-சுவாமி சித்பவானந்தர்
சுவாமி விவேகானந்தர் |
கந்தன் கலியுகவரதன் எனப்படுகின்றான். இதன் உட்பொருளை நாம் அறிந்துகொள்வது அவசியம். நான்கு யுகங்களுள் கடையாயது கலியுகம். அதில் அறம் மிகக் குறைந்துள்ளது. ஆதலால் தெய்வத்தை அறிந்துகொள்ளவும், தெய்வத்தைத் தொழவும் முயலுபவர் கலியுகத்தில் மிகக் குறைந்திருக்கின்றனர். இனி, தெய்வம் எனும் சொல் எப்பொருளைக் குறிக்கிறது என அறிந்துகொள்வது அவசியம். இயற்கை வேறு, தெய்வம் வேறு அல்ல. ஒரே பொருள் இரண்டு விதங்களில் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஐம்பொறிகள் வாயிலாக நுகர்கின்றவிடத்து அது இயற்கை. ஞானக்கண் கொண்டு காணுமிடத்து அதே பொருள் கடவுள் எனப் பெயர்பெறுகிறது. கடவுள் காட்சி மெய்க் காட்சி. இயற்கைக் காட்சி பொய்யானது, நிலையற்றது. ஆதலால்தான் இயற்கையாகக் காணும் காட்சியைக் கடந்து மெய்ப்பொருளை உள்ளவாறு காணுதல் வேண்டும். அதை உள்ளவாறு அறிகின்றவிடத்து வாழ்க்கைச் சிக்கல்களெல்லாம் தாமாக அடிபட்டுப் போய்விடுகின்றன.
கடவுள் காட்சிகளுள் செம்பொருளைக் கந்தனாகக் காணும் காட்சி மிக எளியது; பக்குவமடையாத உயிர்களுக்கும் விளங்கவல்லது. கந்தனை அறிந்து அவனைப் போற்றுகின்றவிடத்துப் போற்றுகிறவன் விரைவில் பெருநிலை எய்துகிறான். கந்தனைப் பற்றிய உண்மைகளையெல்லாம் அருணகிரிநாதர் ஓர் எளிய திருப்புகழில் படம் பிடித்துக் காட்டியுள்ளார்:
“ஏறுமயில் ஏறிவிளையாடுமுகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுகம் ஒன்றே
குன்றுருவ வேல்தாங்கி நின்றமுகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்தமுகம் ஒன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுகம் ஒன்றே
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியருணாசலம் அமர்ந்த பெருமாளே”
என்பது அத்திருப்புகழ் ஆகும். கந்தனுக்கு அமைந்துள்ள ஆறு இயல்புகளையும் ஆராய்வதற்கு ஏற்ப நமது அறிவு தெளிவுறும். இனி, இவ்வாராய்ச்சியில் மற்றொரு மகிமை புதைந்திருக்கிறது. இக்காலத்தில் தோன்றியுள்ள மக்களுள் மிக மேலோன் ஆவார் சுவாமி விவேகானந்தர். அவரைச் சரியாக அறிந்து கொள்ளுபவர்கள் சமயத்தைச் சரியாக அறிந்து கொள்ளுபவர்கள் ஆவார்கள். விவேகானந்தரைச் சரியாக அறிந்து கொள்பவர் சமய அனுஷ்டானத்தையும் அறிந்து கொள்பவர் ஆவார்கள்.
விவேகானந்தரிடத்து மிளிர்கின்ற மகிமைகளுள் சில கந்தனிடமிருந்து பெற்றுள்ள மகிமைகளாகத் தென்படுகின்றன. ஆதலால் முருகக் கடவுளது மகிமைகளையும் மானுடருள் மேலோனாகிய விவேகானந்தரது விபூதிகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்ப்போம்.
