-பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்
1. ‘ஆசார்ய’ இலக்கணம்
ஆசார்யர் என்பதில் ஆசரணம், ஆசாரம், சர என்ற வார்த்தைகளின் ஸம்பந்தம் இருக்கிறது. ‘சர’ என்றால் நடப்பது. சரிதம், சரித்ரம் என்றால் நடத்தை (Conduct) . பல நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடப்பதால் தேச சரித்ரம், ஜீவ்ய சரித்ரம் என்றெல்லாம் சொல்கிறோம். நின்றபடியில்லாமல் ஒரு ஒழுங்கில் தொடர்ந்து போவது தானே ‘நடை’? இப்படி ஒரு வழிப்படி நடப்பதுதான் சரித்ரம். ஒரு வழியில் ‘ஒழுகுவது’ என்று தமிழில் சொல்வார்கள். ஜலம் ஒழுகுகிறபோது தாரையாக ஒரு தொடராகத்தானே விழுகிறது? இப்படிச் சில விதிகளின் படியே, அதைப் பின்பற்றிப் போவதுதான் ‘ஒழுகுவது’. ‘ஒழுக்கம்’ என்பது இதிலிருந்துதான் வந்தது. ‘சர’ தாதுவின் மேல் இதுவே ஸம்ஸ்க்ருதத்தில் ‘ஆசாரம்’ என்று இருக்கிறது. சாஸ்திர விதிப்பிரகாரம் ஒழுகுவது, தர்ம நூல்களின் ஒழுக்கம்தான் ஆசாரம். இப்படி நடப்பது ஆசரணம்.
ஆசார்யனுக்கு முக்கியம் இப்படி ஒரு ஒழுங்குமுறையில் நடந்து காட்டுவது. Basic –ஆக (அடிப்படையாக) ஸகல ஜனங்களுக்கும் ஸாதாரண தர்மங்கள் என்பதாக அஹிம்ஸை, ஸத்யம் முதலிய ஒழுக்கங்கள் இருப்பதோடு நம் ஹிந்து மதம் ஒன்றுக்குள்ளேயே அநேக ஸம்ப்ரதாயங்களுக்குத் தனி சாஸ்திரங்கள் ஏற்பட்டு, அவற்றில் தனித்தனி ஒழுக்கங்களும் சொல்லியிருக்கிறது. வைஷ்ணவர்களுக்கென்று ஒரு ஆசாரம்; மாத்வர்களுக்கென்று ஒன்று; சைதன்யர், நிம்பார்க்கர் இப்படிப் பல பெயரில் தனித்தனி ஒழுக்கங்களும், பழக்கங்களும், வழக்கங்களும் இருக்கின்றன. சைவர்களுக்கென்று தனி சாஸ்திரங்கள், அவர்கள் இன்னின்ன இப்படி யிப்படிப் பண்ண வேண்டும் என்ற விதிகள் இருக்கின்றன. சைவத்திலேயே ஸித்தாந்த சைவம், வீரசைவம், காஷ்மீரி சைவம், பாசுபாதம் என்று பல பிரிவுகள்.
வைஷ்ணவத்துக்குள்ளேயும் இப்படி ஏகாந்திகள், பாஞ்சராத்ரிகள், வைகாநஸர்கள் என்று sub-sections உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒரு set of rules [விதியமைப்பு முறை] இருக்கிறது. அத்வைதிகளுக்கு ஒரிஜனலாக ஸ்மிருதிகள் சொன்ன ரூல்கள் இருக்கின்றன.
இப்படி ஏதாவது ஒரு ஸம்ப்ரதாயத்தை சாஸ்த்ரோக்தமாகத் தானே அநுஷ்டித்துக் காட்டுகின்றவன் தான் ஆசார்யன்.
‘ஆசார்ய’ பதத்துக்கு definition [லக்ஷணம்] சொல்கிற ஸ்லோகம் சில பேர் கேள்விப்பட்டிருக்கலாம்.
ஆசிநோதி ஹி சாஸ்த்ரார்த்தாத்
ஆசாரே ஸ்தாபயத்யபி |
ஸ்வயம் ஆசரதே யச்ச
தம் ஆசார்யம் ப்ரசக்ஷதே ||
எவன் சாஸ்திரத்தின் அர்த்தங்களை ஆராய்ந்து, (‘பிறருக்கு அதை போதித்து’ என்பது இங்கே understood: சொல்லாமல் சொன்னது,) பிறரை அந்த சாஸ்த்ரங்களின் விதிப்பிரகாரம் நடக்கப் பண்ணுகிறானோ, (இப்படி ‘பிறத்தியாரை ஒரு ஆசாரத்தில் நிலைநாட்டுவது மட்டுமல்லாமல்’ என்பதும் understood ) தானே அந்த வழிப்படி நடந்து காட்டுகிறானோ அவனே ஆசார்யன் எனப்படுகிறான் — என்று அர்த்தம்.
