14/06/2020

பல்லாண்டு பாடிய அருளாளர்

-செங்கோட்டை ஸ்ரீராம்


பெரியாழ்வார்

பெரியாழ்வார்

(திருநட்சத்திரம்: ஆனி – சுவாதி)

வடவேங்கடம் முதல் குமரி வரை எல்லையாகக் கொண்ட திராவிட நாட்டில், பாண்டிய தேசம் அக்காலம் முதலே சிறப்புற இருந்து வந்தது. அங்கே முத்தும் முத்தமிழும் பொலிவுற்று விளங்குவதாய் இருந்தது. அந்தப் பாண்டிய நாட்டில் காட்டுப் பகுதில் வாழ்ந்து வந்த வேடர் குலத் தலைவனுக்கும், அவனது மனைவியாகிய மல்லிக்கும், வில்லி, கண்டன் என்னும் இரு புதல்வர்கள் பிறந்தார்கள். அவர்கள் இருவரும் குல வழக்கப்படி, வேட்டையாடுவதில் வல்லவர்களாக விளங்கினார்கள்.
ஒரு நாள் வில்லியும், கண்டனும் அடர்ந்த காட்டுப் பகுதியில் வேட்டையாடப் புறப்பட்டுச் சென்றார்கள். இருவரும் தனித்தனியே சென்றபோது, கண்டன் முன்னே ஒரு புலி வந்து நின்றது. அவன் அப் புலியைப் பின்தொடர்ந்து சென்று அம்புகள் ஏவினான். ஆனால் அந்த அம்பு மழைக்குத் தப்பிய புலி, கண்டனைக் கொன்றது. இதை அறியாத வில்லி, தன் சகோதரனான கண்டனைத் தேடிக்கொண்டு காடு முழுதும் சுற்றித் திரிந்தான். ஆனால் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் களைப்பின் மிகுதியால் அவன் மரத்தின் அடியில் அயர்ந்து அமர்ந்தான். அப்படியே நித்திரை கண்களைத் தழுவ உறங்கிப் போனான்.
திருமகள்கேள்வனான திருமால் அவன் கனவில் தோன்றினார். கண்டனின் விதியைப் பற்றிக் கூறி, அதற்காக வருந்த வேண்டாம் என்றார். முன்னொரு காலத்தில் காலநேமி என்ற அசுரனை வதம் செய்வதற்காக தாம் அங்கே எழுந்தருளியதாகவும், பின்னர் அந்த ஆலமரத்தின் அடியில் உள்ள புதர்களுக்கு நடுவே வடபத்ர சாயி என்ற திருநாமத்தோடு, விமலாக்ருதி விமானத்தினுள் சயனத் திருக்கோலத்தில் இருப்பதாகவும் காட்டி, இந்தக் காட்டை அகழ்ந்து நாடாக்கி, தமக்குக் கோயில் கட்டி ஆராதித்து வருமாறும் கூறினார்.
அவ்வண்ணமே கனவு நிலையிலிருந்து விழித்தெழுந்த வில்லி, வடபெருங்கோயிலுடையானைக் கண்டெடுத்து, அவனுக்கு அங்கே ஒரு கோயில் எழுப்பி, அழகிய தெருக்களை அமைத்து நகர் அமைத்தான். அந்த நகரம் புதிதாக உருவாகியதால் அதற்கு புத்தூர் என்று பெயர் ஏற்பட்டது. வில்லியால் அந்த நகரம் அமைக்கப்பட்டதால், வில்லிபுத்தூர் என்று பெயர் வழங்கலாயிற்று.
இப்படித் தோற்றம் பெற்ற வில்லிபுத்தூரில் குடியேறிய அந்தணர்களுள் வேயர் என்ற வகுப்பினர் இருந்தனர். அவர்களுள் முன்குடுமிச் சோழிய அந்தணர் மரபில் முகுந்த பட்டர் என்னும் பெரியவர் ஒருவர் இருந்தார். அவர் பத்மவல்லி என்னும் மங்கை நல்லாளை மணந்து, இல்லற தர்மத்தைக் குறைவற நடத்திவந்தார். அவர்கள் இருவரும் வடபெருங்கோயிலுடையானிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார்கள். அவனுக்கு அநேகக் கைங்கர்யங்களைச் செய்து வந்தார்கள். அவர்களுக்கு அநேக பிள்ளைச் செல்வங்கள் இருந்தார்கள். அவர்களில் வடபெருங்கோயிலுடையான் அருளால் ஐந்தாவதாக ஓர் ஆண் மகவு பிறந்தது.

குரோதன வருடத்தில் ஆனி மாதம், சுக்ல பட்ச ஏகாதசி திதியில் ஞாயிற்றுக் கிழமை அன்று சுவாதி நட்சத்திரத்தில் ஸ்ரீகருடாம்சராய் அவதரித்த அந்தக் குழந்தையே பரமனைப் பூமாலையோடு பாமாலையும் சூடித் தொழுத பெரியாழ்வார்.
பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் விஷ்ணுசித்தன் என்பது. விட்டுசித்தன் என்ற அந்தப் பெயராலே பெற்றோர் அவரை அழைத்தனர். அவருக்குக் தக்க வயதில் கல்வி கற்பிக்கத் தொடங்கினர். அந்தணச் சிறுவனுக்குரிய உயநயனமும் குடுமி வைத்தலும், வேதப் பயிற்சியும் நடைபெற்றன.
நாட்கள் செல்லச்செல்ல விட்டுசித்தருக்கு திருமால் தொண்டே சிறந்தது எனத் தோன்றியது. பிரகலாதனைப் போல குழந்தைப் பருவத்திலேயே கிருஷ்ண பக்தியில் சிறந்து விளங்கினார் விஷ்ணுசித்தர். கண்ணனுக்கே இவ்வுயிரும் உடலும் அடிமை என்று உணர்ந்து கிருஷ்ண தியானத்தில் வாழ்ந்து வரலானார். பரமனுக்கு அடிமை செய்வதில் அவனுக்கு உகப்பான விஷயம் எது என்று ஆராய்ந்தார். இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தார்.
முன்பு கண்ணன் யசோதை இளஞ்சிங்கமாய் ஆய்ப்பாடியில் வளர்ந்து வரும்போது, கம்சனின் அழைப்பாலே அவனை வதம் செய்தற்பொருட்டு தன் தமையனான பலராமனுடன் மதுராபுரிக்கு எழுந்தருளினார் அல்லவா? அப்போது கம்சனுக்கு மாலை கட்டும் மாலாகாரனின் இல்லத்துக்குச் சென்று தனக்கும் ஒரு மாலை வேண்டும் என்று இரந்து நின்றார்.