அழகின் இலக்கணம்:
“ஏறுமயில் ஏறி விளையாடு முகம் ஒன்றே” என்பது ஆறுமுகக் கடவுளின் முதலாகிய மேன்மையாகும். ஏறுமயில் என்பது ஆண்மயில். அது முருகக் கடவுளுக்கு வாகனம். உலகில் தோன்றியுள்ள உயிர் வகைகளுள் கணக்கற்ற நிறங்களைச் சீராகப் பெற்றிருப்பதும் அழகின் உச்ச நிலையை எய்தியிருப்பதும் ஆண் மயில் ஆகும். அதைப் பார்ப்போரது உள்ளத்தை அதன் அழகு கவர்ந்தெடுத்துக் கொள்ளை கொண்டு போகிறது. திரும்பத் திரும்ப எத்தனைத் தடவை பார்த்தாலும் அதன் அழகைக் கண்டு ரசிப்பதில் சலிப்புத் தட்டுவதில்லை. முருகன் என்னும் சொல் ‘அழகன்’ எனப் பொருள்படுகிறது. அவ்வழகனுக்கு அழகுப் பறவை வாகனமாக அமைந்திருப்பது முற்றிலும் பொருந்தும். உலகில் எங்கு திரும்பி எப்பொருளைப் பார்க்கினும் அதனிடத்து ஏதேனும் ஒருவிதத்தில் அழகு பொலிவது வெளிப்படை. அவ்வழகை ரசிப்பது தெய்வ வழிபாடு போன்றதாகும். உலகிலுள்ள எல்லோரும் ஏதேனும் ஒரு விதத்தில் அழகை ரசித்துக் கொண்டே இருக்கின்றனர். அன்னவர்களெல்லாம் அறிந்தோ அறியாமலோ முருகனைப் போற்றுகின்றனர். ஆதலால் அவனை கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் எனக் கூறுதலில் பொருள் மிகப் புதைந்திருக்கிறது. அழகைக் கண்டு இன்புறுவர்களெல்லாம் அழகன் ஆகிய கந்தனைப் போற்றிக் களிப்புறுகின்றனர். அழகின் வழிபாடு உலகெங்கும் நிகழ்ந்து வருகிறது. ஆதலால் பலப்பல பெயர்களைக் கொடுத்து அழகன் ஆகிய முருகவேளை மானிலத்தவர் போற்றி வருகின்றனர்.
இனி, விவேகானந்தரையும் ஓர் அழகன் என்று கூறலாம். அவருடைய கட்டழகு காண்போரது உள்ளத்தைக் கவர்ந்திழுக்கிறது. இமயமலையிலுள்ள உத்தரகண்டத்திற்கு யாத்திரை போய்விட்டு விவேகானந்தர் திரும்பி வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்த அறிவாளி ஒருவன் ‘சங்கர மகாதேவ” என்று அடியற்ற மரம் போல வீழ்ந்து வணங்கலாயினன். உண்மையில் உலக மக்கள் எல்லோருமே விவேகானந்தரது மேனியழகைப் போற்றியாக வேண்டும். அமெரிக்கர்கள் அவருடைய உடலமைப்பை முறையாக ஆராய்ச்சி செய்தனர். மேனியின் உயரம், எடை, அவயவங்களின் அமைப்பு ஆகியவையெல்லாம் ஆராய்ந்தான பிறகு அவருடைய மேனியை மாண்புமிக்க மேனி (classical body) என அவர்கள் முடிவு கட்டினர். அம்முடிவு உண்மைக்கு முற்றிலும் ஒத்ததாம்.
