(தமிழில் கடித இலக்கியத்தில் முன்னுதாரணமானவை மு.வ.வின் படைப்புகள். அவற்றில் ஒரு கடிதம் இது)
அன்புள்ள எழில்,
நீ எழுதிய கடிதங்கள் எனக்கும் சுவையாக இருந்தன. அன்னைக்கு எழுதிய கடிதங்களை அண்ணன் எப்படிப் பார்த்தான் என்று நீ எண்ணி வியப்பு அடையலாம். உன் கடிதங்கள் அன்னை மட்டும் அல்லாமல் அண்ணனும் படிக்க வேண்டிய கடிதங்கள்தான்.
அன்னையைக் கேட்டுத்தான் படித்தேன். "எழில் எழுதியவை" என்று அவற்றை எல்லாம் ஒருகட்டாகக்கட்டி அன்னை பீரோவில் வைத்திருந்தார். " இது என்ன அம்மா?" என்று கேட்டேன். உன் கடிதங்கள் என்று சொல்லி," நீயும் படிக்கலாமே" என்றார். பிறகுதான் படித்துப் பார்த்தேன். நீ ஒன்றும் கவலைப் படாதே. நானும் உன் கருத்து உடையவனே. நீ வயதில் இளையவன் அஞ்சாமல் உன்கருத்தைச் சொல்கிறாய்; எழுதுகிறாய். நான் உன்னைவிட உலக அனுபவம் மிகுந்தவன்; அதனால் உலகத்தைப் பற்றிய அச்சமும் மிகுந்தவன். ஆகையால் எதையும் சொல்லவும் எழுதவும் தயங்குகிறேன்; நீ உள்ளத்தில் உணர்ந்ததைக் கொட்டுகிறாய்; நான் உணர்ச்சி இல்லாதவன் போல் நடிக்கிறேன். இதுதான் வேறுபாடு; நீயே என்னைவிட ஒருவகையில் நல்லவன்.
நல்லவனாக இருந்தால்மட்டும் போதாது. வல்லவனாகவும் இருக்கவேண்டும் அல்லவா? நன்மை வன்மை இரண்டும் இருந்தால்தான் இந்த உலகில் வாழ்க்கை உண்டு.
நல்ல தன்மை மட்டும் உடையவர்கள் எத்தனையோ பேர் கலங்கிக் கண்ணீர் வடித்து மாய்ந்திருக்கிறார்கள்; மாய்ந்துவருகிறார்கள். வல்லமை மட்டும் பெற்றவர்களும் எதிர்பாராதவகையில் நசுக்குண்டு அழிகிறார்கள். குடும்பங்கள் முதல் நாடுகள் வரையில் இதற்குச் சான்றுகள் காணலாம். தமிழ்நாட்டில் இருந்த பழங்காலத்து நல்லரசுகள் கலங்கி அழிந்ததை வரலாறுகளில் காணவில்லையா? ஜெர்மனி, ஜப்பான் முதலான வல்லரசுகள் அழிவுற்றதைக் கண்கூடாகக் காணவில்லையா? நல்ல மருமகளாக வந்து வாழத் தொடங்கிக் குடும்பத்தாரின் இன்னலைப் பொறுக்க முடியாமல் தற்கொலையோ மனவேதனையாலோ மாண்ட கதைகளை ஊர்களில் கேட்டதில்லையா? மகனையும் மருமகளையும் விருப்பம்போல் ஆட்டி வைத்து வல்லமை பெற்ற மாமியார், சில ஆண்டுகளுக்குப் பின் வாயும் கையும் அடங்கி மூலை வீடும் வேளைக் கஞ்சியும் கிடைத்தால் போதும் என்று ஏங்கும் கதைகளையும் கேட்டதில்லையா? இந்த விதியை நாம் இனியும் மறந்து வாழக்கூடாது. தமிழர்கள் நல்லவர்களாக மட்டும் இருந்து தனித்தனியாகவும் குடும்பம் குடும்பமாகவும் நாடு நாடாகவும் அழிந்தது போதும். இனிமேல் வல்லவர்களாகவும் வாழக் கற்றுக்கொள்ல வேண்டும். நல்ல தன்மையோடு வல்லமையும் சேரப்பெற்று வாழ வேண்டும்.