அந்த மாலாகாரனும் மிகவும் மனம் உகப்புற்று, எத்தனையோ யோகிகளும் மகான்களும் உன் திவ்விய அழகு தரிசனத்துக்காக ஏங்கிக் கிடக்கிறார்கள்… நீயோ அடியேனின் இல்லத்துக்கே வந்து அருள் புரிகிறார். நான் என்ன கைமாறு செய்வேன் என்று அழகிய மாலையை அவனுக்குக் கொடுத்தான்.
பெரியாழ்வார் கண்ணனின் இந்த லீலையில் மனம் அனுபவித்து, அவன் விரும்புவது அழகிய மாலைகள் சூட்டி அழகு பார்த்தலே என்ற முடிவுக்கு வருகிறார். அதனால் மூதாதையர் ஈட்டி வைத்திருந்த பொற்குவியலிலிருந்து ஒரு பெரும் பகுதியைக் கொண்டு நீர்ப் பாங்கான நிலத்தினைத் தேர்ந்தெடுத்து, வேலி வளைத்து அதில் பலவகை மலர்ச் செடிகளையும் பயிரிட்டு, அம்மலர்களால் அழகிய மாலைகளைக் கட்டி, வில்லிபுத்தூர் பதியில் உள்ள வடபெருங்கோயிலில் எழுந்தருளியிருக்கும் பள்ளிகொண்டபிரானுக்கு சாத்தி வரலானார்.
அந்த நந்தவனத்திலே, துளசி, தாமரை, செங்கழுநீர், நீலோற்பலம், மல்லிகை, முல்லை, மாதவி முதலிய பூக்கள் நிறைந்து பொலியும்படி செய்தார். அதிகாலை துயில் எழுந்து, நித்ய அனுஷ்டானங்களை முடித்து, நந்தவனத்துக்குச் சென்று, பரமனுக்கே உரிய வாசனையை தாம் முகர்ந்து விடாமல் இருக்க, சிறிய ஆடையொன்றை மூக்கைச் சுற்றிக் கட்டிக்கொண்டு, தூய்மையான கரங்களால் அம்மலர்களைக் கொய்து, கூடைகளில் சேர்த்து மாலை கட்டி, மாலவனுக்குச் சார்த்துவார்.
அக்காலத்தே மதுரையைம்பதியைத் தலைநகராகக் கொண்டு, பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான் வல்லபதேவன் என்னும் அரசன். அவன் பாண்டியர் குலத்துக்கு எழில் விளக்குப் போன்றவன். கலைகள் பல கற்றுத் தேர்ந்தவன். எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கினான்.
ஒருநாள் இரவு அவன் மாறுவேடம் பூண்டு நகரச் சோதனை மேற்கொண்டான். ஒரு வீட்டின் திண்ணையில் வயதான அந்தணர் ஒருவர் உறங்கிக் கொண்டிருந்தார். மாறுவேடத்திலிருந்த மன்னன், அவரை எழுப்பி, ‘ஐயா நீங்கள் யார்? ஏன் இங்கே படுத்து உறங்குகிறீர் ?’ என்று வினவினான். அதற்கு அப்பெரியவர், அந்தணனான தாம் வடதேச யாத்திரை செய்துவிட்டு, கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடி வந்திருப்பதாகவும், ராம சேது தரிசனத்துக்காகச் செல்ல இருப்பதால், இரவு கழிப்பதற்காக இந்தத் திண்ணையில் உறங்குவதாகவும் கூறினார். பிறகு, தாம் பல புனிதத் தலங்களுக்கும் சென்று வந்த விஷயத்தைக் கூறி, ஒரு ஸ்லோகம் சொல்கிறேன், அதைக் கேளுங்கள் என்றபடி அதைச் சொல்லத் தொடங்கினார்.
வர்ஷார்த்தம் அஷ்டௌ ப்ரயதேத மாஸான்
நிஷார்த்தம் அர்த்தம் திவஸம் யதேத |
வார்த்தக்ய ஹேதோர் வயஸா நவேந
பரத்ர ஹேதோரிஹ ஜன்ம நாச ||
– மழைக்காலத்துக்கு வேண்டிய பொருள்களை மற்ற எட்டு மாத காலங்களில் சேகரிக்க வேண்டும். இரவுக்கு வேண்டியவற்றை பகலிலேயே தேடி வைத்துக் கொள்ள வேண்டும். முதுமைக்கு வேண்டியவற்றை இளமையிலேயே தேடி வைத்துக் கொள்ள வேண்டும். மறுமைக்கு வேண்டியவற்றை இம்மையிலேயே தேடிக்கொள்ள வேண்டும்…
-இப்படி பொருள்படும்படி இந்த ஸ்லோகத்தைச் சொன்ன அம்மாத்திரத்தில், மன்னனின் மனத்தில் வருத்தம் உண்டாகியது. தாம் மறுமையாகிய பரலோக சுகானுபவத்துக்கு இதுவரை ஒன்றும் செய்யாமலேயே காலம் கழித்துவிட்டோமே என்று மனம் வருந்தினான்.
பின்பு அந்தப் பெரியவரை வணங்கி, தமக்கு நல்லதோர் சிந்தனையைத் தந்தமைக்காக அவரை சில நாட்கள் தன்னுடன் இருந்து வழிநடத்துமாறு கோரினான். அப்பெரியவரும் தாம் அறிந்த நல்லனவற்றை அவனுக்கு உபதேசித்து, பின் சேது தரிசனத்துக்காகப் புறப்பட்டுச் சென்றார்.
வல்லபதேவனுக்கு தமக்கு மறுமையில் பரமானுபவம் கிடைக்க வேண்டுமே என்ற கவலை மனத்தை அறுத்தது. அப்போது அவனது புரோகிதரும், பரம வைணவருமான செல்வ நம்பிகள் என்னும் பெரியவர் அங்கு எழுந்தருளினார். அவரிடம் வல்லப தேவன் தன் மனக்கிலேசத்தைக் கூறி, மறுமையில் பேரின்பம் அடைய வழி என்ன? என்று வினவினான்.
