16/12/2021

தமிழ்த் திரைப்படப் பாடல்களில் மகாகவி பாரதி

-சேக்கிழான்


(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 69)
    
    மகாகவி பாரதி, வரகவி. பாலப் பருவத்திலேயே யாப்பிலக்கணத்துடன் கூடிய செய்யுள்களையும் தாளகதியுடன் கூடிய பாடல்களையும் எழுதும் வல்லமை பெற்றிருந்தவர். ஆனால், அவரது வாழ்நாளில் அவரது கவிதைகள் பெற்றிருக்க வேண்டிய முழுமையான மரியாதையைப் பெறவில்லை என்பது பொதுவானதொரு கருத்து. ஏனெனில், அன்றைய கால ஆங்கிலேய ஆட்சியை பாரதி எதிர்த்த காரணத்தால், அவரது கவிதைகள் மீதான தடை இருந்தது. அதையும் மீறித்தான் அவரது தேசபக்திப் பாடல்கள் சுதந்திரப் போர்க்களத்தில் வீறுடன் பாடப்பட்டன.

தனது பாடல்களை பாரதியே ராகத்துடன் பல பொதுக்கூட்டங்களில் பாடியிருக்கிறார். தனது பல இசைப் பாடல்களுக்கு ராகம், தாளம், ஸ்வர வரிசையையும் கூட பாரதி எழுதி வைத்திருக்கிறார். எஸ்.ஜி.கிட்டப்பா போன்றோரின் அக்கால நாடக மேடைகளில் பாரதியின் பாடல்கள் ஒலித்துள்ளன.

பாரதியின் எழுத்துலகில் அவரது கவிதைகளின் பங்களிப்பு சுமார் 10 சதவிகிதம் மட்டுமே. அவரது பத்திரிகைப் பணிகளில் செய்திக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், சிறுகதைகள், புதினங்கள், மதிப்புரைகள், கடிதங்கள், சித்திர விளக்கங்கள், வரலாற்றுக் கட்டுரைகள் ஆகியவற்றை இன்னமும் தமிழ் மக்கள் அனைவரும் அறிந்தாரில்லை.

போலவே, அவரது ஒட்டுமொத்தக் கவிதைகளில் தேசபக்திப் பாடல்களின் எண்ணிக்கை சுமார் ஐந்து சதவிகிதம் மட்டுமே. அவரது கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, ஸ்வசரிதை, வசன கவிதை, பக்திப் பாடல்கள், ஞானப் பாடல்கள், பாஞ்சாலி சபதம், தனிப்பாடல்கள் போன்றவை பாரதியின் அற்புதமான கவித்துவ ஆளுமைக்கு அடையாளங்களாக மிளிர்கின்றன. இதனையும் தமிழ் மக்கள் பலரும் அறியாதிருப்பது தான் தமிழின் அவலம்.
 
அள்ள அள்ளக் குறையாத செல்வம்:

    தனது குறுகிய வாழ்நாளில் அவர் நிகழ்த்திச் சென்ற சாதனைகளை நாம் எட்ட வேண்டுமானால், அதற்கு தெய்வ வரம் வேண்டும். குறைந்தபட்சம், அவரது படைப்புகள் அனைத்தையும் படிக்கவே தெய்வீக அருளிருந்தால் தான் இயலும். அத்தனையையும் எழுதிக் குவித்திருக்கிறார்.

அதுபோலவே, பாரதியின் பாடல்கள் மக்களைக் கவர்ந்த காரணத்தால் பல திரைப்படங்களிலும் இடம் பெற்றிருக்கின்றன. கடந்த பல ஆண்டுகளில் பாரதியின் கவிதைகள் பல தமிழ்த் திரைப்படங்களில் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால், தமிழ் இலக்கிய உலகின் மெத்தனத்தால், தமிழின் தவப்புதல்வரான மகாகவி பாரதியின் திரைப்பாடல்களின் பட்டியல் கூட முழுமையாக நம்மிடம் இல்லை என்ற வேதனையை இங்கு பதிவு செய்தாக வேண்டியுள்ளது.

தமிழ்த் திரையுலகின் ஆரம்பம் 1905இல் சாமிக்கண்ணு வின்சென்டின் சினிமா முயற்சிகளுடன் துவங்கினாலும், 1916இல் சென்னையில் தயாரிக்கப்பட்ட ‘கீசகவதம்’ தான் முதல் திரைப்படம் என்ற பெருமையைப் பெறுகிறது. ஆனால் அப்போது படத்தின் ஒளிக்காட்சிகள் மட்டுமே இருந்தன. 1931இல் தான் முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’ வெளியானது.