விவேகானந்தரிடம் தென்பட்டது தேக சௌந்தர்யம் ஒன்று மட்டுமல்ல. வேறு பல சௌந்தர்யங்களையும், இனிமைகளையும் உடையவராய் விவேகானந்தர் இருந்தார். அவருடைய கம்பீரமான இனிய குரலில் தெய்வீகம் திகழ்வதாயிற்று. ஓசையழகு என்று அதை உரைக்கலாம். இனிய ஓசை யாருடைய உள்ளத்தையும் கவர்கின்றது. ஓசையின் இனிமையின் உச்ச நிலையை எட்டுகிறவர்கள் தெய்வத்தை அடையப் பெறுகின்றனர். தாங்களே தெய்வீகம் வாய்க்கப் பெற்றவர்கள் ஆகின்றனர். விவேகானந்தரின் குரலோசையானது கேட்டவர்களுக்கெல்லாம் அருள் விருந்தை வழங்கிற்று. அவருடைய குருநாதர் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் சிஷ்யர் விவேகானந்தரின் தெய்வீகப் பாடல்களைக் கேட்ட பொழுதெல்லாம் ஆனந்தப் பரவசம் அடைபவர் ஆயினர்.
விவேகானந்தரது இன்னிசையைக் கேட்கும் வாய்ப்பு கீழ்நாட்டவர்களுக்கும், மேல்நாட்டவர்களுக்கும் கிட்டுவதாயிற்று. அவரது இன்னிசையைக் கேட்டவர்களெல்லோரும் தெய்வ பக்தியில் தங்கள் கருத்தைச் செலுத்தினர். விவேகானந்த ஓசையழகுக்கு அவர்கள் அடிமைப்பட்டவர் ஆயினர். சொல்லழகில் சிறந்தவராகவும் விவேகானந்தர் திகழ்வாராயினர். வங்கம், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளை நன்கு கற்றவர் விவேகானந்தர். மொழிக்கு கவிஞன் சிருஷ்டிகர்த்தா ஆகிறான் என்பது கோட்பாடு. விவேகானந்தர் கையாண்ட மூன்று மொழிகளுக்கும் தாம் கையாளுகிற முறையில் இனிமை வழங்கினார். சொல்லழகு காண விரும்புவர் விவேகானந்தரது உரைநடையையும் வாசித்துப் பார்த்துக் கண்டு கொள்ளலாம்.
மேனியின் அசைவில் அழகைத் தோற்றுவிக்குமிடத்து அது நாட்டியம் எனப்படுகிறது. அம்பலக் கூத்தனுடைய அசைவு அழகுக்கு உறைவிடமாகிறது. விவேகானந்தருடைய நடையுடை பாவனைகளைக் காணலுற்றவர் அவரை ஒரு நாட்டிய அழகன் என்றே நவிலலாயினர். ஏனெனில் விவேகானந்தர் அமர்ந்திருப்பதிலும், எழுந்து நிற்பதிலும், நடமாடுவதிலும் அசைவு அல்லது நாட்டியத்தின் அழகு ஓயாது வெளியாகிக் கொண்டிருந்தது. இதற்கெல்லாம் மேலாக ஒழுக்கத்தின் அழகு விவேகானந்தரிடமிருந்து ஓயாது வெளியாகிக் கொண்டிருந்தது. மானுடன் ஒருவனுக்கு ஒப்பற்ற மேன்மையைத் தருவது ஒழுக்கம். அந்த ஒழுக்கத்தின் உச்சநிலை விவேகானந்தரிடம் தென்பட்டது. ஆதலால் ஒழுக்கத்தினின்று ஒளிர்கிற இனிமையும் அழகும் அப்பெருமகனாரிடம் வேண்டியவாறு பொலிவதாயின. முருகனைப் போன்று விவேகானந்தரும் அழகனாகத் திகழ்வாராயினர் எனக் கூறுவது ஒரு பொழுதும் மிகையாகாது.
