16/12/2021

பண்டிட் தீனதயாள் உபாத்யாய பொன்மொழிகள் - 7

-பேரா.பூ.தர்மலிங்கம்


தர்மமே ஆன்மா:

    தர்மம் என்பது தேசத்தின் ஆன்மாவின் களஞ்சியமாகும். தர்மம் அழிக்கப்பட்டால், தேசம் அழிந்து விடும். தர்மத்தைக் கைவிட்டவர், தேசத்தைக் காட்டிக் கொடுத்தவராகிறார்.

***
தர்மமும் மதமும்:

    இன்றைய காலகட்டத்தில் நாம் நம்மைச் சுற்றிக் காணுகின்ற தர்மத்தின் சிதைவுகள் பெரும்பாலும் மேலைநாட்டுக் கல்வியின் விளைவாகும். ‘மதம்’ என்ற ஆங்கிலச் சொல் தர்மத்தின் பரிசுத்தமான அர்த்தத்தை சிதைப்பதில் முக்கியப் பங்களித்துள்ளது. பிரிட்டீஷார் இந்தியாவுக்கு வந்தபோது தான், இந்த ‘தர்மம்’ என்ற வார்த்தையை முதன்முதலாகக் கேள்விப்பட்டார்கள். தர்மம் என்பதற்கு ஒரு சமமான, விரிவான அர்த்தம் அவர்களிடம் இல்லை. எனவே அவர்கள் அதை ‘மதம்’ என மொழிபெயர்த்தனர். இத்தகைய மொழிபெயர்ப்பு இந்தியச் சொற்களின் அர்த்தத்தைச் சிதைத்து விட்டது. தர்மம் என்பது, பல்வேறு மதங்களை உள்ளடக்கிய ஒரு பரந்த சொல். இந்த பாரதத்தில் ஒவ்வொரு மதமும் ஒரு வழிபாட்டு முறையையும் பல அமைப்பு முறைகளையும் கொண்டிருக்கின்றன. ஆனால், இவ்வாறு பல அமைப்பு முறைகளும் மதப்பிரிவுகளும் இருப்பினும், தர்மம் ஒன்றேயாகும். தர்மம் என்பது இவ்வாறான வழிபாட்டு முறைகளுக்கு அப்பாற்பட்டு அனைவருக்கும் நன்மை தரக்கூடிய மற்றும் அருளுகின்ற வழியைத் திறக்க வல்லது.

***
மாறிக் கொண்டே இருக்கும் மதம்:

    
வேத காலத்திய மதம், எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த மதம். மாறும், மேலும் வாழ்ந்து கொண்டிருக்கும். இது ஒரு தேங்கி நிற்கிற குளம் போன்றதல்ல. புதிய சிந்தனைகள் எப்போதுமே இந்த மதத்திற்குள் நுழைந்தன. ஆனால் ஒவ்வொரு புதிய மாற்றமும் பழையவற்றுடன் அதன் தொடர்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன. ஒவ்வொரு புதிய சீர்திருத்தவாதியும் நமது பண்டைய பாரம்பரியம், நமது மூதாதையர்கள் மற்றும் அவர்களது சாதனைகளுக்கு மதிப்பளித்தனர். அதே நேரத்தில் காலத்திற்கேற்ப புதிய சிந்தனைகளை முன்வைத்தனர். இப்புதிய சிந்தனைகள் அடிப்படைச் சிந்தனையுடன் ஒத்துப் போவதால், அவை எந்த வகையிலும் தேசத்திற்கு கேடு விளைவிக்கவில்லை. மாறாக, அவை தேசத்தின் வளர்ச்சிக்குப் பங்களித்தன.

