13/04/2021

‘ஜனநாயக’ ராமன்

- திருநின்றவூர் இரவிக்குமார்


(ராம நவமி - ஏப். 21 - சிறப்புக் கட்டுரை)

அந்தக் காலத்தில் மனிதர்கள் தர்மத்தின் வழிநடந்தனர். தர்மமே அவர்களைக் காத்தது. பின்னர் எப்படியோ குணக்கேடு ஏற்பட்டு மக்கள் தர்மத்தின் பாதையில் இருந்து விலகி நடந்தனர். பெரியோர்களின் வார்த்தைகளை எவரும் மதிக்கவில்லை. அதனால் உலகில் பல்வேறு துன்பங்களும் துயரங்களும் ஏற்பட்டன. எல்லோரும் கஷ்டப்பட்டார்கள்.

பெரியோர்கள் பாற்கடலில் இருந்த பரமனை அண்டி துயர் தீர்க்கும்படி வேண்டினர். அவரும் ‘அரசனை உருவாக்குங்கள்’ என்று துயர் தீர வழிகாட்டினார். அப்படி உருவானதே அரசன், அரசு என்ற கருத்தியல்.

நல்ல ராஜா எப்படி இருப்பான்? நல்ல ராஜ்யம் எப்படி இருக்கும்? என்பது பற்றி பல்வேறு கருத்துகள் உள்ளன. ஆனால் இந்துக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ள ஒப்புயர்வற்ற ராஜா - ராமன்; ராஜ்ஜியம் - ராமராஜ்யம். உலகமெல்லாம் ஜனநாயகம் தலைதூக்கி வரும் காலம் இது. மேலும் மேலும் சீரியதாக ஜனநாயகப் பண்புகள் வரையறை செய்யப்பட்டு வருகின்றன. இக்காலத்திற்கு ராமர் எப்படி பொருந்துவார்?

மரபைக் காத்த மன்னன்

தசரத மகாராஜாவின் ஆட்சியில் ஜனநாயகம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக, அவர் தன் மூத்த மகன் ராமனுக்கு முடிசூட்ட முடிவு செய்தார். அதுபற்றி ஆலோசிக்க அரசவையைக் கூட்டுகிறார். அதில் பல்வேறு மக்கள் பிரிவின் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். இளவரசனாக உள்ள ராமனுக்கு அரியணை அளிக்கும் தசரத ராஜாவின் முடிவை அனைவரும் ஏற்கிறார்கள். இது ராமாயணம் தரும் செய்தி. ஜனநாயகம் இருந்தது என்று கூறுபவர்கள் மேற்கோள் காட்டும் பகுதி.

ராஜாவுக்குப் பிறகு அவனது மூத்த மகன் பதவிக்கு வருவது மரபாக இருந்துள்ளது.  ‘ஆயிரம் ராமர்கள் உனக்கு நிகர் ஆகமாட்டார்கள்’ என்று புகழப்படும் பரதன் அரசனாக முடியாது; தகுதி இருந்தும் அரசனாக முடியாதபடி தடுப்பது மரபு.

கேகய மங்கையின் மாண்பு

தசரத ராஜா, முதல் மனைவி கோசலைக்கு குழந்தை இன்மையைக் காரணம் காட்டி இரண்டாவதாக கைகேயியை மணக்கிறார். அவளுக்குப் பிறகு அதே காரணம் கூறி சுமத்திராவை மணக்கிறார். ஆனால் மூவர் மூலமாகவும் பிள்ளைப்பேறு கிடைக்காமையால், யாகம் செய்து பிள்ளைகளைப் பெறுகிறார் என்று ராமாயணம் சொல்கிறது.

மூவர் மூலம் பிள்ளைகள் பெற்றாலும், இரண்டாவதாக மணம் செய்துகொண்ட கைகேயியிடமே அதிக விருப்பம் கொண்டிருந்தார் தசரதர். ராமனுக்கு முடிசூட்டுவது பற்றிய அரசவைக் கூட்ட முடிவு பற்றி முதலில் அவளிடமே சொல்ல விரும்பிச் சென்றார். அவளை அதிகமாக விரும்பக் காரணம் என்ன?

பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம். தசரதன் கேகய நாட்டு இளவரசியான கைகேயியை மணந்து கொள்ளும்போது, தசரதனின் ராஜ்யம் சிறியது; கேகய நாடு பெரியது. ஒரு பெரிய நாட்டின் இளவரசி என்ற மிடுக்கும், ஆட்சி அதிகாரம் பற்றிய அறிவும், போர்க் கலைத் திறனும் கொண்டவள் (அதனால் தான் தசரதன் இரண்டு வரம் அளித்தான்).  அதனால் ஏற்பட்ட தன்மதிப்பு மிகுந்தவள் கைகேயி. அவள் நல்லவளும் கூட. அதனால்தான் அவளை யாரும் பகைக்கவில்லை. அதேவேளையில், அவளை விட மேலானவர், மூத்தவள் என்றெல்லாம் யாரும் அங்கு தங்களை நிலைநாட்ட முடியவில்லை. மன்னனும் மற்றவர்களும் மக்களும் கைகேயியை அப்படியே ஏற்று மதித்து வந்தார்கள்.

பெற்றவள் கோசலை என்றாலும் ராமன் வளர்ந்தது கைகேயிடமே என்று ராமாயணம் கூறுகிறது. நிர்வாகத்திறன், போர்திறன், அதிகார அரசியல் பற்றிய விழிப்புணர்வு கொண்டவள் கைகேயி. அவற்றை வெளிப்படுத்தி தன்னை நிறுவிக் கொண்டவளிடம் வளர்ந்தவன் ராமன்.

திருமணம் முடிந்து, மனைவி ஜானகிக்கு தன் தாய்மார்களை அறிமுகப்படுத்தும்போது ராமன் தன்னை ஈன்ற கோசலையை விட உயர்வாக கேகய மங்கையை அறிமுகப்படுத்துகிறான்.

ராவணனை கிள்ளிக் கலைந்து திரும்பும்போது விண்ணுலகில் இருந்து தயரதன் தோன்றுகிறான். மகிழ்ச்சியுடன் ராமருக்கு வரம் தருகிறார். அப்போது ராமன் ,  “தீயாள் என்று நீ துறந்த என் தெய்வமும் அவள் மகனும் எனக்கு தாயும் தம்பியும் ஆகும் வரம் தா” என்று கேட்கிறார். கைகேயி ராமனுக்கு தெய்வமாகத் தெரிகிறாள். அவளது சிந்தனை, செயல்களின் தாக்கம் கொண்டவன் ராமன்.

மரபை எதிர்த்த மயில்

ராமனுக்கு முடிசூட்டும் செய்தியை தானே தெரிவிக்க வரும் தசரதன், மயில் என அவள் விழுந்து கிடப்பதைக் காண்கிறான். மயிலெனக்  கிடந்தவள்தான் ராமனை காட்டுக்கு அனுப்புகிறாள்; தன் மகன் பரதனை அரசனாக்கினாள். கற்பு நெறியில் நிற்கும் மாந்தர்கள் கணவனுக்காக தன் உயிரையும் விடுவார்கள் என்பதற்கு மாறாக, தெய்வக் கற்பினாள் என்று புகழப்பட்டவள் தன் கணவனின் மரணத்துக்கே  காரணமாகிறாள்.

தயரதன்,  “பரதன் அரசனாவதைக்கூட ஏற்கிறேன். ஆனால் ராமனை காட்டுக்கு அனுப்பாதே” என்று கெஞ்சுகிறான். ஆனால் இரண்டும் தொடர்புடையவை என்று நமக்குப் புரிகிறது. மரபு, ராமனுக்கு முடிசூட்டு என்கிறது. மரபை மறுத்து, எதிர்த்து பரதனுக்கே மகுடம் என்கிறாள் கேகய மயில்.

உத்தர ராமாயணம் காட்டும் ராமர்

ராவண வதத்திற்குப் பிறகு ராமர் மணிமுடி சூட்டிக் கொள்கிறார். பெரும்பாலான ராமாயணங்கள் அத்துடன் முடிய, உத்தர ராமாயணம் அங்கிருந்து தொடங்குகிறது. அதில்தான் இரண்டு முக்கிய விவரங்கள் வருகின்றன. ஒன்று சலவைத் தொழிலாளியின் பேச்சைக் கேட்டு சீதையை கானகம் அனுப்புவது. மற்றது ராஜ்யம் பிரிப்பது.

