16/12/2021

உத்தரபாரா உரை உரைப்பது என்ன?

-திருநின்றவூர் இரவிக்குமார்


(அரவிந்தம்- 150)


    1908 மே மாதம் 1ஆம் தேதி வங்காளத்தில் உள்ள முசாபர்பூர் என்ற இடத்தில் தேசியவாத இளைஞர்களின் குண்டுவீச்சில் இரண்டு வெள்ளைக்காரப்  பெண்கள் இறந்தனர். மறுநாள், இந்தச் சம்பவத்திற்கு சற்றும் தொடர்பில்லாத, ஸ்ரீ அரவிந்தரை ஆங்கில அரசு வேண்டுமென்றே கைது செய்தது. மே 5ஆம் தேதி அலிப்பூர் சிறைச்சாலைக்கு கொண்டு சென்றது. அங்கு 9 அடி நீளமும், 5 அடி அகலமும், ஜன்னல்கள் ஏதுமற்ற தனிமைச் சிறையில் அவரை அடைத்தது.

ஓராண்டு காலத்திற்குப் பிறகு, 1909 மே மாதம் ஆறாம் தேதி, குற்றமற்றவர் என்று அவரை விடுதலை செய்தது. அவருடன் கைது செய்யப்பட்ட பலரும் ஆயுள் தண்டனையும், சிலர் தூக்கு தண்டனையும் பெற்றனர். ஓரிருவர் வழக்கு முடிவதற்குள் சிறைச்சாலையிலேயே இறந்து போய்விட்டனர்.

சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு ஸ்ரீ அரவிந்தரை மக்கள் பல்வேறு இடங்களில் அழைத்து வரவேற்பு விழா நடத்தினர். அவ்வாறான பாராட்டுக் கூட்டம் ஒன்று கல்கத்தா நகருக்கு வெளியே இருந்த ‘உத்தரபாரா’ என்ற இடத்தில் தர்ம ரக்க்ஷணி சபை சார்பில் நடத்தப்பட்டது. 1909 மே 30 தேதியில் நடந்த அந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ அரவிந்தர் தனது சிறைவாசத்தை பற்றியும், அதில் தனக்கு கிடைத்த அனுபவங்கள் பற்றியும், அவர் வாழ்க்கைக்கு கிடைத்த வழிகாட்டல் பற்றியும், விவரமாகக் கூறியுள்ளார். அது மிகவும் முக்கியமானதொரு உரை. 


சிறையில் இருந்தபோது அவர் யோகத்தில் ஆழ்ந்திருந்தார். அவருக்கு சில வழிகாட்டுதல்கள் கிடைத்தன. அது பற்றி அவர் கூறியது:

 “யோகத்தில் அவனுடன் (இறைவன்) உட்கலந்தபோது இரு வாக்குகள் கிடைத்தன. முதல் வாக்காவது: நான் உனக்கு ஒரு வேலை கொடுத்திருக்கிறேன். இந்த சமுதாயத்தை உயர்த்துவதற்கு* உதவுவதே அந்த வேலை. விரைவிலேயே நீ சிறையை விட்டு வெளியேறும் நாள் வரும். ஏனெனில் இந்த தடவை நீ தண்டிக்கப்பட வேண்டுமென்பதோ, பிறர் செய்ய வேண்டியிருப்பதைப் * போல் நாட்டுக்காக நீயும் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டுமென்பதோ எனது இச்சையன்று. நான் உன்னை எனது வேலை செய்ய அழைத்திருக்கிறேன்; நீ வேண்டிக்கொண்ட ஆவேசம் அதுதான். போய் உன் வேலையைச் செய்வதற்காக இதோ எனது ஆதேசத்தைத் (கட்டளையை)* தந்தேன்.”

அதாவது தேசத்தை அன்னியர் ஆட்சியில் இருந்து விடுதலை பெறச் செய்வது அல்ல, மாறாக, பாரதத்தை உயர்த்துவது என்பதே இறைவனின் எண்ணம்.

மற்றவர்களைப்போல போராட்டம், ஆர்ப்பாட்டம், பிறருக்காக துன்பங்களை அனுபவித்துக் கொண்டு ஸ்ரீ அரவிந்தரும் தன் வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்பது இறைவனின் விருப்பம் அல்ல. அதுமட்டுமன்றி ஸ்ரீ அரவிந்தர் தனது விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளும் உரிமையையும் கொடுக்கப் படவில்லை. மாறாக இதுவன்றி வேறில்லை என்று தெளிவாக கட்டளையிடப்பட்டுள்ளது.