திரைப்படம் என்ற ஊடகத்தின் சிறப்பு குறித்து மகாகவி பாரதி என்ன கருத்துக் கொண்டிருந்தார் என்பதை அறிய முடியவில்லை. 1916 முதல் 1920 வரையிலான காலகட்டத்தில் புயலில் அகப்பட்ட தோணி போல அவர் அலைக்கழிக்கப்பட்டிருந்தார். 1920 முதல் 1921இல் தனது வாழ்வின் இறுதி வரை சுதேசமித்திரன் இதழில் பணிபுரிந்தார். எனவே, அவரது திரைப்படம் குறித்த பார்வையை அறிய முடியவில்லை. ஆனால், அவரே எதிர்பாராத விதமாக கடந்த 86 ஆண்டுகளாக அவரது கவிதைகள் பல தமிழ்த் திரைப்படங்களில் இன்னிசையுடன் பாடல்களாக ஒலித்து வருகின்றன.

தமிழில் பேசும் படங்கள் வெளிவந்ததை (1931) அடுத்த நான்கே ஆண்டுகளில், பாரதியின் கவிதை முதன்முதலாக திரையுலகில் பயன்படுத்தப்பட்டது. அந்தப் பாடல், ‘வாழ்க நிரந்தரம், வாழ்க தமிழ் மொழி, வாழிய வாழியவே’. படம்: ‘மேனகா’ (1935). அந்தக் காலத்தில் பாரதியின் கவிதைகள் மீது ஆங்கிலேய அரசு தடை விதித்திருந்த காலம். என்றபோதும், இப்பாடலை பள்ளிப் பெண்கள் சேர்ந்து பாடுவதாக திரைப்படத்தில் சமயோசிதமாக அமைத்திருந்தனர். ராஜா சாண்டோ இயக்கத்தில், டி.கே.எஸ்.சகோதரர்களின் மேடை நாடகம் திரைப்படமானபோது, இப்பாடல் அதில் இடம் பெற்றது.

காங்கிரஸ் அரசு ஜுலை 1937ல் பதவிக்கு வந்தவுடன், தேசிய உணர்ச்சியைத் தடை செய்யும் திரைப்படத் தணிக்கை விதிகள் தளர்ந்தன. கவிஞர் ச.து.சு.யோகியார் இயக்கிய ‘அதிர்ஷ்டம்’ படத்தில் (1939), பாரதியாரின் ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ இடம்பெற்றது. மாடர்ன் தியேட்டர்ஸின் ‘உத்தமபுத்திர’னில் (1940) ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’ என்ற பாடலை பி.யு.சின்னப்பா பாடினார்.

1937இல் வெளிவந்த ‘நவயுகன் அல்லது கீதாசாரம்’ பட்த்தில் பாரதி பாடல் பயன்படுத்தப்பட்டதாக தகவல் உள்ளது. ஆனால் எந்தப் பாடல் என்று தெரியவில்லை. அதற்கான ஆதாரங்களும் கிடைக்கவில்லை.

பாரதி பாடல்களுக்கு உரிமைப் போர்:   

    பாரதியின் பாடல்களை இசைத்தட்டிலும் வேறு வகையிலும் பதிவு செய்யும் உரிமையை, பிரபல நகை வர்த்தக நிறுவனமான சுராஜ்மல் அண்ட் சன்ஸ் ரூ. 600க்கு வாங்கி வைத்திருந்தது. அந்த நிறுவனம் ‘பிராட்காஸ்ட்’ என்ற பெயரில் 1934லிருந்து வெளியிட்ட இசைத்தட்டுகளுக்காக அந்த ஒப்பந்தத்தைச் செய்திருந்தது.