அரசன் பிரஜைகளுக்குக் கட்டுப்பட்டவன் இல்லை. பிரஜைகள் தான் அரசனுக்கு கட்டுப்பட்டவர்கள். இது அன்றைய மரபாக இருந்தது. இன்றோ பொது ஜனங்களின் கருத்திற்கு ஆட்சியாளர்கள் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது. பொது ஜனங்களின் கருத்துக்கு ஏற்ப மாற வேண்டி இருக்கிறது.

ஆனால் விருப்பு வெறுப்புகளைக் கொண்ட ஒரு தனிமனிதன் கூட, அரசனையோ அரச குடும்பத்தையோ விமர்சிக்க முடியாத நிலையில் அவர்கள் வாழ வேண்டும். அப்படியே விமர்சனங்கள் எழுந்தால் அதற்குரிய பரிகாரங்களைச் செய்ய வேண்டும். இது உயர்ந்த ஜனநாயக விழுமியம். அதை அன்றே நடைமுறைப்படுத்திக் காட்டியிருக்கிறான் ராமன். இன்றுள்ள ஜனநாயகப் பண்புகளுக்கு அன்றே வித்திட்டவர் என்று கருதலாம்‌.

மரபை மாற்றிய ராமன்

மன்னனுக்குப் பிறகு அவனது மூத்த மகன். அதன்பிறகு அவனது மூத்த மகன் என அரசாட்சியை கைமாறி வந்தது அந்த நாளில். இந்த முறையிலான மன்னராட்சிக்கு எதிரான முதல் கலகக்குரல் கைகேயினுடையது.

மன்னன் மாண்டான். மன்னன் சொல் காக்க ராமன் நாட்டை விட்டு வெளியேறினான். மக்கள் கொதித்தனர். மன்னனாக வேண்டிய பரதனே,  ‘இடைக்கால ஏற்பாடு’ என்று தன்னை அறிவித்துக் கொண்டதுடன், அரசனாக இல்லாமல் அறங்காவலர் ஆனான்; அண்ணன் ராமனின் பாதுகையை சிம்மாசனத்தில் அடையாளமாக வைத்து நாட்டை 14 ஆண்டுகள் ஆண்டான்.

ராமாவதார நோக்கம் நிறைவேற, கைகேயி அவப்பெயரை ஏற்றுக் கொண்டாள் என்ற பக்தர்களின் வாதம் ஒருபுறம் இருக்கட்டும். கைகேயி அரசியல் விழிப்புணர்வுடன் எழுப்பிய குரலாக இதைப் பார்த்தோம் என்றால், அதை முன்னெடுக்க முடியாமல் மரபு எதிர்த்தது. சமுதாயம் மரபை மீற மறுத்தது. கைகேயியின் குரலை முனைப்புடன் முன்னெடுக்க வேண்டிய பரதனே பின்வாங்கினான்.

ஆனால் கைகேயினால் வளர்க்கப்பட்ட, அவளது சிந்தனைத் தாக்கத்தால் உரம் பெற்ற ராமன் என்ன செய்தான் என்பது விருப்புடன் கவனிக்கத்தக்கது.

மன்னனாக முடிசூட்டிக் கொண்டு ராஜாராமன் ஆனார்; நல்லாட்சி செய்தார். அதன் ஒரு பகுதியாக ராஜ்ஜியத்தின் எல்லையை விரிவு செய்தார். விரிவான ராஜ்யங்களைப் பிரித்து தம்பிகள் மூவரையும் மூன்று வெவ்வேறு ராஜ்யங்களுக்கு அதிபர் ஆக்கினார். அவர்களுக்கு நிகரான இன்னொரு ராஜ்யம் அயோத்தி ராம ராஜ்ஜியம். அதேவேளையில் அதன் பழமையை முன்னிட்டு நிகரானவர்களில் முதலானது (First among the equals) என்றாக்கினார்.

ஜனநாயக விழுமியங்களில் மிக முக்கியமான இரண்டு அடிப்படை அம்சங்களை அன்றே நடைமுறைப்படுத்திய ஜானகி ராமனை  ‘ஜனநாயக ராமன்’ என்று இன்னொரு புகழாரம் சூட்டுவது இன்றைய காலத்திற்கு ஏற்புடையதே.







No comments:

Post a Comment