 “பிறகு திடீரென்று ஒரு நிகழ்ச்சி நடந்தது. கணப்பொழுதில் என்னை தனிச் சிறையில் தனிமையில் தள்ளினர். அந்த தனிச் சிறைவாசத்தின் போது எனக்கு ஏற்பட்டதைச் சொல்வதற்கு ஆணை பிறக்கவில்லை. ஆனால் இதை மட்டும் சொல்லலாம். ஒவ்வொரு நாளும் அவன் தனது அற்புதங்களை எனக்கு காட்டி, ஹிந்துமதம் முற்றிலும் உண்மை என்பதை நான் அறியும்படி செய்தான்.”

 “அந்த சமயத்தில், நான் கடவுளை அணுகும்போது, அவன் இருக்கிறான் என்ற உயிருள்ள நம்பிக்கை என்னிடம் இருந்தது என்று சொல்ல முடியாது. என்னிடம் உலகாதாய கருத்துக்களும், நாஸ்திக எண்ணங்களும், சந்தேக மனப்பான்மையும் இடம் பெற்றிருந்தன. கடவுள் ஒருவன் இருக்கிறான் என்ற நிச்சயம் எனக்கில்லை. அவனுடைய சாந்நித்தியத்தை நான் சிறிதும் உணரவில்லை.”

 “எனக்கு பல சந்தேகங்கள் இருந்தன. நான் இங்கிலாந்தில் அந்நிய கருத்துக்களிடையே முற்றிலும் அந்நிய சூழ்நிலையில் வளர்ந்தேன். முன்பு நான் இந்து மதத்திலுள்ள பல விஷயங்களை வெறும் கற்பனைகள் என்றும், கனவுகள் என்றும், அதில் சொல்லப் பட்டிருப்பவற்றுள் பல மதிமயக்கத்தினால் எழுந்தவை என்றும், வெறும் மாயை என்றும் எண்ணியிருந்தேன். ஆனால் இப்பொழுது ஒவ்வொரு நாளும் என் மனத்திலும், என் உள்ளத்திலும், என் உடலிலும் இந்து மதத்தின் உண்மைகளை உணரலானேன்.”

ஹிந்து மதத்தின் உண்மைகளையும், உயர்வையும் இறைவன் ஸ்ரீ அரவிந்தர் அறியும்படி செய்தான். எப்படிப்பட்ட அரவிந்தருக்கு அறிவுறுத்தினான்?

ஹிந்து மதத்தை எள்ளலாகக் கருதிய, இறை நம்பிக்கையற்ற (Agonostic), நாத்திக வாதத்தில் பாறை போல உறுதியாக இருந்தவரிடம் இறைவன் தான் படைத்த இந்து மதத்தின் உயர்வை உணர்த்தினான். ஹிந்து மதம் என்று இறைவன் அரவிந்தருக்கு உணர்த்தினான்?

 “இரண்டாவது திருவாக்காவது: உனது ஓராண்டு சிறைவாசத்தில் உனக்கு சில விஷயங்கள் காட்டப்பட்டன. ஹிந்து மதத்தை பற்றி உனக்கு பல சந்தேகங்கள் இருந்தன; இப்போது அதன் உண்மை உனக்கு காட்டப்பட்டது. இந்து மதத்தையே நான் உலகின் முன் உயர்த்திக் கொண்டிருக்கிறேன். இந்த மதத்தையே நான் ரிஷிகள் மூலமாகவும் பக்தர்கள் மூலமாகவும் அவதார புருஷர்கள் மூலமாகவும் பூரணமாக அபிவிருத்தி செய்துள்ளேன். இந்த மதம் இப்பொழுது உலக நாடுகளிடையே எனது வேலையைச் செய்யப் போகிறது. எனது வாக்கை உலக மக்களிடம் எடுத்துச் செல்லவே நான் இந்த நாட்டை உயர்த்திக் கொண்டிருக்கிறேன். அந்த வாக்கே சனாதன தர்மம்.”

இந்துமதம் என்பது மேற்கத்திய வரையறைகளின்படியான ஒரு மதமல்ல. இதைத் தோற்றுவித்தவர் என்றொரு மனிதரும் கிடையாது. இதை வரையறுத்துக் கூறும், ஒரே நெறிநூல் என்பதும் கிடையாது.

உலகில் எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா சூழ்நிலைகளிலும் மாறாமல் நிரந்தரமாக இருக்கும் சில விஷயங்கள் உண்டு. அதை சனாதன தர்மம் என்று கூறுவார்கள். அந்த சனாதன தர்மமே ஹிந்து மதம். அந்த தர்மத்தை ஏற்று வாழும் வாழ்வியல் முறைதான் ஹிந்துத்துவம். இப்படித்தான் இந்து மதத்தை, இந்துத்துவத்தை தனக்குக் காட்டி அருளினான் இறைவன் என்கிறார் ஸ்ரீ அரவிந்தர்.

