13/04/2020

தேசத்தின் எதிர்காலம் குழந்தைகளின் கரங்களில்!

-பகவான் சத்ய சாய்பாபா

பகவான் சத்ய சாய்பாபா
(நவம்பர் 23, 1926- ஏப்ரல் 24, 2011)

எல்லையற்ற பரம்பொருளின் குழந்தைகளே! நீங்கள் வெறும் சதைப் பிண்டங்களல்ல! நீங்கள் எல்லாம் வல்ல இறைவனின் திருவுருவங்கள் ஆவீர்!

நீங்கள் ஆனந்தத்தின் பொக்கிஷங்களாவீர்! உங்கள் இருதயங்களோ தெய்வத்தின் திருக்கோயில்களாகும். இயற்கையின் அனைத்தும் உங்கள் விளையாட்டுத் திடலாகும். அதனுள் உறையும் அனைத்துப் படைப்புகளுமே - இந்த பிரபஞ்சத்தின் தலைவர்களாகிய நீங்களே தவிர அதன் கொத்தடிமைகளல்ல! நீங்கள் உங்கள் இச்சைகளுள் கட்டுண்டு இருக்கும் வரையில் பொருளியல் உலகின் பிடியினின்று தப்பிக்க இயலாதவராகவே இருப்பீர்கள். இராவணன் தாம் மிக்க சக்தி கொண்டிருந்தும் கூட தீவிரமான உணர்வுகளுக்கு அடிமைப்பட்டிருந்ததன் காரணத்தால் தனக்கு நேர்ந்த கேடுகளில் இருந்து தப்பிக்க இயலாதவன் ஆனான். நீங்கள் இறைவனிடம் சரணடையும் பட்சத்தில் இயற்கை முழுவதும் உங்களுக்குப் பணிபுரியும் சேவகனாகிவிடும்.

இத்தகைய அரிய அடிப்படையான உண்மையை இக்காலச் சிறுவர் சிறுமியர் அனைவரும் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். அவர்களே எதிர்கால மானிடத் தன்மையின் பிரதிநிதிகளாவர். நம் தேசத்தின் கலாசாரத்தின் பாதுகாவலர்கள் அவர்களேயாவர். நம் நாட்டின் பெருமையும் நல்லெதிர்காலமும் அவர்களையே அடி பணிந்து இருக்கிறது. இளம் குழந்தைகளின் வாழ்க்கை உருவாக்கப்படும் முறையைப் பொறுத்தே தேசத்தின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகின்றது.

இன்றைய நாளில் உலகினர் யாவரும் ஒழுங்கின்மை, கொடுமை மற்றும் தீய செயல்களிலேயே மூழ்கியுள்ளனர். எந்த ஒரு நற்செயல் புரிவதற்கும் இத்தகைய அரக்கத்தனமான சக்திகளை வேரோடு களைவதும் இரண்டு முக்கிய அம்சங்களைக் கொண்டிருத்தலும் இளைய சமுதாயத்தினர் அறிய வேண்டியது அவசியமாகும்.. க்ரிஷி (தனி மனித முயற்சி) மற்றும் க்ருபா (இறையருள்) இவையிரண்டும் ஒரு காந்தக் கல்லின் நேர் மற்றும் எதிர் முனைகளைப் போன்றவை. இறைவனின் அருள் மட்டும் இருந்து சரியான தனிமனித முயற்சியில்லை எனில் நோக்கம் நிறைவேற்றப்பட இயலாது. இறையருள் என்பது எங்கும் எப்பொழுதும் இருக்கவே இருக்கின்றது. அதற்காக நாம் எங்கும் தேடிச் செல்ல வேண்டியதில்லை. இதனைப் பாதுகாக்கும் அனைத்து முயற்சிகளுமே ஸாதனா அல்லது சாதனை (ஆன்மிக முயற்சி) என அழைக்கப்படுகின்றன.

குழந்தைகள் தம் தவறுகளை ஏற்றுக் கொள்ளப் பழக வேண்டும்

ஒவ்வொரு மனிதனும் நான்கு முக்கிய பண்புகளைக் கொண்டிருத்தல் அவசியமாகும். நமது பேரன்பு மிக்க பகவான் அவர்களும், "நாம் ஒவ்வொருவரும் நான்கு விதமான மேன்மையான பண்புகளைக் கொண்டிருப்பது இன்றியமையாதது" என வலியுறுத்திக் கூறுகிறார்:

"சாந்தி (அமைதி), ஸத்யா (உண்மை), நிரஹங்காரா (தான் எனும் அகந்தையற்று இருத்தல்), அசூயையின்றி இருத்தல் (பொறாமை இன்றியிருத்தல்) இவை யாவும் ஒருங்கிணைந்ததாகி ப்ரேமை (அன்பு) எனும் பண்பாக நிறைந்து வழிய வேண்டும்&" என உரைக்கின்றார்.

