13/04/2020

ஒப்பற்ற கருணைக்கடல்


-கா.ஸ்ரீ.ஸ்ரீ.


ஸ்ரீமதே ராமானுஜாய நம:

- என்று முகப்பிடாமல் எந்த ஸ்ரீவைஷ்ணவரும் கடிதம் எழுதும் வழக்கமில்லை. ஸ்ரீவைஷ்ணவர்கள் ஒருவரை ஒருவர் வணங்கும்போது,  ‘அடியேன் ராமானுஜதாசன்என்றே கூறிக்கொள்வது மரபு.

ஸ்ரீவைஷ்னவர்களின் வீடுகளிலும் கோவில்களிலும் நாள்தோறும் திவ்யப் பிரபந்தங்களை ஓதியபின் எல்லா ஸ்ரீவைஷ்ணவர்களுமே உரத்த குரலில் இரண்டு ஸ்லோகங்கள் மிக்க பக்தியுணர்ச்சியுடன் கூறுவார்கள். அவையாவன:

ஸர்வ தேச-தசா-காலேஷ்வவ்யாஹ்யாஹத பராக்ரமா /
ராமானுஜசார்ய திவ்யாஜ்ஞா வர்த்தாமதிவர்ததாம் //
ராமானுஜசார்ய திவ்யாஜ்ஞா ப்ரதிவாஸரமுஜ்ஜ்வாலா /
திகந்தவ்யாபினீ பூயாத் ஸா ஹி லோகஹிதைஷிணீ //

இவற்றின் பொருள்:

எல்லா இடங்களிலும், எல்லா நிலைகளிலும், எல்லாக் காலங்களிலும் தடையற்ற பேராற்றல் பொருந்திய ராமானுஜரின் தெய்வீக ஆணை வளரட்டும், மென்மேலும் வளரட்டும்! ராமானுஜரின் தெய்வீக ஆணை நாள்தோறும் மிக்க ஒளிவீசி, திசைகளின் கோடிகளில் சென்று பரவட்டும்! ஏனென்றால், அந்தத் தெய்வீக ஆணை மக்களுக்கு என்றும் நன்மையே நாடுவது.

ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும் ராமானுஜருக்குமுள்ள இடையறாத அன்றாடத் தொடர்பை இந்தச் செய்திகள் அறிவிக்கின்றன.


பரமனிடம் கொண்ட பக்தியைவிட ராமானுஜரிடம் மிக்கப் பேரன்பு கொண்டவர்கள் ஸ்ரீவைஷ்னவர்கள். இதனால்தான் திருவரங்கத்தமுதனார் தமது ராமானுச நூற்றந்தாதியில்-

கையிற் கனியென்னக் கண்ணனைக் காட்டித் தரினும் உன்றன்
மெய்யிற் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யிற் கிடக்கிலும் சோதிவிண் சேரிலும் இவ்வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுசா! என் செழுங்கொண்டலே! (104)
-என்று பாடியுள்ளார்.

இதன் பொருள்:
மழையைப் பொழிந்த பின்பு வெளுத்துப் போகும் முகில்களைப் போலன்றி, எவ்வளவு பொழிந்தாலும், கொண்ட கருணை குறைவின்றிச் செழித்துள்ள கொண்டலான இராமானுஜரே! எங்கும் உள்ள எளியனான கண்ண பெருமானை, உள்ளங்கையிலுள்ள நெல்லிக்கனிபோல, நேரே காணும்படியாகச் செய்து கொடுத்தாலும் நான் வேண்டேன். தேவரீருடைய  எழில் திருமேனியில் விளங்கும் அரிய பண்புகளன்றி எதையும் வேண்டேன். சம்சாரமாகிய நரகச் சேற்றில் அழுந்திக் கிடந்தாலும் சரி, தேவரீர் திருவருள் புரிந்து, தேவரீரது திருமேனிக் குணங்களை அனுபவிக்கப் பெற்றால் சம்சாரத்திலும் தரித்திருப்பேன். அந்த ஆனந்த அனுபவம் இல்லையென்றால் பரமபதத்திலும் தரித்திருக்க மாட்டேன்.  ‘ஆச்சார்ய வழிபாடே பரமனது வழிபாடாகும்’.