ஞானமொழி புகன்றவர்:
”ஈசருடன் ஞானமொழி பேசும்முகம் ஒன்றே” என்பது முருகக் கடவுளின் மற்றொரு மகிமையாகும். சிருஷ்டிகர்த்தாவாகிய பிரம்மதேவனிடம் பிரணவ மந்திரத்தைப் பற்றி குமரன் கேள்வி கேட்டான். படைப்புத் தெய்வமோ அவ்வினாவிற்குத் தக்க விடையளிக்க இயலாதவராயிருந்தார். அவருடைய அரைகுறை ஞானத்தை முன்னிட்டு முருகன் சிருஷ்டிகர்த்தாவை சிறையிலடைத்து வைத்தான். அப்படி அவன் செய்தது பொருந்தாது என பரமசிவன் தனது குமாரனிடம் கூறினார்/ ஓங்கார தத்துவத்தை அறிந்துகொள்ளாத அயன் படைப்புச் செயலைச் செய்ய எங்கனம் பண்புடன் இயற்ற முடியும்? என்று முருகன் தடை சொன்னான். “அப்படியானால் பிரணவ மந்திரத்தை நீ விளக்கு பார்க்கலாம்” எனச் சிவனார் குமரனிடம் கூறினார். குமரனும் உவகையுடன் அதன் உட்பொருளையெல்லாம் தன் தகப்பனாரிடம் எடுத்து விளக்கினான். அவன் கொடுத்த விளக்கம் சிவனாருக்கு பரமதிருப்தியை உண்டு பண்ணியது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு கார்த்திகேயன் ‘தகப்பன் சுவாமி’ என்றும், ‘சுவாமிநாதன்’ என்றும் இயம்பப் பெறுகின்றான். ஞானத்தை அல்லது நல்லறிவை அடிப்படையாகக் கொண்டே உலகில் எல்லா கிருத்தியங்களும் நிறைவேற வேண்டும் என்பது இதன் உட்கருத்தாகும்.
விவேகானந்தர் தம் போக்கில் இக்கோட்பாட்டுக்குப் பொருத்தமான விளக்கம் தருபவராக விளங்கினார். அவர் கல்லூரி மாணாக்கனாயிருந்தபொழுது கடவுள் நம்பிக்கை இல்லாதவராய் இருந்தார். ஆயினும் கடவுள் தத்துவத்தை அவர் தீவிரமாக ஆராய்ச்சி செய்து வந்தார். இயற்கையின் நடைமுறைக்கு ஏற்ற விளக்கம் இயற்கையினிடத்திலேயே இருக்கிறது. பிறகு, இதற்குப் புறம்பாக பரம்பொருள் என்னும் தத்துவத்துக்குத் தேவையென்ன என்பது அவரது உள்ளத்தில் எழுந்த உறுதியாக எழுந்த ஐயப்பாடு ஆகும். அவ்வாராய்ச்சியை அவர் தீவிரமாகச் செய்தார். அதை முன்னிட்டுப் பல பெரியவர்களிடம் அவர் போய் வினவவும் செய்தார்.
கடைசியில் அவருடைய ஐயத்தை அகற்றி வைத்தவர் அவருடைய குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சராம். நிர்விகற்ப சமாதியில் சுவாமி விவேகானந்தரை நிறைஞானியாக மாற்றியமைத்தவர் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர். அதன் விளைவாக மெய்ப்பொருள் தத்துவத்தை விவேகானந்தர் உலகத்துக்கு அரியதொரு அருள்கொடையாக வழங்கியுள்ளார். மக்கள் அனைவரிடமும் அவர் மொழிந்தது ஞானமொழியேயாம். விவேகானந்தருடைய நூல்களில் ஆராய்வதற்கு ஏற்ப மக்களுக்கிடையில் அஞ்ஞான இருள் அகலும்; இறைவனைப் பற்றிய மெய்ஞானம் உதயமாகும். எனவே உலகத்தவர்களுக்கிடையில் பரம்பொருளைப் பற்றிய மெய்ஞானம் பேசிய மகிமை விவேகானந்தருக்கு உண்டு. விவேகானந்தருடைய நூல்களை ஆராய்கின்றவர்கள் பரதத்துவத்தை அறியவல்லவர்கள் ஆவார்கள்.
