20/09/2020

இறைப்பற்றுடன் கருணாமூர்த்தியாகவும் திகழ்ந்தவர்!

-ஈரோடு என்.ராஜன்



பத்மஸ்ரீ பி.ஆர்.கிருஷ்ணகுமார் வாரியார் 
(தோற்றம்: 1951 செப். 23 - மறைவு: 2020 செப். 16)

செப்டம்பர் 16 -ஆம் தேதி கோயமுத்தூரில் காலமான பத்மஸ்ரீ டாக்டர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் வாரியாரை நன்கு அறிந்தவர்களுக்கு அவருடைய கண்டிப்பான இயல்பும் நடைமுறையும் தெரிந்திருக்கும். தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக முன்வைக்கின்ற அவருடைய பாணியைக் கண்டு பலருக்கு பயமும் அஜீரணமும் ஏற்படுவதுண்டு.

ஆனால், கிருஷ்ணகுமார் என்ற தனிப்பட்ட நபரின் இதயம் எந்த அளவுக்கு விசாலமானது என்பதையும், அவருடைய இறைப்பற்று, நலிந்தோர் மீதும் ஏழை எளிய மக்கள் மீதும் அவர் கொண்டிருந்த அக்கறை, பரிவு, குறிப்பாக இறை பக்தர்களை பற்றி அவருக்கே உரிய ரீதியில் கொண்டிருந்த தீர்க்கமான கருத்துகள் பற்றியும் தெரிய வேண்டுமென்றால், அவரை நெருங்கித் தெரிந்துகொள்ள வேண்டும்.

2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2017 செப்டம்பர் வரை அவர் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தினுடைய தேசியத் தலைவராக இருந்தார். அப்பொழுது நிகழ்ந்து கொண்டிருந்த சில விஷயங்களைப் பற்றி குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது அவரை நேரில் பார்க்கவோ அல்லது அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசவோ செய்து, அறிவுறுத்தல்களைப் பெற்றுக் கொண்டிருந்தேன். அப்படி அவரிடம் மிக நெருக்கமாகப் பழகும்பொழுது தான், வெளிப்பார்வைக்கு முட்களைக் கொண்ட பலாப்பழத்தைப் போன்று தோன்றினாலும், உள்ளுக்குள் தேன்சுவையுள்ள பலாச்சுளைகளைக் கொண்ட அற்புத மனிதராக அவர் திகழ்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது .

திரு.கும்மனம் ராஜசேகரன் 2008 -ஆம் ஆண்டு முதல் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் தேசிய பொதுச்செயலாளராகவும், பிறகு 2014 -இல் இருந்து தேசிய துணைத் தலைவராகவும் பொறுப்பெடுத்துப் பணியாற்றி வந்தார். 2015-ஆம் ஆண்டு டிசம்பரில் அவர் பாரதீய ஜனதா கட்சியின் கேரள மாநிலத் தலைவராக அறிவிக்கப்பட்டார். அடுத்த இரண்டு மாதங்களில் சமாஜத்தின் தேசிய செயற்குழு பெங்களூரில் நடைபெற்றது. அப்போது, அவருடைய தடையில்லாத அரசியல்ப் பயணத்திற்கு ஏதுவாக, உடனடியாக சமாஜத்தினுடைய அறங்காவலர் பொறுப்பிலிருந்தும் தேசிய துணைத் தலைவர் பொறுப்பிலிருந்தும் கும்மனத்தை விடுவிக்க வேண்டும் என்று கிருஷ்ணகுமார்ஜி கருத்துத் தெரிவித்தார். ஆனால், கும்மனம் ராஜசேகரன் இல்லாத ஐயப்ப சேவா சமாஜத்தை என்னைப் போன்ற பலராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை; கூட்டத்திலுள்ள பெரும்பான்மையினர் அதை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. வாரியாரை நேரடியாக மறுத்து யாரும் பேசவில்லை என்றாலும், அவரது கருத்தை ஆதரிக்க மனமில்லாதவர்களாக மத்தியக் குழு உறுப்பினர்களில் பலர் இருப்பதை கிருஷ்ணகுமார்ஜி தெரிந்து கொண்டார்! அடுத்த அமர்வில், ஏன் கும்மனம் ராஜசேகரனை நாம் விடுவிக்க வேண்டும் என்பதை அவர் விளக்கிக் கூறிப் புரிய வைத்தார். ஒருவேளை நாம் (சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம்) தெரியாமல்கூட ஏதாவது தவறு செய்தால், அது அவரையும் பாதித்து , அவருடைய நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் என்று கூறியதுடன், பல்வேறு முன்னுதாரணங்களையும் கூறிப் புரிய வைத்தார்! இதுபோல இக்கட்டான பல சூழ்நிலைகளிலும் அவருடைய சிறந்த வழிகாட்டுதலைப் பெற முடிந்தது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூன்றாவது தலைவராக இருந்த திரு.பாளாசாகேப் தேவரஸ் அவர்களுடைய சகோதரரும், மூத்த ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரும், பிரசாரகரும், அகில பாரத பொறுப்பாளருமாகவும் இருந்த திரு.பாபுராவ் தேவரஸ், சிகிச்சைக்காக சிறிது நாள் கோயமுத்தூர் ஆரிய வைத்திய பார்மசியில் வந்து தங்கியிருந்தார். அவருக்கு மூன்று நாட்களுக்கு உதவி செய்யும் பொருட்டு வந்திருக்க வேண்டுமென்று என்னை, கோவை கோட்டத்தின் ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் கேட்டுக் கொண்டார். பாபுராவ் ஜி உடன் மூன்று நாள் இருப்பது பெரும் பாக்கியம் என்று நானும் ஈரோட்டிலிருந்து கோயமுத்தூருக்கு வந்து விட்டேன். முதன்முதலில் கிருஷ்ணகுமார்ஜியை நான் கண்டதும் அறிமுகமானதும் அப்பொழுதுதான். சினிமா நடிகரைப் போன்ற அவருடைய இளமைக் காலத்து அழகான தோற்றமும் வசீகரமான முகமும் இப்பொழுதும் என் நினைவில் உள்ளது .

பெரும் பதவிகளில் உள்ள பெரிய பிரபலங்களான எண்ணற்றவர்கள் நாடு முழுவதும் அவருடைய நட்பு வட்டத்தில் இருக்கின்றார்கள். தனிப்பட்ட முறையிலோ, தமது நிறுவனங்களுக்காகவோ, தாம் பொறுப்பில் உள்ள அமைப்புகளின் தாத்பரியத்திற்கோ கூட, அப்படிப்பட்ட யாரையும் அணுகி அவர் உதவி கேட்டதில்லை!

இன்றைய பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி, அரசியலுக்கு வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னிருந்தே கிருஷ்ணகுமார்ஜி அவர்களுடைய நண்பராக திகழ்ந்தவர். விஸ்வ ஹிந்து பரிஷத் பணிக்காக (இருவரும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தேசியப் பொறுப்பில் இருந்தவர்கள்) இருவரும் சேர்ந்து சுற்றுப்பயணம் செய்திருக்கிறார்கள். அந்த நட்பு இறுதிமூச்சு வரை பவித்ரமான நட்பாகவே விளங்கியது. திரு.மோடிஜி தனது நண்பரின் மரணச் செய்தியை அறிந்து டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு அறிவித்துள்ள ‘ஆயுஷ்’ திட்டங்களின் ஊற்றுக்கண்ணாகச் செயல்பட்ட இவர், அந்தத் திட்டத்தை எடுத்துக்கொண்டு நாடு முழுவதும் பயணித்திருக்கிறார். அலோபதி மருந்தை விட மனித உடலுக்கு மிகவும் உகந்ததும், பக்க விளைவுகள் அற்றதுமான ஆயுர்வேதம், நோயை வேருடன் பிடுங்கி எறியும் சக்தி வாய்ந்தது என, பல்வேறு கருதரங்குகளிலும் விவாத மேடைகளிலும், மருத்துவ நிபுணர்களிடமும் சாதாரண மக்களிடமும் விளக்கிப் பேசி புரிய வைத்துள்ளார்.