செல்வ நம்பிகளும் ‘நாடு முழுவதும் பறை அறிவித்து, வித்வான்களைத் திரட்டி, வேத அர்த்தங்களைக் கொண்டு, பரம்பொருளைப் பற்றி ஒரு நிர்ணயம் செய்வித்து, அவ்வழியாலேயே பெறவேண்டும்’ என்று யோசனை கூறினார். அதன்படி அரசனும், பெரும் தனத்தை ஒரு துணியிலே கட்டி, அப்பொற்கிழியை சபை மண்டபத்தின் நடுவே ஒரு கம்பத்தில் கட்டி வைக்க ஏற்பாடு செய்தான். பிறகு வித்வான்களைத் திரட்டுவதற்காக,  ‘பரதத்துவ நிர்ணயம் செய்பவர்கள் அப்பொற்கிழியைப் பரிசாகப் பெறலாம்’ என்று நாடெங்கும் பறை அடித்து அறிவிக்கச் செய்தான்.
இந்தச் செய்தி வில்லிபுத்தூரையும் சேர்ந்தது. அப்போது, வடபெருங்கோயிலுடையான் விஷ்ணுசித்தரின் கனவில் தோன்றி, அவர் மூலம் உண்மைப் பொருளை உலகுக்கு உணர்த்த எண்ணம் கொண்டவனாய், ‘நீர் போய் பொற்கிழியை அறுத்துக் கொண்டு வாரும்’ என்று கட்டளையிட்டான். ஆனால் விஷ்ணுசித்தரோ, ‘அது சகல சாத்திரங்களும் கற்ற பண்டிதர்கள் செய்யவேண்டியதன்றோ? நானோ அவ்வாறு சாத்திரம் முழுதும் கற்றவன் அல்லேன். உமக்கு நந்தவனக் கைங்கரியம் செய்வது மட்டுமே என் தொழிலாகக் கொண்டேன், ஆயின் எவ்வாறு நான் இப்பெரும் செயலைச் செய்யமுடியும்! சகலகலா வல்லவர்களான அந்த மாயாவாத பண்டிதர்கள் நிறைந்த சபையில் எப்படி நான் பரதத்துவ நிர்ணயம் செய்யப்போகிறேன்?’  என்று கேள்வி எழுப்பினார். அதற்கு வடபெருங்கோயிலுடையானும்,   ‘அதைப்பற்றி உமக்கு என்ன கவலை? உம்மைக் கண்டு பரதத்துவ நிர்ணயம் செய்யப்போவது நாமேயன்றோ! நீர் அவசியம் மதுரைக்குச் செல்ல வேண்டும்!’  என்று ஆணையிட்டு மறைந்தான்.
விஷ்ணுசித்தரும் விடியற்காலையே எழுந்து, இதையே சிந்தித்தவராக மதுரைக்குச் செல்லத் தயாரானார். அப்போது வடபெருங்கோயிலுடையானின் கைங்கர்யபரர்கள், விஷ்ணுசித்தர் எழுந்தருள்வதற்காக, திருப்பல்லக்குடனும், திருச்சின்னம் முதலிய கோயில் மரியாதைகளுடனும் வந்து, தாங்களும் கூடல்நகருக்கு தங்களோடு செல்ல வேண்டுமாய் வடபெருங்கோயிலுடையான் கட்டளையிட்டிருப்பதாக அறிவித்தனர். விஷ்ணுசித்தரும் அவற்றை ஏற்று, கூடல்மாநகருக்குப் பயணமானார்.
இப்படி விஷ்ணுசித்தர் பாண்டியனின் சபைக்கு வரும் செய்தி மன்னனுக்குக் கிடைத்தது. அவனும் ஏற்கெனவே செல்வநம்பியின் மூலம் விஷ்ணுசித்தரின் பெருமைகளைக் கேட்டிருந்தான் ஆதலால், செல்வநம்பியோடு சேர்ந்து அவரை எதிர்கொண்டு அழைக்கச் சென்றான். விஷ்ணுசித்தரின் ஒளிபொருந்திய திருமுகம் கண்டு அவரை வணங்கி வரவேற்றான்.  ‘என் பட்டர்பிரான் வந்தார்’ என்று கொண்டாடினான்.
ஆனால் அங்கிருந்த வேத சாத்திரங்களைக் கற்ற பண்டிதர்கள், எந்தவித வேதமும் கல்லாத இவரைக் கொண்டாடுவது தவறு என்று மறுத்துரைத்தனர். ஆனால் மன்னனோ அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. பின் செல்வநம்பிகள், விஷ்ணுசித்தரின் அடிபணிந்து, ‘வேதத்தின் விழுப்பொருளான பரதத்துவத்தை நிச்சயித்து அருளிச் செய்ய வேண்டும்’  என்று பிரார்த்தித்தார்.
விஷ்ணுசித்தரும் வடபெருங்கோயிலுடையான் அருளால், மடை திறந்த வெள்ளம் போல வேதத்தின் விழுப்பொருளை உரைக்கலானார். சர்வ ஞானமும் கைவரப்பெற்றவராக, வேத, இதிகாச, புராணாதிகளின் வாக்கியங்களைக் கொண்டு,  ‘இந்த உலகுக்குக் காரணமான வஸ்து எவனோ அவனே தியானத்துக்குரியவன்’ என்று அருளிச் செய்தார்.