***
வேரற்ற சோஷலிசம்:

    சோஷலிச அமைப்பு ‘உருவமற்ற மனிதனை’ மட்டுமே நினைத்தது. இதில், மாறுபட்ட விருப்ப உணர்வு மற்றும் திறன்களின் அடிப்படையில் மனிதனின் ஆளுமையை வளர்ப்பதற்கான வாய்ப்பே இல்லை. ஒரு சிறைக் கையேட்டில் விவரக் குறிப்புகள் இருப்பதைப்போல, தனிமனிதனின் தேவைகளும் விருப்பங்களும் சோஷலிச அமைப்பில் மிகவும் முக்கியத்துவம் வகிக்கின்றன. ஆனால், இதில் தனிமனித சுதந்திரம் என்று எதுவும் இல்லை. 

***
கொள்கை நெறிமுறைகள்:

    
மனித இயல்பு ஒருபுறம் சினம் மற்றும் பேராசை, மறுபுறம் அன்பு மற்றும் தியாகம் ஆகிய இரண்டு எதிர்வுகளைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் நமக்கு இயல்பிலேயே உள்ளன. சினம், பேராசை போன்றவை மனிதனுக்கும் மிருகங்களுக்கும் இயல்பானவை. இக்காரணத்திற்காக, நாம் சினத்தை வாழ்வின் அடிப்படையாகக் கொண்டு நமது முயற்சிகளைச் செய்தால், நம் வாழ்வில் நல்லிணக்கம் இருக்காது. எனவே, ‘கோபத்திற்கு அடிபணிய வேண்டாம்’ என்று அறிவுரை கூறுகிறோம். ஒருவரின் மனதில் சினம் தோன்றினாலும், அவரால் அதைக் கட்டுப்படுத்த முடியும். மேலும், கட்டாயம் சினத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இதனால், சினம் தவிர்த்த கட்டுப்பாடு நம் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறுகிறது. அத்தகைய விதிகள், கொள்கை நெறிமுறைகள் என்று அழைக்கப்படுகின்றன. 

***
கொள்கைகளின் இணக்கம்:

    
பாரதிய கலாச்சாரத்தின் பாரம்பரிய விழுமியங்களுடன் தேசியவாதம், ஜனநாயகம், சோஷலிசம், உலக அமைதி ஆகியவற்றை மீண்டும் நல்லிணக்கம் கொள்ளச் செய்ய வேண்டும். மேலும் இந்த கொள்கைகள் அனைத்தையும் ஒருங்கிணைந்த வடிவத்தில் சிந்திக்க வேண்டும். இதனால் இந்தக் கொள்கைகளுக்கிடையிலான முரண்பாடுகளைக் களைய முடியும். மேலும், அவை ஒன்றுக்கொன்று துணையாக இருக்க முடியும். இதன்மூலம்  ‘மனிதன்’ தான் இழந்த இடத்தைப் பெறமுடியும் மற்றும் அவனது வாழ்க்கையின் நோக்கங்களை அடைய முடியும். 

***
ஆங்கிலம் ஒரு தளை:

   ஆங்கிலம் தொடரும் வரை நமது சொந்த கலாச்சார மறுமலர்ச்சியின் சுதந்திரக் காற்றை நம்மால் சுவாசிக்க முடியாது. நவீன அறிவியல் அறிவினை அணுகவியலாத நிலை ஏற்பட்டாலும் கூட, இந்த அன்னிய நாட்டு மொழியின் பிடியிலிருந்து நம்மை நாம் விடுவித்துக் கொள்ள வேண்டும். ஆங்கிலத்தின் மூலமாக, மேற்கத்திய நாடுகளைப் பின்பற்றுவதன் மூலம் நாம் தருகிற பங்களிப்பை விட, தாய் மொழியின் மூலமான நம்முடைய பங்களிப்பு நமக்கும் உலகத்திற்கும் மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கும்.

