16/12/2021

கே.ஆர்.மல்கானி சொன்ன தீர்க்கச்சொல்

-திருநின்றவூர் இரவிக்குமார்



கே.ஆர்.மல்கானி
(1921 நவ. 19 - 2003 அக். 27)


    இந்திய ஜனநாயகத்தின் கரும்புள்ளி, இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடி நிலை. தேர்தல் முறைகேடு வழக்கில், அவர் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாதென அலஹாபாத் உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் அறிவித்ததையடுத்து, தன் பிரதமர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள அவர் தேசத்தின் மீது நெருக்கடி நிலையை அறிவித்தார். நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டதும் முதலில் கைது செய்யப்பட்டவர் பத்திரிகையாளர் கே.ஆர். மல்கானி. நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட 1975 ஜூன் 25 தேதியன்று இரவே அவர் கைது செய்யப்பட்டார்.

அவர் அப்போது மதர்லேண்ட் (தாய்நாடு) என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். அவரது கைதில் வேடிக்கையான வேதனை என்னவென்றால், முதலில் கைது செய்யப்பட்ட அவர்தான் ஜனவரி மாதத்திலேயே, “இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவிப்பார்; ஆர்எஸ்எஸ் தடை செய்யப்படும்; எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர்” என்று பத்திரிகையில் எழுதியிருந்தார். அப்போது யாரும் அதை தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை.
 
பம்பாயில் ஜனசங்கத் தலைவர்களில் ஒருவரான வசந்த் பண்டிட் என்பவர் ஒரு நல்ல ஜோதிடரும் கூட . அவர் கணித்துச் சொல்லியபடி தான் மல்கானி எழுதினார் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் முதலில் எச்சரிக்கை மணி அடித்த மல்கானிதான், முதலில் கைது செய்யப்பட்டார். அதேபோல, அவர்தான் கடைசியாகவும் விடுதலை செய்யப்பட்டார். 1977 மார்ச் 2 பொதுத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து இந்திராகாந்தி தோல்வியுற்ற பிறகே, அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இன்று பாகிஸ்தானில் இருக்கும் சிந்து மாகாணத்தில் உள்ள ஹைதராபாத் நகரில் 1921 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி பிறந்தவர், கேவல்ராம் ரத்தன்மால் மல்கானி. அங்குள்ள டி.ஜி. தேசிய கல்லூரியில் பட்டப்படிப்பும் இன்றைய மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பூனே நகரில் பெர்குசன் கல்லூரியில் பொருளாதாரம், சமூகவியல் படிப்பில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர். அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். சிறந்த பத்திரிகையாளர். பத்திரிகையாளர் சங்கத்தின் அகில இந்தியச் செயலாளராக இருந்தவர். மதர்லேண்ட் மட்டுமல்ல, ஆர்கனைசர் (ஆங்கிலம்),  பாஞ்சஜன்யா (ஹிந்தி) என்ற இரண்டு வார இதழ்களுக்கும் ஒரே நேரத்தில் ஆசிரியராக இருந்தவர். நல்ல எழுத்தாளர்; பல நூல்களை எழுதியுள்ளார்.



மல்கானி எழுதிய, ‘ஆர்எஸ்எஸின் கதை’ (The Story of RSS ) என்ற நூல் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தோற்றம், வரலாற்றைக் கூறுகிறது. இந்த நூலில் மகாத்மா காந்தி 1934 டிசம்பர் மாதம் 23 - 25 தேதிகளில் மகாராஷ்டிர மாநிலத்தில் வார்தாவில் நடந்த ஆர்எஸ்எஸ் முகாமிற்கு வந்தது; சங்கப் பிரார்த்தனையை ஸ்திதியில் நின்று பாடியது; தொண்டர்களிடையே ஜாதி வேறுபாடு இல்லாமல் பயிற்சிகளில் பங்கெடுப்பதைக் கண்டு வியந்தது; ராமர், கிருஷ்ணர் தவிர்த்து இதர தெய்வப் படங்கள் விற்பனையகத்தில் இல்லாததற்கு விளக்கம் கேட்டுப் பெற்றது; மறுநாள் ஆர்எஸ்எஸ் ஸ்தாபகர் டாக்டர் ஹெட்கேவாருடன் கலந்துரையாடியது; சங்கத் தொண்டர்களுக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையேயான வேறுபாட்டைப் பற்றிய விவாதம்; சங்கச் செயல்முறையைப் பாராட்டியது; சங்கத்தை காங்கிரஸுடன் இணைக்க முடியுமா எனக் கேட்டது என ஆர்எஸ்எஸ் பற்றிய பல விஷயங்கள் விரிவாகவும் விவரமாகவும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

‘நடுநிசியில் கதவிடிப்பு’ (The Midnight Knock) என்ற நூல், நெருக்கடி காலகட்ட நடப்புகளை, அநீதிகளை எடுத்துரைக்கிறது. 

