14/02/2020

தமிழைக் காத்த தாத்தா

-எஸ்.ஆர்.செந்தில்குமார்

உ.வே.சாமிநாதய்யர்


''இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்த வண்ணம் நான் தமிழ் கற்க வேண்டுமென்ற ஆர்வமிகுதிதான் என்னிடம் எழுகிறது''
- இது மகாத்மா காந்தி உதிர்த்த பாராட்டு முத்து.

யாருக்கு இந்தப் பாராட்டு?

உ.வே.சாமிநாதய்யருக்கு!

1937ல் மகாத்மா காந்தி தலைமையில் சென்னையில் இலக்கிய மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்த உ.வே.சா. அவர்களின் அழகிய உரையைக் கேட்ட பின் காந்தி வெளிப்படுத்திய ஆசை வார்த்தை இது. இந்த மாநாட்டின் போதுதான் அனைவராலும் ‘தமிழ்த் தாத்தா’ என்று உ.வே.சா. அழைக்கப்பட்டார்.

உ.வே.சா. கருத்துச் செறிவோடு நகைச்சுவை இழையோடப் பேச வல்லவர் என அவருடைய மாணவர்களான கி.வா. ஜகந்நாதனும் தண்டபாணி தேசிகரும் உ.வே.சா.வின் பேரரான க.சுப்பிரமணியனும் கூறியுள்ளனர். உ.வே.சா. சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய சொற்பொழிவு ‘சங்ககாலத் தமிழும் பிற்காலத்தமிழும்’ எனும் நூலாக வெளிவந்துள்ளது, அவரது உரைநடையின் உச்சத்திற்கு உதாரணம்.

யார் இந்த உ.வே.சா?

தமிழ்... தமிழ்... தமிழ்... என தமிழ் மொழியின் பெயரால் அரசியல், புகழ், செல்வம் குவித்த போலி தமிழ் ஆர்வலர்களுக்கு மத்தியில், தன் வாழ்வையே வேள்வியாக்கி தமிழுக்குத் தொண்டு செய்த தன்னிகரில்லாத தமிழ் தாத்தா.

உ.வே.சாமிநாதய்யர் 1855 - பிப்ரவரி மாதம் 19ஆ ம் தேதி தமிழகத்தில்,பாபநாசம் அருகே உள்ள உத்தமதானபுரம் என்னும் ஊரில் பிறந்தார். தந்தையார் வேங்கட சுப்பையர். தாயார் சரஸ்வதி அம்மாள். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் வெங்கட்ராமன். இவரது தாயார் தமிழ் கடவுள் முருகன் மீது இருந்த பக்தியால் சாமிநாதன் என்ற செல்லப் பெயரால் அழைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பின்னர் சாமிநாதன் என்ற பெயரே நிலைத்து விட்டது.

சாமிநாதனின் தந்தை இசைக் கலைஞர். சாமிநாதன் தனது தொடக்கத் தமிழ்க் கல்வியையும் இசைக் கல்வியையும் சொந்த ஊரில் கற்றார். உ.வே.சாமிநாதனுக்கு சிறுவயதில் விளையாட்டிலும் இசையைக் கற்பதிலும் ஆர்வம் அதிகமிருந்தது. குடும்பம் வறுமையில் வாடிய போதும் உ.வே.சா. கல்வி கற்பதற்கு இவர் தந்தை மிகுந்த முயற்சி எடுத்தார். அக்காலத்தில் இவர் குடும்பம் ஒரு ஊரில் நிலையாகத் தங்குவதற்கு கூட வசதியில்லாமல் ஊர் ஊராக இடம் பெயர்ந்து வாய்ப்புகளைத் தேடியலைந்த போதும் மனம் தளராமல், தமிழை விடாமுயற்சியுடன் கற்றார் உ.வே.சா.

உவேசாவுக்கு பதினான்காம் வயதில் திருமணம் நடந்தது. மணபெண் வயது எட்டு. பொருட்செலவுக்கு பெரும்பாலும் கிராமத்தினர் உதவி செய்து திருமணத்தை நடத்தினர். திருமணத்திற்கு முன்னும் பின்னும் உவேசாவின் சிந்தனை எல்லாம் தமிழ்தான்.

