13/04/2021

அன்னைத்தமிழ் வளர்த்த அற்புதப் புலவர்கள் - 9

 -பொன்.பாண்டியன் 


பகுதி-1



17. மதுரை மருதன் இளநாகனார்-1

( மருதக்கலி பாடியவர்)


சங்க காலத்தில் நாகம் என்ற பெயரைத் தம்பெயரில் கொண்ட புலவர்கள் சிலர் உண்டு. அதிலும் மதுரை மருதன் இளநாகனார் என்ற பெயரில் இருவர் என்றும் இல்லை ஒருவர் என்றும் குழப்பம் இருந்தது. முடிவில் இருவர் என்று பாடல் தன்மைகள் மூலம் புலவர் பெருமக்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவருள் ஒருவர் கலித்தொகை மட்டும் பாடியவர். இன்னொருவர் அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகியன பாடியவர் ஆவர். நாம் இப்போது காண்பது கலித்தொகை பாடிய மதுரை மருதன் இளநாகனார் ஆவார்.

நில அமைப்பிலும் நூல் அமைப்பிலும் நடுநாயகமாக விளங்குவது மருதம் ஆகும். மருத நிலத்து மக்கள் உழைத்த பின்னர் ஓய்வெடுக்கும் காலம் மற்ற நிலத்தினைவிட அதிகமாகும். அதனால் கலையும் கல்வியும் அவர்களால் வளர்ந்தன. இருப்பினும் கலை ஆர்வ மிகுதியால் மக்கள் நெறி பிறழ்வதற்கான வாய்ப்புகளும் ஏற்பட்டன. அவர்களுக்கு அறிவுறுத்தும் பாங்கில் புலவர்கள் பாடல்களை இயற்றினர். அவருள் தலைசிறந்தவர் மதுரை‌ மருதன் இளநாகனார் ஆவார்.

செவி வயலாகின்றது; வேதமும் தமிழுமாகிய முதுமொழி நீராகின்றது; இவைமூலம் சொல்லேர் உழவர்களாகிய செந்நாப்புலவர்கள் மக்களை நெறிப்படுத்த புதிது புதிதாக நூல்களைப் படைக்கின்றனர். அப்படிப்பட்ட சான்றோர் நிரம்பிய மதுரை என்று பெருமைப்படுத்தி உள்ளார் இவர்.

“செதுமொழி சீத்த செவி செறுவாக,
முதுமொழி நீராப், புலன்நா உழவர்
புதுமொழி கூட்டுண்ணும்,
புரிசை சூழ் புனல் ஊர”

-என்கிறது கலித்தொகை 3-ஆம் பாடல்.

4-ஆம் பாடல்:

“ஓத்துடை அந்தணன் எரிவலம் செய்வான்போல்
ஆய்தூவி அன்னம் தன்அணி நடைப்
படையோடு மேதகத்திரி தரூஉம்
மிகு புனல் நல்ஊர”

அன்னச் சேவல்கள் தத்தம் பெடைகளுடன் மலர்ந்திருக்கும் தாமரை மலர்களை வலம் வருவது மணமக்கள் தீவலம்வருவதைப் போலத் தோற்றமளிக்கிறது என அப்பாடல் குறிப்பதன்மூலம் பழந்தமிழர் வைதிக மணமுறையைக் கையாண்டனர் என உறுதியாகிறது.

“வெறிதுநின் புகழ்களை வேண்டார் இல்எடுத்தேத்தும்
அறிவுடை அந்தணன் அவளைக் காட்டு என்றானோ?”

என பாடல்-7ன் மூலம் பார்ப்பனர்களுக்கு பிரிந்த தம்பதியினரைச் சேர்த்துவைக்கும் கடமையும், தம்பதியர் பார்ப்பனர்மேல் செல்லமாகக் கோபித்துக் கொள்ளும் உரிமையும் உண்டு என்பது புலனாகிறது. பாணர்களும் இதே உரிமை கொண்டிருந்ததும் தெரிகிறது.

“ஆலமர்செல்வன் அணிசால் பெருவிறல்
போல, வரும் என்உயிர்”

என்பதன் மூலம் (பாடல்-17) தங்கள் குழந்தைகளை முருகனாகப் பாவிப்பது நமது முன்னோர் வழக்கம் என்றும் அறிகிறோம்.

பாடல்-21ல் கூறுகிறார்: குழந்தைகள் கழுத்தில் சிவபெருமானின் சின்னங்களான மழு, சூலம், நந்தி ஆகிய சிறுஉருவங்களை அணியாகக் கட்டிவைப்பர்" என்று.

