20/09/2020

வையத் தலைமை கொள்! (பகுதி- 3, 4, 5)

-சேக்கிழான்


(புதிய பார்வையில் புதிய ஆத்திசூடி)


3. நலம் விழையும் நாயகர்


 இனி நாம் ‘புதிய ஆத்திசூடியை 7 அம்சங்களாகத் தொகுத்துக் கொள்ளலாம். இந்தத் தலைப்புகளுக்குள், பாரதியின் ‘புதிய ஆத்திசூடிவரிகள், அவற்றின் மூல எண்களுடன் பட்டியலிடப்படுகின்றன.

 அ. பண்புநலம் கூறுபவை: 21


1. அச்சம் தவிர்

2. ஆண்மை தவறேல்

14. காலம் அழியேல்

16. கீழோர்க்கு அஞ்சேல்

26. சாவதற்கு அஞ்சேல்

27. சிதையா நெஞ்சு கொள்

37. ஞமலி போல் வாழேல்

39. ஞிமிரென இன்புறு

40. ஞெகிழ்வது அருளின்

46. துன்பம் மறந்திடு

45. தீயோர்க்கு அஞ்சேல்

47. தூற்றுதல் ஒழி

51. தொன்மைக்கு அஞ்சேல்

72. பேய்களுக்கு அஞ்சேல்

73. பொய்மை இகழ்

76. மானம் போற்று

84. மோனம் போற்று

85. மௌட்டியம் தனைக் கொல்

95. ரோதனம் தவிர்

96. ரௌத்திரம் பழகு

110. வௌவுதல் நீக்கு

 ஆ. உடல்நலம் வலியுறுத்துபவை: 17


3. இளைத்தல் இகழ்ச்சி

5. உடலினை உறுதி செய்

6. ஊண் மிக விரும்பு

9. ஐம்பொறி ஆட்சி கொள்

12. ஔடதம் குறை

17. குன்றெனெ நிமிர்ந்து நில்

23. கோல்கைக்கொண்டு வாழ்

38. ஞாயிறு போற்று

53. தவத்தினை நிதம் புரி

63. நொந்தது சாகும்   

64. நோற்பது கைவிடேல்

80. மூப்பினுக்கு இடங்கொடேல்

83. மொய்ம்புறத் தவம் செய்

88. யௌவனம் காத்தல் செய்

92. ருசிபல வென்றுணர்

93. ரூபம் செம்மை செய்

106. வீரியம் பெருக்கு

 இ. அறிவுநலம் வளர்ப்பவை: 13


13. கற்றது ஒழுகு

25. சரித்திரத் தேர்ச்சி கொள்

33. சைகையிற் பொருளுணர்

35. சோதிடம் தனை இகழ்

57. நீதிநூல் பயில்

59. நூலினைப் பகுத்துணர்

75. மந்திரம் வலிமை

89. ரஸத்திலே தேர்ச்சி கொள்

90. ராஜஸம் பயில்

94. ரேகையிற் கனிகொள்

98. லாவகம் பயிற்சி செய்

101. (உ)லோக நூல் கற்றுணர்

104. வானநூல் பயிற்சி கொள்

 ஈ. நடைநலம் நாடுபவை: 13


8. ஏறுபோல் நட

11. ஓய்தல் ஒழி

19. கெடுப்பது சோர்வு

28. சீறுவோர்ச் சீறு

36. சௌரியம் தவறேல்

42. தன்மை இழவேல்

43. தாழ்ந்து நடவேல்

58. நுனியளவு செல்

60. நெற்றி சுருக்கிடேல்

67. பிணத்தினைப் போற்றேல்

68. பீழைக்கு இடங்கொடேல்

77. மிடிமையில் அழிந்திடேல்

91. ரீதி தவறேல்

 உ. எண்ணநலம் விதைப்பவை: 13


7. எண்ணுவதுயர்வு

30. சூரரைப் போற்று

31. செய்வது துணிந்து செய்

34. சொல்வது தெளிந்து சொல்