 ‘வைஷ்ணவன் என்பவன் யார்?’ என்பதற்குப் பல இலக்கணங்கள் கூறுவதுண்டு; ஆனால் வைஷ்ணவ ஆசிரியர்கள் இதற்கு முக்கியமான ஒரே இலக்கணம் கூறுகின்றனர்; அதாவது - பிறருடைய, வேதனையைக் கண்டு ஐயோ!என்று இரங்கி அவனுக்கு உதவி புரிய எவன் துடிக்கிறானோ அவனே வைஷ்ணவன், இப்படியின்றி, “முற்பிறவியில் செய்த பாவத்துக்கு இவன் இந்தத் துயரம் பெற்றிருக்கிறான்; படட்டும்!என்று கருதி எவன் ஒதுங்குகிறானோ அவன் வைஷ்ணவன் அல்லன்”. நரஸீ மெஹ்தா குஜராத்தியில் பாடிய  ‘வைஷ்ணவ ஜனதோ தேணே கஹியே ஜே பீர பராயி ஜாணே ரேஎன்ற பாடலிலும் முதன்முதலாக,’பிறருடைய துயரத் துடிப்பை எவன் அறிகிறானோ அவனே வைஷ்ணவன்என்று கூறப் பெற்றுள்ளது. தெருவில் ஓடும் வண்டியில் அடிபட்டு விழுந்து கிடப்பவனைக் கண்டு, அவனுக்கு எந்த உதவியும் செய்யாமல் அலுவலகங்களுக்கு மக்கள் வேகமாக ஓடும் இந்தக் காலத்தில், இத்தகைய வைஷ்ணவனைக் காண்பது அருமைதான்! ஆனால் கருணை என்ற பண்பைக் கொண்டே வைஷ்ணவனை அறிய வேண்டும் என்று ஆசிரியர்கள் இலக்கணமிட்டுள்ளனர்.

இதனால்தான் வைஷ்ணவ நெறிக்கே தலைவரான ராமானுஜர்,  ‘கருணைஎன்ற பண்பைக் கொண்டே ஒப்பற்ற கருணைக் கடல்’ (தயைக ஸிந்தோ -கூரத்தாழ்வான் இயற்றிய தனியன்),  ‘காரேய் கருணை இராமானுச!’ (இராமானுச நூற்றந்தாதி- 25)  ‘உமது பெருங்கருணையே எனக்குக் கதி’ (ராமானுஜசார்ய! கருணைவ து மத்கதிஸ் தே - மணவாள மாமுனிகள் இயற்றிய யதிராஞ விம்சதி-14) என்றெல்லாம் போற்றப் பெறுகிறார்.

யதீந்திரப்ரணவர் அருளிய-

இராமா நுசாய நமவென்று சிந்தித்து,
இராமா நுசரோடு இறைப்போழ்து - இராமாறு
சிந்திப்பார் தாளிணையில் சேர்ந்திருப்பார் தாளிணையை
வந்திப்பார் விண்ணோர்கள் வாழ்வு.
- ஆர்த்திப் பிரபந்தம்- 2

-என்ற அமுத வாக்கும் இங்கே நினைப்பதற்கு உரியது. இதன் பொருள்:  ஸ்ரீமதே ராமானுஜாய நம: என்று எப்பொழுதும் சிந்தித்திருக்க வேண்டும். இப்படிச் சிந்தித்திருக்க இயலாவிட்டால், இந்த மந்திரத்தை மனனம் செய்பவர்களுடைய தாளிணையை வந்தித்து, அவருடன் கூடியிருப்பவர்கள், விண்ணோர்களைவிட மேம்பட்டவராவர்.

ஸ்ரீராமானுஜரின் பெருமை:

நாதமுனிகள் முதல் வந்த பூர்வாசார்யர்கள் தங்களிடம் யார் வந்தாலும் அவர் உபதேசம் பெறுவதற்குத் தகுதியானவரா என்று சோதித்த பின்பே உபதேசித்து வந்தனர். அவர்கள் ஸ்ரீவைஷ்ணவர்களை ஒரு திரளாகக் கூட்டி உபதேசித்ததில்லை. இதில் குறை கண்ட ராமானுஜர்,  ‘இப்படி ஓர் வரம்பு இருக்கக் கூடாது; இதனால் ஸ்ரீவைஷ்ணவ நெறி குறுகி வருகிறது.இந்த வரம்பை அறுத்தாக வேண்டும்என்று கருதி,  ‘வையத்து வாழ்வீர்காள்!என்று ஆண்டாள் உலகனைத்தையும் அழைத்தபடி, ‘யார் வந்தாலும் அவர்களுக்கெல்லாம் ஸ்ரீவைஷ்ணவ தத்துவ உண்மைகளைக் கூறுங்கள்என்று அருளிச் செய்து வரம்பை அறுத்தார். இதனால் வைஷ்ணவ நெறி எங்கும் ஓங்கி வீறுபெற்றது. இது ராமானுஜரின் மிக முக்கியமான பெருமை,