***
விராட உணர்வு:

   ‘சிட்டி- Chiti’ (தேசிய உணர்வு) என்பது தேசத்தின் ஆன்மா. தேசத்தை உற்சாகப்படுத்தும் மற்றும் செயல்படுத்தும் சக்தி  ‘விராட்- Virat’ ( ஆற்றல்) என்று அழைக்கப்படுகிறது. இது  ‘சிட்டி’யால் தூண்டப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டு வரைமுறைப் படுத்தப்படுகின்றது. ஒரு தேசத்தின் மக்களுடைய வாழ்க்கையில்  ‘விராட்’ என்பதும் உடலில் உள்ள உயிரைப் போன்றதொரு முக்கியமான இடத்தை வகிக்கிறது. உயிர், உடலின் பல்வேறு உறுப்புகளில் வலிமையை ஏற்படுத்தி, அறிவைப் புதுப்பித்து, உடலையும் ஆன்மாவையும் ஒன்றாக வைத்திருக்கிறது. அதுபோலவே, ஒரு தேசத்திலும் ஒரு வலுவான  ‘விராட்’ இருந்தால் மட்டுமே, ஜனநாயகம் வெற்றி பெறமுடியும். அரசாங்கம் நன்றாகச் செயல்படும். தேசத்தின் பன்முகத்தன்மை நமது தேசிய ஒற்றுமைக்குத் தடையாக இல்லை. ‘விராட்’ எழுச்சியோடு இருக்கும்போது, நமது நாடு பன்முகத்தன்மையைக் கொண்டிருந்தாலும் மோதல் ஏற்பட வழியில்லை."

***
தேசத்தின் ஆன்மா:

    
ஒரு குறிப்பிட்ட செயலின் தகுதியையும் தகுதியின்மையையும் தீர்மானிக்கும் அளவீடே சிட்டி ( தேசிய உணர்வு/நெறிமுறைகள்) எனப்படுகிறது. நமது இயல்புகளுக்கு ஏற்ப சிட்டி (Chiti) அங்கீகரிக்கப்பட்டு கலாச்சாரமாக ஒன்றிணைக்கப்படுகிறது. இவை வளர்க்கப்பட வேண்டும். சிட்டிகளுக்கு எதிரானவற்றை தவறான போக்காகவும் விரும்பத் தகாததாகவும் கருதி தவிர்க்கப்பட வேண்டும். சிட்டி என்பது ஒவ்வொரு செயலையும் ஒவ்வொரு அணுகுமுறையையும் சோதித்துப் பார்த்து, அது ஏற்றுக்கொள்ளத் தக்கதா அல்லது தகாததா எனத் தீர்மானிக்கின்ற உரைகல்லாகும். சிட்டி என்பது தேசத்தின் ஆன்மா. இந்த சிட்டியின் அஸ்திவாரத்தில் தான் ஒரு தேசம் எழுந்து வலுவாகவும் வீரியமாகவும் மாறுகிறது. இந்த சிட்டி தான் ஒரு தேசத்தில் உள்ள ஒவ்வொரு மாபெரும் மனிதனின் செயலிலும் வெளிப்படுகிறது.

***
நமது சபதம்:

    
எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்திற்கோ அல்லது பிரிவினருக்கோ அன்றி, ஒட்டுமொத்த தேசத்திற்கும் சேவையாற்ற நாம் உறுதியேற்போம். நாட்டின் மக்கள் ஒவ்வொருவரும் நம் இரத்தத்தின் இரத்தம், நம்முடைய சதையின் சதை. அவர்கள் ஒவ்வொருவரும் பாரதமாதாவின் குழந்தைகள் என்ற பெருமித உணர்வை அடையும் வரை ஓய மாட்டோம். இந்த வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தில் அன்னை இந்தியாவை ஒரு வளமான தேசமாக ஆக்குவோம்.