எவனிடத்திலிருந்து அனைத்துப் பொருளும் உண்டாகின்றனவோ, எவனால் இவை யாவையும் நிலைபெற்றிருக்கின்றனவோ, முடிவில் எவனிடத்தில் இவையனைத்தும் லயமாகின்றனவோ அவனே பரப்பிரும்மம் என்றும்,
– எது, வாக்கினாலும் மனத்தினாலும் துதிக்கவும் அறியவும் அருமையாக இருக்குமோ, அந்த பிரம்மத்தை அறிந்து கொண்டவர்கள் யமனுக்கும் அஞ்சார் என்றும்,
– சிலந்திப் பூச்சியானது எவ்வாறு நூலை உருவாக்கிக் கொண்டு, உணவாகிற பூச்சிகளைப் பிடித்துக் கொள்ளுமோ அவ்வாறே சகல உயிர்களையும், பொருள்களையும் அந்தப் பரன் படைத்தான் என்றும்,
– அந்தப் பரன் விஷ்ணு என்னும் பெயருடையவனாய், சாத்விகனாய், அனைவராலும் தொழப்படுகின்றவனாய் இருக்கிறான் என்றும்,
– அவனுடைய நாபிக் கமலத்திலிருந்து பிரம்மா பிறந்தான் என்றும், அந்தப் பிரம்மனுடைய புருவங்களின் மத்தியிலிருந்து ருத்ரன் பிறந்தான் என்றும்,
– ஓம்கார வடிவினனான அந்த விஷ்ணு ஒருவனே என்றும், வேத வசனங்களுக்கும் நாயகன் அவனே என்றும்,
– ஜீவர்கள் அந்த ஓம்காரத்தை உச்சரித்த மாத்திரத்திலேயே நலன் அடைகிறார்கள் என்றும்,
– அப்படிப்பட்ட ஓம்காரத்தில் முதல் ஸ்வரமான அகாரம் அந்தப் பரமனையே குறிப்பிடுகிறது என்றும்,
– அந்த நாராயணன் ஒருவனே பாபங்களைக் களைபவன் என்றும்,
– ஸ்ரீமந் நாராயணனிடத்திலிருந்து பிரம்மா, ருத்ரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களும் பிறந்தார்கள் என்றும்,
– நாராயணனே பர ப்ரும்மம் என்றும்,
– தன்னுடைய நாபிக் கமலத்திலிருந்து பிரம்மாவும், அவனுடைய புருவங்களின் இடையிலிருந்து ருத்ரனும், அவனிடத்திலிருந்து ஆறுமுகனும் பிறந்தான் என்று பகவானே கீதையில் அருளிச் செய்திருக்கிறார் என்றும்,
– பகவான் வியாசரும்,   ‘எந்தக் காலங்களிலும் நாராயணனுக்கு மிஞ்சிய பர தெய்வமில்லை என்று வேதங்களும், புராணங்களும் சத்ய பூர்வமாகச் சொல்லி இருப்பதை ரிஷிகளாகிய உங்கள் மத்தியில் பிரமாண பூர்வமாகச் சொல்ல விழைகிறேன்’  என்று கையை மேலே உயர்த்தி சத்தியம் செய்து,  ‘வேதங்களுக்கு மிஞ்சின பரதெய்வமுமில்லை’ என்று சொல்லியிருக்கிறார் என்றும்,
– இவ்வாறு சமஸ்த தேவர்களில் நாராயணன் ஒருவனே பரனாயிருப்பது போல, சர்வ மந்திரங்களில் அஷ்டாட்சரம் ஒன்றே பரதத்வ நிர்ணயம் செய்யவும் உயர்ந்த மந்திரமாக இருக்கிறது என்றும் பெரியாழ்வார் அருளிச் செய்தார்.
பல்லாயிரக் கணக்கான வேத வாக்கியங்களைக் கொண்டும், ஸ்ம்ருதி, இதிகாசம், புராணம் முதலான பிரமாணங்களைக் கொண்டும் அனைத்து வித்வான்களும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் ஸ்ரீமந் நாராயணனே பரம்பொருள் என்று நிர்ணயம் செய்தார்.
உடனே, விஷ்ணுசித்தரின் வெற்றி, பரம்பொருளாலும் இசையப் பெற்றது என்பதைச் சொல்லும்படியாக, பொற்கிழி கட்டியிருந்த கம்பம், பொற்கிழி இவர் அருகே வரும்படி வளையலாயிற்று. விஷ்ணுசித்தரும் பொற்கிழியை அறுத்துக் கொண்டார். வேந்தனும், செல்வநம்பியும், ஏனையோரும் அவரை வணங்கிப் போற்றினர்.
பின்னர் அரசன் கட்டளையினால் ஏவலர்கள், அந்நகர மாடங்கள் தோறும் கொடிகளை ஏற்றி, தோரணக் கம்பங்கள் நாட்டி, மலர் மாலைகள் கட்டித் தொங்கவிட்டனர்.
வல்லபதேவனாகிய பாண்டிய மன்னன் விஷ்ணுசித்தருக்கு  ‘பட்டர்பிரான்’ என்னும் பட்டம் வழங்கி, பட்டத்து யானையின்மீது அவரை ஏற்றி, நகர் உலா வரச் செய்தான்…
விஷ்ணுசித்தர் உலா வரும் வீதிகள் யாவும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. ‘வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்த பட்டர்பிரான் வந்தார்’ என்னும் வாழ்த்தொலிகள் முழங்க, விட்டுசித்தர் வீதிகள்தோறும் உலாவந்த விழா சீரிய முறையில் நடைபெற்றது.
அங்ஙனம் உலாவரும் காலத்தே, பரமபதத்தின் தலைவனாக விளங்கும் திருமால், அயன், அரன், இந்திரன் முதலியோர் புடைசூழ கருடன் மீதேறி வந்து, விஷ்ணுசித்தருக்கும் அரசனுக்கும் காட்சியளித்தார்.
முதலும் ஈறும் இல்லாத முதற்பொருள் ஆகியவரும், அமரர்கள் அதிபதியும், பரமபதத்தில் சித்தரும் முத்தரும் சேவிக்க விளங்கும் பரம்பொருள் ஆனவரும் பீதாம்பரதாரியுமான பரந்தாமனது எழிலைக் கண்ணுற்ற விஷ்ணுசித்தர், அவனுடைய எழிலுக்கு கண்பட்டுவிடுமோ என்று கவலையுற்றார்.
அதனால் அவன் எழில் நிலை பெற்றிருக்கும் வகையில் பல்லாண்டு பாடி வாழ்த்தத் தொடங்கினார். அவர் அமர்ந்திருந்த யானையின் கழுத்தில் கட்டப்பட்ட மணிகளையே தாளமாக்கி, பல்லாண்டு பாடினார்.
(எப்படி ஒரு குழந்தைக்கு கண்பட்டுவிடுமோ என்று தாயார் அஞ்சுவாளோ அப்படியே, பெருமானையும் எண்ணிய ஆழ்வார்தான் பின்னாளில் தமிழிலக்கியத்தின் முதல் பிள்ளைத்தமிழை பெற்றவர் நிலையிலிருந்து, கண்ணனைக் குழந்தையாக்கிப் பாடினார்…)
பிறகு அவர் அரசனிடமும் செல்வநம்பியிடமும் விடைபெற்றுக் கொண்டு, வில்லிபுத்தூரை அடைந்தார். விட்டுசித்தர் கிழியறுத்துக் கொணர்ந்த பொன்னைக் கொண்டு வடபெருங்கோயிலைப் புதுப்பித்து அதனை அங்குள்ள திருமாலுக்கே ஆக்கினார்.