ஓராண் வழியாய் உபதேசித்தார் முன்னோர்,
ஏரார் எதிராசர் இன்னருளால் - பாருலகில்
ஆசையுடையோர்க் கெல்லாம் ஆரியர்காள்! கூறுமென்று
பேசி வரம்பறுத்தார் பின்.
-உபதேச ரத்தினமாலை- 37
-என்ற பாடல் இதைக் குறிப்பிடுகிறது.

ஞானயோகத்தில் மிகச் சிறந்தவராக விளங்கிய ஸ்ரீராமானுஜர் ஆசார அனுஷ்டானங்களையும் அன்றாடம் விடாமல் பின்பற்றி வந்தார். நூற்றிருபது ஆண்டுகள் வாழ்ந்த அவர் தமது அந்திம தசையிலும் வருந்தி எழுந்திருந்து சந்தியா காலத்தில் கதிரவனுக்கு அர்க்கியம் விட்டதாக, வேதாந்த தேசிகன் தமது ரஹஸ்ய த்ரய ஸாரத்தில் கூறியுள்ளார்.

ஸ்ரீராமானுஜர் அனைவரையும் வசீகரிக்கும் அதிசயத் திருமேனியெழில் வாய்ந்தவர். அந்த அழகை அனுபவித்துக் கொண்டிருப்பதே பரம பாக்கியம் என்று பலர் கருதியுள்ளனர். அந்தத் திருமேனியின் அழகை உள்ளபடியே அனுபவித்து, ஓர் அற்புத ஓவியமாக்கி, ஸ்ரீராமானுஜரை நம் கண்முன் கொண்டு நிறுத்துகிறார் எம்பார் என்ற ஆசார்யர். அந்த அற்புதப் பாடல் இதோ:

பற்பமெனத் திகழ் பைங்கழலுன்றன் பல்லவமே விரலும்,
    பாவனமாகிய பைந்துவராடை பதிந்த மருங்கழகும்,
முப்புரிநூலொடு முன்கையில் ஏந்திய முக்கோல்தன்னழகும்,
   முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்,
கற்பகமேவிழி கருணைபொழிந்திடு கமலக்கண்ணழகும்,
   காரிசுதன் கழல்சூடியமுடியும், கனநற்சிகைமுடியும்,
எப்பொழுதும் எதிராசன் வடிவழ கென்னியதயத்துளதால்
   இல்லை எனக்கெதிர், இல்லை எனக்கெதிர், 
   இல்லை எனக்கெதிரே.

ஸ்ரீராமானுஜரின் திருப்பெயர்கள்:

ராமானுஜரின் இயற்பெயர் இளையாழ்வார் என்பது. ராமபிரானை வைஷ்ணவர்கள் பெருமாள் என்றும், லட்சுமணனை இளையபெருமாள் என்றும் கூறுவர்.ராமானுஜர் லட்சுமணனுடைய அம்சமாதலால், ராமானுஜர் லட்சுமணமுனி என்ற பெயர்களைப் பெற்றார். துறவிகளுக்கு அரசராக விளங்கியமையால் யதிராஜர், யதிபதி என்ற திருநாமம் பெற்றார். எம்பெருமானையும்விடக் கருணை மிக்கவராகையால், எம்பெருமானார் என்ற புகழ் பெற்றார். பிரம்மசூத்திரங்களுக்கு ஸ்ரீபாஷ்யம் அருளியமையால் ஸ்ரீபாஷ்யகாரர் ஆனார். பரமன் உபயவிபூதியையும் இவருக்கு வழங்கியமையால் உடையவர் என்ற நற்பெயர் பெற்றார். திருப்பாவையை எங்கும் பரப்பி திருப்பாவை ஜீயர் ஆனார். ஸ்ரீபெரும்புதூரில் வாழும் வைஷ்ணவர்கள் சுவாமிஎன்றே இவரது திருப்பெயரை வழங்குவர்.