“Precept, practice இரண்டிலும்” என்று சொல்வது இதைத்தான்– அதாவது வாய் உபதேசத்தால் மட்டுமில்லாமல் (அல்லது கையால் புஸ்தகம் எழுதுவது மட்டுமில்லாமல்) தன்னுடைய வாழ்க்கை உதாரணத்தாலேயே ஒரு ஸம்ப்ரதாயத்துக்கான ரூல்களை நடத்திக் காட்டுகிறவனே ஆசார்யன்.
ஆசார-அநுஷ்டானம் என்று இரண்டைச் சேர்த்துச் சொல்கிறோம். சாஸ்த்ரம்–ஸம்ப்ரதாயம் என்று இரண்டைச் சொல்கிறோம். தமிழில் பழக்க–வழக்க–ஒழுக்கம் என்று மூன்றைச் சேர்த்துச் சொல்கிறோம்.
இந்த எல்லாமே inter-connected: ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டது. சாஸ்திரத்தில் அநேக இடங்களில் சொல்லியிருக்கிற ரூல்களை வாழ்க்கையில் அநுஷ்டித்துக் காட்டுவதற்கு ஏற்ற விதத்தில் codify பண்ணியே ஒவ்வொரு ஸம்ப்ரதாயமும் உண்டாயிருக்கிறது. சாஸ்திரங்களில் பல தினுஸான கொள்கைகள் இருக்கிறபோது ஒவ்வொரு விதமான கொள்கையை மட்டும் அவற்றிலிருந்து பிரித்து ரூபம் கொடுத்து ஸம்ப்ரதாயங்கள் ஏற்படுகின்றன. ஒரே வேத மதத்தில் இப்படி சங்கர ஸம்ப்ரதாயம், ராமாநுஜ ஸம்ப்ரதாயம் என்றெல்லாம் பல வந்திருக்கின்றன.
சாஸ்த்ரம், ஸம்ப்ரதாயம் என்று சாதாரணமாகச் சொல்லும்போது வேறு விதமான ஒரு பாகுபாடும் நினைக்கப்படுகிறது. அதாவது, ‘சாஸ்த்ரம் என்பது சட்ட புஸ்தகமாக எழுதி நிலையாக வைத்துவிட்டது; ஸம்ப்ரதாயம் என்பது இப்படிச் சட்டமாக நாட்டப்படாவிட்டாலும் சாஸ்த்ரக்ஞர்கள் உள்பட ஸமூஹத்தார் எல்லாராலும் பின்பற்றப்படுகிற விஷயங்கள்’ என்று நினைக்கப்படுகிறது. சாஸ்த்ரம் என்பது scripture , ஸம்பரதாயம் என்பது tradition, usage — ‘மரபு’ என்பது. சாஸ்த்ரமாக எழுதி வைத்தது எல்லாருக்கும் பொதுவாயிருக்கும். ஸம்ப்ரதாயமாகப் பழக்கத்தில் வந்தது ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் மாறலாம்; ‘குலாசாரம்’, ‘தேசாசாரம்’ என்று குடும்பங்களுக்கிடையில், பல சீமைகளுக்கிடையில் மாறுதலாயிருக்கலாம்.
ஒரு வழியைச் சட்டதிட்டங்களால் காட்டிக் கொடுத்து அது ஜனங்களுக்கிடையில் நீண்டகாலம் ‘வழங்க’ப்படும் போது ‘வழக்க’மாகிறது. ஜனங்கள் இதற்குப் ‘பழகி’ ப் போகிறபோது ‘பழக்கம்’ எனப்படுகிறது. பழக்க–வழக்கங்கள் என்று பொதுவாக இருப்பவற்றை ஒரு individual (தனி நபர்) பற்றி ‘ஒழுகும்’ போது — அதாவது அநுஷ்டிக்கும் போது — அது இவனுக்கு உண்டாக்குகிற சீலமே ‘ஒழுக்கம்’ என்பது. சாஸ்த்ர ஸம்ப்ரதாயங்களின் ஆசார அநுஷ்டானங்களான பழக்க வழக்கங்களைப் பின்பற்றி ஒழுக்கமாக — disciplined –ஆக வாழ்கிறவனே ஆசார்யன். அவனே ஜெனரலாக எல்லாருக்கும் ஏற்பட்ட தர்ம நியதிகளோடு கூட, ஒரு குறிப்பிட்ட ஸம்ப்ரதாயத்தின் சாஸ்திரங்களை அறிந்து அநுஷ்டித்துக் காட்டுபவனாக இருக்க வேண்டும்.
