13/04/2021

சிறகு முளைத்த முதிய பறவை

-க.ரகுநாதன்


காலைப் பனியில்
புற்களின் கன்னத்தை துடைத்த
முதிர்ந்த பறவை போல,
வெடித்த பாதங்களில்
வேதனையை அணிந்து
வாசலில் வந்தமர்கிறாள்
கிழவி ஒருத்தி.
 

அவள் கரங்களில்
வெள்ளந்தியாக சிரிக்கின்றன
பாலித்தீன் சட்டையணிந்த காளான்கள்.
அரிசிக் காளானின்
அடிப்புற வரிகள்
முகமெங்கும் படர்ந்திருக்க,
அவள் வேதனையுடன்
பேரம் பேசியவனிடம்
முதலில் எடை போட்டுப் பார்க்கச் சொல்கிறாள்.

பின் அவள் தராசில்
கடை விலையை ஏற்றுகிறாள்.
மேலேறி நிற்கும் தட்டை
நிராகரித்தவனிடம்
தன் நெடுந்தூரப்
பயணத்தை விரிக்கிறாள்.
புதரெங்கும் அகழ்ந்த
கதையை அடுக்குகிறாள்.
மனமெங்கும் படிந்த
ரணம் பற்றிப் பாடுகிறாள்.

எதற்கும் அசையாத
நட்ட கல் மனதுக்காரனிடம்
இறுதியாகக் கேட்கிறாள்
“வவுத்துக்குச் சாப்பிட
நா ஏங்கண்ணு பொய் சொல்லப் போறேன்?’’

எங்கிருந்தோ இறங்கிய
சன்னதம் தள்ள
அவள் கைப்பொருள் யாவையும்
கேள்வியின்றி என் கரங்களில்
ஏற்றுக் கொண்டேன்.

விற்ற பணத்தை
சேலையில் முடிந்து
வீடு நோக்கி
கைவீசிச் சென்ற அவள் முதுகில்
லேசாய் முளைத்திருந்தன
இரு சிறகுகள்.





No comments:

Post a Comment