விட்டுச்சித்தர் திருமாலைப் பல்லாண்டு பாடி வாழ்த்தினமையால்,  ‘பெரியாழ்வார்’ என்று இவரை வைணவப் பெரியார்கள் கூறலாயினர். இவர், கண்ணனது திரு அவதாரச் சிறப்பினை நாற்பத்து நான்கு திருமொழிகளாகப் பாடினார். இவற்றின் மொத்தப் பாசுரங்கள் நானூற்று அறுபத்தொன்று. திருப் பல்லாண்டின் பாசுரங்கள் பன்னிரண்டு. ஆக, பெரியாழ்வாரால் பாடப்பட்ட பாசுரங்களில் எண்ணிக்கை நானூற்று எழுபத்து மூன்று ஆகும். இவருடைய பாசுரங்கள்  ‘பெரியாழ்வார் திருமொழி’ என்று, திவ்விய பிரபந்தத்தில் முதலில் அமைக்கப்பட்டுள்ளது.
பெற்றோரால் விட்டுசித்தர் என்று வழங்கப்பட்ட இவருக்கு வழங்கும் வேறு பெயர்கள்: 1. பெரியாழ்வார், 2. பட்டர்பிரான், 3. ஸ்ரீவில்லிப்புத்தூர்கோன், 4. கிழியறுத்தான், 5. புதுவைக்கோன்…
பெரியாழ்வாரின் பாடல்கள் பெரும்பாலானவை மிக எளிதாகப் புரியக் கூடியவை. அன்பும், பாசமும், பரிவும், கவிதைத் திறமும், காதலும் கொண்டு கண்ணனின் குழந்தைப் பருவத்தை அனுபவித்துப் பாடியவை. பெரியாழ்வார் அனுபவித்து அருளிய பாசுரங்களின் சுவையை இங்கே நாம் கொஞ்சம் அனுபவிப்போம்.
பெரியாழ்வாரின் திருமொழிக்குத் தனியனாக பாண்டிய பட்டர் அருளியவை இந்த வெண்பாக்கள்.
மின்னார் தடமதிள் சூழ் வில்லிபுத்தூர் என்று ஒருகால்
சொன்னார் கழற்கமலம் சூடினோம் – முன்னாள்
கிழியறுத்தான் என்றுரைத்தோம், கீழ்மையினிற் சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே வந்து
பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்று
ஈண்டிய சங்கம் எடுத்தூத – வேண்டிய
வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்தான்
பாதங்கள் யாம்உடைய பற்று.
பொருள்: முன்பு ஒரு நாள் வேதங்களின் விழுப்பொருள் கூறி, பரம்பொருள் யாரென பாண்டியர்க்கும் சபைக்கும் இந்த உலகுக்கும் உரைத்து, விரைந்து பொற்கிழியினை அறுத்த அந்தப் பெரியாழ்வார் என்றும், வில்லிபுத்தூர் என்றும் இந்தத் திருநாமங்களைச் சொல்வதனாலே கீழ்மையான நரகத்தை நாம் அடையும் வழியை, அந்தப் பாவத்தை நாம் அறுத்து விட்டோ மாவோம்.
பெரியாழ்வார் தம் திருமொழியில் முதல் பாசுரமாகப் பாடியிருப்பதே, பெருமானுக்கான பல்லாண்டுதான். அதனால்தான், இந்த நாலாயிரமும் எம்பெருமானின் குணநலங்களையும் அவன் தன்மைகளையும் பெருமைகளையும் சொல்வதாயினும், அவனை வாழ்த்துகின்ற இந்தப் பல்லாண்டுப் பாசுரங்களை, நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தின் முதல் பாசுரமாக வைத்தார் இதனைத் தொகுத்த நாதமுனிகள். காரணம் பல்லாண்டுப் பாசுரங்கள் அவ்வளவு முக்கியமானதும் வேதக் கருத்துக்கு ஒப்பானதும் ஆகும்.
எப்படி வேதத்துக்கு ஓம் என்பது முதல் ஒலியாக அமைந்து வேதத்தின் தொடக்கத்தை அறிவிக்கிறதோ, அதுபோல் பல்லாண்டு, இந்தத் தமிழ் வேதத்துக்கு என்பது மணவாள மாமுனிகளின் கருத்து.
கோது இலவாம் ஆழ்வார்கள் கூறுகலைக்கு எல்லாம்
ஆதி திருப்பல்லாண்டு ஆனதுவும் — வேதத்துக்கு
ஓம் என்னும் அது போல் உள்ளதுக்கு எல்லாம் சுருக்காய்
தான் மங்கலம் ஆதலால். (19)
உண்டோ திருப்பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலைதான்?
உண்டோ பெரியாழ்வார்க்கு ஒப்பு ஒருவர்? — தண் தமிழ் நூல்
செய்தருளும் ஆழ்வார்கள் தம்மில் அவர் செய்கலையில்
பைதல் நெஞ்சே ! நீ உணர்ந்து பார். (20)
-மணவாள மாமுனிகளின் உபதேச ரத்னமாலையில் பல்லாண்டு பாசுரங்களின் சிறப்பை அறியலாம். திருப்பல்லாண்டுக்கும் பெரியாழ்வாருக்கும் ஒப்புமை எதுவும் இல்லை என்பது மாமுனிகள் கண்ட முடிவு.
இந்தப் பல்லாண்டில் ஆழ்வார் என்னவெல்லாம் வாழ்த்துகிறார்!
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா உன்
செவ்வடி செவ்வி திருக்காப்பு.
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படை போர் புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே!
– என்று, முஷ்டிகன், சாணூரன் ஆகிய மல்லர்களைக் கொன்ற உன் திருத்தோள்களின் பலத்தை நிறுவியவனே உனக்குப் பல்லாண்டு என்று தொடங்குகிறார். தீமையை வென்று உலகைக் காப்பவன் எவனோ அவனே பல்லாண்டு நின்று உலகைக் காத்தருள வேண்டும்; எனவே, ஒன்றின் அழிவின் முடிவில் ஒன்றின் ஆரம்பம் இருக்கிறது; அழிவு – அதர்மத்துக்கு. தொடக்கம் – தர்மத்துக்கு. திவ்வியப் பிரபந்தத்தின் முதல் கருத்தே இப்படி அமைந்து, பிரபந்தம் முழுவதற்குமான ஆழ்பொருளை அறிவிக்கிறது.
மேலும் என்னவெல்லாம் ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் – பகவானின் சிவந்த திருவடிகள், பகவானுக்கும் பக்தனுக்குமான பிரிவிலாத தொடர்பு, அவன் வலத் திருமார்பில் வாசம் செய்யும் மகாலட்சுமி, வலக் கரத்தில் ஒளியுடன் திகழும் சுதர்சனச் சக்கரம், யுத்தத்தில் புகுந்து முழங்கி தீயோர் மனத்தைக் கலங்கடிக்கும் பாஞ்சஜன்யச் சங்கு ஆகியன.
