுள் இல்லை என அவநம்பிக்கை கொள்ளலாம்.
மனிதனின் காலம் குறுகியது. ஆனால் தெய்வத்தின் காலமும் சக்தியும் முடிவில்லாதது; அதன் கணக்குகள் மானிடருக்குப் புரியாது.
தகுதியற்றவனிடம் குவியும் செல்வம் அவன் பரம்பரையில் யாரோ வந்து அறக்காரியங்கள் செய்து இறைவனை அடைவார்கள் என்பதற்காக கொடுக்கப்படுவது என்பது மானிடக் கண்களுக்குப் புரியாது.
பட்டினத்தார் முதல் காரைக்கால் அம்மையார் வரை இந்து புராணங்கள் ஏகபட்ட இடத்தில் சொல்வது அதுதான்- செல்வம் ஒருவனுக்குக் கொடுக்கப்படுவது அவனுக்காக அல்ல; அவன் வெறும் கருவி. அவன் சந்ததி என்னவாகும், என்ன செய்யும் என்பது ஆண்டவன் ஒருவனே அறியும் கணக்கு. இதில்தான் இந்து சமூகம் அமைதி கொள்கின்றது.
செல்வம் இருபுறமும் கூரான கத்தி போன்றது. அதை கவனமாகக் கையாண்டவர்கள் ஞானம் பெற்று முக்தி அடைவர், அதைச் செய்யாதோர் மறுபடி மறுபடி பிறந்து உழல்வார்கள்.
பிச்சைக்காரர்களோ, யாசகம் பெற வருபவரோ உன் கர்மம் கழிய உன்னிடம் கைநீட்டுவார்கள், அவர்களுக்கு மறுக்காதே என வலியுறுத்த தெய்வங்களே பிச்சை கேட்டு வரும் எனும் தத்துவத்தையெல்லாம் புராணச் சாட்சிகளாக வைத்தவர்கள் இந்துக்கள். அந்த அளவு தர்மத்தை வலியுறுத்தினார்கள்.
தகுதியான விஷயங்களுக்கு தானமும் அறமும் அள்ளிச் செலவிடுங்கள், செல்வம் என்பது அறியா மக்களிடம் இருந்து தந்திரமாகப் பிடுங்கும் குவியல். அது பாவமும் சாபமும் கொடுக்கும் முன் கொடையாகக் கொடுத்துவிடுங்கள் என்றது இந்து மதம்.
இதற்கு மகாபாரதக் கர்ணனை காட்டிற்று; அவன் துரியன் கொடுத்த கெட்ட செல்வத்தை எல்லாம் அள்ளி எறிந்ததால்தான் விஸ்வரூப தரிசனம் பெற்று, பகவானை முழுக்கத் தரிசித்து நிம்மதியான மரணம் எய்தினான்.
ஆனால் துரியன் உள்ளிட்டோர் வாழ்வு நிம்மதியாய் முடியவில்லை.
தர்மம் செய்வதன் சக்தி அது. அதைச் செய்து செய்து, பாவம் கழித்து பகவான் பாதம் சரணடைந்து நிம்மதி பெறுவதே லட்சுமி வழிபாடு.
குறிப்பு:திரு. ஸ்டான்லி ராஜன் பிரபல முகநூல் பதிவர்.காண்க: ஸ்டான்லி ராஜன்
No comments:
Post a Comment