சபரிமலையிலும், அதனைச் சார்ந்த பல்வேறு இடங்களிலும் அன்னதானம் நடத்த தேவஸ்வம் போர்டும், பல்வேறு அமைப்புகளும், ஏராளமான தனி நபர்களும் உற்சாகத்துடன் இன்று முன்வருவதைக் காண்கிறோம். ஆனால், ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் நடத்த வேண்டும் என்ற கரு ஒன்று தனது மனதில் புகுந்து விட்டதை அறிந்த உடனே, கிருஷ்ணகுமார் ஜி, தமது நண்பரும், கோயமுத்தூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஹிந்து இயக்கப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு பணியாற்றியவருமான தொழிலதிபர் திரு.சி.ஆர்.பாஸ்கரனுடன் இணைந்து, பல ஆண்டுகளுக்கு முன்னரே பம்பையில் அன்னதானத்தைத் துவக்கினார். சுத்தமானதும், சூடானதும், ருசியானதுமான அந்த உணவை வாங்கிச் சாப்பிடாத ஐயப்ப பக்தர்கள் அந்தக் காலத்தில் மிகக் குறைந்த அளவே இருந்திருப்பார்கள். அதன் பிறகுதான் பல்வேறு ஐயப்ப பக்தர்களும், பக்தர் குழுக்களும், அமைப்புகளும் பம்பையிலும் பெரியானை வட்டத்திலும் அன்னதானம் செய்ய ஆரம்பித்தார்கள்.

மனதில் கருஹ்ட் பிடிக்கின்ற நல்லெண்ணங்களை, அங்கேயே புதைத்து விடுகின்ற பழக்கமுடைய நபராக அவர் இருந்ததில்லை. தனது எண்ணத்தில் உதித்த விஷயங்கள் தொடர்பாக அந்தத் துறையில் அறிவும் அனுபவமும் கொண்ட நண்பர்களைத் தேடிப் பிடித்து, அவர்களுடைய கருத்தும் அறிவுரைகளும் பெற்றுக் கொள்வார். பிறகென்ன, தயக்கமின்றி களத்தில் குதித்து, தமது சிந்தனைகளுக்குச் செயல் வடிவம் கொடுத்தவராக அவர் விளங்கினார்.

அதிகாலையில் எழுந்து, குளித்துவிட்டு, பூஜை புனஸ்காரங்களை முடித்துக் கொண்டு தமது பணிகளில் மூழ்கி விடுகின்ற அவர் சனாதன நெறிமுறைகளை இறுகப் பற்றிக் கொண்டு, ஹிந்து வாழ்கை முறைகளிலிருந்து ஒருபொழுதும் நழுவாதவராக வாழ்ந்து வந்தவர். அதைப் போன்று பல்வேறு ஹிந்து அமைப்புகளிலும் பொறுப்பெடுத்துக் கொண்டு நேரடியாகச் செயல்பட்டார். தாம் பொறுப்பு வகிக்காத அமைப்புகளுக்கும் தேவையான உதவிகளை வழங்கியும், வெளிப்படையாக உலகறிந்து வாழ்ந்தவர். ஆனால், அவருடைய நண்பர்களில் சிலர் மாற்று மதங்களைச் சார்ந்த முக்கிய பிரமுகர்களாகவும், வெவ்வேறு அரசியல் சிந்தனைகளைக் கொண்ட தலைவர்களாகவும் இருந்ததைக் கண்டு பலரும் வியப்படைந்தார்கள்! கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்த, ஏ.கே.ஜி. என்ற திரு. ஏ.கே.கோபாலன், கோயமுத்தூருக்கு வரும்பொழுதெல்லாம் கிருஷ்ணகுமாரும் அவருடைய பெற்றோரும் வாழ்ந்து கொண்டிருந்த 'ராஜமந்திரம்' என்ற வீட்டில் வந்து தங்குவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்.