அச்சமயத்தில் காரைக்குடியில் சொந்த ஸ்டூடியோ நிறுவியிருந்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார், தேசியம் பேசிய ‘நாம் இருவர்’ என்ற நாடகத்தை 1946இல் படமாக்க முடிவு செய்தார். அந்த நாடகக் கதையுடன், ‘ஆடுவோம பள்ளு பாடுவோமே’, ‘விடுதலை விடுதலை’, ‘அச்சமில்லை அச்சமில்லை’ முதலிய பாரதி பாடல்கள் அழகாகப் பின்னப்பட்டிருந்தன. நாடு சுதந்திரம் அடைந்துவிடும் என்ற எண்ணம் எங்கும் பரவியிருந்த காலம் அது. இந்தத் தருணத்தில், பாரதி பாடல்களுடன் தனது திரைப்படம் வெளியாக வேண்டும் என அவர் விரும்பினார். அதற்காக, சுராஜ்மல் நிறுவன உரிமையாளர் ஜெயசிங்கலால் மேத்தாவிடம் பேரம் பேசி, ரூ. 10,000 கொடுத்து அதன் உரிமையை அவர் பெற்றார். வாழ்நாளெல்லாம் குறைந்த செல்வத்தையே கண்ட அந்த மகாகவியின் பாடல்களுக்கு அவர் மறைந்து 25 ஆண்டுகள் கழிந்து பெரும் மதிப்பு ஏற்பட்டிருந்தது.

1947 ஜன. 12இல், ‘நாம் இருவர்’ வெளிவந்தது; ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று ஆடுவோமே’ என்று - சுதந்திரத்துக்கு இன்னமும் 8 மாதங்கள் இருக்கையிலேயே - பாடியது. டி.கே.பட்டம்மாளின் கம்பீரமான குரல் பின்னணியில் ஒலிக்க, குமாரி கமலா நடனம் ஆடினார். படத்தில், ‘விடுதலை விடுதலை விடுதலை’ என்று பாரதி பாடலை முழங்கினார் டி.ஆர்.மகாலிங்கம். பாரதியைப் புகழ்ந்து ஒரு சிறு சொற்பொழிவும் ஆற்றினார். அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. பாரதியின் பாடல்கள் திரையுலகில் முக்கியத்துவம் பெறத் துவங்கின.

இதனிடையே, டி.கே.எஸ். சகோதரர்கள் தங்கள் ‘பில்ஹணன்’ படத்தில் (1948) பாரதியின் ‘தூண்டிற் புழுவினைப் போல்’ பாடலைச் சேர்த்தார்கள். அப்போது திரைப்படப் பாடல் உரிமை தொடர்பான வழக்கு ஏற்பட்டது. ஆயினும் பில்ஹனன் திரைப்படத்துக்கு தடைவிதிக்கக் கோரிய ஏவிஎம் நிறுவனத்தின் வழக்கில், நீதிபதி தடை விதிக்க மறுத்துவிட்டார். அதேசமயம், பாரதி பாடல்களைத் தனியாரிடமிருந்து விடுவிக்க ஓர் இயக்கத்தை ஆரம்பித்துவிட்டார் டி.கே.சண்முகம். அதற்கு எழுத்தாளர்கள் பலரும் துணை நின்றனர்.

அதையடுத்து, அன்றைய முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பாரதி பாடல்கள் நாட்டுடைமையாக்கப்படுவதாக 1949இல் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, 1949 மார்ச் 12இல் முதல்வரை நேரில் சந்தித்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார், மிகுந்த பெருந்தன்மையுடன், தன் வசமிருந்த பாரதி பாடல் உரிமைகளை விலைபேசாமல் அரசிடம் ஒப்படைத்தார்.

எத்தனை எத்தனை வண்ணங்கள்?

    அதன்பிறகு, பல திரைப்படங்களில் பாரதியின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவரது பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன; ஆர்.சுதர்சனம், டி.கே.எஸ்.சகோதரர்கள், ஜி.ராமநாதன், சி.ஆர்.சுப்பராமன், கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், எல்.வைத்தியநாதன், இளையராஜா உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் பலர் இசை அமைத்திருக்கிறார்கள்; எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, டி.கே.பட்டம்மாள், டி.ஆர்.மகாலிங்கம், எம்.எல்.வசந்தகுமாரி, டி.எம்.சௌந்தரராஜன், திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா, எஸ். ஜானகி, கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ராஜ்குமார் பாரதி உள்பட பல சிறந்த பாடகர்கள் பாரதியின் கவிதை வரிகளைப் பாடியிருக்கிறார்கள்.

ஆனால், இந்தப் பாடல்கள் முழுமையும் நமக்குக் கிடைக்கவில்லை. கிடைத்துள்ளவை சுமார் 70 பாடல்கள் மட்டுமே. மகாகவி பாரதி மீதும் தமிழ்த் திரைப்பாடல்கள் மீதும் ஆர்வம் உள்ளவர்கள் இதுகுறித்து ஆராய்ந்து, பாரதியின் திரையிசைப் பாடல்கள் அனைத்தையும் மீட்க வேண்டும். பாரதியின் நினைவு நூற்றாண்டு அதற்கொரு வாய்ப்பாக அமைய வேண்டும்.

