13/04/2020

பூஜையறை அலங்காரப் போட்டி

-ஆசிரியர் குழு

பூஜையறைப் போட்டிக் குழுவினருடன்
ஜோதிமலை இறைபணி திருக்கூட்ட நிறுவனர் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள்,
தே.சி.க. மாநிலச் செயலாளர் ஆதலையூர் சூரியகுமார்.

கிராமப்புறத்தின் பக்தி மார்க்கம் அலாதியானது. பூங்கரகம், அக்கினிக் கப்பரை, முளைப்பாலிகை என்று அது ஆத்மார்த்தமானதாக இருக்கும். குழாயடிச் சண்டை, சாலையைப் பயன்படுத்துவதில் சண்டை என்று தொட்டதற்கெல்லாம் முறைத்துக் கொள்பவர்கள்கூட, திருவிழா, விசேஷம் என்று வந்துவிட்டால் ஒன்றுகூடி விடுவார்கள். அதுபோலவே குடும்பத்திற்குள் நடக்கும் உறவுச் சிக்கல்களால் விலகி இருக்கும் உறவுகள், ஊர் திருவிழா, தேர்த் திருவிழா என்றால் ஒன்றுகூடிக் கொண்டாடுவார்கள். பிரிந்து கிடக்கும் உறவு, நட்புகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கு திருவிழாக்கள் தீர்வாக அமைகின்றன.

அப்படி ஒரு திருவிழாவை கிராமத்துக்குள் கொண்டாடி ஊர் மக்களின் ஒற்றுமையைக் கண்டு களிக்கலாம் என்ற முயற்சியில் பூஜையறை அலங்கார ப்போட்டியை கொண்டாடி இருக்கிறார்கள், கும்பகோணம் அருகே உள்ள பூக் கொல்லை கிராம மக்கள்.

தேசிய சிந்தனைக் கழகமும், கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டமும் இணைந்து, கும்பகோணம் அருகே உள்ள பூக்கொல்லை, பாரதி நகர் பகுதியில் பூஜையறை அலங்காரப் போட்டியை அறிவித்தார்கள். கிராமத்தில் வாழும் மக்கள் உடனடியாக தங்கள் வீடுகளை சுத்தம் செய்து அழகாகக் கோலமிட்டு, மாலை நேரத்தில் தங்களுடைய பூஜையறையை விதம் விதமாக அலங்கரித்து விளக்கேற்றி வைத்திருந்தார்கள். நடுவர் குழு ஒன்று அமைக்கப்பட்டு அவர்களது வீடுகளின் பூஜை அறைக்குச் சென்று வழிபட்டு அவர்களின் குல தெய்வத்தையும் கேட்டறிந்தார்கள்.

“யாருக்குப் பரிசளிப்பது என்று யோசித்தபோதுதான் எல்லா மக்களுமே ஆத்மார்த்தமாக தங்களது பூஜையறையை அலங்கரித்து வைத்திருந்தார்கள். பல வீடுகளில் நிறைய பொருட்களை வைத்து அலங்காரம் செய்திருந்தார்கள். சில வீடுகளில் அன்பால் கொஞ்சம் ‌பூக்களை மட்டுமே வைத்து அலங்காரம் செய்திருந்தார்கள். எளிமையாக இருந்தாலும் அவை ஆத்மார்த்தமாக இருந்தன. எனவே அனைவருக்கும் பரிசு கொடுக்க தீர்மானித்தோம்” என்கிறார் தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில மகளிர் அணி செயலாளர் திருமதி .ரேணுகா.

“கிராம மக்கள் அமைதியுடன் அன்புடன் வாழ வேண்டும், இந்தத் தேசத்தின் உயிர்நாடி கிராமங்களில்தான் இருக்கிறது என்றார் காந்தியடிகள். கிராமம் செழிப்பாக இருந்தால்தான் ஒரு நாடு வளம் பெறும். அந்தக் கிராமத்தில் செழிப்பை ஏற்படுத்துவதற்காகத் தான் இதுபோன்றதொரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம்” என்கிறார் கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தின் நிறுவனர் தவத்திரு. திருவடிக்குடில் சுவாமிகள். 

பூஜையறைப் போட்டியில் பங்கேற்றவருக்கு
பரிசு வ்ழங்குகிறார் திருவடிக்குடில் சுவாமிகள்.

“கிராமத்தில் பூஜையறை அலங்காரப் போட்டி அறிவித்தவுடன், அவரவர் வீடுகளில் மட்டுமல்லாது எங்கள் கிராமத்தையே சுத்தம் செய்தோம். கிராமம் முழுவதும் சாணம் தெளித்து கோலமிடப்பட்டது. கோயில் பகுதிகளையும் சுத்தம் செய்தோம். தோரணங்கள் கட்டப்பட்டு கிராமத்தையே அழகுபடுத்தினோம். கொரோனா நோய் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தச் சமயத்தில் ஊரை சுத்தம் செய்ததும் ஒரு வகையில் மகிழ்ச்சியே. கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசளித்தது அனைத்து மக்களுக்கும் உற்சாகமாக இருந்தது” என்கிறார் பூக்கொல்லை கிராமத்து இளைஞர் கணேஷ்.

கிராம மக்கள் தங்களுடைய அன்பைப் பரிமாறிக் கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்படுத்தித் தருவது என்பது நல்ல விஷயம் தானே! அந்த வகையில் தேசிய சிந்தனைக் கழகம் மற்றும் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தின் பணிகள் பாராட்டுக்குரியவை. அன்பும் ஆன்மிகமும் பரவுவது என்பது ஆனந்தம் தானே!




No comments:

Post a Comment