ஸ்ரீ ராமானுஜரின் ஆச்சார்யர்கள்:
துரோணரிடம் ஏகலைவன் போலவே, ராமானுஜர் ஆளவந்தாரையே தம் ஆச்சார்யராகக் கருதித் தியானம் செய்து வந்தார். ஆளவந்தாரின் சீடர்களே இவருக்கு ஆச்சார்யர்களாக அமைந்தமையால், ஆளவந்தாரின் ஞானநிதியை இவர் பெற்றார். பெரியநம்பி பஞ்ச சம்ஸ்காரம் அருளியவர் ஆதலால், இவருக்குத் தலைமையாசிரியர் ஆவார். திருக்கோட்டியூர் நம்பி ரகசியார்த்தங்களைக் கற்பித்தார். திருமலையாண்டான் திருவாய்மொழிப் பொருளை உபதேசித்தார். திருமலை நம்பி ராமாயண விசேஷார்த்தங்களைக் கற்பித்தார். ஆழ்வார் திருவரங்கப் பெருமாளரையர் ஸ்தோத்திரங்களும் நல்வார்த்தைகள் பலவும் பயிற்றுவித்தார்.

திவ்யப் பிரபந்தங்களை வளர்த்த பெருமை:
நாதமுனிகள் திவ்யப் பிரபந்தங்களை வகுத்து அருளியபோதிலும், ராமானுஜர் காலம் வரையில் தமிழ்வேதம் பரந்தோங்கி விளங்கவில்லை. ராமானுஜரே திவ்யப் பிரபந்தங்களை வளர்த்து நாடெங்கும் ஓதவைத்துப் பரவச் செய்தவர். பிட்சைக்கு எழுந்தருளும்போது ராமானுஜர் திருப்பாவையையே ஓதிவந்தார் என்பது பிரசித்தமான செய்தி. இந்த நிகழ்ச்சியை வேதாந்த தேசிகன் தமக்கே உரிய அற்புத முறையில் யதிராஜ சப்ததியில் வர்ணிக்கிறார். அதாவது, “ஆண்டாளிடம் கொண்ட பக்தியினால் ராமானுஜர் பிட்சைக்கு செல்லும்போது பாதுகைகள் அணிவதில்லை. அதனால் அவரது திருவடியிலுள்ள தாமரை, மீன் முதலிய அடையாளங்களைப் பூமிதேவி மிக்க ஆதுரத்துடன் தாங்குகிறாள். ராமானுஜரின் திருவடிபட்ட அந்தத் தூசியை, அவரைத் தொடர்ந்து ஓதி வரும் அடியார்கள் தங்களுக்குக் காப்பாக தலையில் முன்னுச்சியில் அணிந்து கொள்கிறார்கள்என்ற கருத்துள்ள கம்பீரமான ஸ்லோகம் இது:

லிப்ஸே லக்ஷ்மணயோகின: பதயுக ரத்யா-பராகச்சடா-
ரக்ஷாரோபண-தன்யசூரிபரிஷத்-ஸீமந்தஸீமாந்திகம்/
பிக்ஷாபர்யடனக்ஷணேஷு பிபராஞ்சக்ரே கலத்தில்பிஷா
யத்வின்யாஸமிஷேண பத்ரமகரீமுத்ராம் ஸமுத்ராம்பரா// (63)

திவ்யப் பிரபந்தங்களில் மிகவும் முக்கியமான திருவாய்மொழியை வளர்த்து எங்கும் பரப்பிய பெருமை ராமானுஜரையே சாரும். முதன்முதலில் திருவாய்மொழிக்கு விளக்கவுரையாகத் தம் சீடரான திருக்குருகைப் பிரான் பிள்ளானைக் கொண்டு ஆறாயிரப்படியுரையைத் தோற்றுவித்தார் ராமானுஜர். இதற்குப் பிறகே திருவாய்மொழிக்கும் மற்ற திவ்யப் பிரபந்தங்களுக்கும் ஏராளமான பேருரைகள் வந்தன.

திருவாய்மொழியைப் பெற்ற தாய் நம்மாழ்வார் என்றும், வளர்த்த தாய் ராமானுஜர் என்றும் ஒரு பாசுரம் கூறுகிறது. திருவாய்மொழியை ஓதும் இடங்களிலெல்லாம் ராமானுஜர் வீற்றிருப்பதாக அமுதனார் குறிப்பிட்டிருக்கிறார்.திவ்யப் பிரபந்தங்களில், குறிப்பாக திருவாய்மொழியில், பல இடங்களுக்கு ராமானுஜர் அற்புதமான விளக்கங்களை வெளியிட்டிருக்கிறார்.