அடுத்த பாசுரங்களில்,  ‘அடியார்களே, நீங்கள் ஒன்றாகக் கூடி வந்து பெருமானுக்குப் பல்லாண்டு கூறுங்கள், அவன் நல்ல மனத்தைச் சிந்தியுங்கள், எம்மோடு கூடி வாய்விட்டுப் பாடுங்கள், ஓம் நமோ நாராயணாய என்று கூறுங்கள்’ என்று அடியார்களுக்குச் சொல்கிறார்.
சங்கச் சத்வம் சம் வதத்வம் சம்வோ மனாம்ஸி ஜானதாம்
-என்று, எல்லோரும் ஒரு சங்கமாக ஒன்று கூடுங்கள்; ஒன்றையே பேசுங்கள்; ஒன்றையே மனத்தால் சிந்தியுங்கள் என்று ரிக் வேதசாகை சொல்வதை பெரியாழ்வார் பாசுரம் நினைவுபடுத்துகிறது.
இன்றைய நாட்களில், கோயிலுக்கோ அல்லது பஜனை சம்பிரதாயக் குழுக்களோ வரும் பெரும்பாலானோரும் அங்கு வழங்கப்படும் பிரசாத உணவுக்காக அலைமோதுவதைப் பார்க்கிறோம்.
பக்திதான் முதலில் இருக்கவேண்டும், அதன் பிறகே மற்றதெல்லாம் என்பதற்காக, இப்படி வருபவர்களைப் பார்த்து பெரியாழ்வார் சொல்லும் வார்த்தை இதுதான்… அது – கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவில் புகுதலொட்டோம்… என்பது. சோற்று வாழ்வுக்காக பிறர்க்கு அடிமைப்பட்டிருப்பீராயின் எங்கள் கூட்டத்திலே சேர்க்க அனுமதிக்க மாட்டோம் என்கிறார் ஆழ்வார்.
இப்படி பன்னிரண்டு பாசுரங்களால் பெரியாழ்வார் பல்லாண்டு பாடுகிறார். அதன் பிறகு வருபவை, தமிழின் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாகப் போற்றப்படும் பிள்ளைத் தமிழின் ஊற்றுக் கண்ணாக விளங்கும் பெரியாழ்வார் திருமொழிப் பாசுரங்கள். இங்கே பாட்டுடைத் தலைவனாக கண்ணனைக் கொண்டு, பிள்ளைத் தமிழுக்கே உரிய இலக்கணங்கள் அமையப் பெற்று பாடியுள்ளார். ஆயின், பெரியாழ்வாரின் திருமொழிக்குப் பிறகே பிள்ளைத் தமிழ் வகையறா தமிழில் வந்தது என்பர்.
ஆழ்வாரின் இந்தப் பிள்ளைத் தமிழில் கண்ணன் பிறந்தது முதற்கொண்டு நிகழ்பவை அழகிய பாசுரங்களாக வடிவெடுத்துள்ளன. முதலில் இருப்பவை, கண்ணன் திரு அவதாரச் சிறப்பை உணர்த்தும் ‘வண்ணமாடங்கள்’ பாசுரம். கண்ணன் பிறந்த வைபவத்தை நந்தகோபன் மாளிகையில் எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்கிற மகிழ்ச்சியை இந்தப் பாசுரத்தில் தெரிவிக்கிறார்…
ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குத்தான் என்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே. (2).
இங்கே கண்ணன் பிறந்ததால் உண்டான ஆய்ப்பாடியின் மகிழ்ச்சி வெளிப்படுகிறது. ஆய்ப்பாடி மக்கள் மகிழ்ச்சியால் ஓடுவார்கள், பின் வழுக்கி விழுவார்கள், ஆர்ப்பரிப்பார்கள், நம் தலைவன் கண்ணன் எங்கே என்று தேடுவார்கள், பறைகள் கொட்ட நின்று ஆடுவார்கள்… இப்படியாகக் கொண்டாட்டம் மிகுந்து ஆய்ப்பாடி விளங்கியது.
அடுத்து கண்ணனின் அடி முதல் முடி வரையான திருமேனி அழகு ஆழ்வாரால் அனுபவிக்கப்படுகிறது –  ‘சீதக் கடலுள்’ இருபது பாசுரங்கள் மூலம்! அதன் பின்னே குழந்தைக்கு தாலாட்டு. குழந்தையைத் துயில் கொள்ள வைத்தற்காக பெரியாழ்வார் பாடுபவை. அதற்கேற்ப ராகத்தோடு அழகுற அமையப் பெற்ற பாசுரங்கள். தாலப் பருவம் – கண்ணனைத் தொட்டிலிட்டுப் பாடுவது …
மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத் தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே தாலேலோ
வையம் அளந்தானே. தாலேலோ…
– என்று கண்ணனுக்கு மிக உயர்ந்த அணிகளை அணிவித்து, தாலாட்டுப் பாடி உறங்க வைக்கும் வகையிலான பாசுரங்கள். பிறகு அம்புலிப் பருவம். இங்கே பெரியாழ்வார் தானே கண்ணனை வளர்த்தெடுக்கும் யசோதையாக மாறிப் போனார்.
கண்ணனை யசோதையாகிய தன் இடுப்பில் வைத்துக்கொள்கிறார். அப்போது, பேசும் பொற்சித்திரமாக வளர்ந்து விட்ட குழந்தை கண்ணன் வானத்து அம்புலியைக் கைநீட்டி அழைக்கிறான். அந்த மழலைச் சொல்லில் மனம் பறிகொடுத்து, அன்னை யசோதையாகிய பெரியாழ்வார் சந்திரனை வருமாறு அழைக்கிறார்…
சக்கரக் கையன் தடங் கண்ணால் மலர விழித்து
ஒக்கலை மேலிருந்து உன்னையே சுட்டிக் காட்டும் காண்
தக்கது அறிதியேல் சந்திரா. சலம் செய்யாதே
மக்கட் பெறாத மலடன் அல்லையேல் வா கண்டாய்.