இவர் தந்தை ராமாயண உபன்யாசம் நடத்திவந்தார். சில சமயங்களில் உ.வே.சா. வும் தந்தையுடன் சென்று உபன்யாசத்தில் பங்கெடுத்து கொண்டார். சடகோப ஐயங்காரிடம் தமிழ்கற்கும் வாய்ப்பு கிடைத்தது சாமிநாதனுக்கு. சடகோப ஐயங்கார் ஊட்டிய தமிழ் சுவையால் சாமிநாதன் தமிழ்மீது தீராக் காதல் கொண்டார்.

தன் 17 ஆம் வயதில் தஞ்சாவூரில் தமிழறிஞர் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிடம் 5 ஆண்டு காலம் தமிழ் கற்று அறிஞர் ஆனார். அப்பொழுதுதான் திருநாகைக்காரோணம், நைடதம், திருக்குடந்தைத்திரிபந்தாதி, பழமலைதிருபந்தாதி, திருப்புகலாதிருபந்தாதி, மறைசையந்தாதி, தில்லையக அந்தாதி, மீனாட்சி அம்மன் பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், செங்கழநிர்வினாயகர் பிள்ளைத்தமிழ், அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், அஷ்டப்பிரபந்தங்கள், சீர்காழிக்கோவை, கண்ணப்பநாயனார் புராணம் ஆகிய நூல்களைக் கற்றுத் தெளிந்தார். திருவாடுதுறை ஆதீனத்தின் தொடர்பும் கிடைத்தது. மீனாட்சிசுந்தரம் பிள்ளை மறைந்தபின்னர் திருவாவடுதுறை மடத்தின் தலைவர் சுப்பிரமணிய தேசிகரிடம் நான்காண்டு காலம் தமிழ் பயின்றார். உ.வே.சாமிநாதனின் இலக்கிய ஆர்வமும் தமிழ்பற்றும் ஆதீனத்தை வெகுவாக ஈர்த்தது.

உ.வே.சா. பல செய்யுள்களையும் நூல்களையும் இயற்றியுள்ளார். தந்தையின் வறுமையைக் கண்டு, ஒரு பெரிய மனிதரிடம் சென்று நெல் வேண்டுமென்று இயற்றிய செய்யுள் தான் அவரது முதல் செய்யுள். கலைமகள் துதி, திருலோகமாலை, ஆனந்தவல்லியம்மை, பஞ்சரத்தினம் ஆகியன அடுத்தடுத்த படைப்புகள்.

உ.வே.சா. திருவாவடுதுறையில் தங்கி பாடம் கேட்டு வந்தார். உ.வே.சா. மீது நல்லெண்ணம் கொண்ட ஆதீனம் தேசிகா் அங்கேயே வீடு கட்டிக் கொடுப்பதாகவும் பெற்றோரையும் மடத்துக்கே வந்து விடும்படியும் கேட்டுக் கொண்டதற்கிணங்க குடும்பத்துடன் மடத்துக்கே வந்து விட்டார்கள். மடத்தில் இருக்கும்பொழுது பல பெரும் தமிழ்ப் புலவர்களைக் கண்டு கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. வேதநாயகம்பிள்ளை, சந்திரசேகர கவிராஜபண்டிதா், திரிசிரபுரம் கோவிந்தபிள்ளை ஆகியோரின் பரிச்சயம் கிடைத்தது. தேசிகருடன் மற்ற மாவட்டங்களுக்குச் சென்று அங்கும் பலரை அறிந்து கொள்ளும் வாய்ப்பும் ஏற்பட்டது.

1880 பிப்ரவரி 16 ஆம் தேதி கும்பகோணம் கல்லூரித் தமிழாசிரியர் பணியை ஏற்ற உ.வே.சா. தொடர்ந்து 23 ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்பு 1903 நவம்பரில் சென்னை மாநிலக் கல்லூரியில் ஆசிரியராகப் பதவியேற்றார். அங்கு 16 ஆண்டுகள் பணியாற்றினார். இந்த இரண்டு அரசுக் கல்லூரிகளில் பணியாற்றிய காலப்பகுதியில் அவர் பல நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார். 1924 ஆம் ஆண்டு மீனாட்சி தமிழ்க் கல்லூரியின் முதல்வர் பொறுப்பை உ.வே.சா. ஏற்றார்.

