13/03/2020

உ.வே.சா.வின் குருநாதர்

-திருநின்றவூர் இரவிக்குமார்


திரிசிரபுரம் மகா வித்வான்

மீனாட்சிசுந்தரம் பிள்ளை

(பிறப்பு: 1815 ஏப். 6 – மறைவு: , 1876 பிப். 1)


ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சம்பவம். ஒரு தமிழ் நூல் தொடர்பானது. அதை எழுதியவரும் அவரது நண்பர்களும் சென்னையில் மின்சார ரயிலில் பயணித்து கூவம் ஆற்றில் (சாக்கடையில்) அந்த நூலை வீசி, நூல் வெளியீட்டு விழாவை நடத்தினார்கள். 

இதற்கு மாறாக, ஒருவரது நூலின் வெளியீட்டு விழாவிற்கு அதை பல்லக்கில் வைத்து மக்கள் ஊர்வலமாகக் கொண்டு சென்று அரங்கேற்றிய நிகழ்வைச் சொன்னால் இன்று யாராவது நம்புவார்களா? ஆனால் அது இதே தமிழகத்தில் நடந்தது. ஒரு முறை அல்ல, பல முறை. அப்படி தமிழக மக்களால் உயர்வாகப் போற்றிக் கொண்டாடப்பட்டவர் மகா வித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை.

அவரது மாணவர்தான் ‘தமிழ்த் தாத்தா’ என்று புகழப்படும் உ.வே.சாமிநாதய்யர். இவர் தனது ஆசிரியரைப் பற்றி எழுதும்போது, அவ்வளவு உயர்வானவரை மீனாட்சிசுந்தரம் என்று பெயரை குறிப்பிட்டு எழுதுவதற்கு அஞ்சுவதாக எழுதியுள்ளார்.

சைவ வேளாளர் குலத்தைச் சேர்ந்த மகா வித்வானின் முன்னோர் கல்வி,  கேள்விகளில் சிறந்தவர்கள். மதுரை மீனாட்சி அம்மையின் கோயிலில் முக்கியமான பொறுப்பு வகித்தவர்கள். ஆண்டுதோறும் ஒரு நாள் கோயில் சிறப்பு அவர்களுக்குச் செய்யப்படும். மகா வித்வானின் தந்தையாரும் அப்படி சிறப்புச் செய்யப் பட்டவரே. கோயில் அதிகாரிகளுடன் ஏதோ விஷயத்தில் அவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் மதுரை நகரை விட்டு விலகி திருச்சிக்குக் குடிபெயர்ந்தார்.

மகா வித்வானின் தந்தையார் பெயர் சிதம்பரம் பிள்ளை. தாயின் பெயர் அன்னத்தாச்சி என்பதாகும். அவர்கள் திருச்சிக்கு அருகிலுள்ள எண்ணெய் கிராமம் என்ற ஊரில் முதலில் தங்கி இருந்தபோது ஒரு சம்பவம். அந்த ஊரில் மழையின்மையால் வறட்சி நிலவியது. மகா வித்வானின் தந்தை சிறந்த தமிழறிஞர், பக்திமான், நியதிகளை விடாது பின்பற்றியவர். அவர் மழை வேண்டி ஒரு வெண்பா இயற்றிப் பாடினார். ஒரிரு நாளில் கனத்த மழை பெய்தது. 

பிறகு எண்ணெய் கிராமத்தை விட பெரிய ஊரான அதவத்தூருக்கு குடிபெயர்ந்து அங்கு ஒரு (திண்ணை) பள்ளிக்கூடத்தை நடத்தி வந்தார். அதனால் அங்கு அவருக்கு ‘சிதம்பர வாத்தியார்என்று பெயர் ஏற்பட்டது.

மகா வித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் 1815ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி பிறந்தார். இவருக்கு ஒரு தம்பியும் (சொக்கலிங்கம்) தங்கையும் (மீனாட்சி) உண்டு. இவரது மனைவியின் பெயர் காவேரியாச்சி.

ஆரம்பத்தில் தன் தந்தையிடமே கல்வி கற்ற இவர் அவரது மறைவுக்குப் பிறகு அறிவு சான்ற பேரறிஞர்கள் பலரையும் அணுகி அவர்களிடமிருந்து பல நூல்களைக் கற்றுத் தெளிந்தார்.

கற்பதில் இவருக்கு இருந்த ஆர்வத்தை காட்டும் சம்பவம் ஒன்று உள்ளது. நூல்களைப் படி செய்து (பிரதி செய்து) கற்றல் அந்த காலத்து முறை. தமிழில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்று ஐந்து வகையான இலக்கணத்தில் அணி இலக்கணத்தை விளக்கி எழுதப்பட்ட நூல் தண்டியலங்காரம்.

அந்நூலில் தேர்ச்சி பெற்ற ஒருவர் பரதேசியாக வீடுதோறும் இரங்கி வாழ்பவராக இருப்பதை அறிந்தார் மகா வித்வான். அவர் பிச்சையெடுக்கும் தெருக்களில் அவருடன் இவரும் சென்று பேசி, கஞ்சா வாங்கி உரிய நேரத்தில் கொடுத்து அவரது கவனத்தை ஈர்த்தார். பிறகு அவரிடமிருந்து தண்டியலங்காரம் நூலின் பிரதியையும் பாடத்தையும் கேட்டார். மேலும் சில நூல்கள் அவரிடம் இருப்பதை அறிந்து அவற்றையும் பாடமாக்கிக் கொண்டார்.