தம்பி! இயற்கையிலிருந்து நாம் ஒரு பெரிய பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கைப் பகுதிகளில் ஒன்றை மட்டும் போற்றுகிறவன் உருப்படியாவதில்லை. உடலை மட்டும் பொற்றி உரமாக வைத்திருப்பவனும் அழிகிறான்.அவனுடைய உள்ளம் அவனுக்குப் பகையாகி அவனைத் தீயவழியில் செலுத்திக் கெடுத்து அழிக்கிறது. உள்ளத்தைமட்டும் தூய்மையாகப் போற்றிக் காப்பாற்றுகிறவனும் இடைநடுவே அல்லல்படுகிறான்; அவனுடைய உடல் பல நோய்க் கிருமிகளுக்கு இடம் கொடுத்து அவனுடைய உள்ளத்தில் அமைதியைக் கெடுத்து அல்லல் படுகிறது. உடலும் வேண்டும், உள்ளமும் வேண்டும் என்று இரண்டையும் உரமாகவும் தூய்மையாகவும் காப்பதே கடமையாகும். மரம் வானளாவ உயரவேண்டியதாக இருக்கலாம்; ஆனால் தான் வேரூன்றிய மண்ணை மறந்து வாழ முடியாது; வானைப் புறக்கணித்துக் கிளைகளை உயர்த்தாமல் வாழவும் முடியாது. இந்த உண்மையை நன்றாக உணர்ந்தவர் திருவள்ளுவர். அறநெறியும் வேண்டும். பொருள்வளமும் வேண்டும். இன்ப வாழ்வும் வேண்டும் என்று உணர்த்தும் நூல் திருக்குறள் தான். அறத்தை நினைந்து பொருளை மறக்கும்படியாகத் திருவள்ளுவர் கூறவில்லை. பொருளையோ இன்பத்தையோ போற்றி அறத்தை மறக்கும்படியாகவும் அந்தப் பெருந்தகை கூறவில்லை. உலகத்து நூல்களில் பல அறம் பொருள் இன்பம் மூன்றில் ஒவ்வொன்றை மட்டுமே வலியுறுத்தியிருப்பதைக் காணலாம். வாழ்க்கையின் பல பகுதிகளையும் போற்றி வாழவேண்டும் என்பதை உணர்த்த வந்த திருவள்ளுவர் இந்த மூன்றையும் தெளிவுறுத்தியுள்ளார். தமிழராகிய நாம் திருவள்ளுவரைப் பெற்றிருக்கிறோம்; திருக்குறளைப் பெற்றிருக்கிறோம்.நம்மில் சிலர் அந்த நூலைக் கற்றும் இருக்கிறோம். ஆனால் திருவள்ளுவர் கூறியபடி வாழவில்லை; நல்ல தன்மை தேடுகிறோம்; வல்லமை தேடவில்லை. அதனால்தான் தாழ்வுறுகிறோம்.
நீ உடனே இதை மறுக்க முன்வரக் கூடும். அதற்கு முன்பே நான் காரணம் சொல்லி விளக்கிவிடுகிறேன்.
தமிழ்மொழி நல்ல மொழி தான்; ஆனால் அதை வல்ல மொழியாக ஆக்கினோமா? பெரும்பாலோர் போற்றும் மொழியாக ஆக்கினோமோ? இன்று எதை எடுத்தாலும் மக்கள் தொகையே வல்லமையாக வைத்துப் பேசப்படவில்லையா? தமிழ் மொழிக்கு அறிவுக் கலைகளில் செல்வாக்குத் தந்தோமா? நீதிமன்றங்களில் உரிமை நல்கினோமா? ஆட்சிக் கூடங்களில் வாழ்வு வழங்கினோமா? இல்லையானால் வெறும் பேச்சு ஏன்?