தமிழ் எல்லையில்லா ஞான சாகரம் என உணர்ந்துகொண்ட உ.வே.சா. தமிழன்னையின் கழுத்தில் ஆபரணமாக விளங்கிய இலக்கிய மணிகளைத் தேடத் தொடங்கினார். ஓலைச் சுவடிகளைத் தேடி அலைந்த அவரது பயணங்கள் புனிதப் பயணங்களாகவே அமைந்தன. ஆங்கிலேயருடைய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். பழந்தமிழ் நுால்களைக் கற்கவோ, பாதுகாக்கவோ எவரும் முயன்றதில்லை. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சமய இலக்கியங்கள்,- காப்பியங்கள் தனித்தனியாக ஆங்காங்கு சிதறிக் கிடந்தன. பனையோலைச் சுவடிகளில் எழுதப் பெற்ற அவை, பூச்சி அரித்தும் உருக்குலைந்தும் இருந்தன. மக்களின் அறியாமையால் பண்டைத் தமிழ் இலக்கிய ஏடுகளில் பல தீக்கிரையாகின. ஆடிப் பெருக்கு போன்ற நீர்விழாக்களின் போது ஆற்றில் விடப்பட்டன.

இப்படி காணாமல் போனவை போக எஞ்சியிருந்த ஓலைச் சுவடிகளை தேடிப் பிடித்தார் உ.வே.சா. இதனால் அவர் அடைந்த இன்னல்கள் , இடங்களில் ஏற்பட்ட அவமானம் ஏராளம். அவற்றை எல்லாம் தாங்கிக் கொண்டு, எங்கேயாவது ஏடு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு தேடி அலைந்தார். இவரது தமிழார்வத்தைக் கண்டு வியந்த தருமபுர ஆதீனத்தின் தலைவர் மாணிக்கவாசக தேசிகர், ஆதீனத்தில் இருந்த 50க்கும் மேற்பட்ட சுவடிகளை அளித்தார்.

இலக்கியங்கள் எழுதப்பட்டிருந்த அந்த ஏடுகள் அனைத்தும் காலத்தால் பழையவனவாய் உளுத்துப்போய், செல்லரித்தும், எலி கடித்தும், கிழிந்தும், சிதைந்து, பூச்சிகள் உண்டும் எஞ்சியவையாகக் கிடந்தன'.

கும்பகோணத்தில் முன்சீப்பாக இருந்த ராமசாமியின் உதவியால், உ.வே.சா., முதன்முதலில் பதிப்பித்த நுால் 'சீவக சிந்தாமணி'. உ.வே.சா., சைவ சமயத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் முதலில் பதித்தவை சமண நுாலான 'சீவக சிந்தாமணி'யையும், பௌத்த நுாலான 'மணிமேகலை'யையும் தான். இறை பக்தி வேறு; இலக்கிய ஈடுபாடு வேறு என்று வாழ்ந்து காட்டியவர் உ.வே.சா. 

தாத்தா தந்த நூல்கள் 
சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம், 12 புராணங்கள், பெருங்கதை, 9 உலா நூல்கள், 6 தூது நூல்கள், 3 வெண்பா நூல்கள், 4 அந்தாதி நூல்கள், 2 பரணி நூல்கள், 2 மும்மணிக்கோவை நூல்கள், 2 இரட்டை மணிமாலை நூல்கள், அங்கயற்கண்ணி மாலை, இதர சிற்றிலக்கியங்கள் 4. 

இவை தவிர 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார், தமிழ்த் தாத்தா. 
'சிலப்பதிகாரம்', 'மணிமேகலை' ஆகிய காப்பியங்களைத் தொடர்ந்து குறுந்தொகைக்கு உரை எழுதி பதிப்பித்தார். எல்லாப் பாடல்களுக்கும் அவற்றின் உரைகளுக்கும் அவர் தந்திருக்கும் அடிக்குறிப்புகளும் பாடவேறுபாடுகளும் ஆய்வாளர்களுக்கு புதுவழி காட்டுவனவாகவும், புதுச் செய்திகளைத் தருவனவாகவும் அமைந்துள்ளன.

உ.வே.சா.வின் இச்சிறந்த பணியினால், தமிழகத்தில் பதிப்புத் துறையில் பல்வேறு புதிய மாற்றங்கள் ஏற்பட்டன. ஆய்வுப் போக்கில் புது மாற்றத்தையும் புகுத்தியது. உதாரணமாக புறநானுாற்றுப் பதிப்பால் தமிழகத்தின் பண்டைய நாகரிகமும், மக்களின் பழக்கவழக்கங்களும் தெரிய வந்தன.

