16/12/2021

சில கடிதங்கள்

-மகாகவி பாரதி


    (மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 85)


1. மனைவிக்குக் கடிதம்

ஓம்


ஸ்ரீ காசி
ஹநுமந்த கட்டம்


எனதருமைக் காதலி செல்லம்மாளுக்கு ஆசீர்வாதம். உன் அன்பான கடிதம் கிடைத்தது. நீ என் காரியங்களில் இத்தனை பயப்படும்படியாக நான் ஒன்றும் செய்யவில்லை. விசுவநாதன் அனாவசியமாக உனக்குப் பயத்தை விளைவித்திருக்கிறான். நான் எப்போதுமே தவறான வழியில் நடப்பவனல்ல. இதைப் பற்றி உன்னைச் சந்திக்கும் சமயங்களில் விவரமாகக் கூறுகிறேன். நீ இந்த மாதிரி கவலைப்படும் நேரங்களில் தமிழை நன்றாகப் படித்து வந்தாயானால் மிகவும் சந்தோஷமுறுவேன்.

உனதன்பன்
சி.சுப்பிரமணிய பாரதி

(1901)

***


2. தமிழறிஞர் மு.இராகவையங்காருக்குப் பாராட்டு


இந்தியா ஆபீஸ்
பிராட்வே, மதராஸ்
18th October 1907
அநேக நமஸ்காரம்.

ஒவ்வொரு காலத்துச் சோம்பர் மிகுதியாலும், ஒவ்வொரு காலத்தே முயற்சி மிகுதியாலும் தங்களைப் போன்ற பெரியோர்களுக்கு அடிக்கடி தடிதங்களெழுதிப் புனிதத் தன்மை பெறுவதற்கு அவகாசமில்லாதவனாக இருக்கின்றேன்.

சென்றமுறை வெளிவந்த 'செந்தமிழ்'ப் பத்திரிகையிலே தாங்கள் எழுதியிருக்கும் 'வீரத்தாய்மார்கள்' என்ற அற்புத உரையைக் கண்டு மகிழ்ச்சி பூத்து அம் மகிழ்ச்சியைத் தமக்கு அறிவிக்கும் பொருட்டாக இக்கடிதம் எழுதுகிறேன்.
.
தங்கள் பாண்டித்தியத்தை நான் புகழ வரவில்லை. அதனை உலகமறியும். தங்களுடைய பரிசுத்த நெஞ்சிலே எழுந்திருக்கும் 'ஸ்வதேச பக்தி' என்ற புது நெருப்பிற்குத்தான் நன் வணக்கம் செய்கிறேன்.

"காலச் சக்கரம் சுழல்கிறது" என்று அவ்வுபந்நியாசத்தின் இறுதியிலே குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆம்! காலச் சக்கரம் சுழலவே செய்கின்றது; அந்தச் சுழற்சியிலே, சிறுமைச் சேற்றில் ஆழ்ந்து கிடந்த 'நீச பாரதம்' போய் 'மஹா பாரதம்' பிறக்கும் தறுவாய் வந்துவிட்டது.

'தாழ்நிலை' என்ற இருளிலே மூழ்கிக் கிடக்கும் பாரதவாஸிகளுக்கு மஹா பாரதம் காட்டத் தோன்றியிருக்கும் சோதிகளிலே தமது நெஞ்சிற் பிறந்திருக்கும் நெருப்பொன்றாகும். அதற்கும் வணக்கம் செய்கிறேன். அது வளர்க! ஓம்!

ஸி.சுப்பிரமணிய பாரதி

குறிப்பு: ஸ்ரீ அழகிய சிங்கப் பெருமாளையங்கார் (பச்சையப்பன் காலேஜ்) அவர்களும் அவர் தம்பி ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியாரும் தங்களுக்கு ஸாஷ்டாங்க வணக்கம் கூறும்படி என்னிடம் கற்பித்தார்கள்.