52. தோல்வியிற் கலங்கேல்

54. நன்று கருது

56. நினைப்பது முடியும்

61. நேர்படப் பேசு

62. நையப் புடை

78. மீளுமாறு உணர்ந்து கொள்

81. மெல்லத் தெரிந்து சொல்

100. (உ)லுத்தரை இகழ்

107. வெடிப்புறப் பேசு

 ஊ. சமூகநலம் விழைபவை: 15


4. ஈகை திறன்

10. ஒற்றுமை வலிமையாம்

15. கிளை பல தாங்கேல்

18. கூடித் தொழில் செய்

21. கைத்தொழில் போற்று

29. சுமையினுக்கு இளைத்திடேல்

32. சேர்க்கை அழியேல்

65. பணத்தினைப் பெருக்கு

66. பாட்டினில் அன்பு செய்

74. போர்த்தொழில் பழகு

82. மேழி போற்று

87. யாரையும் மதித்து வாழ்

97. லவம் பல வெள்ளமாம்

99. லீலை இவ்வுலகு

103. வருவதைப் பகிர்ந்துண்.

 எ. கடமைநலம் விதிப்பவை: 18


20. கேட்டிலும் துணிந்து நில்

22. கொடுமையை எதிர்த்து நில்

24. கௌவியதை விடேல்

41. ஞேயம் காத்தல் செய்

44. திருவினை வென்று வாழ்

48. தெய்வம் நீயென்று உணர்

49. தேசத்தைக் காத்தல் செய்

50. தையலை உயர்வு செய்

55. நாளெலாம் வினை செய்

69. புதியன விரும்பு

70. பூமி இழந்திடேல்

71. பெரிதினும் பெரிது கேள்

79. முனையிலே முகத்து நில்

86. யவனர்போல் முயற்சி செய்

102. லௌதிகம் ஆற்று

105. விதையினைத் தெரிந்திடு

108. வேதம் புதுமை செய்

109. வையத் தலைமை கொள்.

 அதாவது, பண்பு நலம், உடல்நலம், அறிவுநலம், நடைநலம், எண்ணநலம், சமூகநலம் ஆகியவற்றை வளர்ப்பதன் வாயிலாக, கடமைநலத்தை நிறைவேற்ற மகாகவி பாரதி வலியுறுத்துகிறார் எனலாம்.

 அடுத்த அத்தியாயத்தில் இவற்றைத் தொகுத்தும் விரித்தும் பொருள் காணலாம்.


4. வளர்ச்சிக்கான மூன்று அடிப்படைகள்:

 ‘குணநலம் சான்றோர் நலனே என்பார் திருவள்ளுவர் (திருக்குறள்- 982). நாட்டின் குடிமகன் சான்றோனாக இருக்க வேண்டும் என்று விழையும் பாரதி, அதற்கான பண்பு நலங்களைக் கூறிச் சென்றிருக்கிறார். அச்சமே மனிதனை கீழ்நிலைக்குத் தள்ளுகிறது என்பதால்தான் ‘அச்சம் தவிர் என்று தனது புதிய ஆத்திசூடியைத் துவக்குகிறார் பாரதி.  ‘அச்சமே கீழ்களது ஆசாரம்என்ற திருக்குறளை (1075) இங்கு நினைவு கூரலாம்.

 யாருக்கெல்லாம் அஞ்சக் கூடாது? கீழோர்க்கு (16), சாவதற்கு (26), தீயோர்க்கு (45), தொன்மைக்கு (51), பேய்களுக்கு (72) அஞ்சக் கூடாது என்கிறார் பாரதி. அடுத்து, அச்சமின்மைக்கு வழிவகுக்கக் கூடியதாக, ஆண்மை தவறேல் (2) என்ற வாசகம் வழி, வீரத்தை விட்டுவிடக் கூடாது என்கிறார்.