தமிழ்த் தாத்தாவுக்கு மரியாதை 

இந்திய அரசு பிப்ரவரி 18, 2006 ஆம் ஆண்டில் உ.வே.சா. நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டது. உத்தமதானபுரத்தில் உ.வே.சா வாழ்ந்த இல்லம் தமிழ்நாடு அரசால் நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளது.  1942ல் இவர் பெயரால் சென்னை, வசந்த நகரில் (பெசன்ட் நகரில்) டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

'சிறந்த குருபக்தி', 'சுவாமி இருக்கிறார்', 'மாம்பழப்பாட்டு' போன்ற கட்டுரைகள் நகைச்சுவை தோன்ற உ.வே.சா., எழுதியவை. உ.வே.சா., தம் வாழ்வில் கண்டு பழகியவர்கள், இசையறிஞர்கள், இலக்கிய அறிஞர்கள், பதிப்பாசிரியர்கள், புலவர்கள், சமயக் காவலர்கள் என பலரோடும் பழகிய பொழுது நடந்த நிகழ்ச்சிகளை, தான் கேட்டவற்றை சுவைபடவும், சிந்திக்கத் துாண்டும் வகையிலும் கட்டுரைகளாகப் படைத்தார்.

சில செய்திகளை கதை போலவும் எழுதுவார். 1940இல் 'என் சரித்திரம்' என்ற நுாலை எழுதத் தொடங்கினார். இந்நுாலில் தமிழ் வளர்ச்சி, தமிழகத்தின் வரலாறு, அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ் புலவர்கள், புரவலர்கள், ஆதீனத் தலைவர்கள் ஆகியோரின் வரலாற்றுக் குறிப்புகளை தந்துள்ளார். தனது குருநாதரின் வாழ்க்கை வரலாற்றையும் உ.வே.சா. எழுதியுள்ளார்.

பெரும்பாலான பதிப்புகள் தமிழ் அறிஞர்களின் இலக்கிய ஆர்வத்தைத் துாண்டக் காரணமாக அமைந்தன. உதாரணமாக 'குறிஞ்சிப்பாட்டு' பதிப்பிக்கும் பொழுது, 99 வகையான மலர்களின் பெயர்களில் சில மலர்களின் பெயர்கள் இல்லை. அதனைப்பற்றிக் குறிப்பிடும் பொழுது, 'எத்தனை மலர்கள் உதிர்ந்து விட்டனவோ, அவற்றை எங்கேயாவது தேடி எடுத்து கோர்த்துக் குறையை நிரப்புவோம்' என்று சுவைபடக் கூறுகிறார்.

உ.வே.சா.வின் தமிழ்த்தொண்டினை தமிழ் பயின்ற வெளிநாட்டு அறிஞர்களான சூலியன் வின்சோன், ஜி.யு.போப் போன்றவர்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர். உ.வே.சா. தமிழுக்கும் இலக்கியத்துக்கும் ஆற்றிய பங்களிப்பினைப் பாராட்டி மார்ச் 21, 1932 அன்று சென்னைப் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் அளித்தது. இது தவிர தக்ஷிண கலாநிதி என்னும் பட்டமும் பெற்றுள்ளார். 1906ஆம் ஆண்டு சென்னை அரசாங்கம் இவரது தமிழ்த் தொண்டை பாராட்டி ‘மகாமகோபாத்யாயர்’ என்ற பட்டத்தை வழங்கியது.

தமிழுக்காக தன் வாழ்வையே வேள்வியாக்கிக் கொண்ட தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் ஏப்ரல் 28 ஆம் தேதி 1942 ஆம் ஆண்டு அவருடைய 87 ஆம் வயதில் மறைந்தார். அன்னாரின் மகத்தான உழைப்பும் தியாகமும் அர்ப்பணிப்பும் மட்டும் இல்லையென்றால் நமக்குச் சங்க இலக்கியத்திலும் பிற்கால இலக்கியத்திலும் பல நூல்கள் கிடைத்திருக்காது. தமிழ் உள்ளவரை தமிழ் கூறும் இந்நல் உலகம் இந்தத் தாத்தாவின் தியாகத்தை என்றும் நினைவில் நிறுத்தும்.

No comments:

Post a Comment