***
தவறான முரண்பாடு:

   ‘
ஒரு தனிநபரின் பல பரிமாண ஆளுமை மற்றும் வெவ்வேறு நிறுவனங்களுக்கு இடையே நிரந்தரமான தவிர்க்க முடியாத முரண்பாடுகள் உள்ளன’ என்ற கருத்தை ஏற்கவியலாது. இந்த முரண்பாடு தொடர்ந்து கொண்டேயிருந்தால், இது வீழ்ச்சி மற்றும் விபரீதத்தின் அறிகுறியாகும். இது இயற்கையால் அல்லது கலாச்சாரத்தால் ஏற்படுவது அல்ல. இந்த அடிப்படை முரண்பாட்டின் விளைவாக, மனித முன்னேற்றம் உருவாகிறது என்று சிலர் நம்புகின்றனர். ஆனால் அது தவறான மேற்கத்திய சிந்தனையின் தாக்கம் ஆகும். எனவே அவர்கள், தனிநபருக்கும் அரசுக்கும் இடையிலான மோதலை இயற்கையான நிகழ்வாகக் கருதுகின்றனர். அதே அடிப்படையில், வர்க்க மோதலின் தவிர்க்க முடியாத தன்மைக் கோட்பாட்டையும் கொண்டுள்ளனர். 

***
எது நல்ல கட்சி?

    கட்சி என்பது வெறுமனே தனிநபர்களின் தொகுப்பு அல்ல. அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமென்ற விருப்பத்திலிருந்து வேறுபட்ட, ஒரு தனித்துவமான நோக்கத்துடன் கூடிய ஒரு நிறுவனமாகும். அத்தகைய கட்சியின் உறுப்பினர்களுக்கு, அரசியல் அதிகாரம் ஒரு வழிமுறையாக இருக்கவேண்டுமே தவிர, இலக்காக இருக்கக் கூடாது. கட்சியின் தொண்டர்களிடையே ஒரு பக்தி அல்லது முழு ஈடுபாடு இருக்க வேண்டும். பக்தியானது, அர்ப்பணிப்பு மற்றும் ஒழுக்கத்திற்கு வழிவகுக்கிறது. தலைமையிலிருந்து நீங்கள் எவ்வளவு ஒழுக்கத்தை விதிக்கிறீர்களோ அதுவே கட்சியின் உள்வலிமையாகும். ஒரு சமூகத்திற்கு தர்மம் என ஒன்று இருப்பது போல, ஒவ்வொரு கட்சிக்கும் ஒழுக்கம் என ஒன்று இருக்கிறது.

***
நாடாளுமன்ற செயல்பாடு:

    சபையை விட்டு வெளிநடப்பு செய்வது, கூச்சலிடுதல் அல்லது முழக்கமிடுவதன் மூலம் குழப்பத்தை உருவாக்கும் போக்கு ஆகியவை செய்தித்தாளில் இடம் பெறுவதற்கான நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. இச்செயல்கள் ஜனசங்கத்தால் சரியானதாகக் கருதப்படுவதில்லை. இதுபோன்ற நடத்தையிலிருந்து விலகியிருக்குமாறு எங்கள் உறுப்பினர்களுக்கு நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் உரையின்போது அவர்களின் எதிர்ப்பைப் பதிவு செய்ய நேர்ந்தால், முறைகேடான முறையில் எதிர்ப்பைத் தெரிவிக்கக் கூடாது. ஜனநாயகத்திற்கான அர்ப்பணிப்பு என்பது அரசின் பாராளுமன்ற செயல்பாடுகளை நாம் மிகக் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும். அத்தகைய மரபுகள் இல்லாமல் ஜனநாயகம் செயல்பட முடியாது.