 காலத்தை வீணாக்குதல் கூடாது (14); எந்த இடரிலும் மனம் தளரக் கூடாது (27); நாய் போல அடிமை வாழ்வு வாழக் கூடாது (37); தேனீக்கள் போல பிறரும் இன்புற வாழ வேண்டும் (38); எளியோர்க்கு இரக்கம் காட்டுவது பண்புடைமை (40); துயரத்தை வெல்ல வேண்டும் (46), யாரையும் புறம் கூறக் கூடாது (47); பொய்யை வெறுக்க வேண்டும் (73); தன்மானத்துடன் வாழ வேண்டும் (76); தேவையான நேரங்களில் அமைதியை, மௌனத்தைக் கடைபிடிக்க வேண்டும் (84); ஆணவம் கூடாது (85); பொறாமை கூடாது (110) ஆகிய அமுத மொழிகள் வாயிலாக, நற்குணங்களை பண்புப் பதிவுகளாக இளையோர் நெஞ்சில் நாட்டுகிறார் பாரதி.

 ஒருவன் உயர்ந்த குணங்கள் கொண்டவனாக இருந்தாலும் வலிமை வாய்ந்தவனாக இருந்தால் மட்டுமே அவனால் சாதிக்க முடியும். எனவே தான் உடலினை உறுதி செய் (5) என்று கட்டளையிடுகிறார் பாரதி.

 வலிமையே வாழ்வு…

 ‘பலமே வாழ்வு; பலவீனமே மரணம் என்று கூறுவார் சுவாமி விவேகானந்தர். வலிமையான உடலில் தான் உறுதியான உள்ளம் அமையும் என்பது அவர்தம் கூற்று. எனவேதான், உடல்நலத்துக்கு உகந்த அறிவுரைகள் பலவற்றை அருளி இருக்கிறார் பாரதி.

 

‘விசையுறு பந்தினைப் போல்- உள்ளம்

வேண்டியபடிச் செல்லும் உடல் கேட்டேன்..

 -என்றும் (கேட்பன),

 

‘தோளை வலிவுடையதாக்கி- உடற்

சோர்வும் பிணி பலவும் போக்கி- அரி

வாளைக் கொண்டு பிளந்தாலும்- கட்டு

மாறாத உடலுறுதி தந்து…

 -என்றும் (யோகசித்தி) மகாகவி பாரதி பாடி இருக்கும் பாடல்களை இங்கு நினைவுகொள்ளுதல் நலம்.

 உடல் வலிமை, நோயின்மை, புலனடக்கம், தொடர் பயிற்சி, நல்லுணவு ஆகியவற்றால் உடல்நலத்தை எய்தல் கூடும். அதற்கான அறிவுரைகளை பாரதி கூறி இருக்கிறார்.

 விரிவடைவதே வாழ்க்கை. சுருங்குவதே அழிவு என்று சொல்லப்படுவதுண்டு. எனவேதான் இளைத்தல் நல்லதல்ல (3) என்கிறார் பாரதி. உடல் நலத்தில் மட்டுமல்ல செல்வ வளத்திலும் இளைத்தல் பலவீனமே. பூனை இளைத்தால் எலிக்குக் கொண்டாட்டம் என்ற பழமொழி உண்டு.

 உடலினை பயிற்சிகள் வாயிலாக உறுதியானதாக்க வேண்டும் (5); உடலையும் மனதையும் கட்டுக்குள் வைப்பதன் மூலமாக ஐம்புலன்களையும் ஆளத் தெரிந்திருக்க வேண்டும் (9); நோய்களுக்கான மருந்தை குறைவாகவே உட்கொள்ள வேண்டும்; அதாவது நோய்களே வராது தடுக்க வேண்டும் (12);