இத்தகைய பண்புகளைக் கல்வி கற்பதன் வாயிலாகவோ, ஆசிரியர் ஒருவர் மூலமாகவோ அல்லது யாராவது ஒருவர் பரிசாக வழங்குவதன் மூலமாகவோ பெற இயலுமா எனில் இயலாத ஒன்றாகும். இத்தகைய உன்னதமான பண்புகள் ஒருவர் தம் இளம் வயதான குழந்தைப் பருவத்தில் இருந்தே கடுமையான பயிற்சியை மேற் கொள்வதன் மூலமாக மட்டுமே அடைய இயலும். அதன் பிறகே குழந்தைகள் நல்ல உறுதியான நிலையில் பிற்கால வருடங்களில் இருக்க இயலும்.

எண்ணம், சொல் மற்றும் செயலில் உண்மையைக் கடைபிடித்தல்


முதற் பண்பு ஸத்யம் ஆகும். உபநிடதங்கள் "ஸத்யமேவ ஜயதே" (வாய்மையே வெல்லும்) என உரைக்கின்றன. இவ் வாய்மை என்பது யாது? எண்ணம், சொல் மற்றும் செயலில் உண்மையைக் கடைபிடித்தலே வாய்மையாகும். இப் பண்பினில் ஒன்றாமல் இருக்கச் செய்யவே கஷ்டங்களைத் தரும் சாதகமற்ற பல சூழ்நிலைகள் அடிக்கடி உருவாகின்றன. உதாரணத்திற்குக் குழந்தைகள் தண்டனைக்கோ, பெற்றோர் அல்லது ஆசிரியர்களின் வசவுகளுக்கோ அஞ்சியே பொய் உரைக்கத் தலைப்பட்டு உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் தவிர்க்க முற்படுகிறார்கள். இந்த இயல்பே அவர்தம் வாழ்க்கை முழுவதிலும் களங்கமுண்டாக்கி இரட்டை வாழ்க்கை வாழும் நிலைக்குத் தள்ளி விடுகிறது.

ஆகவே, அவர்தம் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தமது தவறுகளை ஏற்றுக் கொள்ளவும் எப்போதும் உண்மையையே பேசுவதற்கும் சிறுவர் பிராயத்தில் இருந்தே கற்க வேண்டும். அவர்களது குற்றங்களுக்காக, பெற்றோர்களாலோ அல்லது ஆசிரியர்களாலோ தண்டிக்கப்படுவது ஒருபோதும் தவறாகாது. இத்தகைய சரியான தீர்வுகளால் அவர்கள் உண்மையைப் பேசுவதற்குப் பயில்வதை எளிதில் காண்பீர்கள். ஆனால் தவறான பாதையில் செல்ல விட்டால், உண்மையைச் சார்ந்த வழிகளுக்குத் திரும்புவது என்பது மிகவும் கடினமாகிவிடும்.

ஆகவே, நீங்கள் இளம் பிராயத்தில் இருக்கையிலேயே, உங்கள் மனதும் இருதயமும் எவ்வித சாயல் படியாமல் தூயதாக இருக்கும் போதே உண்மையினின்று வழுவாதிருக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். எப்போதும் உண்மையை மட்டும் பேசுவதால் உங்கள் மனதும் நல்லெண்ணங்களால் நிரம்பப் பெற்றிருக்கும். உங்கள் பாதையில் எத்தகைய கஷ்டங்கள் தோன்றினாலும் எத்தகைய இடர்கள் அல்லது சோதனைகள் எதிர்பட்டாலும் நீங்கள் ஸத்யத்தைக் கைவிடலாகாது. ஸத்யத்தைக் காப்பதற்காக, அனைத்தையும் தியாகம் செய்யத் தயாரானதால் அழியாப் புகழ் பெற்ற ஹரிச்சந்திரனின் ஊக்கமளிக்கும் வரலாறு மூலமாக கற்றுக் கொள்ளப்பட வேண்டிய பாடம் இதுவேயாகும்.

