14/06/2020

தெய்வீக வாழ்க்கையை உபதேசித்தவர்


-ஆசிரியர் குழு

சுவாமி சிவானந்தர்

சுவாமி சிவானந்தர்


(தோற்றம்: 1887 செப்டம்பர் 8 - மறைவு:  1963 ஜூலை 14)


இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம். மலேசியாவில் பணியாற்றிய மருத்துவர் ஒருவர் குறித்து, அந்த நாட்டு மக்கள் அதிசயத்துடன் பேசிக்கொண்டனர். அந்த மருத்துவர் பொருளீட்டியதை விட, ஏழைகளுக்கு இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த கட்டணம் வாங்கிக்கொண்டோ செய்த மருத்துவச் சேவையே அதிகம் ! வியாதியுடன் அவரிடம் வந்த அனைவருமே நோயிலிருந்து விடுபட்டுள்ளனர். அத்தனை கைராசியுள்ள மருத்துவர் அவர். ஆனால், மக்கள் அதிசயிக்க இவை எதுவும் காரணமல்ல!

மருத்துவத்தைச் சேவையாகப் பார்த்த அதே வேளையில், அவரது உள்ளத்தில் வேறொரு விநோத சிந்தனை குடி கொண்டிருந்தது. மக்களின் உடல் உபாதைகளை என்னால் தீர்த்து வைக்க முடிகிறது. ஆனால், இதனால் மட்டுமே அவர்களின் துயரங்கள் அனைத்தும் மறைந்துவிடவில்லை. வாழ்வில், நிம்மதியும் ஆனந்தமும் அவர்கள் அடைவதில்லை. ஆக வியாதிகளைக் குணமாக்குவது மேம்போக்கான தீர்வு. உலக பந்தங்களில் கட்டுண்டு உழலும் அவர்கள் உண்மையிலேயே விடுதலை பெறவும், ஆனந்த வாழ்வும் அவர்களின் ஆன்ம நலத்தைப் பேணுவதே சிறந்த வழி எனத் தீர்மானித்தார். இந்தச் சிந்தனையே, தமிழ் மண்ணில் தோன்றிய அந்த மருத்துவ நிபுணரை, மனித குலத்துக்கு நல்வழி காட்டிய மகானாக உயர்த்தியது. அவர்தான் சிவானந்த சரஸ்வதி.


திருநெல்வேலி மாவட்டத்தில், பத்தமடை எனும் ஊரில் வருவாய்த்துறை அதிகாரியாகப் பணிபுரிந்த வேம்பு ஐயருக்கு, 1877ம் வருடம், செப். 8-ஆம் தேதியன்று ஆண் குழந்தை பிறந்தது. குப்புஸ்வாமி என்று குழந்தைக்குப் பெயர் சூட்டி, அன்புடன் வளர்த்து வந்தார், வேம்பு ஐயர். எட்டயபுரம் ராஜா உயர்நிலைப்பள்ளியில் பயின்ற குப்புஸ்வாமி, கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்தவனாகத் திகழ்ந்தான்.

1903-ஆம் வருடம், மெட்ரிகுலேஷன் தேர்வில் சிறப்புறத் தேறினான். பிறகு, திருச்சியில் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்து, 1905ம் வருடம், தஞ்சை மருத்துவக் கழகத்தில் பயின்று மருத்துவரானார். இந்தக் கால கட்டத்தில், அவரின் தந்தை இறந்துபோனார். குடும்பத்தில் நிதி நெருக்கடி ஏற்படவே, 1913ம் வருடம், மருத்துவப் பணி செய்து சம்பாதிக்கலாம் என மலேசியா சென்றார் குப்புஸ்வாமி. வறுமை காரணமாக வேலையில் சேர்ந்தாலும், எளியோரின் துயர் போக்கும் பணியாகவே மருத்துவத் துறையைப் பார்த்தார் அவர். ஐரோப்பிய மருத்துவர்கள் சிலருடன் இணைந்து, மருத்துவமனை ஒன்றை நிர்வாகித்தார். பயனுள்ள மருத்துவ நூல்களையும் எழுதி வெளியிட்டார்.