தன்னளவில் இப்படியிருக்கிறவனை மட்டும் ஆசார்யன் என்று சொல்லிவிட முடியாது. உங்களுக்குகே தெரியுமே, ஆசார்யன் என்றால் உடனே சிஷ்யன் என்பவனும் இருந்தாக வேண்டும். அதாவது இவன் பிறத்தியானையும் சிஷ்யனாக்கிக் கொண்டு அவனுக்கு இந்த தர்மாசாரங்களை போதனை பண்ணி, அதன்படியே அவன் நடக்கும்படிப் பண்ண வேண்டும்.
போதனை செய்ய வேண்டுமென்பதால், அவன் கற்றறிந்த வித்வானாக இருந்தாக வேண்டும். அப்போதுதான் ஸந்தேஹங்களைப் போக்கவும், எதிர்வாதத்தைக் கண்டனம் பண்ணவும் முடியும். இவனிடம் ஒரு சிஷ்யன் நீண்ட காலம் பயிற்சி பெற்றால்தான் இவ்வளவும் கற்றுக்கொள்ள முடியும்.
இந்தக் காலத்தில் ஆசார்யர்கள் என்பவர்களின் இடத்தில் ஆசிரியர்கள் (பள்ளிக்கூட டீச்சர்களும் காலேஜ் ப்ரொஃபஸர்களும்) இருக்கிறார்கள். ஆனால் இங்கே சொந்த வாழ்க்கையிலும் ஸரி, போதிப்பதிலும் ஸரி, தர்மங்களின் ஸம்பந்தமேயில்லாமலிருக்கிறது!
பழைய காலத்திலும் பௌதிக வித்யைகளையும் கலைகளையும் சொல்லித் தருகிற ஆசாரியர்கள் இருக்கத்தான் செய்தார்கள். க்ருபாச்சாரியார், த்ரோணாச்சாரியார், என்று தனுர்வேதம் — வெறும் ஆயுதப் பயிற்சி — சொல்லிக் கொடுத்தவர்களையும் அந்த நாளிலேயே ‘ஆசார்யர்’ என்று சொல்லியும் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாரும்கூட தர்மசாஸ்திர– ஸம்ப்ரதாயங்களை அறிந்தவர்களாகவும், சொந்த வாழ்க்கையில் பின்பற்றி, தங்களுடைய வித்வத், திறமை இவற்றுக்காக மட்டுமின்றி, நடத்தைக்காகவும் (ஆசரணைக்காகவும்) மதிப்புப் பெற்றவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.
2.‘குரு’ இலக்கணம்:
ஆசார்யரிடம் வஸித்து, வித்தையை அப்யாஸம் பண்ணுவதற்கு ‘குருகுலவாஸம்’ என்று பெயர். ‘ஆசார்ய குல வாஸம்’ என்றில்லை. இதைப் பார்த்தால் ஆசார்யர், குரு இரண்டும் ஒன்றேதான் என்று தோன்றும். ஜகத்குரு சங்கராசார்யார் என்பதால் ஒருத்தரே குரு ஆச்சார்யார் இரண்டுமாக இருக்கிறார் என்று ஏற்படுகிறது. இப்படியிருப்பதாலேயே இரண்டும் கொஞ்சம் வேறாயிருக்கலாமோ என்றும் தோன்றுகிறது.
‘குரு’ என்றால் நேர் அர்த்தம் என்ன? ‘ஆசார்யார்’ என்ற வார்த்தைக்கு definition சொன்னதுபோல ‘குரு’ வுக்கு என்ன சொல்வது?