உலகியலான செழுமையோ அல்லது அதிகாரம் கொண்ட நிலையோ வருவதும் போவதுமாகவே இருக்கும். ஆனால் உண்மைக்குச் சார்பான நற்பெயரும் மேன்மையும் இறுதிவரை நிலைத்து நிற்கும். நீங்கள் உண்மை மற்றும் தர்மத்தை உங்கள் இதயம்தனில் நிலைத்திருக்கச் செய்தீர்களானால் உங்கள் வாழ்க்கை முழுவதும் உயர்ந்த அர்த்தமுள்ளதாகவும் மதிப்பு மிக்கதாகவும் அமையும். பொறாமை உணர்வினின்றும் விடுதலை பெற விழையுங்கள்

பொறாமையினின்றும் விடுதலை பெறப் பழக வேண்டும்

உண்மைக்கு அடுத்ததாக, நீங்கள் பொறுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பொறுமை எனும் பண்பு எல்லைகடந்த கொடுமையெனும் அம்புகளும்கவண்கற்களுமான விதியை எதிர் கொள்ளும் திறனை அளிக்கும். பொறுமையற்ற மனிதனோ, தோல்வி மற்றும் துன்பங்களால் எளிதில் கட்டுண்டு விடுகிறார். உண்மை மற்றும் பொறுமையை வளர்த்துக் கொண்டு நீங்கள் பொறாமையினின்றும் விடுதலை பெறப் பழக வேண்டும். பொறாமை என்பது மரத்தின் வேர் வரை சென்று தாக்கும் பூச்சியைப் போன்றதாகும்.அது ஒருவரது வாழ்க்கை முழுவதையுமே அழித்துவிடும். அறிவு, செல்வம், பதவி, அதிகாரம் மற்றும் இது போன்ற பலவற்றை உங்கள் வாழ்க்கையில் அனுபவித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் பொறாமையெனும் கிருமிகள் உங்கள் மனதை அடைந்து விட்டால் அதுவே ஒவ்வொன்றையும் மாசுபடுத்தி விடும். நீங்கள் சின்னஞ்சிறு விஷயத்தில் கூட பொறாமை உள் நுழைய அனுமதிக்கக் கூடாது.

உங்களுடன் பயிலும் சக மாணவன் உங்களைக் காட்டிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தால் நீங்கள் பொறாமை உணர்வை அடைதலாகாது. மற்றவர்கள் உங்களைக் காட்டிலும் நன்றாகப் பணியாற்றினால், பொறாமையால் கவரப் படுவதற்குப் பதிலாக, மகிழ்ச்சியையே அடைய வேண்டும். சிலர் உங்களைக் காட்டிலும் நல்ல உடை உடுத்தி வந்தாலோ அல்லது அதித செல்வச் செழுமை கொண்டாலோ, அவர்கள் தாம் பெற்றுள்ளதை அனுபவிக்கிறார்கள் என்று எண்ணி நீங்கள் பெற்றுள்ளதைக் கொண்டு திருப்தியும் மகிழ்ச்சியும் கொள்ள வேண்டும். பொறாமை உணர்வில் இருந்து விடுதலை பெற்றிருப்பது என்பது தெய்வீகப் பண்பாகும். அது மற்றவர் பெற்ற மகிழ்ச்சியையும் வெற்றியையும் கண்டு உங்களை மகிழ்ச்சியடையச் செய்யும். எத்தகைய சூழ்நிலைகளிலும் உங்கள் குருமார்கள் மற்றும் வயதில் மூத்தவர்களின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து கடுமையான ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். தேவைப்படுவோரின் நலனுக்காக தியாகங்கள் புரிய கற்றுக் கொள்ள வேண்டும். தியாகம் என்றால் உங்கள் சக்திக்கேற்ப மற்றவருக்கு உதவ முற்படுதல் ஆகும்.

உங்களால் பிறருக்கு உதவ இயலாதெனில் அவர்களுக்குக் கெடுதல் விளைவிக்காமலாவது இருத்தல் வேண்டும். அதுவும் கூட ஒரு வகையில் தியாகமாகும் (மற்றவருக்குக் கேடு தரும் சுபாவத்தைக் கைவிடுதல்). இந்நாளில் அதிகாரம் கொண்டிருப்பவர்கள் மக்களுக்குச் சுமையும் துன்பங்களும் உருவாக்கக் கூடிய பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள். ஆனால் அவர்கள் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக சொற்ப அளவிலேயே செலவு செய்கிறார்கள்.

முன்னேற்றம் அடைந்ததாகக் கூறப்படும் நாடுகளில் கூட எல்லாவிதமான திட்டங்களிலும் கோடிக்கணக்கான பணத்தை வீணடிக்கிறார்கள்; ஆனால் இளம் சமுதாயத்தினரின் ஆரோக்கியம் மற்றும் நன்மைக்காக போதிய கவனம் செலுத்துவதில்லை. ஏதாவது ஒரு வழியில் தம் சொந்த சுயநலனைக் கருதி இளைஞர்களைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்களே தவிர குழந்தைகளின் நீண்ட எதிர்காலத்தைப் பற்றிய எண்ணம் ஏதும் கொள்வதில்லை. ஆறு நாட்களுக்கான போர்க் கருவித் தளவாடங்களுக்காக செலவிடப்படும் பெருஞ் சக்தி வருடம் முழுவதும் பல லட்சம் குழந்தைகளை நலமாக வைத்திருக்கப் போதுமானதாகும்.