நமது தோற்றத்துக்குப் பொலிவூட்டும் தடியுடன் எப்போதும் இருக்க வேண்டும். அதாவது சிலம்பக் கலை பயின்றிருக்க வேண்டும் (23); சூரிய வந்தனம் செய்வதன்மூலம் உடலை நெறிப்படுத்த வேண்டும் (38); மனதை ஒருமைப்படுத்தும் தியானம், தவம் போன்றவற்றில் தினமும் ஈடுபட வேண்டும் (53); இறப்புக்கு வழிவகுக்கும் நோயால் நொந்துபோவதைத் தவிர்க்க வேண்டும் (63);

 வாழ்க்கையை வெறுக்கச் செய்யும் மூப்பு விரைவில் வர அனுமதிக்கக் கூடாது (80);  முழுமையான ஈடுபாட்டுடன் தவம் செய்ய வேண்டும் (83); இளமைத் தன்மையை காக்க நிதமும் உடற்பயிற்சி, நல்லுணவு, போதிய உறக்கம், புலனடக்கம் ஆகியவற்றைக் கைக்கொள்ள வேண்டும் (88); நாவின் ருசிக்கு அடிமையாகிவிடக் கூடாது (92); எப்போதும் மிடுக்காகவும், பொலிவான முகத்துடனும் இருக்க வேண்டும் (93); உடலின் வீரியத்தை தளரவிடக் கூடாது; அதை விருத்தி செய்ய வேண்டும் (106) ஆகியவை உடல்நலம் குறித்த மகாகவி பாரதியின் அறிவுறுத்தல்கள்.

 கற்க கசடற…

 அடிப்படை குணங்கள் நல்லவையாக அமைய வேண்டும்; அதன்பின் உறுதியான உடலை அமைக்க வேண்டும்; அதன்பின் அறிவு வளர்ச்சிக்குத் தேவையான கல்வி நாட்டத்தில் குழந்தைகள் கவனம் கொடுக்க வேண்டும்.

 கல்வி கற்பதன் நோக்கம் அதன் படி நடப்பதே என்கிறார் (13) பாரதி.

 

கற்க கசடற கற்பவை; கற்றபின்

நிற்க அதற்குத் தக

 என்று திருவள்ளுவர் (திருக்குறள்- 391) இரு வரிகளில் கூறுவதை இரண்டே வார்த்தைகளில் சொல்கிறார் பாரதி. எத்தகையவற்றைக் கற்க வேண்டும்?

 சரித்திரத்தில் தேர்ந்த அறிவு தேவை (26); சைகைக்கலையின் பொருள் உணர்ந்திருக்க வேண்டும் (33); சோதிடத்தை நம்பி எதிர்காலத்தை விட்டுவிடாமல், நாமே எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் (35); சட்டம், நீதி ஆகியவற்றைக் கூறும் நூல்களைக் கற்றுத் தேர்ந்திருக்க வேண்டும் (57); எந்த நூலாயினும் அதனை முழுமையாக நுணுகி ஆராய்ந்து கற்க வேண்டும் (59); வலிமை தரும் மந்திரங்களைக் கொண்ட வேதம் பயில வேண்டும் (75); நவரசம் என்று சொல்லக்கூடிய மெய்ப்பாடுகளையும் அவற்றைக் கொண்டு இயலும் நடனம், நாடகம் ஆகிய கலைகளிலும் தேர்ச்சி கொள்ள வேண்டும் (89);

 எல்லா இடங்களிலும் மென்மையான போக்கு உதவாது. எனவே முக்குணங்களில் ஒன்றான ராட்சத குணமும் பயின்றிருக்க வேண்டும் -இது கல்வி அல்ல; கவாத்து போன்ற பயிற்சியால் அமைவது (90); ஒருவரை அறிய கைரேகை சாத்திரத்தை அறிந்திருக்க வேண்டும் (94); எதையும் உடனே வெற்றிகரமாகச் செய்துமுடிக்க வேண்டுமானால், அது லாவகமாக முடிய வேண்டுமானால் இடையறாத பயிற்சி அவசியம் (98); உலோகங்கள் தொடர்பான அறிவியலைக் கற்க வேண்டும் (101); வானவியலில் ஞானம் பெற வேண்டும்- சோதிடத்தை இகழ்ந்தவர் வானநூலைக் கற்கச் சொல்கிறார் (104) ஆகியவை பாரதியின் அறிவுநல விழைவுகள்.

