13/04/2021

கண்ணி நுண் சிறுத்தாம்பு (கவிதை)

-மதுரகவி ஆழ்வார்

நம்மாழ்வாரை சேவிக்கும் மதுரகவி ஆழ்வார்.


கண்ணி
நுண் சிறுத் தாம்பினால் கட்டு உண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே (1)

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே (2)


திரிதந்து ஆகிலும் தேவபிரான் உடைக்
கரிய கோலத் திருவுருக் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்-
உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே (3)

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மை ஆகக் கருதுவர் ஆதலில்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே (4)

நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும் முன் எலாம்
செம்பொன் மாடத் திருக் குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே (5)

இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்வு இலன் காண்மினே (6)

கண்டு கொண்டு என்னைக் காரிமாறப் பிரான்
பண்டை வல் வினை பாற்றி அருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ்ச் சடகோபன் அருளையே (7)

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
அருளினான் அவ் அரு மறையின் பொருள்
அருள்கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே (8)

மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்
நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர்ச் சடகோபன் என் நம்பிக்கு ஆட்-
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே (9)

பயன் அன்று ஆகிலும் பாங்கு அலர் ஆகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்று ஆர் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் அவன் மொய் கழற்கு அன்பையே (10)

அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே (11)


***
மதுரகவி ஆழ்வார்

மதுரகவி ஆழ்வார், வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர்.

பாண்டிய நாட்டில் திருக்குருகூர் என்னும் ஆழ்வார்திருநகரிக்கு அருகிலுள்ள திருக்கோளூரில், ஈச்வர வருடம், சித்திரை மாதம்- சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தார். நம்மாழ்வார் பிறந்த பொ.யு.798க்குச் சற்று முன் பிறந்தவர். நம்மாழ்வார்க்குப் பிறகும் வாழ்ந்தவர். 

இவர் பெருமானைத் தன் பாசுரங்களால் பாடாமல், தன் ஆசாரியனான நம்மாழ்வாரையே சிறந்த தெய்வமாக எண்ணி அவரைப் போற்றியே பதினோரு பாசுரங்களைப் பாடியுள்ளார். 

நாலாயிர திவ்ய பிரபந்தத்தினுள்  (முதலாயிரம்: 936 -946)  மதுரகவி ஆழ்வார் அருளிச்செய்தது ‘கண்ணி நுண் சிறுத்தாம்பு’ என்ற இந்த ஒரே பதிகம்தான். இதிலுள்ள பதினொரு பாடல்களும் திருக்குருகூர் நம்பி நம்மாழ்வாரை ஏத்திப் பாடுவதே. 






No comments:

Post a Comment