***
அரசியல் கட்சிக்கான ஒழுக்கம்:

    ஒழுக்கத்தின் அடிப்படையில் அரசியல் கட்சியின் தரத்தை மதிப்பிடுவது முக்கியமானதாகும். ஒழுக்கமானது கட்சியை ஆரோக்கியத்துடன் வைத்திருப்பதோடு, பொதுவாக மக்களின் நடத்தைக்கும் காரணமாக அமைகிறது. ஓர் அரசாங்கம், அடிப்படையில் பாதுகாப்பு மற்றும் பராமரித்தலுக்கான கருவியாகும்; அழிவு அல்லது மாற்றத்திற்கான கருவி அல்ல. மக்களிடையே, சட்டத்தை மதிக்க வேண்டுமென்ற எண்ணத்தை உட்புகுத்த, சட்டத்தின் பாதுகாவலர்களாக இருக்க விரும்பும் கட்சிகள், ஒரு முன்மாதிரியாக இந்தத் திசையில் செயல்பட வேண்டும். ஜனநாயகத்தின் சாராம்சமானது, சுயாட்சிக்கான உணர்வு மற்றும் திறனாகும். கட்சிகளால், தங்களைத் தாங்களே முறையாகச் செயல்படுத்த இயலாவிட்டால், சுயாட்சிக்கான விருப்பத்தை சமுதாய மக்களிடையே எவ்வாறு உருவாக்க இயலும்?

***
பொருளாதார அமைப்பின் கடமை:

    
ஒரு பொருளாதார அமைப்பு மக்களைப் பேணுவதோடு அவர்களின் மேம்பாட்டிற்குத் தேவையான அனைத்து அடிப்படைப் பொருட்களையும் உற்பத்தி செய்ய வேண்டும். மேலும், தேசத்தின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தையும் உறுதி செய்ய வேண்டும்.

 ***
பொருளாதார ஜனநாயகம்:


    அனைவருக்கும் வாக்குரிமை என்பது அரசியல் ஜனநாயகத்தின் உரைகல் என்றால் அனைவருக்கும் வேலை என்பது பொருளாதார ஜனநாயகத்தின் ஒரு அளவீடாகும். வேலை செய்வதற்கான இந்த உரிமை என்பது கம்யூனிச நாடுகளைப் போல அடிமை உழைப்பைக் குறிக்காது. வேலை என்பது ஒரு மனிதனின் வாழ்வாதாரத்திற்கான வழிமுறையாக மட்டும் இருக்கக் கூடாது. அந்த வேலை அம் மனிதனின் விருப்பத் தேர்வாகவும் இருக்க வேண்டும். அந்த வேலையைச் செய்ததற்காக தொழிலாளிக்கு தேசிய வருமானத்திலிருந்து சரியான பங்கு கிடைக்கவில்லை என்றால், அவர் வேலையற்றவராகவே கருதப்படுவார். இந்தக் கண்ணோட்டத்தில் குறைந்தபட்ச ஊதியம், நியாயமான விநியோக முறை மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவை அவசியமானதாகும். 

***
பொருளாதாரத்தில் சுயசார்பு:

     நமது நாட்டில் போதுமான மனித வளம், பொருள் வளம் மற்றும் நிதி ஆதாரங்கள் உள்ளன. இருப்பினும் நமது திட்டங்கள்- வெளிநாட்டு வளங்கள், வெளிநாட்டு இயந்திரங்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மூலதனத்தைச் சார்ந்திருக்கின்றன. மேலும், வெளிநாட்டு மூலப்பொருட்கள் மற்றும் சந்தையையும் அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. வேளாண்மை மற்றும் சுதேச தொழில்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. மேலும், ஒப்பந்த விதிமுறைகள் நமது நலன்களுக்கு முரணாகவும், சுயமரியாதைக்கு இழுக்காக இருப்பினும், வெளிநாட்டு ஒத்துழைப்புகள் வரவேற்கப்படுகின்றன. எனவே அவை, நமது பொருளாதாரத் திட்டங்களில் மட்டுமல்ல, நமது கல்வி மற்றும் அரசியல் கொள்கைகளிலும் செல்வாக்குச் செலுத்தி பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டுமானால், நாம் பொருளாதாரத்தில் சுயசார்பு அடைய வேண்டும். இது நமது எதிர்காலத் திட்டங்களின் அடித்தளமாக இருக்க வேண்டும்