மகா வித்வான் வளமும் பொருட்செறிவும் நயமும் அமைய பாடல்களை இயற்றுவதில் வல்லவர்; ஆயாசமின்றி கவி பாட வல்லவர். பல சிவத்தலங்களிலுள்ள பெரியவர்கள் இவரை தங்கள் ஊருக்கு அழைத்து சிறப்புச் செய்து தங்கள் ஊரைப் பற்றி ஸ்தல புராணம் இயற்ற வேண்டினர். இவரும் அங்கே சில நாட்கள் தங்கியிருந்து அந்த சிவத்தலத்தைப் பற்றி புராணம் எழுதி உள்ளார். இன்றும் தமிழகத்தில் மிக அதிகமான ஸ்தல புராணங்களை இயற்றியவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. மாட்டு வண்டியில் போகும்போதே ஒரு நூலையோ புராணத்தையோ பாடி முடிப்பவர் என்றால், இவரது கவி பாடும் ஆற்றலை என்னவென்று வியப்பது, புகழ்வது!

70 புராணங்கள், 11 அந்தாதிகள், 10 பிள்ளைத் தமிழ் நூல்கள், 2 கலம்பங்கள், 7 மாலைகள், 3 கோவைகள், உலா, லீலை, தூது நூல் என வகைக்கு ஒன்று, ஆயிரக்கணக்கான தனிப்பாடல்கள் என இவர் இயற்றிய கவிகள் இரண்டு லட்சமிருக்கும் என்கிறார்கள். அதுமட்டுமன்றி காசி இரகசியம், சூதசங்கிதை என்ற வடமொழி நூல்களையும் இயற்றியுள்ளார். இவர் இயற்றிய மாயூர புராணம் மட்டுமே 1895 செய்யுள்களை கொண்டது. எனவேதான் இவரை  ‘பிற்காலக் கம்பர்’ என்கின்றனர் தமிழறிஞர்கள்.

1854ஆம் ஆண்டு நடந்த புலவர்கள் மாநாடு ஒன்றில் திருவாவடுதுறை ஆதீனத் தலைவராக இருந்த ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகரால் ‘மகா வித்வான்’ என்ற பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

தலைவன் / தலைவியை குழந்தையாக உருவகித்து, கற்பனை பல அமையப் பாடுவது  ‘பிள்ளைத் தமிழ்’ ஆகும். மகா வித்வான் பிள்ளைத் தமிழ் இலக்கியத்தில் வல்லவர். இவர் எழுதிய முதல் பிள்ளைத் தமிழ் நூல்  ‘திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளை தமிழ்’. இதில் காப்புச் செய்யுள் மட்டுமே 12. அவையடக்கம் ஒன்று. இத்தனை விரிவான துதிகள் வேறு எதிலும் இல்லை.

இதில் முதல் காப்புச் செய்யுள் விநாயகர் பற்றியது.

நிலாவை வெண்சோற்றுக் கவளம் என்று கருதி துதிக்கை நீட்டுகிறார் விநாயகர். தங்களுக்கு விரகதாபத்தை ஏற்படுத்தும் சந்திரன் இன்றோடு தொலைந்தது என மகளிர் களிக்க, நம்முடைய நாயகனுக்கு துன்பம் வந்ததே என்று நட்சத்திரங்கள் கலங்க, தனது குடையாகிய சந்திரனுக்கு தீங்கென மன்மதன் திகைக்கிறான். ஒரு சாரார் களிக்க மற்றொரு சாரார் துயறுற விநாயகர் தன் அழகிய நீண்ட கையை நீட்டுகிறார் - என்று அச்செய்யுள் கூறுகிறது.

திருமகள் காப்புச் செய்யுளில், இடைச்சியர் வீட்டில் பால் முழுவதும் உண்டு, பின் பிடிபட்டு, மத்தால் அடிப்பட்டு வருந்தும் தன் கணவரை விருப்பப்படி பால் உண்டு சுகமாக தூங்குக - என்று தன் பிறந்த வீடாகிய பாற்கடலில் குடியிருக்கச் செய்தவள் - என்று நயம்பட துதிக்கிறார், மகா வித்வான்.

பெரிய புராணம் பிரசங்கம் செய்வதில் வல்லவர் மகாவித்வான். செட்டி நாட்டைச் சேர்ந்த. சிவஅன்பர் ஒருவர் - வன்றொண்டச் செட்டியார் - இவரை அணுகி சேக்கிழார் பிள்ளைத் தமிழ் பாட வேண்டுமென வேண்டினார். பெரிய புராணம் மீதும் தெய்வச் சேக்கிழாரிடமும் தனக்கிருந்த பற்றும் ஈடுபாட்டின் காரணத்தாலும் உடனே சேக்கிழார் பிள்ளைத் தமிழை மகா வித்வான் பாடினார். அதுவே அவர் இயற்றிய இறுதிப் பிள்ளை தமிழ் நூலாகும்.

தனியொரு மனிதர் பல்கலைக்கழகமாகத் திகழ முடியும் என்பதற்கு சான்றாக வாழ்ந்தவர் மகா வித்வான். அவர் 1876ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் நாள், திருவாசகத்திலுள்ள  ‘அடைக்கலப் பத்து’ பதிகத்தை சீடர்கள் பாடக் கேட்டபடியே சிவபதம் அடைந்தார்.


No comments:

Post a Comment