(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 47)
பாரதியின் பாடல் முன்குறிப்புகள்:
ராகம்: பைரவிதாளம்: ரூபகம்(பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு)
ஸ ஸ ஸ-ஸா ஸா-பபபதநீத-பதப-பாபபப-பதப-பமா-கரிஸாரிகம-ரிகரி-ஸாஎன்ற ஸ்வர வரிகளை மாதிரியாக வைத்துக் கொண்டு மனோபாவப்படி மாற்றிப் பாடுக.
***
சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா!செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலி தீர்த்தே - உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்! 1
பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா
பேசும்பொற் சித்திரமே!
அள்ளி யணைத்திடவே - என் முன்னே
ஆடி வருந்தேனே! 2
ஓடி வருகையில் - கண்ணம்மா
உள்ளங் குளிரு தடீ!
ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்
ஆவி தழுவு தடீ! 3
உச்சி தனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளரு தடீ!
மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால்
மேனி சிலிர்க்கு தடீ! 4
கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
கள்வெறி கொள்ளு தடீ!
உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா
உன்மத்த மாகு தடீ! 5
சற்றுன் முகஞ் சிவந்தால் - மனது
சஞ்சல மாகு தடீ!
நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு
நெஞ்சம் பதைக்கு தடீ! 6
உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில்
உதிரங் கொட்டு தடீ!
என் கண்ணிற் பாவையன்றோ? - கண்ணம்மா!
என்னுயிர் நின்ன தன்றோ? 7
சொல்லு மழலையிலே - கண்ணம்மா!
துன்பங்கள் தீர்த்திடு வாய்;
முல்லைச் சிரிப்பாலே - எனது
மூர்க்கந் தவிர்த்திடு வாய். 8
இன்பக் கதைக ளெல்லாம் - உன்னைப்போல்
ஏடுகள் சொல்வ துண்டோ?
அன்பு தருவதிலே - உனைநேர்
ஆகுமோர் தெய்வ முண்டோ? 9
மார்பில் அணிவதற்கே -உன்னைப்போல்
வைர மணிக ளுண்டோ?
சீர்பெற்று வாழ்வதற்கே -உன்னைப் போல்
செல்வம் பிறிது முண்டோ? 10
No comments:
Post a Comment