குழந்தைகள் மிருதுவான இதயம் கொண்டவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

குழந்தைகளின் நலனில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் முக்கியமாகும். நல்ல ஆரோக்கியமே வாழ்க்கையில் உள்ள ஒவ்வொன்றின் அடிப்படையானதாகும். பெரும்பாலான பின்தங்கிய நாடுகளில் உள்ள குழந்தைகளின் நிலை மிகவும் பரிதாபமானது. குழந்தைகள் பெரும்பாலோர் சத்தான உணவின்றி, போதிய ஆடைகளின்றி, தங்குவதற்கு கூரையின்றி இருக்கின்றனர். அவர்களுக்கு அரைகுறை உணவே கிடைப்பதால் பலம் குன்றி பல்வேறு நோய்களால் துன்புற்று வருகின்றனர். உலகின் மூன்றாவது நிலை நாடுகளில் ஒவ்வொரு நாளும் சத்துணவின்றி நாற்பதாயிரம் குழந்தைகள் மடிந்து வருகின்றனர்.

மகிழ்ச்சியற்று வாழ்ந்து வரும் இந்த குழந்தைகளுக்கு உதவ பொருள் வளம் படைத்த கனவான்கள் ஏதாவது செய்தார்களே என வாழ்த்துகிறேன். அவர்கள் தமது சுய உடைமைகள் மற்றும் நன்மையை மட்டுமே நினைந்து திருப்தியடைந்து விடலாகாது. அவர்களை விடவும் அதிர்ஷ்டமற்ற நிலையில் வாடுபவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமை ஒன்றுளது. தாம் ஒரு நிலையில் இருந்து கொண்டு இரங்க மனமின்றியோ அல்லது பொருளுதவி செய்கிறோம் எனும் மனோபாவத்தாலோ இல்லாமல் ஏழ்மையில் வாடுபவர்களை அணுக வேண்டும். நியாயமான இரக்க உள்ளத்துடனும் சமமாக தன்னுடன் உறைபவர் எனும் பாவத்துடனும் உதவி புரிதல் வேண்டும். இத்தகைய இரக்கமும் அர்த்தமுள்ள வாழ்க்கையின் முழுமுதலான நோக்கங்களுள் ஒன்று எனும் உள்ளத்துடன் இருத்தல் வேண்டும்.

அன்பான குருமார்களே!

நீங்கள் குழந்தைகளுக்கு கற்பிக்கையில் உங்களது பொறுப்பில் விடப்பட்டுள்ள குழந்தைகளின் நலன் எனும் உன்னதமான ஒரு சாதனையுடன் பிணைந்துள்ளீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் குழந்தைகளுக்கு போதிக்கின்றீர்கள் என உணர்தல் வேண்டும். உதாரணமாக, நீங்கள் சிறிது அறிவைப் புகட்டும் பொழுது நீங்கள் புகட்டும் பாடத்தைப் புரிந்து கொண்டுள்ளமை மேலும் வளர்ச்சியடைகிறது.

நீங்கள் குழந்தைகளுக்குப் பாடம் நடத்த வேண்டி புத்தகங்களைப் படித்தாலும் அதனால் குதூகலத்தையே அடைகிறீர்கள். உண்மையில் நீங்கள் மற்றவருக்காக எப்பணியாற்றினாலும் அது ஒவ்வொருவருள்ளும் உறைகின்ற இறைவனுக்கே ஆற்றப்படுவதாக எப்போதும் உணர்தல் வேண்டும். குருமார்கள் இத்தகைய உணர்வான உலகளாவிய அன்பினால் கடமையாற்றுகையில் குழந்தைகள் மிருதுவான இதயமும் களங்கமற்ற மனதும் கொண்டவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

நீங்கள் குழந்தைகளின் இதயத்தை அன்பினால் நிரப்பினால் மட்டுமே உலகம் யாவும் நியாயமான அமைதியைப் பெறும்.

(1983ஆம் ஆண்டு மைசூரில் நடைபெற்ற பாலவிகாஸ் மாநாட்டில் கலந்துகொண்ட குழந்தைகளிடையே பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா உரையாற்றியதன் தொகுப்பு)


No comments:

Post a Comment