– என்று, சக்கரம் ஏந்திய கை கொண்ட கண்ணன் தன் அகன்ற விழிகளால் மலர விழித்து உன்னையே பார்க்கிறான். என் ஒக்கலை மேலிருந்து (இடுப்பில் அமர்ந்து கொண்டு – ஒக்கலை என்ற இந்தச் சொல்லை, இடுப்பு என்னும் பொருளில் எங்கள் நெல்லை வட்டாரச் சொல்லாக இப்போதும் கேட்டு வருகிறேன். நெல்லை காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ் பாடிய புலவர் தம் ‘வாராதிருந்தால் உன் வடிவேல் விழிக்கு மை எழுதேன்; தேரார் வீதி வளம் காட்டேன்…’ என்ற பாடலிலும், ஒக்கலை என்ற இந்தச் சொல்லை பயன்படுத்தியிருக்கிறார்)   ‘உன்னைச் சுட்டிக்காட்டும் இக்குழந்தையின் விருப்பத்துக்காக நீ வா…. நீ என்ன பிள்ளை பெறாத மலடனா? இல்லையே! குழந்தையின் ஆசைதான் உனக்குத் தெரியுமே! தக்கது அறிந்தாயாகில் வா’ என்று அழைக்கிறார்.
அடுத்து செங்கீரைப் பருவம். கண்ணன் தன் தலையை நிமிர்த்தி, முகத்தை அங்கும் இங்கும் அசைத்து ஆடும் விளையாட்டு. கண்ணனின் சிறப்புகளைச் சொல்லி, கண்ணா என் மனம் மகிழ, உன் காதுக் குண்டலங்கள் அசைந்து ஆடும் வண்ணம் உன் திருமுகம் ஆட்டு. அந்த அழகினை அனுபவிக்க வேண்டும்.
கைகொட்டி விளையாடும் சப்பாணிப் பருவம் அடுத்து வருவது. இப்போது குழந்தைக் கண்ணன் சற்று வளர்ந்து முகம் பார்த்து சிரிக்கத் தொடங்கியிருக்கிறான். அவனிடம், மாணிக்கக் கிண்கிணி ஒலிக்க உன் கைகளைக் கொட்டி முகம் சிரித்து விளையாடும் அந்த விளையாட்டை நான் காண வேண்டும் என்று வேண்டுகிறார்.
இப்போது தளர் நடைப் பருவம். கண்ணன் தளர்நடையிட்டு வளரும் பருவத்தில் இருக்கிறான்.  ‘கலகலவென்று சிரித்து மகிழ்ந்தபடி, என் முன்னே நின்று முத்தம் கொடுக்கும் கண்ணன் வாயிலிருந்து உமிழ்நீர் ஓடி வழிகிறது. திருமகள் மார்பன் மேக வண்ணனைப் பிள்ளையாகப் பெற்ற எனக்கு தன் வாயமுதம் தந்து என்னைத் தழையச் செய்கிறான். தன்னை எதிர்க்கும் பகைவர்களுடைய தலைகள் இவன் தளர் நடவானோ?’  என்று இந்தப் பருவத்தேயும், அவன் பெருமை சொல்கிறார்.
தளர்நடையிட்டு வந்த கண்ணன் தன் தளிர் பாதங்கள் மண்ணில் பதிய, கீழே விழுந்துவிடாதபடி வேகமாக ஓடி வருகிறான். இங்கே யசோதைத் தாய் அமர்ந்திருக்கிறாள். அவள் மேல் ஓடி வந்து விழுந்து அணைத்துக் கொள்ள வேண்டுமாகப் பிரார்த்திக்கிறார், அச்சோப் பருவத்தில்!
முன்னே ஓடிவந்து அணைத்துக் கொண்ட கண்ணன், இப்போது பின்னேயும் ஓடி விளையாடும் அளவுக்கு வளர்ந்து விட்டான். அவன் யசோதையின் முகம் திரும்பிப் பார்க்கும் முன்னரே குடுகுடுவென ஓடிச் சென்று பின்னே மறைகிறான். பின், தாயின் பின்புறத்தே வந்து, அவளைக் கட்டிக் கொள்கிறான். இது  ‘புறம் புல்கல்’ பருவத்தில் கண்ணனின் விளையாட்டு.
இப்படி புறம் வந்து நின்ற கண்ணன் சும்மாயிருந்தானோ! தன் தளிர்க்கரங்களால், ஓம்மா! யாரென்று சொல்லேன்ஔ என்று அன்னையின் கண் பொத்தி, பின் தன் கண்பொத்தி பூச்சி காட்டி விளையாடுதல் அடுத்த பருவம்.
குழந்தை அங்குமிங்கும் ஓடி, கண்ணைப் பொத்தி விளையாடிக் கொண்டே இருக்கிறான். இப்படி விளையாடும் அவனுக்கு பசிக்குமே. அன்னை தாய்ப்பால் உண்ண அந்தக் குழந்தைக் கண்ணனை அழைக்கிறாள்.  ‘திரு உடைய வாய் மடுத்துத் திளைத்து உதைத்துப் பருகிடாயேஒ என்றும், முத்து அனைய முறுவல் செய்து மூக்கு உறிஞ்சி முலை உணாயே’  என்றும் வேண்டிக்கொள்கிறாள் – தாய்ப்பால் அருந்த அழைக்கும் இந்தப் பருவத்தில்!
அடுத்து,  ‘காது குத்துதல்’.  ‘கேசவ நம்பீ, உன்னைக் காது குத்த ஆய்ப் பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார்; அடைக்காய் திருத்தி நான் வைத்தேன்…’ – பெரியாழ்வார் அடைக்காய் என்றது வெற்றிலை பாக்கு. அதைத் தயாராக வைத்திருக்கிறேன். காதுகுத்த வேண்டும் அருகே வா என்று அழைக்கிறார். இந்தப் பாசுரங்களில் கண்ணனின் பன்னிரண்டு திருநாமங்களையும் ஒவ்வொரு பாடலிலும் சொல்லி மகிழ்கிறார்.
குழந்தையை நீராட அழைக்கும் நீராடல் பருவம் அடுத்தது.  ‘வெண்ணெய் அளைந்த குணுங்கும்’  என்ற இந்தப் பாசுரங்களில், குழந்தையின் மனநிலையை எடுத்துக்காட்டும் சொற்கள் நிறைய உண்டு. உதாரணத்துக்கு ஒன்று.
கறந்த நற்பாலும் தயிரும் கடைந்து உறிமேல் வைத்த வெண்ணெய்
பிறந்ததுவே முதலாகப் பெற்றறியேன் எம்பிரானே.
சிறந்த நற்றாய் அலர் தூற்றும் என்பதனால் பிறர் முன்னே
மறந்தும் உரையாட மாட்டேன் மஞ்சனமாட நீ வாராய்.
