16/12/2021

ஆதிசங்கரரின் நிர்வாண ஷட்கம் (தமிழாக்கம்)

-ஜடாயு



அறிமுகம்:

ஞானத் தேடலும் ஆன்மிக வேட்கையும் கொண்ட ஒவ்வொரு உள்ளத்திலும் அதிர்வையும் சிலிர்ப்பையும் ஆனந்தத்தையும் அமைதியையும் அளிக்கும் பாடல், நிர்வாண ஷட்கம் எனப்படும் ஆத்ம ஷட்கம். 

இந்த மகத்தான பாடலை காலந்தோறும் வேதாந்திகள் பாடி வந்துள்ளனர். எண்ணற்ற மொழிபெயர்ப்புகள், இசை வடிவங்களில் இப்பாடல் வெளிவவந்துள்ளது. இங்கு நீங்கள் காண்பது எனது ஒரு முயற்சி.

உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவனும் ‘யான்’ என்பதை இயல்பிலேயே அனுபவித்து உணர்கிறது என்றாலும் அதன் உண்மை ஸ்வரூபத்தை அறிவதில்லை. உடல், மனம், அறிவு என்று ஒவ்வொன்றாக அதன்மீது படிந்துள்ள அடுக்குகளையே யான் என்று கருதுகிறது. அவை யாதொன்றும் ஆத்மாவாகாது; அவற்றுடன் தொடர்புடையது போல் தோன்றினாலும் அவற்றிலிருந்தும் வேறுபட்ட உணர்வு நிலையே (சைதன்யம்) ஆத்மா.

‘இதுவல்ல இதுவல்ல’ (நேதி நேதி) என்ற வழிமுறை மூலம் இந்த தரிசனத்தைச் சுட்டுகிறது இந்தப் பாடல். வேதாந்தத் தத்துவம் முழுமையுமே இப்பாடலுக்கான விளக்கமாக அமைந்துள்ளது.

சம்ஸ்க்ருத மூலம்:

மனோபு³த்³த்⁴யஹங்காரசித்தானி நாஹம்ʼ
ந ச ஶ்ரோத்ரஜிஹ்வே ந ச க்⁴ராணனேத்ரே ।
ந ச வ்யோமபூ⁴மி꞉ ந தேஜோ ந வாயு꞉
சிதா³னந்த³ரூப꞉ ஶிவோ(அ)ஹம்ʼ ஶிவோ(அ)ஹம் ॥ 1॥

ந ச ப்ராணஸஞ்ஜ்ஞோ ந வை பஞ்சவாயு꞉
ந வா ஸப்ததா⁴துர்ன வா பஞ்சகோஶ꞉ ।
ந வாக் பாணிபாதௌ³ ந சோபஸ்த²பாயூ
சிதா³னந்த³ரூப꞉ ஶிவோ(அ)ஹம்ʼ ஶிவோ(அ)ஹம் ॥ 2॥

ந மே த்³வேஷராகௌ³ ந மே லோப⁴மோஹௌ
மதோ³ நைவ மே நைவ மாத்ஸர்யபா⁴வ꞉ ।
ந த⁴ர்மோ ந சார்தோ² ந காமோ ந மோக்ஷ꞉
சிதா³னந்த³ரூப꞉ ஶிவோ(அ)ஹம்ʼ ஶிவோ(அ)ஹம் ॥ 3॥

ந புண்யம்ʼ ந பாபம்ʼ ந ஸௌக்²யம்ʼ ந து³꞉க²ம்ʼ
ந மந்த்ரோ ந தீர்த²ம்ʼ ந வேதா³ ந யஜ்ஞா꞉ ।
அஹம்ʼ போ⁴ஜனம்ʼ நைவ போ⁴ஜ்யம்ʼ ந போ⁴க்தா
சிதா³னந்த³ரூப꞉ ஶிவோ(அ)ஹம்ʼ ஶிவோ(அ)ஹம் ॥ 4॥

ந மே ம்ருʼத்யுஶங்கா ந மே ஜாதிபே⁴த³꞉
பிதா நைவ மே நைவ மாதா ந ஜன்ம ।
ந ப³ந்து⁴ர்ன மித்ரம்ʼ கு³ருர்னைவ ஶிஷ்ய꞉
சிதா³னந்த³ரூப꞉ ஶிவோ(அ)ஹம்ʼ ஶிவோ(அ)ஹம் ॥ 5॥

அஹம்ʼ நிர்விகல்போ நிராகாரரூபோ
விபு⁴ர்வ்யாப்ய ஸர்வத்ர ஸர்வேந்த்³ரியாணாம் ।
ந சாஸங்க³தம்ʼ நைவ முக்திர்ன ப³ந்த⁴꞉
சிதா³னந்த³ரூப꞉ ஶிவோ(அ)ஹம்ʼ ஶிவோ(அ)ஹம் ॥ 6॥

எனது தமிழ் விளக்கம்:

மனம், புத்தி
தன்னுணர்வு சித்தம்
அல்ல யான்
நா செவிகள் அல்ல
நாசி விழிகள் அல்ல
விண்ணும் மண்ணுமல்ல
ஒளியும் காற்றுமல்ல
சிதானந்த ரூபச் சிவம் யான்
சிவம் யான்.

மூச்சல்ல யான்
ஐந்து உயிர்க்காற்றுகளல்ல
ஏழு தாதுக்களல்ல
ஐந்து கோசங்களல்ல
வாக்கல்ல
கரங்களும் கால்களுமல்ல
குதமும் குறியுமல்ல
சிதானந்த ரூபச் சிவம் யான்
சிவம் யான்.

வெறுப்பில்லை எனக்கு
விருப்பில்லை
ஆசையில்லை எனக்கு
மோகமில்லை
செருக்குமில்லை எனக்கு
பொறாமையுமில்லை
அறமில்லை பொருளில்லை
இன்பமில்லை வீடுமில்லை
சிதானந்த ரூபச் சிவம் யான்
சிவம் யான்.

புண்ணியமில்லை
பாவமில்லை
சுகமில்லை
துக்கமில்லை
மந்திரமில்லை தலமில்லை
வேதங்களில்லை வேள்விகளில்லை
துய்ப்பல்ல யான்
துய்ப்போனும் துய்பொருளும் அல்ல
சிதானந்த ரூபச் சிவம் யான்
சிவம் யான்.

மரணபயமில்லை எனக்கு
சாதிபேதமில்லை
தந்தையில்லை எனக்கு
தாயில்லை
பிறப்புமில்லை
உறவில்லை நட்பில்லை
குருவில்லை சீடனுமில்லை
சிதானந்த ரூபச் சிவம் யான்
சிவம் யான்.

விகற்பமற்றோன் யான்
உருவற்றோன்
எங்கெங்குமாய்
எல்லாப் புலன்களிலுமான
வியாபகத்தினால்
எனது தொடர்பற்றது
என ஒன்றும் இல்லை
முக்தியுமில்லை பந்தமுமில்லை
சிதானந்த ரூபச் சிவம் யான்
சிவம் யான்.

No comments:

Post a Comment