20/09/2020

வெண்ணிலாக் கண்ணி (கவிதை)

 -இராமலிங்க வள்ளலார்

திருவருட்பிரகாச வள்ளலார்


திருவருட்பா
27. வெண்ணிலாக் கண்ணி (2847 - 2869) 


(சிந்து வகைப் பாடல்)


தன்னையறிந் தின்பமுற வெண்ணிலா வே - ஒரு
தந்திரநீ சொல்லவேண்டும் வெண்ணிலா வே. ...1

நாதமுடி மேலிருந்த வெண்ணிலா வே - அங்கே
நானும்வர வேண்டுகின்றேன் வெண்ணிலா வே. ...2

சச்சிதானந் தக்கடலில் வெண்ணிலா வே - நானுந்
தாழ்ந்துவிழ வேண்டுகின்றேன் வெண்ணிலா வே. ...3

இராப்பகலில் லாவிடத்தே வெண்ணிலா வே - நானும்
இருக்கவெண்ணி வாடுகின்றேன் வெண்ணிலா வே. ...4

தேசுநிற மாய்நிறைந்த வெண்ணிலா வே - நானுஞ்
சிவமயம தாய்விழைந்தேன் வெண்ணிலா வே. ...5

போதநடு வூடிருந்த வெண்ணிலா வே - மலப்
போதமற வேண்டுகின்றேன் வெண்ணிலா வே. ...6

ஆருமறி யாமலிங்கே வெண்ணிலா வே - அரு
ளாளர்வரு வாரோசொல்லாய் வெண்ணிலா வே. ...7

அந்தரங்க சேவைசெய்ய வெண்ணிலா வே - யெங்கள்
ஐயர்வரு வாரோசொல்லாய் வெண்ணிலா வே. ...8

வேதமுடி மேலிருந்த வெண்ணிலா வே - மல
வேதையுள வேதுசொல்லாய் வெண்ணிலா வே. ...9

குண்டலிப்பால் நின்றிலங்கும் வெண்ணிலா வே - அந்தக்
குண்டலிப்பால் வேண்டுகின்றேன் வெண்ணிலா வே. ...10

ஆதியந்த மென்றுரைத்தார் வெண்ணிலா வே - அந்த
ஆதியந்த மாவதென்ன வெண்ணிலா வே. ...11

வித்திலாம லேவிளைந்த வெண்ணிலா வே - நீதான்
விளைந்தவண்ண மேதுசொல்லாய் வெண்ணிலா வே. ...12

முப்பொருளு மொன்றதென்பார் வெண்ணிலா வே - அந்த
மூன்றுமொன்றாய் முடிந்ததென்ன வெண்ணிலா வே. . ..13

நானதுவாய் நிற்கும்வண்ணம் வெண்ணிலா வே - ஒரு
ஞானநெறி சொல்லுகண்டாய் வெண்ணிலா வே. ...14

ஞானமய மாய்விளங்கும் வெண்ணிலா வே - என்னை
நானறியச் சொல்லுகண்டாய் வெண்ணிலா வே. ...15

வாசிவாசி யென்றுரைத்தார் வெண்ணிலா வே - அந்த
வாசியென்ன பேசுகண்டாய் வெண்ணிலா வே. ...16

ஐந்தலைப்பாம் பாட்டுகின்றார் வெண்ணிலா வே - அவர்
அம்பலத்தில் நின்றதென்ன வெண்ணிலா வே. ...17

ஓரெழுத்தி லைந்துண்டென்பார் வெண்ணிலா வே - அது
ஊமையெழுத் தாவதென்ன வெண்ணிலா வே. ...18

அம்பலத்தில் ஆடுகின்றார் வெண்ணிலா வே - அவர்
ஆடுகின்ற வண்ணமென்ன வெண்ணிலா வே. ...19

அந்தரத்தில் ஆடுகின்றார் வெண்ணிலா வே - அவர்
ஆடும்வகை எப்படியோ வெண்ணிலா வே. ...20

அணுவிலணு வாயிருந்தார் வெண்ணிலா வே - எங்கும்
ஆகிநின்ற வண்ணமென்ன வெண்ணிலா வே. ...21

அண்டபகி ரண்டமெல்லாம் வெண்ணிலா வே - ஐயர்
ஆட்டமென்று சொல்வதென்ன வெண்ணிலா வே. ...22

அம்பரத்தி லாடுகின்றார் வெண்ணிலா வே - என்னை
ஆட்டுகின்றார் இம்பரத்தே வெண்ணிலா வே. ...23



காண்க:



No comments:

Post a Comment