அடியார் வினை தீர்ப்பவர்:
“கூறுமடியார்கள் வினைதீர்க்கும் முகம் ஒன்றே” என்பது முருகனிடத்திருக்கும் மூன்றாவது மகிமையாகும். வாழ்க்கையிலே தங்களுக்கு ஏற்பட்டுள்ள குறைகளையெல்லாம் கடவுளிடம் கூறுவது பொருந்தும். பிறகு இறைவனுடைய திருநாமத்தை இடையறாது கூறிக் கொண்டிருப்பதும் பக்தர்களுக்குப் பொருந்தும். இங்கனம் யாரெல்லாம் தண்டபாணியிடம் தொடர்பு வைக்கிறார்களோ, அவர்கள் எல்லோரும் அல்லல் நீங்கப் பெறுபவர்கள் ஆவார்கள். பல பிறவிகளில் தொடர்ந்து வருகின்ற வினை அகற்றுதற்குக் கடவுளைச் சார்ந்திருப்பதே உற்ற உபாயமாகிறது. அப்படிக் கடவுளைச் சார்ந்திருப்பவர்களுடைய கர்மத்துக்கு நாசத்தை உண்டுபண்ணுவர் கடவுளேயாம்.
சுவாமி விவேகானந்தருக்கு உலக மக்கள் எல்லோருமே கடவுளின் குழந்தைகள் அல்லது கடவுளின் அடியார்கள் ஆகின்றனர். அன்னவர்களுள் இந்தியாவிலுள்ள பாமரர்களிடத்து இத்துறவி வேந்தர் அலாதியான அன்பைச் செலுத்தினார். இந்தியா முழுவதும் யாத்திரை செய்து இந்தியப் பொதுமக்களை அவர் நன்கு அறிந்திருந்தார். இந்தியப் பொதுமக்கள் தூய உள்ளம் படைத்தவர்கள் என்பதும், இயல்பாகவே ஈஸ்வர நம்பிக்கை உடையவர்கள் என்பதும் விவேகானந்தருக்கு நன்கு தெரிந்திருந்தது. ஆயினும் அத்தகைய தூய உள்ளம் கொண்ட பொதுமக்களிடத்து உலக வாழ்க்கையைப் பற்றிய அஞ்ஞானமும், பொதுமக்களை வாட்டிய வறுமையும் சுவாமிகளது உள்ளத்தை உருக்குவதாயின. பரமனை நாடி, பக்தர்கள் கண்ணீர் சிந்துவது போன்று பொதுமக்கள் நலனை நாடி விவேகானந்தர் ஆறாக கண்ணீர் சிந்துவராயினர்.
அவர் அமெரிக்கா சென்றதற்கு முக்கிய காரணம் இந்தியப் பொதுமக்களுக்கு ஏதாவது நலம் செய்தல் பொருட்டேயாம். அன்பர் பணியில் அவர் அவ்வளவு தூரம் ஆழ்ந்து ஈடுபட்டிருந்தார். எனவே ‘கூறுமடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே’ என்னும் கோட்பாடு விவேகானந்தருக்கு முற்றிலும் பொருந்துவதாகும்.