வல்லமை இல்லாத நல்ல தன்மை வாழாது தம்பி! அது பொருட்பால் இல்லாத திருக்குறள் போன்றது தான்.
நம் முன்னோர் இதை மறந்த காரணத்தால்தான், எத்தனையோ இழந்தனர்; ஒன்று சொல்லட்டுமா?
தமிழ்க்கலை நல்ல கலை தான்; அதிலும் யாழிசை நல்ல இசைதான்; ஆனால் வாழ்ந்ததா? இல்லை, ஏன்? முன்னே செல்வாக்கைப் பெற்றவர்கள் யாழைப் புறக்கணித்தார்கள்; பிறகு பொதுமக்கள் மறந்தார்கள். இன்று தமிழுக்கும் ஏறக்குறைய அதே நிலை இருப்பதை எண்ணிப்பார்; உன் மனம் புண்படும்.
நீ இதை மறுக்கலாம். அன்று அரசன் எவ்வழி அவ்வழி குடிகள் என்ற நிலைமை இருந்ததை நீ எடுத்துக் காட்டலாம். இன்று பொதுமக்கள் எவ்வழி அவ்வழியே ஆட்சியாளர் என்று எடுத்துக் கூறலாம்.
இப்படி உன்னை நீ ஏமாற்றிக்கொள்ள வேண்டாம் என்றுதான் உனக்குச் சொல்கிறேன். பொதுமக்களின் விருப்பம் போல் ஆட்சி நடப்பதாகச் சொன்னால், பொது மக்கள் போரை விரும்புகிறார்களா, அணுக்குண்டையும் பிற குண்டையும் விரும்புகிறார்களா, வேலையில்லாத் திண்டாட்டத்தை விரும்புகிறார்களா, குடியிருக்க வீடும் அறிவு வளர்க்கக் கல்வியும் உடல் வளர்க்கக் கஞ்சியும் இல்லாத கொடிய வறுமையை விரும்புகிறார்களா என்று மெல்ல எண்ணிப்பார். உனக்கே தெரியும்.
பொதுமக்களுக்குத் தங்கள் எதிர்காலத்தையும் நிகழ் காலத்தையும் சேர்த்து எண்ணித் தேவையை உணர இன்னும் தெரியவில்லை; அவர்கள் களிமண்ணாய்த் திரண்டு கிடக்கிறார்கள்; யார் யாரோ நீர் சேர்த்துப் பிசைந்து தமக்கு வேண்டியவாறெல்லாம் உருவங்களைச் செய்து கொள்கிறார்கள்.
சரி, நீ சொல்கிறபடியே பார்ப்போம். இன்று ஆட்சி எல்லாம் ஓட்டுப் போடும் மக்களின் கைகளைப் பொறுத்தது என்று வைத்துக் கொள்வோம்.அவர்கள் ஓட்டுப் போடும் போது தங்களைப் பற்றியாவது தமிழ்நாட்டைப் பற்றியாவது தமிழைப் பற்றியாவது கவலைப்படுகிறார்களா? அவர்கள் கவலைப்படாத நாடும் மொழியும் யாருடைய வல்லமையை நம்பி வாழ முடியும்? வறுமையால் வாடும் அறிஞர் சிலருடைய துணை மட்டும் போதுமா?
