13/04/2021

கண்ணாடிக் கவிதைகள்

-கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம்




தவறி விழுந்தது.
என் முகங்களைப் பொறுக்குகிறேன்.
இத்தனையா?
கடைசியில்,
போட்டுடைத்த பிறகு தான்
உண்மையைக் காட்டுகிறது கண்ணாடி.


இன்று யார் முகத்தில் என
எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது
விடிகாலை அறைக் கண்ணாடி.


யாருமற்ற அறையில்
குடும்பப் புகைப்படத்தை
ஏக்கமுடன் பார்க்கிறது
கண்ணாடி .


இறக்கிவைக்க இயலாமல்
சுமக்கிறது புகைப்படங்கள்
சம்சாரியைப் போல.
அவ்வப்போது
இறக்கிவிடுகிறது கண்ணாடி
சந்யாசியைப் போல.


கலவியின் அசைவுகளைக்
காணும் கண்ணாடி.
வேறென்ன...
சேர்ந்து வெட்குகிறது கண்ணாடி.


தாய்வீட்டுச் சீதனக் கண்ணாடியைப்
பார்த்துப் பார்த்துப் புலம்பியழுகிறாள்
கைவிடப்பட்ட கிழவி.


தினமும் முகம் பார்த்தவன்
செத்துக் கிடக்கிறான்.
யாராவது பிண முகத்தைக்
கண்ணாடிக்குக் காட்டுங்களேன்.



No comments:

Post a Comment