***

3. நெல்லையப்பருக்குக் கடிதம் (அ)

ஓம்.

புதுச்சேரி,
19-7-1915

என தருமைத் தம்பியாகிய ஸ்ரீ நெல்லையப்பபிள்ளையைப் பராசக்தி நன்கு காத்திடுக.

தம்பி-மாதத்துக்கு மாதம் நாளுக்கு நாள் நினதறிவு மலர்ச்சி பெற்று வருவதைக் காண்கிறேன். நினது உள்ளக் கமலத்திலே பேரறிவாகிய உள்ஞாயிற்றின் கதிர்கள் விரைவிலே தாக்கி நினக்கு நல்லின்பம் உண்டாகுமென்றே கருதுகிறேன்.

------

நெஞ்சம் இளகி விரிவெய்த விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது. நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டுமென்று பாடுபடுதலே நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும். வேறு வழியில்லை.

ஹா! உனக்கு ஹிந்தி மராட்டி முதலிய வட நாட்டு பாஷைகள் தெரிந்திருக்கிறது. அந்தப் பாஷைப் பத்திரிகைகள் என்ன அற்புதமான புதுமை பெற்றுள்ள என்பதை நேரில் தெரிந்து கொள்ள முடியுமானால் –

தமிழ் நாட்டிற்கு எத்தனை நன்மையுண்டாகும்; தமிழ், தமிழ், தமிழ் என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க. ஆனால் புதிய புதிய செய்தி, புதிய புதிய யோசனை, புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம் தமிழில் ஏறிக் கொண்டே போக வேண்டும்.

-----
தம்பி – நான் ஏது செய்வேனடா; தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப்

பார்க்கும்போது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனை விட மற்றொரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மதமில்லை. தமிழச்சியைக்காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாயிருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது.

தம்பி – உள்ளமே உலகம்.

ஏறு! ஏறு! ஏறு! மேலே, மேலே! மேலே! நிற்கும் நிலையிலிருந்து கீழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக்கொண்டு பிழைக்க முயற்சி பண்ணும் பழங்காலத்து மூடர்களைக் கண்டு குடல் குலுங்கச் சிரி.

உனக்குச் சிறகுகள் தோன்றுக. பறந்துபோ. பற! பற! மேலே, மேலே, மேலே.

தம்பி, தமிழ் நாடு வாழ்க என்றெழுது. தமிழ்நாட்டில் நோய்கள் தீர்க என்றெழுது. தமிழ் நாட்டில் வீதி தோறும் தமிழ்ப் பள்ளிக் கூடங்கள் மலிக என்றெழுது.

அந்தத் தமிழ்ப் பள்ளிக் கூடங்களிலே நவீன கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க என்றெழுது. தமிழ் நாட்டில் ஒரே ஜாதிதான் உண்டு. அதன் பெயர் தமிழ் ஜாதி. அது ஆர்ய ஜாதி என்ற குடும்பத்திலே தலைக்குழந்தை என்றெழுது. ஆணும் பெண்ணும் ஓருயிரில் இரண்டு கலைகள் என்றெழுது.

ஒன்றிலொன்று தாழ்வில்லை என்றெழுது.

பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக் குத்திக் கொண்டான் என்றெழுது.

பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தவன் என்றெழுது.

தொழில்கள், தொழில்கள், தொழில்கள் என்று கூவு.

தப்பாக வேதம் சொல்பவனைக் காட்டிலும் நன்றாகச் சிரைப்பவன் மேற்குலத்தான் என்று கூவு.

வியாபாரம் வளர்க, யந்திரங்கள் பெருகுக. முயற்சிகள் ஓங்குக. ஸங்கீதம், சிற்பம், யந்திரநூல், பூதநூல், வானநூல் இயற்கை நூலின் ஆயிரம் கிளைகள் இவை தமிழ்நாட்டிலே மலிந்திடுக என்று முழங்கு.