***
உணவும் சுதந்திரமும்:

    இறக்குமதி என்பது நமது தற்போதைய பிரச்னைகளைக் களைவதற்கு நமக்கு உதவக்கூடும். ஆனால் பிரச்னைகளுக்கான உண்மையான தீர்வு நாட்டில் வேளாண்மை உற்பத்தியை அதிகரிப்பதில் உள்ளது. அதற்காக, நாம் போதுமான அளவு பாடுபடவில்லை என்பது அறிந்ததே. காலப்போக்கில் நாம் வெளிநாட்டு மூலதனத்தை அதிக அளவில் சார்ந்திருக்கிறோம். தற்போது ஏராளமான உணவு கிடைப்பதால், உள்நாட்டில் உற்பத்தியை உயர்த்துவதற்கு தனது முயற்சிகளில் அரசாங்கம் மனநிறைவு அடைந்திருக்கலாம் என்று நாம் அஞ்சுகிறோம். ‘சுதந்திரம் மற்றும் உணவு இரண்டுமே கிடைக்கும்’ என்பதை ஜனநாயக உலகில் போராடும் மக்களை உணரச் செய்ய மட்டுமே அமெரிக்கா இந்தக் கொள்கையைப் பின்பற்றுகிறது என அமெரிக்கத் தூதர் கருதுகிறார். ஆனால் நாம் விரும்புவது உண்மையான நமது சுதந்திரத்தையும் உணவையும் தான். ‘வெளிநாட்டு உணவிலிருந்து விடுதலை’ என்ற நமது பழைய முழக்கத்தைப் புதுப்பித்தால் மட்டுமே அது சாத்தியமாகும். வெளிநாட்டு மூலதனங்களைச் சார்ந்திருப்பது நம்மை ஏழ்மைப்படுத்தி சிக்க வைக்கும்.

***
நகரமயமாக்கலின் விளைவுகள்:

    மேற்கத்திய பொருளாதாரத்தின்படி, ஒரு நாட்டில் நகரமயமாக்கலின் அளவீடே- வளர்ச்சியின் அடிப்படையாகக் கருதப்படுகிறது. இந்தியாவிலும் பெருநகரங்களின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. மேற்கத்திய நாடுகளில், நகர வாழ்க்கை முறையானது பல சமூக, தார்மீக, அரசியல் மற்றும் சுகாதாரப் பிரச்னைகளை உருவாக்கியுள்ளது. அவற்றுக்காக, ஒரு பெரும் தொகை செலவிடப்படுகிறது. இந்தியாவின் தட்ப வெட்ப நிலையில், நெரிசலான வாழ்க்கை என்பது நமக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். பல கொடிய நோய்கள் பரவுவதற்கு இது ஒரு முக்கிய காரணமாகும். நமது நகரங்களிலும் சேரிகள் அதிகரித்து வருகின்றன. எனவே, இன்றைய காலங்களின் தேவை, புதிய நகரங்கள் அல்ல, கிராமங்களின் தொழில்மயமாக்கலே ஆகும்.

***
தொழில் பரவலாக்கம்:

    மையப்படுத்தப்பட்ட பெரிய அளவிலான தொழில்கள் மூலம் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டால், மூலதனத்தை உருவாக்குவதில் தொழிலாளியின் உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை. பரவலாக்கத்தில் உள்ள நன்மை என்னவென்றால், உபரி மதிப்பு அல்லது மூலதனத்தை நிர்வகிப்பதில் தொழிலாளிக்கு நேரடியான பங்கேற்பு உணர்வு இருக்கும்.