 

 5. இலக்கை அடைய எளிய கருவிகள்…

 ஒருவர் அடிப்படையாகப் பெற வேண்டிய குணநலன்கள், உடல் வலிமை, கல்வித் திறம் ஆகியவற்றைப் பெற்றிருந்தாலும், அவனது நடையழகும், நல்லெண்ணமும், சமுதாய உணர்வும்தான் அவனை அவையத்து முந்தி இருக்கச் செய்கின்றன; இலக்கை நோக்கி அவனை உந்தித் தள்ளுகின்றன.

 ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் அவரைப் பற்றிய சித்திரம் உருவாகுதல் உலக இயல்பு. எனவே, நமது நடையும் நடத்தையுமே நமக்கு வெளியுலகில் உடனடியான மதிப்பைப் பெற்றுத் தரும். எனவேதான், நடையழகுக்கு பாரதி முக்கியத்துவம் தந்திருக்கிறார்.

 தனது ‘நிகழ்கின்ற ஹிந்துஸ்தானமும், வருகின்ற ஹிந்துஸ்தானமும்என்ற கவிதையில், எப்படிப்பட்ட இளைஞர்கள் நாட்டில் இருக்க வேண்டும், எப்படிப்பட்டவர்கள் இருக்கக் கூடாது என்பதை அறுதியிட்டு உரைத்திருக்கிறார் பாரதி.

 வலிமையற்ற தோளுடன், மார்பு ஒடுங்கிய, பொலிவற்ற முகத்துடன், கண்களில் ஒளியற்ற கண்களுடன் காட்சிதரும் இளைஞனை போ போ என்று விரட்டுகிறார் அவர். அவரது காலத்தைய அடிமைப்பட்ட இளைஞனின் வடிவம் அது. மாறாக, அவர் விரும்பி வரவேற்ற இளைஞன் எப்படி இருக்கிறான் என்று பாருங்கள்:

 

ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா

உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா

களிபடைத்த மொழியினாய் வா வா வா

கடுமைகொண்ட தோளினாய் வா வா வா

தெளிவுபெற்ற மதியினாய் வா வா வா

சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா

எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா

ஏறுபோல் நடையினாய் வா வா வா!

என்று பாடும் பாரதிக்கு, ஏறுபோல் நடப்பதில் அலாதிப் பிரியம். திமிர்ந்த காளை போல எவர்க்கும் அஞ்சாத தீரத்துடன், வீரவிழிப் பார்வையுடன், உலகை வெல்லத் துணிந்த ஞானத்துடன் இளைஞர்கள் நடை பயில வேண்டும் என்பதே அவரது அவா.

 நன்னடைக்கு என்னென்ன தேவை? இதோ அவரே கூறுகிறார்…

 சோம்பலும், ஓய்வு என்ற பெயரிலான காலமழித்தலும் கூடாது (11); நிலையிற் கலங்காத குன்று போல என்றும் நிமிர்ந்த மிடுக்கு வேண்டும் (17); சோம்பல் மனிதனின் முன்னேற்றத்துக்குத் தடை (19); கெடுமனம் படைத்தோரிடம் சீறத் தயங்கக் கூடாது (28); வசதியான வாழ்க்கையைத் தவறவிட்டுவிடக் கூடாது (36); எக்காலத்தும் நமது இயல்பான தன்மையைக் கைவிடக் கூடாது (42); யாருக்கும் தாழ்ந்துபோகக் கூடாது (43); எந்த வேலையை எடுத்துக் கொண்டாலும் அதன் இறுதி வரை முயன்று முடிக்க வேண்டும் (58);

