16/12/2021

பத்திரிகை அறிவிப்புகள்

-மகாகவி பாரதி


    (மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 84)


1. தென்னாப்பரிக்காவில் நம்மவர்கள்


இந்தியா பத்திரிகை
25-12-1910 

தென் ஆப்பரிக்காவில் ஸமத்துவத்தின் பொருட்டாகவும் ஆரிய ஜாதியின் மானத்தைக் காக்கும் பொருட்டாகவும் நம்மவர்கள் பட்டுவரும் துயரங்களைப் புதிதாக எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

வீடு வாசலையும் பொருளையும் இழந்தவர்கள் பலர். துன்பம் பொறுக்க முடியாமல் இந்தியாவுக்குத் திரும்பியோடி வந்துவிட்டவர்கள் பலர். அங்கேயே இறந்தவர்கள் பலர். பிராணனுக்குத் தீங்கு நேரிடினும் மானத்தை இழக்க மனமற்றவர்களாய் அந்நாட்டு மிருகச் சட்டத்தை மீறி நடந்து சிறைச்சாலையில் வருந்துவோர் பலர்.

கல்வியிலும் செல்வத்திலும் குலத்திலும் மஹோன்னத ஸ்தானத்திலிருந்தவர்கள் இப்போது அந்நாட்டுச் சிறைக்கூடங்களில் மலக்கூடை சுமப்பது முதலிய வேலை செய்ய நேர்ந்துவிட்டது.

அங்குள்ள ஆரிய ஸ்திரீகளோ தமது கணவரிடமும், ஸஹோரதரரிடமும் “சிறையிலிருந்து படாத பாடுபட்டு இறந்தாலும் இறந்துவிடுங்கள். ஆரிய ஜாதிக்கு அவமானந்தரும் சட்டத்துக்கு உட்படாதேயுங்கள்” என்று போதிக்கிறார்கள்.

காய்கறிகள் விற்றும், கையால் உழைத்தும் புருஷரைச் சிறைக் களத்தில் விட்டுவிட்டு நமது உத்தம ஸ்திரீகள் ஜீவனம் செய்கிறார்கள்.

இப்போது அவ்வித ஜீவனத்திற்கும் பல இடுக்கண்கள் நேர்ந்துவிட்டன. பண உதவி வேண்டுமென்று நமது வீர சகோதரர்களும் சகோதரிகளும் தாமே வாய்திறந்து கேட்கத் தொடங்கிவிட்டார்கள்.

பம்பாயிலிருந்து ஆயிரக்கணக்கான தொகை போய்விட்டது. பெங்காளத்திலும் பெருந் தொகைகள் சேர்த்து வருகிறார்கள்.

சென்னப்பட்டணத்தில் இதன் பொருட்டு வைத்திருக்கும் சபையாருக்கு இன்னும் அதிகமாகப் பணம் சேரவில்லை.

தென் ஆப்பரிக்காவிலுள்ள இந்தியர்களிலே பெரும்பாலோர் தமிழர்கள், அப்படி யிருந்தும் நாம் இவ்விஷயத்தில் அஜாக்கிரதையாக இருப்பது கிரமமன்று.

ஆகையால் “இந்தியா பத்திரிகை நிதி”யென்பதாக ஒன்று சேர்த்துச் சென்னைப்பட்டணத்திலுள்ள சபையின் காரியதரிசிக்கு அனுப்ப உத்தேசித்திருக்கிறது.

தமிழர்களனைவரும் உதவி செய்ய வேண்டும்.

தென் ஆப்பரிக்கா 
பாரத சஹாய நிதி

                                                               ரூ / அ. / பை
 
‘இந்தியா பத்திராதிபர்’              10 / 0 / 0

கு.சண்முகவேலு செட்டியார்   10 / 0 / 0

ஸி.சுப்பிரமணிய பாரதி             5 / 0 / 0

வந்தே மாதரம்                                  5 / 0 / 0

***

2. விண்ணப்பம்

சுதேசமித்திரன்
13 பிப்ரவரி 1906  / விசுவாவசு மாசி 2

    எமது தாய் நாடாகிய பாரதாம்பிகையின் பெருமையை வருணித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் பல்வேறு காலத்துப் பல்வேறு புலவர்களால் பாடப்பெற்ற செய்யுள் மணிகளை ஓர் மாலையாகப் புனைந்து பதிப்பிக்கக் கருதியிருக்கி்ன்றேனாதலின் பண்டைத் தமிழ் நூல்களில் பாரத நாடு முழுதினையும் ஒருங்கே புகழ்ந்து கூறப்பட்டிருக்கும் பாடல்களை அறிஞர் தெரிந்தனுப்புவார்களாயின் அவர்மாட்டுமிக்க கடப்பாடுடையவனாவேன். தமிழ்ப் புராணங்களிலும் இதிகாசங்களிலும் நாட்டுப் படலங்களில் நிடதம் கோசலம் முதலிய பகுதிகளைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் வருணனைகள் பயன்படமாட்டா. தற்காலத்தே தமிழ்ப் புலமையிற் சான்று விளங்கும் பெருமக்கள் புதியவனாக ‘தேச பக்தி’ப் பாக்கள் புனைந்தனுப்புவாராயின் அவையும் நன்றியறிவுடன் ஏற்றுக்கொள்ளப்படும்.

சிறிய ஆற்றுலடையேனாகிய யான் இப்பெரிய தொழிலை நிறைவேற்றுவதன்கண்ணே எவ்வாற்றானும் துணை புரிய விரும்புவோர் கால பரியயம் செய்யலாகாதென்று பிரார்த்திக்கின்றேன்.

இங்ஙனம்,
சி. சுப்ரமணிய பாரதி

விலாசம்:- சுதேசமித்திரன் ஆபீஸ், சென்னை

***
3. திருவல்லிக்கேணி சுதேசிய கிருஹியம்

இந்தியா
17 டிசம்பர் 1907 / பிலவங்க மார்கழி 2

    சூரத்தில் நடக்கிற காங்கிரசுக்கு நாங்கள் எல்லோரும் இவ்விடமிருந்து நாளது டிசம்பர் மாதம் 20-ஆந் தேதி வெள்ளிக் கிழமை மாலையில் ரிசர்வ் வண்டிகள் மூலமாய்ச் செல்லுகிறபடியால் இந்த ராஜதானியிலிருந்து காங்கிரசுக்குச் செல்லும் பிரதிநிதி (டெலிகேட்ஸ்)களும் பார்ப்பவர்களும் (விசிட்டர்ஸ்) இது பார்த்தவுடன் அவர்கள் புறப்படும் விவரத்தைத் திருவல்லிக்கேணி துளசிங்கப் பெருமாள் கோயில் தெரு 87-வது நம்பர் சுதேசிய கிருஹத்தாருக்குத் தெரிவிக்கும்படிக்கும் நாளது மாதம் 20-ஆம் தேதி காலையில் மேற்படி கிருஹத்திற்கு வந்து சேரும்படியும் கேட்டுக் கொள்ளுகிறோம்.

-சி.சுப்பிரமணிய பாரதி

***

No comments:

Post a Comment