 ***
தொழிலாளர்களுக்கான சொத்துரிமை:


    கூட்டுப் பங்கு நிறுவனங்களில் பங்குதாரரான ஒருவர், அந்த நிறுவனத்துடன் அதன் லாபத்தில் ஒரு பங்கைத் தவிர வேறு எந்தத் தொடர்பும் அற்றவராக இருப்பினும் அந்தத் தொழிற்சாலையில் சொத்துரிமை கோரமுடியும். ஆனால், ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளி, அதன் இயந்திரங்களை இயக்கி, தனது வாழ்வாதாரத்திற்காக அதைச் சார்ந்திருக்கும் தொழிலாளி, அத்தொழிற்சாலையில் தன்னை ஒரு அன்னியனாக உணர்கிறார். இந்த உணர்வு சரியானதல்ல. எனவே பங்குதாரருடன் தொழிலாளிக்கும் சொத்துரிமைகளும் அதன் மேலாண்மை மற்றும் லாபத்தில் ஒரு பங்கும் வழங்கப்பட வேண்டியது அவசியமானதாகும்.

***
இயந்திரமும் தொழிலாளியும்:

    மூலதனத்தின் மிகப் பொதுவான வடிவம் இயந்திரங்கள் ஆகும். உற்பத்தியில் உடலுழைப்பைக் குறைப்பதற்கும், தொழிலாளியின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் இயந்திரங்கள் உருவாக்கப்பட்டன. எனவே இயந்திரங்கள் தொழிலாளியின் உதவியாளராக இருக்கின்றனவே தவிர அவரின் போட்டியாளராக அல்ல.

***
தொழிலாளர் சார்ந்த உற்பத்திச் செயல்முறை:

    இந்தியாவில் உற்பத்தி வழிமுறைகளைப் பற்றி நாம் சிந்திக்கும்போது, நமது உற்பத்திச் செயல்முறையானது உழைப்பு சார்ந்ததாக இருக்க வேண்டும் என்ற உறுதியான முடிவுக்கு வருகிறோம். முதலில் நாம் மூலதனப் பற்றாக்குறை நிலையில் இருக்கிறோம். தொழிலாளர் உழைப்பு திட்டங்களின் அடிப்படையில் அதை நிலையான மூலதனமாக மாற்றும்போது இந்த மூலதனம் நாட்டிலிருந்து வெளியேறுகிறது. மேலும் நமது பழைய இயந்திரங்கள் பயன்பாடற்றுப் போய்விட்டன. இது மூலதனத்தை இழப்பது மற்றும் வேலையின்மை வேகத்தை அதிகரிக்கின்றது. அதிகரித்து வரும் வேலையின்மை, பெரும்பாலான மக்களின் தரத்தைக் குறைக்கிறது. ஒரு சிக்கலான மேற்கத்திய உற்பத்திச் செயல்முறை ஒரு சிலருக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியும். ஆனால், அது நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய, ஒரு மாறும் செயல்முறையை இயக்க முடியாது. அத்தகைய தொழில் முறையை நாம் விரும்பினால், அது வேளாண்மையுடன் ஒத்துப்போக வேண்டும். மேலும், சிறு தொழில்களுக்குப் போதுமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

***
அர்த்தமுள்ள சுதந்திரம்:

    நமது கலாச்சார உணர்வை வெளிப்படுத்துவதற்கான ஓர் உபகரணமாக சுதந்திரம் மாறினால் மட்டுமே, அது அர்த்தமுள்ளதாக இருக்கும். இத்தகைய உணர்ச்சி வெளிப்பாடானது நமது முன்னேற்றத்திற்குக் காரணியாக மட்டுமின்றி, இதற்காக நாம் எடுக்கின்ற முயற்சி நமக்கு மகிழ்ச்சியையும் அளிக்கும். எனவே தேசிய மற்றும் மனித நோக்கிலிருந்து பாரதிய கலாச்சாரத்தின் கொள்கைகளைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டியது அவசியமாகும். அதன் உதவியுடன், மேற்கத்திய அரசியல் சிந்தனையின் பல்வேறு கருத்தியல்களை நாம் சரி செய்ய முயன்றால், அது நமக்குக் கூடுதல் நன்மையாக இருக்கும்.-

-பண்டிட் தீனதயாள் உபாத்யாயா

***

No comments:

Post a Comment