தடைக்கற்களை தகர்த்தவர்:
”குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகம் ஒன்றே” என்பது குமரனுக்குரிய நான்காவது சிறப்பு ஆகிறது. கிரௌஞ்சாசுரன் அகஸ்திய முனிவரைத் தென்திசைக்குப் போகவொட்டாது தடுப்பதற்கு ஓர் உபாயத்தைக் கையாண்டார். கணவாய்கள் நிறைந்த ஒரு மலையாக அவன் தன்னை அமைத்துக் கொண்டான். ஒவ்வொறு கணவாய் வழியாக நடந்து சென்று அகஸ்தியர் தமக்கு வழி மறுக்கப்படிட்டிருப்பதை உணர்ந்தார். அது கிரௌஞ்சாசுரனுடைய சூழ்ச்சி என அறிந்து அவன் வேலவனுடைய வேலால் பிளக்கப்பெற்று மலைவடிவத்தை இழப்பான் எனச் சாபமிட்டார். முனிவர் சபித்தபடியே பின்பு முருகனது செயல் நிகழ்வதாயிற்று. மலையாயிருந்தது ஜடப்பொருள். முருகனுடைய வேல் ஞானத்துக்குச் சின்னமாகும். அந்த ஞானவேலானது மலையை வந்து தாக்க அது ஜீவனாக உயிர் பெற்று எழுந்தது. இந்த நிகழ்ச்சி இயற்கையில் இடையறாது நிகழ்ந்து வருகிறது. ஜடப்பொருள் சேதனமாக மாறுவதும், உயிரற்றது போன்று கிடப்பது உயிர் உற்றதாக முன்னேற்றமடைவதும் இயற்கையின் பெருநிகழ்ச்சியாம். உயிர்கள் கீழ்நிலையிலிருந்து மேல்நிலைக்கு பரிணமித்து வருவதை இப்புராண நிகழ்ச்சியானது குறிப்பிட்டுக் காட்டுகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு ஒப்ப, சுவாமி விவேகானந்தர் இரண்டு விதங்களில் நமது ஞானவிருந்தை ஞாலத்தில் வழங்கியிருக்கிறார். இந்திய மக்களுள் எளியார்க்கு அவர் இரங்கியது ஒரு செயல்; கல் நெஞ்சம் படைத்திருந்த மேல் இனத்தவர்களை அவர் தாக்கி, புத்தி புகட்டியது மற்றோர் அரிய செயலாகும். செல்வத்தை முன்னிட்டும், பண்பாட்டை முன்னிட்டும் ஜாதி அந்தஸ்தை முன்னிட்டும் மேல்நிலையிலிருந்தவர்கள் கீழோரை அறவே புறகணித்து வந்தனர். அப்படி அவர்கள் செய்து வந்தது அடாத அசுரச் செயல் என விவேகானந்த சுவாமிகள் இடித்துக் காட்டியுள்ளார்.
உயர்நிலையிலுள்ளவர்கள் தங்கள் மனப்பான்மையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், பாமரர்களுக்கு பணிவுடன் பணிவிடை செய்து அவர்களும் முன்னேற்றம் அடைவதற்கு ஏற்ற சூழ்நிலையை உண்டுபண்ணித் தர வேண்டும் என்றும் விவேகானந்தர் தம் நாட்டுக்கு வழிகாட்டியிருக்கிறார். ஆருயிர்களுக்குச் செய்கின்ற அரும்பணியே ஆண்டவனுக்குச் செய்கின்ற ஆராதனையாகும் என அவர் தெளிவுறக் காட்டியிருக்கிறார். நாட்டின் மறுமலர்ச்சிக்கு இங்கனம் அவர் புதியதொரு வாழ்க்கைத் திட்டத்தை வகுத்துக் காட்டியிருக்கிறார்.
மேல்நாடுகளிலிருந்த பௌதிக விஞ்ஞானிகளுக்கு அவர் வழங்கிய ஞானம் மற்றோர் அரிய கொடையாகும். ஜடப்பொருள் என்றும் சேதனப் பொருள் என்றும் இரண்டு பொருள்கள் இல்லை. ஒரே பொருள் இரண்டு நிலைகளிலிருந்து வெளித் தோற்றத்திற்கு வேறுபட்டவையாகத் தென்படுகின்றன என்றும், உண்மையில் ஒரு மூலப்பொருளே பலப்பல காரியப் பொருளாகத் தென்படுகின்றன என்றும் அவர் புகட்டியது பௌதிக விஞ்ஞான முன்னேற்றத்திற்குப் பெருந்துணையாயிற்று. இங்கனம் ‘குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகம் ஒன்றே’ என்னும் சுப்பிரமண்ய தத்துவத்தை இரண்டு பெருநெறிகளில் மக்களுக்குப் பயன்படுமாறு விளக்கிக் காட்டியிருக்கிறார்.