ராமானுஜர் நம்மாழ்வாரின் திருவடி தொழுவதற்குத் திருநகரி சென்றபொழுது, உணர்சிப் பெருக்கினால்- 

இதுவோ திருநகரி! ஈதோ பொருநல்!
இதுவோ பரமபத்த் தெல்லை! - இதுவோதான்
வேதம் தமிழ்செய்த மெய்பொருட்கும் முப்பொருளாய்
ஓதும் சடகோபனூர்!

-என்று வியந்து போற்றியதாக் ஒரு தனிப்பாடல் வழங்குகிறது.

எம்பெருமானுடைய திருவடி நிலைகளுக்குச் சடகோபன் என்ற திருநாம்ம் வழங்குவது போலவே, நம்மாழ்வாரிடம் கொண்ட பக்தி மிகுதியினால், நம்மாழ்வாரின் திருவடிநிலைகள் ராமானுஜன் என்றே வழங்கப் பெறுகின்றன. ராமானுஜரின் சீடரான முதலியாண்டான், ராமானுஜரிடம் கொண்ட பக்தி மிகுதியினால், ராமானுஜரின் திருவடிநிலைகளாக வழங்கப் பெறுகிறார்.

எம்பெருமானின் மகிமை போலவே, ராமானுஜரின் மேன்மையும் கடலைவிட, வானத்தை விட, விரிந்து பரந்த்தாகும். சுருக்கமாகச் சில செய்திகளையே இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்.

அரிய பக்தி நூல்:

ஸ்ரீராமானுஜரைப் பற்றி இதுவரை பல வரலாறுகள் வந்துள்ளன.. ஆனால், பகவான் ராமகிருஷ்ணரின் நேர்ச் சீடரும், சென்னை ராமகிருஷ்ண மடத்தை நிறுவிய மகாபுருஷருமான சுவாமி ராமகிருஷ்ணானந்தர் இயற்றிய ராமானுஜர் வரலாறு தனித் தன்மை பெற்றது. ராமானுஜரிடம் மிக்க பக்தி கொண்டுநடுநிலையில் நின்று, எளிய அழகிய நடையில் அமைந்த வரலாறு இது. வங்கமொழியில் இந்த வரலாறு மிகச் சிறந்த இலக்கிய நூல் என்ற புகழ் பெற்றுள்ளது.

இந்த அரிய பக்தி நூலைத் தமிழில் ஆக்கும் பொறுப்பை எனக்கு அளித்த ஸ்ரீ சுவாமி கமலாத்மானந்தருக்கும் ஸ்ரீ சுவாமி ராகவேசானந்தருக்கும் என் பணிவான வணக்கமும் நன்றியும் என்றும் உரியன. இந்தப் பெரிய பேற்றினை நல்கிய ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு என் உளமார்ந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்.

தமிழ்ப் பெருமக்கள் இந்த நூலைப் பயின்று ஸ்ரீ ராமானுஜரின் வாழ்வையும் கொள்கைகளையும் நன்கறிந்து பயன் பெறுவார்கள் என்று நம்புகின்றேன்.

-அடியார்களின் அடியேன்
கா.ஸ்ரீ.ஸ்ரீ.


குறிப்பு:
சுவாமி ராமகிருஷ்ணானந்தர்
பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் நேரடி சீடரும்சென்னையில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தை ஸ்தாபித்தவருமான பெருந்தகைசுவாமி ராமகிருஷ்ணானந்தர். அன்னார், வங்காளிகள் ஸ்ரீ ராமானுஜரை அறிய வேண்டும் என்ற பேரவாவில் வங்க மொழியில் உத்போதன்பத்திரிகையில்  எழுதிய நீண்ட தொடர் தொகுக்கப்பட்டு, பிற்பாடு ஆங்கிலத்திலும், தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது. அதுவேஸ்ரீ ராமானுஜர்- வாழ்க்கை வரலாறு என்னும் நூலாகும்.
மூத்த தமிழ் எழுத்தாளர் திரு. கா.ஸ்ரீ.ஸ்ரீ., இதனை தமிழில் மொழிபெயர்த்து வழங்கியுள்ளார். அப்போது இந்நூலுக்கு அவர் எழுதிய முன்னுரையே இக்கட்டுரை.
.
இந்நூலின் மொத்த பக்கங்கள்: 380; விலை: ரூ. 110.00
கிடைக்கும் இடம்: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை-4

No comments:

Post a Comment