அதற்கும் இந்தியாவை உலக நாடுகளின் முன்பாக உயர்த்துவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று கேள்வி எழுகிறது. அதுபற்றி அரவிந்தர் உத்தரபாரா உரையில் என்ன சொன்னார்?...

 “ஆகவே இந்தியா எழுகின்றது என்று சொன்னால் சனாதன தர்மம் எழுகின்றது என்றுதான் பொருள்; இந்தியா பெருமை பெறும் என்று சொன்னால், பாரதமாதா அகண்ட பாரதமாக விரிவடை வாள் என்று சொன்னால், சனாதன தர்மம் விரிந்து பரவும் என்று தான் பொருள். பாரததேவி தர்மத்துக்காகவே, தர்மத்தாலேயே வாழ்கிறாள். சமயத்தை மேன்மை படுத்துதல் என்றால் நாட்டை மேன்மை படுத்துவது என்பது தான் பொருள்.”

இந்தியா என்றால் ஹிந்து; ஹிந்து என்றால் சனாதனம். இந்துக்களின் இந்த விழிப்புணர்வே இந்தியாவின் எழுச்சி; இந்தியாவின் மேன்மையே சனாதனத்தின் உயர்வு. ரிஷிகள், பக்தர்கள், அவதார புருஷர்கள் மூலமாக பூரணமாக வளர்த்தெடுக்கப்பட்ட இந்து மதத்தையே நான் உலகின் முன் உயர்த்தி கொண்டிருக்கிறேன். இதுதான் கடவுள் ஸ்ரீ அரவிந்தருக்கு சொன்னது.

இதை ஏன் செய்ய வேண்டும் என்று கேள்வி எழுகிறது. அதற்கு ஸ்ரீ அரவிந்தருக்கு கிடைத்த பதில் என்ன?

 “உன்னுடைய நாத்திக, அவநம்பிக்கைகளுக்குப் பதில் அளித்துள்ளேன். அந்தப் பதில்களை நீ திருப்தியுடன் ஏற்கும் விதத்தில் உனக்கு உள்ளும் புறமும் நிருபணங்களை அளித்துள்ளேன். எனவே உன் நாட்டு மக்களுக்கு, அவர்கள் எழுச்சி பெறுவது அவர்களுக்காக அல்ல, சனாதன தர்மத்திற்காகவே என்பதை சொல். சாதனத்தின் எழுச்சி - இந்தியாவின் எழுச்சி - உலகத்திற்காக என்பதை சொல். அவர்களுக்கு சுதந்திரம் அளிப்பேன் ; அது உலகத்திற்கு சேவை செய்வதற்காக என்பதைச் சொல்.”

இந்தியர்கள் அனைவரும் சனாதன வாழ்வியல் முறையைப் பின்பற்ற வேண்டும். அதன்மூலம் இந்தியா மேன்மை அடையும். அது உலகத்திற்கு முன்னுதாரணமாக அமையும். எல்லா வகையிலும் இந்தியா உலகத்திற்கு சேவை செய்யும் ; உலகை உயர்த்தும். உலகை உயர்த்துவதற்காகதான் இந்தியா வாழ்கிறது. தர்மத்துக்காகவே இந்தியா வாழ்கிறது. இதையே இறைவன் தம்மிடம் கூறியதாக ஸ்ரீ அரவிந்தர் உரையில் குறிப்பிட்டுள்ளார்.

1909 லேயே இந்தியா சுதந்திரம் பெறும் என்றும் உறுதியாக ஸ்ரீஅரவிந்தர் கூறியுள்ளார். அது, பிளவுபட்ட, அரசியல் சுதந்திரமாக இல்லாமல் பரிபூரண சுதந்திரமாக அமையவேண்டும்; அந்த சுதந்திரம் இந்தியாவுக்காக அல்லாமல் மனிதகுல மேன்மைக்காக, உலகம் முழுமையாக்காக இருக்க வேண்டும்; அதற்காகத் தான் பாடுபட வேண்டும் என்பது இறைவன் தனக்கிட்ட ஆணை என்று ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்.

அதற்கு என்ன வழி ? அதைக் கண்டடைய அவர் தவம் செய்தது, தமிழ் மண்ணான பாண்டிச்சேரி. கண்டடைந்து கூறியது, பரிபூரண யோகம்.

அரவிந்தர் தன் வாழ்வின் அர்த்தத்தையும் நோக்கத்தையும் மட்டுமல்ல, இந்திய தேசம் பயணிக்க வேண்டிய பாதையையும் தனது உத்தரபாரா உரையில் தெளிவுபடக் கூறி உள்ளார் என்றால் அது மிகையல்ல.



காண்க:


No comments:

Post a Comment