‘குரு’ என்றால் ‘கனமானது’, ‘பெரிசு’ என்று அர்த்தம். அதாவது பெருமை உடையவர், மஹிமை பொருந்தியவர் என்று அர்த்தம். பெரியவர்களை கனவான், மஹாகனம் என்கிறோமல்லவா? (‘ரைட் ஆனரபிள்’ என்ற பட்டத்தை ‘மஹாகனம்’ என்றே சொல்வார்கள்.) ‘பெரியவர்கள்’ என்று இங்கே நான் சொன்னதே பெரிசை வைத்துத்தான். ‘குரு’ என்கிற மாதிரியே ‘ப்ரஹ்மம்’ என்றாலும் பெரிசு என்றுதான் அர்த்தம். கனமானவர், பெரியவர் என்றால் எதைக்கொண்டு இப்படிச் சொல்கிறது? கனமென்றால் Weight ஜாஸ்தி என்று அர்த்தமா? பெரியவரென்றால் வாட்டசாட்டமாக இருப்பதாக அர்த்தமா? மஹான், மஹான் என்றாலும் பெரிசானவர், பெரியவர் என்றுதான் அர்த்தம். எதில் பெரிசு? என்னை குரு என்கிறீர்கள். பெரியவா என்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் அபிமானம் ஜாஸ்தியானால் மஹான் என்றும் சொல்கிறீர்கள். [Weight , வாட்டசாட்டம் இவற்றைப் பார்த்தால்] என்னை இப்படிச் சொல்ல நியாயமில்லை.
அதனால் இப்படியெல்லாம் சொல்லும்போது ஒருத்தர் உள்ளுக்குள்ளேயே அறிவாலோ, அநுபவத்தாலோ, அருளாலோ கனம் வாய்ந்தவர், பெருமை பெற்றவர் என்றுதான் அர்த்தம். பகவத்பாதாளின் பெயர் என்னிடம் ஒட்டிக் கொண்டிருக்கிற ஒரே காரணத்துக்காக, எனக்கு இதெல்லாம் இருப்பதாக ஏமாந்து குரு, பெரியவா, மஹான் இன்னம் என்னென்ன ஸ்தோத்ரமாக உண்டோ அத்தனையும் சொல்கிறீர்கள்.
ஆக, குரு என்றால் அவர் உள்ளுக்குள்ளே ரொம்பப் பெருமை படைத்தவராகயிருக்க வேண்டும். ஆசாரியர் என்பவர் வெளியிலே படிப்பிலே பெரியவர், வெளியிலே போதனை பண்ணுவதில் சதுரர், வெளியிலே நடத்தையால் வழிகாட்டுவதிலே சிறந்தவர். அவருடைய உள் சீலம் (Character) தான் வெளிநடத்தையாக (conduct) ஆக வெளிப்படுகிறதே தவிர, வெளியே அவர் போலியாக உத்தமர் போல நடித்துக் காட்டுபவரல்ல என்பது நிஜமானாலுங்கூட அவரை வெளி லோகத்துடன் பொருத்தியே வைத்திருக்கிறது — உலகத்துக்கு அவர் தாம் உபதேசிக்கிற ஐடியல்களை வாழ்ந்து காட்ட வேண்டும்.
குரு ஸமாசாரம் என்ன? அவர் வெளியிலே எதுவுமே பண்ண வேண்டுமென்றில்லை. அவருக்கு வெளிப்படிப்பு, வித்வத் வேண்டும் என்றில்லை. அவர் சாஸ்திரங்களைப் படித்துக் கரை கண்டிருக்க வேண்டுமென்றில்லை. அவர் எந்த சாஸ்த்ரத்தையோ ஸம்ப்ரதாயத்தையோ ஆசார்யரைப்போல வழுவறப் பற்றி ஒழுகிக்காட்ட வேண்டுமென்பதில்லை. ஏன், அவர் வாயைத் திறந்து போதனைப் பண்ணணும், உபதேசிக்கணும் என்றுகூட இல்லை. மௌனகுரு என்றே இருந்திருக்கிறார்களே!
தன்னில் தானாக நிறைந்து ஒருத்தர் எங்கேயாவது தன்னந்தனியாக உட்கார்ந்திருந்தால்கூட அவருடைய உள்பிரபாவம் தெரிந்தவர்கள் அவரை குருவாக வரிக்கிறார்கள். அதற்காக அவர் இவர்களுக்கு சாஸ்த்ரபாடம் சொல்ல வேண்டும் என்பது இல்லை. ஆனாலும் அவரை குருவாக வரித்தவரிடம் அவருடைய அநுக்ரஹ சக்தியே வேலை செய்து விடுகிறது. அவர் இவரை ‘சிஷ்யர்’ என்றுகூட நினைத்திருக்கமாட்டார். ஆனாலும் தம்மை அவருக்கு சிஷ்யராக நினைத்தவர் எதை நாடி அவரிடம் போனாரோ அது ஸித்தித்துவிடுகிறது.
