14/06/2020

காஷ்மீரம் காக்க தன்னுயிர் ஈந்தவர்!

-இல.கணேசன்

அம்பேத்கருடன் சியாம பிரசாத் முகர்ஜி

சுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸ் கட்சி  சாராத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபாவின் தலைவர் டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி. சுதந்திர நாட்டின் முதல் வணிக, தொழில் துறை மந்திரி. அப்படி மகாத்மா காந்தியின் வற்புறுத்தலால் டாக்டர் முகர்ஜி உடன் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இணைந்த இன்னொருவர் பாபாசாஹேப் அம்பேத்கர்.

தேசப் பிரிவினையால் நம் மக்கள் பொருள் நாசம், உயிர்ச் சேதம், மான பங்கம் என மாபெரும் இன்னல்களைச் சந்தித்து சொந்த நாட்டிலேயே அகதிகளாய் மாறினர். அதன் பின்னரும்  ‘நேரு – லியாகத் அலி ஒப்பந்தம்’ என்ற பெயரில் அந்நாளைய பிரதமர் நேரு தொடர்ந்து மேற்கொண்ட சிறுபான்மையின சமரச நடவடிக்கைகளை எதிர்த்த டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி, மத்திய மந்திரி சபையிலிருந்து விலகினார். சுதந்திர நாட்டில் ராஜிநாமா செய்த முதல் மத்திய மந்திரி இவர்தான்.

அதன்பிறகு 21.10.1951இல்  ‘பாரதிய ஜன சங்கம்’ என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். (அதன் இந்நாளைய உருவமே பாரதீய ஜனதா கட்சி).


சுதந்திர பாரதத்தில் நடைபெற்ற முதல் தேர்தலிலேயே ஜன சங்கம் மூன்று தொகுதிகளை வென்று நாடாளுமன்ற ஜனநாயகத்தில் முறைப்படி அடியெடுத்து வைத்தது. டாக்டர் முகர்ஜி தலைமையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் இணைந்து ‘தேசிய ஜனநாயக் கட்சி’ ஒன்று உருவானது. சபாநாயகரால் கட்சி அந்தஸ்து மறுக்கப்பட்டாலும் முதல் எதிர்க்கட்சிக் கூட்டணி அந்தஸ்து கிடைத்தது. முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவான விதம் இப்படித்தான்.

தனித்திருந்த சமஸ்தானங்கள் அனைத்தும் விடுதலைக்குப் பின் நம் தேசத்தின் ஓர் அங்கமாகத் தங்களை இணைத்துக் கொண்ட சூழலில், அது போலவே பாரதத்துடன் எவ்வித நிபந்தனைகளுமின்றி இணைந்த ஜம்மு காஷ்மீர் மாகாணத்தில் மட்டும் குழப்பம் தீரவில்லை.

ஜம்மு காஷ்மீருக்கெனத் தனி அரசியல் சாசனம், தனிக் கொடி, தனிப் பிரதமர் என அரசியல் சாசனப் பிரிவு 370-இன் பெயரில் ஏகப்பட்ட அவலங்கள் அரங்கேறின. அந்த மாகாணத்துள் நுழைய மத்திய அரசின் அனுமதிச் சீட்டு (பெர்மிட்) பெற வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தி, ஜம்மு காஷ்மீருக்கு கிட்டத்தட்ட ‘தனி நாடு’ அந்தஸ்து தந்திருந்தார் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு. அவை அனைத்தும்  ‘ஒரே ஒரு நபர்’ காஷ்மீரின்  ‘மற்றொரு நபர்’ மீது கொண்ட ‘நட்பின்’ விளைவு.

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை நேரு கையாண்ட விதத்தில் தேசாபிமானிகள் அனைவருக்கும் கடும் அதிருப்தி ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும்; பெர்மிட் முறையை ஒழிக்க வேண்டும் என ஜன சங்கம் போராடியது.

டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி ஜம்மு காஷ்மீர் விவகாரத்தைத் தீர்த்துவைக்கும் நோக்கத்தோடு 1953 மே 8ஆம் தேதி ஜம்மு நோக்கிப் புறப்பட்டார். ஆனால், ‘அமைதியைக் குலைக்கும் எண்ணத்துடன், அனுமதி இல்லாமல் உள்ளே நுழைந்தார்’ என்று குற்றம் சாட்டி ஷேக் அப்துல்லா அரசால் மே 11 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

ஸ்ரீநகரில் சிறை வைத்து டாக்டர் முகர்ஜியைக் கொல்ல சதி நடந்தது. டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி 1953 ஜூன் 23 ஆம் தேதி விடியும் முன் உடல்நலக் குறைவால் இறந்ததாக அறிவித்தது ஷேக் அப்துல்லா அரசு. மர்மமான முறையில் இறந்த தனது மகனுக்காக நீதி கேட்டுப் போராடினார் டாக்டர் முகர்ஜியின் தாயார். ஆனாலும் பலனில்லை.

‘ஒரே நாடு! ஒரே சட்டம்!’ என்ற கொள்கையை வலியுறுத்த உயிர் துறந்தார் டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி. அவரது உயிர்த் தியாகம் ஏற்படுத்திய நிர்பந்ததால் ஜம்மு காஷ்மீர் மாகாணத்துக்கான தனி  நாடாளுமன்றம், தனிப் பிரதமர், தனிக் கொடி, நுழைவு அனுமதி (பெர்மிட்) முறை போன்ற ஏற்பாடுகள் நீக்கப்பட்டன. ஆனால் அரசியல் சாசனப் பிரிவு 370-இன்படி ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 2019 ஆம் ஆண்டு வரை நீடித்தது. (சென்ற ஆண்டு பாஜக அரசின் முயற்சியால் இந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது).

டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி போன்ற எண்ணற்ற வீரர்களின் தியாகத்தால் பலிதானத்தால் அன்று பாரதிய ஜன சங்கமாக உருவாகி, வேர் ஊன்றிய அரசியல் கட்சியானது, இன்று பாரதிய ஜனதா கட்சியாக வலுவாகி தேசத்தையே வழிநடத்துகிறது.




திரு. இல.கணேசன்
தமிழக பாஜகவின் மூத்த தலைவர்.



No comments:

Post a Comment