மல்கானி ஒரு சிந்தி.  ‘சிந்தியின் கதை’ (Sindu Story) என்பது, அவர் பிறந்த நகரம். அதன் புவியியல். அந்த மக்களின் கலாச்சாரம், சிறப்பு என சிந்தி மக்களைப் பற்றி கூறுகிறது. ஏறத்தாழ ஒரு இனவரைவியல் நூல் என்றே கூறலாம். ஆனால் அலுப்புத் தட்டாமல் சுவாரசியமாக எழுதப்பட்டுள்ளது.

‘அரசியல் மர்மங்கள்’ (Political Mystries) என்ற நூல் மகாத்மா காந்தி, ஜனசங்கத்தின் நிறுவனர் டாக்டர் ஷியாம் பிரசாத் முகர்ஜி, பண்டித தீனதயாள் உபாத்யாயா, இந்திராகாந்தி , ராஜீவ்காந்தி கொலைகள் பற்றியும், கனிஷ்கா விமான தகர்ப்பு, (மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள) புருலியா ஆயுத வீச்சு போன்றவற்றின் மீதும் வெளிச்சம் பாய்ச்சுகிறது. அவர் வாழ்நாளின் இறுதிக் கட்டத்தில் எழுதிய ‘முதலில் இந்தியா’ (India First) என்ற நூல் தேசத்தை முன்னிறுத்துவது.

1980இல் பாரதிய ஜனதா கட்சி துவங்கிய போது அதன் நிறுவனர்களில் ஒருவராக கே.ஆர்.மல்கானி இருந்தார். அக்கட்சியின் துணைத் தலைவர், பேச்சாளர், செய்தித் தொடர்பாளர், என பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டவர். 1994 முதல் 2000 வரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார். 

2002 ஜூன் மாதத்தில் பாண்டிச்சேரியின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். மாநிலத்தில் ஆளும் கட்சியான காங்கிரஸே பாராட்டும்படியாக மாநில வளர்ச்சிக்குப் பாடுபட்டார். பதவியில் இருந்தபோதே, 2003 அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி காலமானார்.

1993 ஜூன் மாதத்தில் நடந்த பாஜக மாநாட்டில் காஷ்மீர் பற்றிய தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார் மல்கானி. அப்பொழுது அரசியல் சாசனப் பிரிவு 370 தற்காலிகமானது என்றும், மாறுதலுக்குட்பட்டது என்பதையும் கூறியதுடன், “ஒருசமயம்  பாஜக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெறும், அப்பொழுது அச்சட்டம் நீக்கப்படும்” என்றார். 

அவர் அதைச் சொல்லியபோது அயோத்யாவில் சர்ச்சைக்குரிய கட்டடம் தகர்ப்பு, மூன்று பாஜக மாநில அரசுகள் கலைப்பு என இந்திய அரசியல் களத்தில் பாஜக தோல்வி முகத்தில் இருந்தது. அந்தச் சூழ்நிலையில் அவர் கூறியது ஆவேசப்பேச்சாகத் தெரிந்தாலும் இன்று தீர்க்கதரிசனமாகி உள்ளது. 2014 லேயே பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்தாலும்கூட, இரண்டாம் முறை மேலும் அதிக இடங்கள் கிடைத்த பின்னரே 2019 ஆகஸ்ட் 6 தேதிதான் சட்டப் பிரிவு நீக்கப்பட்டது. அதற்குக் காரணம் சட்ட சூழ்நிலை மட்டுமல்ல, சாதுriயமும் கூட.

(இந்த ஆண்டு. திரு. கே.ஆர்.மல்கானியின் நூற்றாண்டு)



No comments:

Post a Comment