சக்தி, சக்தி, சக்தி என்று பாடு.

தம்பி – நீ வாழ்க.

-----

உனது கடிதம் கிடைத்தது. குழந்தைக்கு உடம்பு செம்மையில்லாமல் இருந்தபடியால் உடனே ஜவாப் எழுத முடியவில்லை. குழந்தை உயிர் கொண்டது. இன்று உன் விலாஸத்துக்கு நாட்டுப் பாட்டுக்கள் அனுப்புகிறேன். அவற்றைப்பகுதி பகுதியாக உனது பத்திரிகையிலும் ஞானபானுவிலும் ப்ரசுரம் செய்வித்திடுக. ‘புதுமைப்பெண்’ என்றொரு பாட்டு அனுப்புகிறேன். அதைத் தவறாமல் உடனே அச்சிட்டு அதன் கருத்தை விளக்கி எழுதுக. எங்கேனும், எப்படியேனும் பணம் கண்டுபிடித்து ஒரு நண்பன் பெயரால் நமக்கனுப்புக. தம்பி – உனக்கேனடா இது கடமையென்று தோன்றவில்லை? நீ வாழ்க.

உனதன்புள்ள,
பாரதி

***

4. தம்பி விசுவநாதனுக்கு கடிதம்

புதுச்சேரி, 3 ஆகஸ்டு, 1918

ஸ்ரீமான் விசுவநாதனுக்குப் பராசக்தி துணை செய்க. உன்னுடைய அன்பு மிகுந்த கடிதம் கிடைத்தது. அதைப் படித்து அதினின்றும் உன்னுடைய புத்திப் பயிற்சியின் உயர்வைக் கண்டு சந்தோஷமடைந்தேன். தந்தைக் கப்பால் நீ என்னை முக்கிய சகாயமாகக் கருதுவது முறையே. இதுவரை உன்னை நேரே பரிபாலனம் செய்வதற்குரிய இடம் பொருளேவல் எனக்கு தெய்வ சங்கற்பத்தால் கிடையாமல் போய்விட்டது. அதையெண்ணி இப்போது வருந்துவதிலே பயனில்லை. எனினும் இயன்றவரை விரைவாகவே எனக்கு நற்காலமும் அதனால் உன் போன்றோருக்குக் கடமைகள் செய்யும் திறமும் நிச்சயமாக வரும். உன் கடிதத்தில் கண்டபடி நீ இங்கே என்னைப் பார்க்க வரும் காலத்தை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். சீக்கிரம் வா. தங்கை ஸ்ரீ லக்ஷ்மி சில வருஷங்களுக்கு முன் எட்டயபுரத்துக்கு வந்திருந்த காலத்தில் என்னைக் கொஞ்சம் பணம் அனுப்பச் சொல்லியிருந்தாள். அப்போது என் கையில் பணம் இல்லாதபடியால் அனுப்பவில்லை. அது முதல் என் மீது கோபம் கொண்டு எனக்கு ஒரு வார்த்தைகூட எழுதாமலிருக்கிறாள். என்னை மன்னிக்கும்படிக்கும் எனக்கு அடிக்கடி காயிதங்களெழுதும்படிக்கும் நீ அவளை அழுத்தமான பிரார்த்தனை செய்யும்படி வேண்டுகிறேன். தம்பியுள்ளோன் படைக்கஞ்சான் என்ற வாக்கியத்தின் உண்மையை உன் விஷயத்தில் நம்பியிருக்கலாமென்றே நம்புகிறேன்.