படிப்பு என்றால் என்ன என்றே தெரியாமல் இப்படிப் பல குருக்கள். பாடம் நடத்தாமல் எத்தனையோ குருக்கள். வாயையே திறக்காத தக்ஷிணாமூர்த்திதான் ஆதிகுருவே! சாஸ்திர விதிகள் எதற்கும் கட்டுப்படாமல் பேய் மாதிரி, பிசாசு மாதிரி, பைத்தியம் மாதிரி, உன்மத்தம் மாதிரித் திரிந்த அதிவர்ணாச்ரமிகள் பலர் குருமார்களாக இருந்திருக்கிறார்கள். திகம்பரமாக இப்படித் திரிந்த தத்தாத்ரேயரைத்தான் அவதூத குரு என்று ரொம்பவும் ஏற்றம் கொடுத்துச் சொல்கிறோம்.
ஆசாரியன் என்பவர் எல்லாவற்றிலும் ‘ஸிஸ்டம்’ உள்ளவர். அவர் ஏதாவது ஒரு ஸிஸ்டத்துக்கு (சாஸ்த்ர ஸம்ப்ரதாயத்துக்கு) பிரதிநிதியாக இருக்க வேண்டும்.
அதன் புஸ்தகங்களை, விஷயங்களை அவர் ‘ஸிஸ்டமாடிக்’ காகக் கற்றும் கேட்டும் அறிந்திருக்க வேண்டும். இதை மற்றவர்களுக்கும் ‘ஸிஸ்டமாடிக்’காக ‘டீச்’ பண்ணணும். எல்லாவற்றுக்கும் மேலே தாமும் ‘ஸிஸ்டமாடிக்’ காக வாழ்ந்து காட்ட வேண்டும்.
குருவுக்கு இப்படியெல்லாம் இருந்துதான் ஆக வேண்டும் என்று நிபந்தனை எதுவும் இல்லை. அவர் உள் அநுபவி. அவருடைய அநுபவத்தின் பெருமையாலேயே அவரை மஹான் என்பது. அதன் கனத்தாலேயே குரு என்பது. Character, Conduct (சீலம், நடத்தை) என்பதற்கெல்லாம் அவர் மேலே போனவர். பகவானின் காரெக்டர், கான்டக்ட் எப்படி என்று யாராவது பார்ப்போமா? அப்படித்தான் இதுவும். சாஸ்திரத்தைப் பார்த்துப் பண்ண வேண்டும் என்பதும் குருமார்களுக்கு இல்லை. ஆத்மா அல்லது பிரம்மம் என்பதோடு சேர்ந்த ஞானிகளாக அவர்கள் இருப்பார்கள்; அல்லது ஈச்வரன், பகவான் என்கிற மஹாசக்தியுடன் ‘டச்’ உள்ளவர்ளாக இருப்பார்கள்; அல்லது மனஸை அடக்கி ஸமாதியிலிருக்கிற யோகிகளாக இருப்பார்கள்.
உள்ளே இப்படியிருக்கிறவர்களே வெளியில் ஆசார்யர்களாகவும் வித்வத்துடன் பிரகாசித்துக் கொண்டு, சிஷ்யர்களுக்குப் போதனை பண்ணிக்கொண்டு, தாங்களே சாஸ்த்ரப் ப்ரகாரம் கார்யங்கள் செய்துகொண்டும் இருக்கலாம். பகவத்பாதாளும் மற்ற மதாசார்யர்களும் இப்படியே குரு, ஆசார்யன் இரண்டுமாக இருந்திருக்கிறார்கள்.
ஆத்ம ஸாக்ஷாத்காரம், ஈச்வர ஸாக்ஷாத்காரம், யோக ஸமாதி என்கிற அளவுக்குப் போகாவிட்டாலும் முன்னாளில் வித்யாப்யாஸம் செய்வித்த ஆசார்யர்கள் எல்லோருமே உள்ளூர ஒரு பெருமை படைத்தவர்களாயிருந்ததால்தான் அவர்களை குரு என்றும், அவர்களிடம் போய்ப் படிப்பதை குருகுலவாஸம் என்றும் சொல்வதாக ஏற்பட்டிருக்கிறது.
ஒரு ஸிஸ்டத்தில் கட்டுப்படாதவராகயிருந்தாலுங்கூட சொந்தமாகவும், சாஸ்திரங்களைக் காட்டியும் நிறைய உபதேசம் செய்த குருக்களும் உண்டு. அவர் சொன்னபோது அவை குறிப்பிட்ட சாஸ்திர ஸிஸ்டமாக இல்லாவிட்டாலும், அவருக்குப் பிற்பாடு அவை அவர் பேரிலேயே ஒரு Systematised சாஸ்திரமாகி, அவரே அதற்கு மூல ஆசார்யர் என்றாகிவிடுவார். வெளியிலே ஸிஸ்டப்படி இருந்த அநேக ஆசார்யர்கள், உள்ளே தனக்குத்தானே ஒரு பெருமை படைத்த குருவாக இருந்திருக்கிறார்கள்; குருவாக இருந்த பலர் எந்த ஸிஸ்டத்திலும் வராமலும் இருந்திருக்கிறார்கள்.