பாடல்-27ல்,

“மடநடை மாயினம், அந்தி அமையத்து
இடன் விட்டியங்கா இமயத்து ஒருபால்
இறைகொண்டு இருந்தன்ன”

-என இமயமலையை நினைவு கூர்கிறார்.

“நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும் அவை எடுத்து 
அறவினை இன்புறூஉம் அந்தணர் இருவரும்”

-என்று அமிர்தம் பருகிய தேவர்கள் அவர்தம் குரு பிரஹஸ்பதியையும், அமிர்தம் பருகாத அசுரர்களுடைய குரு சுக்ராச்சாரியாரையும் குறித்தும் அவர்கள் “திறம்வேறு செய்தியின் நூல்நெறி பிழையாது” என புராண பாத்திரங்களை பாடல் 34-ல் நினைவூட்டுகிறார்.

மருதக்கலியின் கடைசிப்பாடலான 35 அகச்சுவை காதல் உணர்வு நிறைந்த ஒரு பக்திப்பாடல்; படித்து இன்புறலாம்.

இவ்வாறு மதுரை மருதன் இளநாகனார் அறம் திறம்பா அகச்சுவை இழைந்த மருதக்கலியை இம்மண் பயனுறப் படைத்துள்ளார்.

***

18 ‘இறையனார் களவியல் உரை’ எழுதிய

மதுரை மருதன் இளநாகனார்-2

ஒரு தேசத்தின் வளமைகளில் முதன்மையானது அம்மக்களின் சிந்தனைவளம். அதைத் தொடர்ந்து நிற்பன செயல், திறன், செல்வம், சக்தி, விளைவு ஆகியன.

இவ்வகையில் நமது பாரத தேசத்தின் வளமைகளில் தமிழும் தமிழ்ப் புலவர்களின் பங்கும் இன்றியமையாதன. இவ்வரிசையில் இறையனார் களவியல் உரை யாத்த மதுரை மருதன் இளநாகனார் பங்கு சிறப்புக்குரியது.

“கடவுட் கற்பொடு குடிக்கு விளக்காகிய
புதல்வற் பயந்த புகழ்மிகு சிறப்பின் நன்னராட்டி”

அகநானூறு பாடல் 184-ல் பெண்ணின் சிறப்பைப் பெருமிதத்துடன் பாடுகிறார் மதுரை மருதன் இளநாகனார்.

வீரச்சாதனை புரிந்த மறவர்களுக்கு அமைக்கப்பட்ட நடுகற்களை கடவுளுக்கு நிகராக வழிபடும் வழக்கத்தைக் குறித்து,

“பீலிசூட்டிய பிறங்கு நிலைநடுகல்”

-என அகநானூறு பாடல்-131ல் குறிப்பிடுகிறார். நடுகல் வழிபாடு குறித்து இவரது பாடல்களில் நிறையக் காணலாம்.

அகநானூறு பாடல்- 220ல்,

“மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்
முன்முயன்று அரிதினின் முடித்த வேள்வி”

-என்று கோசரின் செல்லூரில் திருமாலின் அவதாரங்களில் ஒன்றாகிய பரசுராமன் செய்த வேள்வியைக் குறிப்பிடுவதன் மூலம் தமிழகத்தின் தொன்மையையும் தமிழர்கள் பின்பற்றிய வேதநெறியையும் நினைவூட்டுகிறார்.

“ஓங்குமலைப் பெருவில் பாம்புஞாண் கொளீஇ;
ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப்
பெருவிறல் அமரர்க்கு வெற்றி தந்த
கறைமிடற்று அண்ணல் காமர் சென்னிப்
பிறைநுதல் விளங்கும் ஒருகண்போல”

-என புறநானூறு பாடல்-55ல் சிவபிரான் திரிபுரம் எரித்த செய்தியைக் கூறி தமிழ்ச் சனாதனத்தை உறுதிப்படுத்துகிறார். அப்பாடலிலேயே,

“அறநெறி முதற்றே அரசின் கொற்றம்”

என்று அரசின் கடமையை வலியுறுத்திப் பாடுகிறார்.

இவரது படைப்புகள்:

புறநானூற்றில் 2,
குறுந்தொகையில் 4,
நற்றிணையில் 10,
அகநானூற்றில் 23
 
-என இவரின் 39 படைப்புகள் ஈடு இணையற்றவை ஆகும்.

இவர் போன்ற தவப்புலவர்களால்தான் நமது பண்பாடும் கலாச்சாரமும் ஸநாதனமாக நிலைபெற்று இயலுகின்றன.



No comments:

Post a Comment