எனக்கு இனிமேல் இங்கிலீஷில் காயிதம் எழுதாதே. நீ எழுதும் தமிழ் எத்தனை கொச்சையாக இருந்தபோதிலும் அதைப் படிக்க நான் ஆவலுறுவேன். கொச்சைத் தமிழ்கூட எழுத முடியாவிட்டால் ஸம்ஸ்கிர்தத்திலே காயிதம் எழுது. திருப்பயணம் வி.ராமஸ்வாமி அய்யங்கார் என்னிடம் 'விநாயகர் ஸ்தோத்திரம்' (தமிழ் நூல்) அச்சிட வாங்கிக்கொண்டு போனார். இன்னும் அச்சிட்டனுப்பவில்லை. மேலும் அவர் 'பாஞ்சாலி சபதம்' அச்சிடும் சம்பந்தமாகப் பணம் சேகரித்துப் பட்டணத்துக் கனுப்புவதாகச் சொன்னார். அங்ஙனம் அனுப்ப முடியுமானால் உடனே புதுச்சேரியில் எனது விலாசத்துக்கனுப்பும்படி ஏற்பாடு செய்.

அது மாத்திரமேயன்றி, 'விநாயர் ஸ்தோத்திரம்' வேலையை விரைவில் முடித்துப் புஸ்தகங்களனுப்பும்படி சொல்லு. உடம்பையெண்ணிப் பயப்படாதே. அடிக்கடி பால் குடி. ஜலத்தை எப்போதும் காய்ச்சிக் குடி. வேறு எந்த விஷயத்துக்கும் கவலைப்படாதே. பொறுமையாலும் பயமின்மையாலும் இவ்வுலகத்தில் மனிதன் தேவத்தன்மை அடைகிறான். அந்நிலைமை உனக்கு மஹாசக்தி அருள் செய்க.

உனதன்புள்ள ஸஹோதரன்,
சி.சுப்பிரமணிய பாரதி

***
5. நெல்லையப்பருக்குக் கடிதம் (ஆ)

கடையம்
21 டிசம்பர் 1918

ஸ்ரீமான் நெல்லையப்ப பிள்ளைக்கு நமஸ்காரம்.

நான் ஸெளக்கியமாகக் கடையத்துக்கு வந்து சேர்ந்தேன். இவ்வூருக்கு நான் வந்த மறுநாள் பாப்பா பாட்டு, முரசு, நாட்டுப் பாட்டு, கண்ணன் இவை வேண்டுமென்று பலரிடமிருந்து கடிதங்கள் கிடைத்தன.

என் வசம் மேற்படி புஸ்தகங்கள் இல்லை. உன்னிடம் மேற்படி புஸ்தகங்களிருந்தால் அனுப்பக்கூடிய தொகை முழுதும் அனுப்பும்படி ப்ரார்த்திக்கிறேன்.

'பாஞ்சாலி சபதம்' - இரண்டு பாகங்களையும் சேர்த்து ஒன்றாக அச்சடிப்பதற்குரிய ஏற்பாடு எதுவரை நடந்திருக்கிறதென்ற விஷயம் தெரியவில்லை. இனிமேல் சிறிது காலம் வரை நான் ப்ரசுரம் செய்யும் புஸ்தகங்களை போலீஸ் டிப்டி இன்ஸ்பெக்டர் ஜெனரலிடம் காட்டி அவருடைய அனுமதி பெற்றுக்கொண்ட பிறகே ப்ரசுரம் செய்வதாக ராஜாங்கத்தாருக்கு நான் ஒப்பந்தமெழுதிக் கொடுத்திருக்கிறேன்.

ஏற்கெனவே 'பாஞ்சாலி சபதம்' (முதல் பாகம்) வெளிப்பட்டிருக்கிற படியாலும், ப்ரசுரம் செய்பவன் நானன்றி நீயாதலாலும் இதை அச்சிடுமுன் மேற்படி ஒப்பந்த விதியை அனுசரித்தல் அவசியமில்லையென்று தோன்றுகிறது.