3. குரு-ஆசார்ய அபேதம்
ஆக, மொத்தத்தில் நான் சொன்னது; நமக்கு ஞானம் தருவதற்காக ஏற்பட்டவர்களையே குரு, ஆசார்யர் என்று இரண்டு பெயரில் சொல்வது. உள் பெருமையை வைத்து ஒருத்தரை குரு என்கிறோம். வெளிநடத்தை, படிப்பு, வெளி மநுஷ்யர்களை train பண்ணுவது ஆகியவற்றில் இருக்கிற பெருமையை வைத்து இன்னொருத்தரை ஆசார்யர் என்கிறோம். ஒருத்தர் ஸிஸ்டத்துக்கு அதீதமானவர். இன்னொருத்தர் ஸிஸ்டத்திலேயே வருகிறவர். ஒருத்தர் அநுக்ரஹத்தாலேயே முக்யமாக ஞானம் தருகிறவர். மற்றவர் சாஸ்த்ர, ஸம்ப்ரதாய, ஆசார அநுஷ்டானம், வித்வத் இவற்றின் மூலம் ஞானம் பெற உதவி பண்ணுகிறவர்.
இப்படி இரண்டு பேராகச் சொன்னாலும், ஆசார்யர் என்பவர் பூர்ண யோக்யதை உள்ளவராக இருந்தாரானால் தாமே குருவாகவும் இருப்பார். அதாவது, தம்மைப் பொருத்தமட்டில் உள்ளுக்குள்ளே ஸிஸ்டம்கள் கடந்தவராக, ப்ரத்யக்ஷமாக ஈச்வராநுபவமும் ஆத்மாநுபவமும் பெற்ற பெருமை வாய்ந்தவராக, அநுக்ரஹ சக்தி கூடியவராக இருந்துகொண்டே, வெளிநடத்தை படிப்பு இவற்றிலும் சிறந்தவராக இருந்துகொண்டு, ஒரு ஸிஸ்டத்துக்குக் கட்டுப்பட்டாற்போல் வாழ்ந்து காட்டிக் கொண்டு மற்றவர்களுக்கு வித்யை, ஆசரணை இவற்றை போதனை பண்ணி அவர்கள் அவற்றைப் பின்பற்றுமாறு செய்வார். நம்முடைய ஆசார்ய புருஷர்கள் யாவரும் இப்படி இருந்தவர்கள்தான்.
குருவின் க்ஷணகால அநுக்ரஹத்தாலேயே சுத்தியும் ஞானமும் பெறுகிற யோக்யதை உள்ளவர்கள் ரொம்பவும் ஸ்வல்பமே இருப்பார்களாதலால் இப்படி ஆசார்யனாக நீண்ட கால போதனை ஸிஸ்டமாடிக்காகச் செய்பவராகவே பொது ஸமூஹத்திற்காக ஒரு குரு இருப்பது வழக்கம்.
ஸரியாகப் புரிந்து கொண்டோமானால் ஒரு நிஜமான ஆசார்யன் குருவாக இல்லாமலிருக்க முடியாது. உள்ளுக்குள்ளே பெருமை இல்லாத ஒருத்தன் எப்படி வெளியிலே பெரியவனாக இருக்க முடியும்?
கட்டுப்பாடு என்ற feeling-ஓடு, அதாவது கட்டுப்பட்டிருக்கிறோம் என்ற feeling-ஓடு ஒரு ஆசார்யான் ஒரு ஸம்ப்ரதாயத்துக்கு — அதாவது தார்மிகமான ஸிஸ்டத்துக்கு — அடங்கி, அதில், சொல்லியிருக்கிறபடி ஸதாசாரத்துடன், நன்னடத்தையுடன் வாழ்கிறானென்றால் அப்போது அவன் ஆசார்யனில்லை, மாணாக்கன்தான். எப்போது ஒழுக்கமான நடத்தை என்பது ஒரு சட்டமாக வெளியிலிருந்து வந்து கட்டுப்படுத்தாமல், தன்னியல்பாகப் பின்பற்றபடுகிறதோ அப்போதுதான் அது சுத்தமான பூர்ண ரூபத்தில் பிரகாசிக்கும்.