கடந்த ஜனவரி மாதம் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் மத்திய மையக் குழுவின் கூட்டமானது கோயமுத்தூர் ஆரிய வைத்திய சாலையில் கூட்டப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்று கிருஷ்ணகுமார் ஜி கருத்துப் பரிமாற்றம் செய்தார். சமாஜத்தினுடைய நிகழ்வுகளில் அவர் கலந்துகொண்ட இறுதி நிகழ்ச்சியாக அது அமைந்தது. பரிவும், கருணையும், ஜுவலிக்கின்ற இறைபக்தியும் கொண்ட நடமாடும் தீனதயாளனாக கிருஷ்ணகுமார்ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார் என்றே அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அத்தனை பேரும் உணர்ந்தனர். அவர் எடுத்துப் பேசிய விஷயம் அத்தகையது.

சமுதாயத்தில் நிலவி வருகின்ற தீமைகளும், தீண்டாமையும், பக்தியின்மையும், குறிப்பாக ஹிந்துக்கள் கடைபிடிக்கின்ற அலட்சியப் போக்கும் அவருடைய தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருந்தது என்பதை நாங்கள் அப்போது புரிந்து கொண்டோம். இறைவனுக்கு ஒருவேளை விளக்கேற்றக் கூட பொருளாதாரமற்ற நிலையில் எண்ணற்ற கோயில்கள் உள்ளதாக அவர் பட்டியலிட்டுக் கூறினார். பெரும் கோயில்களில் பல சிதைந்து விட்டதையும், அப்படிப்பட்ட கோயில்களைப் புனரமைத்து கும்பாபிஷேகம் செய்தால் மட்டுமே அந்தப் பகுதி மக்கள் சீரும் சிறப்புமாக செலவச் செழிப்புடன் வாழ முடியும் என்பதையும் உணர்ச்சி ததும்பக் கூறினார். தனிப்பட்ட முறையிலும் சில நண்பர்களின் உதவியுடனும் அப்படிப்பட்ட கோயில்களுக்கு அவர் உதவி செய்து வருவதையும் எங்களுக்குத் தெரியப்படுத்தினார். அதேபோன்று, புதிய தலைமுறைக்கு வேதத்தை அறிமுகம் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக் கூறினார். இளைஞர்களுடைய கவனம் வேதங்களின்பால் ஈர்க்கப்பட்டு விட்டால் சமுதாயத்தில் இன்று நாம் பார்க்கின்ற பல்வேறு குறைகளும் குற்றங்களும் பெருமளவில் குறைந்து விடும் என்பது திண்ணம் என்றும் அவர் கூறினார். எல்லாக் கிராமங்களிலும் வேதபாராயணம் ஆரம்பித்தே ஆக வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

தனக்கு சுவாமி ஐயப்பனுடன் உள்ள உறவு பற்றி, சபரிமலைப் பயணம் பற்றி, ஜேசுதாஸ் என்ற நண்பருடன் சபரிக்குச் சென்ற அனுபவம் பற்றியெல்லாம், சமாஜத்தினுடைய இணைய மாதாந்திரப் பத்திரிகையான 'ஐயப்ப வாணி’யில் கடந்த மாதம் பக்திப் பெருக்குடன் அவர் எழுதியிருந்ததை பலரும் படித்திருக்கலாம். என்னைப் போன்று பல்லாயிரம் பேருக்கு கிருஷ்ணகுமார்ஜியைப் பற்றிக் கூறுவதற்கு பல்வேறு நினைவுகள் இருக்கலாம். மிக ஆழ்ந்த கருத்துமிக்க விஷயங்களைக் கூட, கேட்பவர்களுக்கு சலிப்பு ஏற்படாமல், எளிமையாகப் புரியவைத்து ஆங்கிலத்தில் உரை நிகழ்த்துகின்ற பத்மஸ்ரீ பி.ஆர்.கிருஷ்ணகுமார், பல்லாயிரக்கணக்கான அவருடைய ரசிகர்களின் (!) மனதில் முழு நிலவாக நிலைத்து வாழ்ந்து கொண்டிருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை!