– என்று, கண்ணா, நீ பிறப்பதற்கு முன்புவரை கறந்து வைத்த பாலும் தயிரும் உறியில் அப்படியே இருக்கும். ஆனால் நீ பிறந்த பின் நான் அதை முழுதாக எடுத்து உபயோகித்ததில்லை. ஏனென்றால் அதை நீயே பதம் பார்த்துவிடுகிறாய். ஆனால் இதை நான் பிறர் முன் வெளியிட்டால் உன் மதிப்பு வெளியாரிடத்தே குறைந்துபோகும். இந்தப் பழிச் சொல் கேட்டால் உன் மனம் வேதனைப்படும். நான் யாரிடமாவது பேசிக்கொண்டிருந்தால்தானே இப்படிச் சொல்லப் போகிறேன். நான் மறந்தும்கூட யாரிடமும் பேசமாட்டேன், வருத்தமுறாமல் நீ நீராட வா என்று அழைக்கிறாள் அன்னை யசோதை.
கண்ணன் கேசத்தை வாருவதற்காக காக்கையை வா என்று அழைப்பதும், கன்றுகளின் பின்னே மேய்க்கப் போகும் கண்ணனுக்கு கோல் கொண்டு வா என்று காக்கையைக்கேட்டுக் கொள்வதும் தொடர்ந்து வரும் பாசுரங்களில்…
அடுத்து வாசமுள்ள பூக்களைச் சூட்டிக்கொண்டு மலர் மணம் வீசும் மேனியோடு வலம் வர அவனுக்கு விதவிதமான பூக்களைச் சூட அழைக்கிறார் யசோதை.  ‘ஆனிரை மேய்க்க நீ போதி’ பாசுரங்களில். இங்கே, ஆழ்வாரின் பாசுரங்களில் உவமைகள் பெருக்கெடுத்து வருகின்றன. ‘கருவுடை மேகங்கள் கண்டால், உன் கண்ணைக் கண்டது போல் இருக்கும்’ என்பது அவற்றில் ஒன்று. இந்தப் பாசுரங்களில் வகைவகையான பூக்களைச் சுட்டிக்காட்டுகிறார், நந்தவனக் கைங்கர்யம் செய்து வந்த பெரியாழ்வார்.
கண்ணன் அழகினை ஊரார் எல்லாம் கண்டு கண் எச்சில் பட்டுவிட்டது; அதாவது கண்திருஷ்டி பட்டுவிட்டது. மேலும் பலரோடு அவன் சேர்ந்து விளையாடுவதால், அவர்கள் தீமைகள் அவனுக்கும் உண்டாகும். அதனால் திருஷ்டி சுற்றிப்போட (நல்ல தமிழில் சொன்னால், திருவந்திக் காப்பிட) கண்ணனை அழைக்கிறாள்.
அதன் பின் வரும்  ‘கண்ணன் பிள்ளை விளையாட்டை முறையிடுதல்’ என்ற இந்தப் பாசுரங்களில் கண்ணனின் பால லீலைகள் வெளிப்படுத்தப்படுகின்றன. கண்ணனின் குறும்பு விளையாட்டைத் தாங்கவொண்ணாத ஆய்ச்சிமார் எல்லோரும், தாய் யசோதையிடம் கண்ணனின் குறும்புகளைச் சொல்லி முறையிடுகிறார்கள். ஆய்ச்சிகள், கண்ணனின் தீம்புகளைக் கூறிக்கொண்டு யசோதையிடம் வருகிறார்கள். அவர்களுக்கு சமாதானம் சொன்ன அன்னை, அடுத்து அவனுக்கு முலைப்பால் கொடுக்க அஞ்சுகிறாள். அது, அவன் குழந்தையல்ல, தெய்வம் என்று அறிந்ததால் ஏற்பட்ட ஞானத்தால்.
கண்ணன் வளர்ந்துவிட்டான். அவனுக்கு கன்றினைக் காத்துவரும் தொழிலைப் பணிக்கிறாள் யசோதை. பின் அவனை அதற்கு அனுப்பியதற்காக வருந்துகிறாள்… அவனுக்கு என்ன துன்பம் நேருமோ என்று அஞ்சுகிறாள். ஆனால் மாலையில் அவன் கன்று மேய்த்து புண்சிரிப்புடன் வருவது கண்டு மனமகிழ்வு கொள்கிறாள்.
இப்படி கன்று மேய்த்து வரும் கண்ணன் அழகினைக் கண்டு கன்னியர் காமுறுகிறார்கள். – இவை தொடர்ந்து வரும் பாசுரங்களில் அனுபவிக்கப்படுகிறது.
கண்ணன் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்ததும், அவன் புல்லாங்குழல் ஊதுவதும் அதன் சிறப்பும் அதன்பின் வரும் பாசுரங்களில் பேசப்படுகிறது. இப்படி பெரியாழ்வாரால் பிள்ளைத் தமிழ் இலக்கியம் முதலில் வித்தூன்றியது.
தொடர்ந்து வரும் பாசுரங்களில் பெரியாழ்வார் தன்னை கண்ணனின் தாயான யசோதை நிலையிலிருந்து மாறி, கண்ணனின் மாமியார் நிலைக்குச் சென்றுவிடுகிறார். தன் மகள் கண்ணனின் நினைவாகவே இருப்பதையும், அவளின் இளமை கண்டு இரங்குவதையும், தொடர்ந்து ஒவ்வொரு திருத்தலமாகச் சென்று எம்பெருமானகளைப் பாடுவதாகவும் பாசுரங்கள் அமையப் பெற்றுள்ளன.
பெரியாழ்வார் சமூகத்துக்குச் சொல்லும் அறவுரைகளாக சில உள்ளன. அவற்றில் ஒன்று – எம்பெருமானின் பெயர்களையே குழந்தைகளுக்குச் சூட்டுங்கள் என்பது. அவற்றில் ஒரு பாசுரம்…
நம்பி பிம்பி என்று நாட்டு மானிடப் பேர் இட்டால்
நம்பும் பிம்பும் எல்லாம் நாலு நாளில் அழுங்கிப் போம்
செம்பெருந் தாமரைக் கண்ணன் பேர் இட்டு அழைத்தக்கால்
நம்பிகாள்! நாரணன் தன் அன்னை நரகம் புகாள்
– என்பது. விளக்கமே தேவைப்படாததும் இந்த நூற்றாண்டிலும் நம்மால் புரிந்து கொள்ளக்கூடியதுமான தமிழ் இது. அதுதான் பெரியாழ்வார் பாசுரங்களின் பலம். சீர் இளமைத் தமிழின் சிறப்பு என்றும் சொல்வோமே!

காண்க:
செங்கோட்டை ஸ்ரீராம்


No comments:

Post a Comment