கம்பல்ஸரியாக இல்லாமல் நாச்சுரலாக ஒழுக்க வாழ்வு வாழ்கிற போதுதான் அதில் ஸ்வதந்த்ரத்துக்கே உரிய ஸெளக்யமும் நிறைவும் இருக்கும். மனம்போனபடி திரிகிற நாம் முதலில் ஒரு கம்பல்ஷனின் கீழ்தான் ஒழுக்க நெறிக்கு உட்பட்டு நடக்க ஆரம்பிக்க வேண்டும். ஆனால் இப்படி கம்பல்ஷன் இருக்கிற வரையில் நாம் மாணவனாக, சிஷ்யனாக இருப்பவர்கள்தான். போகப் போக, எதை நிர்ப்பந்தமாக ஏற்றுச் செய்ய ஆரம்பித்தோமோ அதையே ஸ்வதந்த்ரமாக, நம் ஸ்வபாவமாக ஆக்கிக் கொண்டு செய்யத் தொடங்கி விடுவோம். இப்படி ஒழுக்கத்தை ஸ்வாபாவிகமாக்கிக் கொண்டு ஸ்வதந்த்ர ஸெளக்யத்துடனேயே ஒருத்தன் பின்பற்றுகிற போதுதான் அவனுடைய வாழ்க்கைக்கு மற்றவர்களையும் follow பண்ண வைக்கிற சக்தி உண்டாகும். இப்படிப்பட்ட நிலையிலிருந்துகொண்டு ஒருத்தன் போதனை பண்ணினால்தான் அது பிறரிடம் ஆழமாகப் பதிந்து அவர்களையும் அப்படியிருக்கத் தூண்டும்.
இப்போது ஆசார்யர்களின் இடத்திலிருக்கிற ஆசிரியர்களுக்கு அறிவு மட்டும் இருந்தால் போதும், அவர்களுடைய அநுஷ்டானத்தைப் பற்றிக் கவலையில்லை என்பதாயிருக்கிறது. பழைய நாளில் அநுஷ்டானமும் சேர்ந்தே ஒருத்தனை ‘ஆசார்யன்’ என்ற ஸ்தானத்துக்குத் தக்கவனாக ஆக்கிற்று. இந்த அநுஷ்டானம் என்பதும் முடிந்த முடிவு இல்லை; இது வெளிநடத்தைதான். அநுஷ்டானமும் பூர்த்தியாகிற இன்னொரு இடம் உண்டு. அந்த இடம்தான் அநுபவம், ஸ்வாநுபூதி. அந்த அநுபவம் ஏற்பட்டால்தான் நன்னடத்தை என்பது ஸ்வபாவமாக அமையும். அதாவது வெறும் அறிவு எப்படி அநுஷ்டானத்தின் ஆதாரத்தில்தான் முழுமை பெறுகிறதோ, அப்படியே அநுஷ்டானமும் அநுபவத்தின் அஸ்திவாரத்தில்தான் பலமும் பூர்ண ரூபமும் பெறுகிறது. ஆகையால் அநுபவியாக இருக்கிறவன் குரு, அநுஷ்டாதாவாக இருப்பவன் ஆசார்யன் என்று ‘டிஸ்டிங்க்ஷன்’ சொல்வது ஸரியான விஷய ஞானத்தோடு செய்கிற பாகுபாடே இல்லை. ஆசார்யன் அரைகுறை அநுஷ்டாதாவாக இருக்க முடியாது. அநுபவம் வருகிறவரையில் அவன் அரைகுறைதான் — ஒரு நிர்ப்பந்தத்தின் மேலேயே அநுஷ்டானம் பண்ணுபவனாகத் தானே இப்போது இருக்கிறான்? இதில் நிறை ஏது? குறைதான் இருக்கும்!
எனவே அநுபவியாகவும் இருந்து கொண்டே அநுஷ்டாதாவாகவும் வாழ்ந்து காட்டுகிறவன்தான் நிஜமான ஆசார்யன் என்று ஏற்படுகிறது. எவன் உள்ளே வெளியிலே அநுஷ்டாதாவான ஆசார்யனாகவும் இருப்பது. எவன் உள்ளே ஸிஸ்டத்துக்கு அதீதமாயிருக்கிறானோ, அவனேதான் இஷ்டப்படி திரிகிறவர்களை ஒரு கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்பதற்காக, அதற்குத் தானே மாடலாக வெளியிலே ஸிஸ்டப்படி இருக்கிறான். உள்ளே மௌனமாயிருந்து கொண்டே வெளியில் நிறைய உபதேசம், உபந்நியாஸம் செய்கிறான்.