கீழோரை மேலோர் ஆக்கியவர்:
கார்த்திகேயனிடத்து வாய்த்துள்ள ஐந்தாவது விபூதி “மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்று” என விளக்கப் பெற்றிருக்கிறது. ஞான பண்டிதனாகிய சிவகுமாரன், சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் ஆகிய மூன்று அசுரர்களோடு முனைந்து போர்புரிந்து அவர்களை சம்ஹாரம் செய்தான். இந்த மூன்று அசுரர்களும் சத்துவம், ரஜஸ், தாமஸ் ஆகிய முக்குணங்களின் பிரதிநிதிகளாக விளங்குகின்றனர். இவர்களை ஒழிப்பதன் மூலம் மூன்று குணங்களை முருகவேள் ஒடுக்கியவன் ஆகின்றான். முக்குணங்களையும் ஒடுக்குகின்றவிடத்துப் பரம்பொருளைப் பற்றிய ஞானம் உதயமாகிறது. அத்தகைய ஞானத்தை நல்குவதால் கந்தன் ஞானபண்டிதன் எனப் பகரப் பெறுகின்றான்.
நவீன முறையில் நவிலுமிடத்து, கோணலான மனப்பான்மை படைத்திருப்பது அசுரத் தன்மையாகும். நேரான மனப்பான்மை படைத்திருப்பது சான்றோர் செயலாகும். இக்காலத்து மக்களுக்கு விவேகானந்தர் வழங்கியிருக்கின்ற அரிய ஞானக்கொடை ஒன்று உண்டு. மக்கள் மனதில் மலிந்து கிடந்த மாசுகளையெல்லாம் தமது ஞானவிருந்தின் வாயிலாக விவேகானந்தர் அகற்றி வைத்தார். தத்துவ தர்சனத்தையே மிக எளியதாக்கி அதை யுக்திபூர்வமாகப் பொதுமக்களுடைய உடமையாக்கியது அவரது செயற்கரிய செயலாகும்.
விவேகானந்தர் இயற்றிய ஞான நூல்கள் இன்றைக்கு உலகத்தவர்கள் கைவசத்திலிருக்கின்றன். அந்நூல்களை சிரத்தையோடு வாசிப்பவர்கள் எல்லோரும் மனம் திருந்தப் பெறுபவர்கள் ஆவார்கள். விவேகானந்தர் நூல்களை ஸ்பரிஸவேதி எனலாம். ஸ்பரிஸவேதி என்பது தெய்வீக சக்தி வாய்க்கப்பெற்ற ஒருவகைக்கல். அக்கல்லோடு உரைக்கப்படுகிற உலோகப்பொருள் பொன்னாக மாறிவிடுகின்றன் என்பது ஐதீகம். பரம்பொருளைப் பற்றிய ஞானந்தான் அந்த ஸ்பரிஸவேதி. பரம்பொருளைப் பற்றிய ஞானத்தை அடையப் பெறுபர்களெல்லாம் மானுட நிலையினின்று மேலேறித் தெய்வீக நிலையை அடைந்து விடுகின்றனர். மக்களை மேலோர் ஆக்குவதற்கு விவேகானந்தர் நூல்கள் பெறுதற்கரிய ஸ்பரிஸ்வேதியாகப் பயன்பட்டு வருகின்றன. எனவே ‘மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே’ என்னும் ஞானக் கோட்பாட்டை இந்ந்நிலவுகிலுள்ள மக்கள் எல்லோர்க்கும் வழங்கியிருக்கிற பெருமை விவேகானந்தருக்கு உண்டு.