இவரின் மருத்துவச் சேவையைப் பாராட்டி, லண்டனில் ராயல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பப்ளிக் ஹெல்த், ராயல் ஏஷியாடிக் கழகம் முதலான புகழ்மிக்க சங்கங்கள், அவரை உறுப்பினராக நியமித்துக் கௌரவித்தன. உடல் பிணி தீர்க்கும் மருத்துவம் பார்த்து வந்தவருக்கு, மக்களின் மன ஆரோக்கியம், ஆன்ம பலம் குறித்த சிந்தனை எழுந்தது. யோகா, தியானம் என இறைநிலையை நோக்கிய பயணத்தைத் துவக்கினார்.

1923ம் வருடம், இந்தியா திரும்பி, காசி, நாசிக், பண்டரிபுரம், ஹரித்வார் ஆகிய தலங்களில் அலைந்து திரிந்தார். பிறர் கொடுப்பதை உண்பது, கிடைத்த இடத்தில் உறங்குவது எனப் பற்றற்ற வாழ்க்கை நடத்தியவர், ரிஷிகேஷ் தலத்தில், சுவாமி விஸ்வானந்த சரஸ்வதி என்ற மகானிடம் உபதேசம் பெற்று, 1924-ம் வருடம் ஜூன் 1ம் தேதி, 'சுவாமி சிவானந்த சரஸ்வதி' எனும் திருநாமத்துடன் துறவறம் பூண்டார். இமயமலை அடிவாரத்தில், கங்கைக் கரையில் உள்ள ரிஷிகேஷில் பல வருடங்கள் தங்கி, ஆன்மிகப் பயிற்சிகளை மேற்கொண்டார்.

அவர் எடுத்திருந்த இன்ஷூரன்ஸ் பாலிசி ஒன்று முதிர்ச்சி அடைய, அதிலிருந்து வந்த பணத்தைக் கொண்டு, 1927ம் வருடம், கங்கைக் கரையிலேயே மருத்துவ சேவை மையம் ஒன்றைத் துவங்கி, ஏழைகள், யாத்ரீகர்கள், சாதுக்கள் ஆகியோருக்கு இலவச சிகிச்சை அளிக்கத் தொடங்கினார். பிறகு, தாம் அறிந்து உணர்ந்த உண்மைகளை, ஆன்மிகப் பயிற்சிகளின் மூலம் மக்களுக்கு எடுத்துரைத்தார்.

வட யாத்திரையை முடித்தவர், ராமேஸ்வரம், புதுச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமம், திருவண்ணாமலை ஸ்ரீரமணாஸ்ரமம் ஆகிய தலங்களுக்கு விஜயம் செய்தார். பிறகு, மீண்டும் ரிஷிகேஷ் வந்தவர், 1934-ம் வருடம், மார்ச் மாதம், உபயோகிக்கப்படாத மாட்டுக் கொட்டகை ஒன்றில், ஆனந்தக் குடிசை எனும் பொருள்படும் ஆனந்தக் குடிர் எனும் எளிய ஆஸ்ரமத்தைத் துவக்கினார். பிறகு, மெள்ள மெள்ள சிகிச்சைகள், மருந்தகங்கள், ஆலயங்கள், தியான மையங்கள், ஆன்மிகப் பத்திரிகை அச்சகங்கள், புத்தக வெளியீட்டு மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய 'தெய்வீக வாழ்க்கை சங்கம்' எனும் (THE DEVINE LIFE SOCIETY) மிகப் பெரிய ஆன்மிகத் தொண்டு நிறுவனமாக அது வளர்ந்தது.

சுவாமி சிவானந்தர் எழுதிய சுமார் 296 நூல்கள், பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலக மக்களுக்கு வழிகாட்டுகின்றன. ஆஸ்ரமத்துக்குக் கிடைக்கிற நன்கொடைகளை, மருத்துவச் சேவை, அன்னதானம் போன்ற தர்ம காரியங்களில் ஈடுபடுத்தி, பொருளாசையின்றி வாழ்வது குறித்து வாழ்ந்து காட்டினார்.

சுவாமிகள், ''தன்னை அறிந்துகொண்டு விடுதலை பெறு, நல்லதைச் செய், அதை உடனே செய்'' எனும் எளிய போதனைகளால் மக்களின் மணம் கவர்ந்தார். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த சுவாமி சிவானந்த சரஸ்வதி, 1963ம் வருடம், ஜூலை 14-ம் தேதி (ஆனி 29) , கங்கைக் கரையில், இறைவனுடன் இரண்டறக் கலந்தார்.


காண்க:

தெய்வீக வாழ்க்கை சங்கம்- இணையதளம்


No comments:

Post a Comment