முதன்முதலாக கோயமுத்தூரில் உள்ள ஆரிய வைத்திய பார்மஸிக்கு வருகின்ற நபர், ஒரு கணம் சந்தேகத்துடன் சுற்றும் தமது பார்வையைச் செலுத்தி, நாம் சரியான முகவரிக்குத்தான் வந்திருக்கிறோமா என்று உறுதி செய்து கொள்வார். காரணம், எடுத்த எடுப்பிலேயே அங்கு வந்து இறங்குகின்ற ஒருவருக்கு, தாம் ஏதோ வழிதவறி வனத்தின் மத்தியிலுள்ள கோயிலுக்கு வந்துவிட்டதாக ஓர் உணர்வு ஏற்படும். கோபூஜையும், மற்ற பூஜைகளும் கேரள சம்பிரதாயப்படி, ஆச்சார நிஷ்டைகளுடனும் பக்திப் பெருக்கோடும் செண்டை மேளங்களுடனும் தினசரி நடைபெற்று வருகின்ற ஸ்ரீ தன்வந்திரி மூர்த்தியின் கோயில் உட்பட, ஆரிய வைத்திய பார்மஸி வளாகமானது, கோயம்புத்தூர் நகரின் மத்தியில் ஒரு பிருந்தாவனமாகக் காட்சி அளிக்கின்றது! இதையெல்லாம் ஊக்கப்படுத்தி முன்னடத்திச் சென்றவர் கிருஷ்ணகுமார்ஜிதான் என்று எடுத்துக் கூற வேண்டியதில்லையே.

ஆயுர்வேதம், இலக்கியம், கலைகள், ஆன்மிகம், சமுதாயம், கல்வி, பொருளாதாரம் என பல்வேறு துறைகளில் நிறைந்து விளங்கிய, நிகரற்ற ஒரு மகாத்மா இன்று நம்மை விட்டுச் சென்றிருக்கிறது.

தனிப்பட்ட முறையில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் முன்னாள் தேசியத் தலைவராகவும் தொடர்ந்து வழிகாட்டியுமாக இருந்த பத்மஸ்ரீ டாக்டர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் வாரியார் அவர்களுடைய ஆன்மா மோட்சமடைய வேண்டி, செப்டம்பர் 20-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு, சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் தேசம் முழுவதும், வீடுகளில் மோட்ச தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்கிறோம்.

சுவாமியே சரணம் ஐயப்பா!


குறிப்பு:

திரு. ஈரோடு என்.ராஜன், சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் தேசிய பொதுச்செயலாளர். 
காண்க:  P. R. KrishnaKumar
***

தே.சி.க.வின் அஞ்சலி!

தேசிய சிந்தனைக் கழகத்தின் நலம் விரும்பியாக டாக்டர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் வாரியார் திகழ்ந்தார். கோவையிலுள்ள அவரது மருத்துவமனை வளாகத்தின் கருத்தரங்கக் கூடம், நமது நிகழ்ச்சிகளுக்கு என்றும் திறந்திருந்தது. 


தேசிய சிந்தனைக் கழகம் வெளியிட்ட, ‘ROLE OF INTELLECTUALS IN NATION BUILDING’ என்ற ஆங்கில நூலின் வெளியீட்டு விழா 16.08.2018-இல் அங்கு நடந்தபோது, அந்த நிகழ்வுக்குத் தலைமை வகித்ததுடன், நூறு புத்தகங்களை உடனே வாங்கி அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தார். 

நமது அமைப்பின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை காட்டிய அன்னாரின் மறைவு பேரிழப்பாகும். அவருக்கு நமது கண்ணீர் அஞ்சலிகளைக் காணிக்கை ஆக்குகிறோம். 


.



No comments:

Post a Comment