நான் சொல்கிறபடியும் கொஞ்சம் பார். களிமண் பிசைகிறவர்களின் கைகளாவது நாட்டையும் மொழியையும் பற்றிக் கவலைப்படுவது உண்டா? அவர்களை மாற்றுவதற்காக, அல்லது அவர்களுடைய மனத்தில் நல்லெண்ணம் ஏற்படுவதற்காக, நீயும் நானும் ஏதாவது செய்தோமா? ஒன்றும் செய்யாமல், தமிழ்நாடும் தமிழும் வாழ்ந்துவிடும் என்று எண்ணிக்கொண்டு காலம் கழிப்பது குற்றம் அல்லவா? மறைந்துபோன அந்த யாழைப் பற்றிப் பழங்காலத்துப் பாணரும் விறலியரும் பொருநரும் கூத்தரும் நம்மைப் போல்தான் ஏமாந்த எண்ணம் எண்ணிக் கொண்டு, நல்லவர்களாக வாழ்ந்திருக்கவேண்டும். அந்த யாழின் அருமை பெருமைகளை மட்டும் எண்ணிக்கொண்டிருந்தார்கள். அதை வாழவைக்கும் வல்லமைபற்றி அவர் கள் எண்ணத் தவறினார்கள். அதனால்தான் அந்த அருமையான கருவி அழிந்தது. அதை நினைத்துப் பார்க்கவும் இன்று ஒரு விபுலாநந்தர் தேவையாகிவிட்டது.
தம்பி! மேடையில் முழங்குவதைக் கொஞ்ச காலம் நிறுத்தி வைத்தாலாவது, இதை எண்ணிப் பார்க்க ஒரு வாய்ப்பு உண்டாகும் என்று எனக்குச் சில வேளைகளில் தோன்றுகிறது. இது பைத்தியக்கார எண்ணமாக உன்போன்ற இளைஞருக்குத் தோன்றலாம். ஆனால் அனுபவத்தால் சொல்லுகிறேன்; மேடை மகிழ்ச்சி நமக்குக் கடமை மறதியை உண்டாக்குகிறது. சிறந்த பேச்சு, நல்ல கைத்தட்டு இரண்டும் சேர்ந்தால் உணர்ச்சித் தணிவு, அடுத்த நிலையாகப் பழைய பிற்போக்கு வாழ்வு - இவைதான் இது வரையிலும் கண்டவை.நம்மை எண்ணித்தான் திருவள்ளுவர் சொன்னாரோ என்னவோதெரியவில்லை. நமக்காகவே சொன்னதுபோல உள்ளது அந்தக் குறள். நம்மைப்பற்றி நாமே மகிழ்ந்து அந்த மகிழ்ச்சியில் மயங்கியிருக்கும்போது, கடமையைப் புறக்கணித்துக் கெட்டழிந்தவர்களை நினைத்துக்கொள்ள வேண்டும் என்று வள்ளுவப் பெருந்தகை சொன்னது எவ்வளவு பொருத்தம்! மேடைப் பேச்சைக் கேட்டுக் கைதட்டுவோரைக் காணும் போதெல்லாம், "இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக" என்ற அந்தக் குறள் என் நினைவுக்கு வந்துவிடுகிறது, என்னை அறியாமல்.
தம்பி! இன்றைய உலகம் வல்லமை மிகுந்த மாமியார்போல் உள்ளது. நம் அருமைத் தமிழகம் மிக நல்ல மருமகளாக உள்ளது. ஆனால் தற்கொலையோ மனவேதனையோ எதிரே வந்து நிற்காதவாறு காப்பாற்றவேண்டிய பொறுப்பு ஏற்பட்டிருக்கிறது.என் கருத்தில் எந்தப்பகுதி யாவது உனக்குத் தெளிவில்லாமல் இருந்தால் அதைக் குறித்து அதைக் குறித்து எழுது; தெளிவுபடுத்துவேன். ஏதாவது உனக்கு உடன்பாடு இல்லாமல் கருத்து வேறுபாடாக இருந்தால் எண்ணிப்பார்; அல்லது விட்டுவிடு. நான் என்ன செய்வேன்? நீ எவ்வளவு உண்மையாக உணர்கிறாயோ அவ்வளவு உண்மையாகவே நானும் உணர்கிறேன். இந்தத் தமிழகத்தில் நாம் இருவராவது ஒன்றுபட முடியாதா, பார்ப்போம்.
உன் அன்புள்ள,
வளவன்.
.
No comments:
Post a Comment