 எப்போதும் யாரிடமும் முகம் சுழித்துப் பேசக் கூடாது, முகமலர்ச்சியுடன் இருக்க வேண்டும் (60); காலம் கடந்துபோன கருத்துகளைப் போற்றக் கூடாது, என்றும் புத்திளமையுடன் திகழ வேண்டும் (67); பெருமை தரும் செயல்களுக்கு மாற்றான பீடைச் செயல்களுக்கு இடம் தரக் கூடாது (68); சோம்பேறித்தனத்தால் வாழ்வை இழந்துவிடக் கூடாது (77); வாழ்க்கையில் ஓர் ஒழுங்குமுறையை வகுத்துக்கொண்டு தவறாமல் வாழ்வது சிறப்பு (91).

 மேற்கண்டவற்றைப் பின்பற்றுவோரின் நடை கம்பீரமாகவும், தேஜஸுடனும் விளங்கும். அத்தகையவர்களை உலகம் வணங்கும்.

 சொலல் வல்லன்…

 தற்கால இளைஞர்கள் கணிப்பொறியிலும், கையடக்க அலைபேசியிலும் தனது காலத்தைச் செலவிட்டு பொலிவிழந்து வருகின்றனர். நமது எண்ணமே நம்மை வடிவமைக்கும் தகைமை வாய்ந்தது. எனவே நாம், அநாவசிய எண்ணங்களைத் தவிர்ப்பது, வாழ்வின் உயர்வுக்கு வழிகோலும்.

 ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று திருவள்ளுவர் (திருக்குறள்- 596) ஊக்கமுடமை அதிகாரத்தில் கூறும் கருத்து, உயர்ந்த எண்ணமே நம்மை உயர்த்தும் என்பதுதான். இதனையே ‘எண்ணுவதுயர்வு’  என்று (7) கூறுகிறார் பாரதி. இதற்கான வழிகள் யாவை என்றும் பல இடங்களில் அவர் கூறிச் செல்கிறார்…

 செயற்கரிய செயல் செய்யும் சூரர்களைப் போற்ற வேண்டும். அதன்மூலம் நாமும் அரிய செயல்வீரர்களாக முடியும் (30); எந்தச் செயலாயினும் திட்டமிட்டு, துணிவுடன் செய்ய வேண்டும் (31); யாரிடம் பேசினாலும் தெளிவாகப் பேச வேண்டும் (34); அதையும் நன்கு ஆராய்ந்து பேச வேண்டும் (81); எதையும் நேர்மையுடனும் அச்சமின்றியும் பேச வேண்டும் (61); அதையும் உரக்க, துணிவுடன் பேச வேண்டும் (107);

 நாம் செய்யும் காரியங்கள் அனைத்தும் கடமையுணர்வுடன் மட்டுமே செய்யப்பட வேண்டும், அதன் வெற்றி- தோல்வியில் மயங்கக் கூடாது (52); நல்லனவற்றையே எண்ண வேண்டும். எந்தக் காரியம் செய்யப் புகும் முன்னரும் அதன் வெற்றியையே கருத வேண்டும் (54); நாம் உள்ள உறுதியுடன் இருந்தால் நினைப்பது அனைத்தும் நிறைவேறும் (56);

 எந்த ஒரு செயலையும் முழுமையாக முடிக்க வேண்டும். தானியங்களை நையப் புடைத்தல் போல செயலில் வைராக்கியம் வேண்டும் (62); திட்டமிட்ட, வியூகம் அமைத்த செயல்கள் நிச்சயம் வெல்லும். அந்தத் திட்டங்கள் உதவாதபோது அவற்றிலிருந்து விடுபடவும் தெரிந்திருக்க வேண்டும் (78); அற்பர்கள், கீழோர், நேர்மையற்றவர்கள், சுயநலமிகளை மதிக்கக் கூடாது (100).