ஜீவனை இணைக்கும் பரமன்:
“வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே” என்னும் தத்துவம் சுப்பிரமணியத்தின் ஆறாவது மகிமையாகிறது. வள்ளியின் திருமணத் தத்துவம் ஒன்றை உருவகப்படுத்தி இயம்பியதாகும். ஜீவாத்மாவை பரமாத்வோடு இணைத்து வைப்பதே தெய்வத்தின் திருமணம் எனப் பகரப்படுகிறது. ஜீவாத்மாவின் பிரதிநியாயிருப்பது வள்ளி. பரமாத்மாவிருப்பவன் கந்தன். உயிர்களையெல்லாம் பக்குவப்படுத்தி, தன்மயமாக்கித் தன்னில் ஒடுக்கிக் கொள்வது வேலவனது பெரிய விளையாட்டாம்.
வேலவனுடைய பிரதிநியாயிருக்கின்ற விவேகானந்த சுவாமிகள் மக்களுக்கும் தெய்வத்துக்கும் இடையில் உள்ள மாறாத இணக்கத்தைத் தெளிவுற விளக்கிக் காட்டியிருக்கின்றார். அவர் இயற்றியுள்ள கர்மயோகம், ராஜயோகம், பக்தியோகம், ஞானயோகம் ஆகிய நூல்கள் ஜீவாத்மனை பரமாத்மனோடு இணைத்து வைப்பதற்கு உற்ற உபாயங்களாம். மானுடப் பிறவியின் முக்கிய நோக்கம் பரமனை அடைதல் என்னும் உயர்ந்த செய்தியை உலகத்தவர்களுக்கெல்லாம் விவேகானந்தர் வழங்கியிருக்கின்றார்.
இங்ஙனம் ஷண்முகத்திருக்கின்ற ஷட் ஆதாரங்கள், ஷட்மகிமைகள், ஷட்தர்சனங்கள் இக்காலத்திற்கேற்றவாறு விவேகானந்தர் வாயிலாக வெளியாகியிருக்கின்றன. ஆதலால் விவேகானந்தரை வேலவனது வரப்பிரசாதம் என மொழிவது முற்றிலும் பொருந்தும். உலக நன்மைக்காகவென்று இக்காலத்த்தில் தோன்றி வந்துள்ள விவேகானந்தப் பண்பைப் பொது மக்கள் நன்கு பயன்படுத்துவார்களாக!
குறிப்பு:
சுவாமி விவேகானந்தரால் ஆகர்ஷிக்கப்பட்டு மகத்தான மனிதகளானோர் பலர். அவர்களுள் சுவாமி சித்பவானந்தர் முதன்மையானவர். தமிழகத்தில் ராமகிருஷ்ண இயக்கத்தை முன்னெடுப்பதில் அவர் நிறுவிய ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் பேரிடம் வகித்து வருகிறது. அவரது நினைவு தினத்தை முன்னிட்டு இக்கட்டுரை இங்கு வெளியாகியுள்ளது.
நன்றி: தமிழர் கண்ட விவேகானந்தர் (தொ.ஆ: திரு. பெ.சு.மணி), வானதி பதிப்பகம், 1974.
சுவாமி விவேகானந்தரால் ஆகர்ஷிக்கப்பட்டு மகத்தான மனிதகளானோர் பலர். அவர்களுள் சுவாமி சித்பவானந்தர் முதன்மையானவர். தமிழகத்தில் ராமகிருஷ்ண இயக்கத்தை முன்னெடுப்பதில் அவர் நிறுவிய ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் பேரிடம் வகித்து வருகிறது. அவரது நினைவு தினத்தை முன்னிட்டு இக்கட்டுரை இங்கு வெளியாகியுள்ளது.
நன்றி: தமிழர் கண்ட விவேகானந்தர் (தொ.ஆ: திரு. பெ.சு.மணி), வானதி பதிப்பகம், 1974.
No comments:
Post a Comment