அப்படியே காண்பித்தாலும் தவறில்லை. நமது நூல் மாசற்றது. டிப்டி இன்ஸ்பெக்டர் ஜெனரல் மிஸ்டர் ஹானிங்டன் எனக்கு மிகவும் அன்புள்ள ஸ்நேகிதர்; தங்கமான மனுஷ்யன். ஆதலால், அநாவசியமான ஆஷேபங் கற்பித்து நமது கார்யத்தைத் தடை செய்யக்கூடியவரல்லர். நீயே மேற்படி நூலை அவரிடத்தில் காட்டி அனுமதி பெற்றுக்கொள்ளுக.

பாப்பா பாட்டு முதலியன உன்னிடம் இல்லாவிட்டால் உடனே அவற்றை மீண்டும் ப்ரசுரம் செய்தல் மிகவும் அவஸரம்.

இவை முதலிய எல்லா விஷயங்களைப் பற்றி உன்னிடம் நேரே பேச விரும்புகிறேன். இதன் பொருட்டாக இக்கடிதம் கண்டவுடன் இங்கு நீ நேரே புறப்பட்டு வந்துசேரும்படி வேண்டுகிறேன். ஸ்ரீமான் குவளை க்ருஷ்ணையங்கார் முதலிய நம்முடைய நண்பர்களுக்கு என் நமஸ்காரத்தைத் தெரிவிக்கும்படி ப்ரார்த்திக்கிறேன். இன்னும் ப்ரசுரம் செய்ய வேண்டிய நூல்கள் என்னிடம் பல இருக்கின்றன. நான் இப்போது பிரிடிஷ் இந்தியாவுக்கு வந்துவிட்டபடியால் நமது ப்ரசுரங்களுக்குப் பணம் கொடுக்கக் கூடிய நண்பர்களும் பலர் இருக்கிறார்கள். உன்னை ஸஹாய புருஷனாகக் கொண்டால் ப்ரசுர கார்யம் தீவிரமாகவும் செம்மையாகவும் நடைபெறுமென்று தோன்றுகிறது.

எதற்கும், நீ உடனே புறப்பட்டு இங்கு வந்துசேரும்படி ப்ரார்த்திக்கிறேன்.

உனக்கு மஹாசக்தி அமரத் தன்மை தருக.

உனதன்புள்ள,
சி.சுப்பிரமணிய பாரதி

***
6. எட்டயபுரம் வெங்கடேச ரெட்டுவுக்குக் கடிதம்


ஓம் சக்தி

கடையம்
30 ஜனவரி 1919

ஸ்ரீமான் வெங்கடேச ரெட்டுவுக்கு நமஸ்காரம்.

இந்த ஊரில் ஒரு வீடு மூன்று வருஷத்துக்கு வாடகைக்கு வாங்கியிருக்கிறேன். அதைச் செப்பனிடுவதற்கு அவசியமான தொகை நாம் கையிலிருந்து செலவிட்டு, மேற்படி தொகைக்கு வீட்டுக்காரரிடமிருந்து கடன் சீட்டெழுதி வாங்கிக்கொள்வதாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஊரில் வேறு வீடு கிடைக்காதபடியால் இவ்வித ஒப்பந்தத்தின்மீது செப்பனிட வேண்டிய வீட்டை வாங்கிக்கொள்ளுதல் இன்றியமையாததாயிற்று.

இந்த விஷயத்தைக் குறித்து மஹாராஜாவிடம் தனிமையாகத் தெரியப்படுத்தி, அவர்கள் கொடுக்கும் தொகையுடன் நீயும், உன்னால் இயன்றது சேர்த்துக் கூடிய தொகையை "ஸ்ரீமான் சி.சுப்பிரமணிய பாரதி, பழைய கிராமம், கடையம்" என்ற விலாசத்துக்கு ஸ்ரீமதி சின்னமாச் சித்தி மூலமாகவேனும் நேரிலேனும் விரைவில் அனுப்பும்படி வேண்டுகிறேன்.

உனக்கு மகாசக்தி அமரத்தன்மை (தருக)

உனதன்புள்ள,
சி.சுப்பிரமணிய பாரதி

***



No comments:

Post a Comment