 இவ்வாறு உயர்ந்த எண்ணங்களுடன், வல்லமை மிகுந்த சொல்லாடல் மிகுந்தவனை வெல்ல உலகில் யாரும் இல்லை என்று கூறுகிறது திருக்குறள். (647):

 

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

இகல் வெல்லல் யார்க்கும் அரிது.

 இறைவனின் பணியாளனே மனிதன்:

 நமக்கு இறைவன் அருளிய வாழ்க்கை அனைவருக்கும் நலன் விளைவிக்கவே என்ற எண்ணமே நம்மை உய்விக்கும். இல்லாதோர்க்கு ஒன்று ஈவதே வாழ்வின் பொருள் என்பார் திருவள்ளுவர் (திருக்குறள்- 231). பாரதியும் ‘ஈகை திறன்’ (4) என்று கூறுவதன் வாயிலாக, தானம் செய்வதன் உட்பொருளை விளக்குகிறார். இதுவே சமுதாய உணர்வு. இதனை வலுப்படுத்த பாரதி கூறும் வழிமுறைகள்:

 ஒற்றுமையே நாட்டுக்கும் தனி மனிதனுக்கும் நன்மை விளைவிக்கும் (10); எந்தப் பலன் கிடைத்தாலும் அதனை அனைவரும் பகிர்ந்துகொள்ள வேண்டும் (103); பிறரது அனைத்துச் செயல்களுக்கும் தனி ஒருவன் பொறுப்பாக முடியாது. அனைவரையும் அரவணைக்க வேண்டும் என்பதற்காக அவர்களது கடமைகளை நாமே செய்ய இயலாது (15); அனைவரும் இணைந்து தொழில் செய்து நட்டை முன்னேற்ற வேண்டும் (18); ஏதாவது ஒரு கைத்தொழிலில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் (21); எந்த வேலையும் சிறியதோ பெரியதோ அல்ல. அனைத்தும் முக்கியமானவையே (97); உழவுத் தொழிலைப் போற்ற வேண்டும் (82);

 குடும்பச் சுமை, சமுதாயக் கடமைகளின் சவாலைக் கண்டு மருண்டுவிடக் கூடாது (29); நல்ல சேர்க்கை நன்மையைப் பல மடங்கு தரும். அத்தகைய நட்பு வட்டத்தை இழந்துவிடக் கூடாது (32); உலக வாழ்க்கைக்கு அடிப்படையான பணத்தினைப் பெருக்கும் தொழில்களில் ஈடுபட வேண்டும் (65); இசை, பாட்டு முதலான கலைகளால் சமுதாயத்தில் அன்பைப் பெருக்க வேண்டும் (66);

 நாட்டின் பாதுகாப்புக்கு உதவும் போர்க்கலைகளைப் பயின்றிருக்க வேண்டும். அது தனி மனிதப் பாதுகாப்புக்கும் உதவும் (74); மனிதர்கள் எவரும் தாழ்ந்தவர் அல்லர். சிறியவர்-  பெரியவர், மேலோர்- கீழோர், செவர்- ஏழை என்ற எந்த பேதமும் இன்று அனைவரையும் சமமாக மதிக்க வேண்டும் (87);  இந்த உலகம் இறைவனின் அற்புதமான லீலைகளில் இயங்கும் ஒரு பொம்மை. இதை மனதில் இருத்தி, ஆணவம் இல்லாது, அனைவருக்கும் நலம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் (99).

 இதுவரையிலும் 6 விதமான சுய முன்னேற்ற அம்சங்களை நாம் பார்த்தோம். இந்த சுய முன்னேற்றத்தால் அடைய வேண்டியது என்ன?

 அடுத்த அத்தியாயத்தில் அதனைக் காண்போம்…


(தொடர்கிறது...)

No comments:

Post a Comment