குருவும் ஆசார்யனும் ஒரே ஆஸாமிதான். நிஜமான ஆசார்யன் என்றால் அவன் குருவாக இல்லாமலிருக்க முடியாது. விஷயமே தெரியாத நிலையில் நாம் குரு, ஆசார்யன் இரண்டையும் ஒன்றாக நினைத்துதான் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ”அப்படியில்லை; விஷயம் தெரிந்தவர்கள் இந்த இரண்டுக்கும் கொஞ்சம் வித்யாஸம் சொல்கிறார்கள்” என்று ஆரம்பித்தேன். அந்த வித்யாஸங்களையும் சொன்னேன். அப்புறம் விஷயம் தெரிந்தவர்களாக மட்டுமில்லாமல், அதன் ஆழத்துக்குப் போய்ப் புரிந்து கொள்ளப் பார்த்தால், மறுபடியும், ”வித்யாஸமே இல்லை. இரண்டும் ஒன்றுதான்” என்று தெளிவாவதை இப்போது பார்க்கிறோம்!
ஆதியிலிருந்தே, இப்படி குருவுக்கும் ஆசார்யனுக்கும் பேதம் கற்பிக்காததால்தான் இரண்டு வார்த்தைகளையும்synonymous-ஆக (ஒரே பொருள் உள்ளதாக)க் கருதி உபயோகித்திருக்கிறார்கள். வேதத்தின் சிரஸான உபநிஷத்தில், ”ஆசார்ய தேவோ பவ” என்றும், வித்யாப்யாஸ முடிவில் ‘ஆசார்ய’னுக்குப் பிரியமான தக்ஷிணையைத் தர வேண்டுமென்றும், எவன் ஆசார்யானை உடைய ‘ஆசார்யவானா’க இருக்கிறானோ அவனுக்கே ஞானமுண்டாகிறதென்றும்– எல்லா இடத்திலும் ‘ஆசார்ய’ சப்தமே சொல்லப்பட்டிருக்கிறது;’ குரு’என்று இல்லை. ஆனாலும் சிஷ்யர்கள் ஆசார்யனிடத்தில் போய் வஸித்து வித்யாப்யாஸம் பண்ணுவதற்கு ‘குருகுலவாஸம்’ என்றே பெயர் இருந்திருக்கிறது. ‘ஆசார்ய குருகுலவாஸம்’ என்று கேள்விப்பட்டதில்லை. ஆசார்யர்களுக்கு நன்றி தெரிவித்து ஆராதிக்கிற தினத்தை ‘குரு பூர்ணிமை’ என்று தான் சொல்கிறோம்.
வ்யாஸாசார்யாள், சுகாசார்யாள், கௌடபாதாசார்யாள், கோவிந்தபாதாசார்யாள், (சங்கர) ஆசார்யாள், ஸுரேச்வராசார்யாள், தோடகாசார்யாள், என்றெல்லாம் இருக்கும் ஆசார்யார்களைச் சேர்த்துச் சொல்கிற போது ‘குரு பரம்பரா’ என்று சொல்கிறோம். இப்படியே ராமாநுஜாசார்யார், வல்லபாசார்யார், மத்வாசார்யாரை சேர்ந்தவர்களும் சொல்கிறார்கள். ஆசார்ய புருஷர்களுக்கு நமஸ்காரம் பண்ணுவதை ‘குரு வந்தனம்’ என்றே சொல்கிறோம்.
பண்டைத் தமிழ் வழக்கு பூர்ணமாக வைதிகத்தை அநுஸரித்துதான் இருக்கும். ஆனதால் ”மாத்ரு, பித்ரு, ஆசார்ய தேவோ பவ” என்ற வேத வாக்யத்தையொட்டித் தமிழில் ”மாதா, பிதா, குரு, தெய்வம்’ ‘என்று சொல்கிற வழக்கம் ஏற்பட்டிருக்கிறதென்றால், ஆசார்யன் என்பவனே குருவாக இருந்திருக்கிறான் என்று தீர்மானமாகிறது.
(ஆசார்யன் என்பதை ‘ஆசான்’ என்று தமிழில் சொல்லியிருக்கும்.) ஸித்தாந்த சைவத்தில் மெய்கண்டாச்சாரியார், ஸமயாசாரியார், ஸந்தனாசாரியார், சிவாசாரியார் என்றெல்லாம் ‘ஆசார்யப்’ பெயரே கொடுத்துச் சொல்லுகிறார்களென்றாலும், இவர்களுடைய ஆராதனையை (நினைவு நாள் வழிபாட்டை) ‘குரு’ பூஜை என்று குறிப்பிடுகிறார்கள்.

-நன்றி: தெய்வத்தின் குரல் (மூன்றாம் தொகுதி)
No comments:
Post a Comment