பாரதி திரைப்படப் பாடல்களாக நினைத்து தனது கவிதைகளை எழுதவில்லை. அவை முழுமையான யாப்பு இலக்கணத்துடன் பொருந்திய கவிதைகள். அவை திரைப்பட இசையமைப்பாளர்கள் விரும்பும் தாளகதி, சந்தங்களுடன் இருப்பதும், உணர்ச்சி மிக்க சொற்களின் லயம் மிகுந்திருப்பதும் தான், அவரது கவிதைகளை நாடச் செய்திருக்கின்றன. திரைப்படத்தின் காட்சிகளுக்குத் தேவையான நவரசங்களை வெளிப்படுத்தும் பாடல் வரிகள் பாரதியின் கவிதைகளில் செறிந்திருப்பதால் தான் அவை, திரைப்படங்களிலும் வெற்றிகரமாக பவனி வருகின்றன.

மெட்டுக்கு பாட்டு எழுதிய புலவரல்ல பாரதி. ஆயினும், அவரது கவிதைகளில் இயற்கையிலேயே அமைந்துள்ள இன்னிசைக்கான வரையறைகள் காரணமாக, பல இசையமைப்பாளர்கள் தாங்களே அந்தப் பாடல்களுக்கு புதிய மெட்டுகளைப் புனைந்து கொண்டார்கள். எப்படி இசை அமைத்தாலும், இசைக்கருவிகளின் ஆதிக்கத்தை மீறி பாரதியின் பாடல் வரிகள் நமது நெஞ்சைத் தொட்டு நம்மை இளகச் செய்கின்றன.

அதனால்தான், நவீன இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் (சுட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மா- கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன்), மலையாள இசையமைப்பாளரான மோகன் சித்தாராவும் (காற்று வெளியிடை கண்ணம்மா- தன்மத்ரா), இளம் தலைமுறை இசையமைப்பாளர் சங்கர் ரங்கராஜனும் (சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா- குற்றம் கடிதல்) பாரதியை எளிதாக அணுக முடிகிறது.

அது மட்டுமல்ல, பாரதியின் ஒரே பாடலே பல்வேறு வடிவங்களில், பல திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் காண முடிகிறது. உதாரணமாக, பாரதியின் ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’ பாடல், மணமகள் (1951), நீதிக்கு தண்டனை (1987), குற்றம் கடிதல் (2015) என வெவ்வேறு காலகட்டத் திரைப்படங்களில் வெவ்வேறு விதமாக பவனி வருகிறது.

இதேபோல, மங்கியதோர் நிலவினிலே, காற்று வெளியிடை கண்ணம்மா, ஆடுவோமே பள்ளு பாடுவோமே, காக்கைச் சிறகினிலே நந்தலாலா, நல்லதோர் வீணை செய்தே, மனதில் உறுதி வேண்டும் எனப் பல பாடல்கள் வெவ்வேறு திரைப்படங்களில் வேறு வேறு தளங்களில் நமது இதயத்தைக் கவர்கின்றன (காண்க: பட்டியல்).

காலத்தை மீறிக் கனவு கண்ட அந்த மகாகவியின் கவிதைகள் காலத்தை வென்று இன்றைய கலைஞர்களுக்கும் உத்வேகம் அளிப்பனவாக இருப்பது நமது பேறு. காதல், வீரம், தேசபக்தி, பாசம், சோகம், ஆனந்தம் என திரைப்படம் எதிர்பார்க்கும் அனைத்து உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் வரிகளுடன் இன்னமும் பல நூறு கவிதைகள் பாரதி புதையலில் காத்திருக்கின்றன என்பதும் உண்மை.

***

மகாகவி பாரதியின் 
திரைப் பாடல்கள் -பட்டியல்

(குறிப்பு: இந்தப் பட்டியல் முழுமையானதல்ல; 

விடுபடல்கள் இருக்கலாம்)

அ. அதிகமான பாடல்கள் இடம்பெற்ற திரைப்படங்கள்:


1. நாம் இருவர் - 1947
இசை: ஆர்.சுதர்சனம்

1. விடுதலை… விடுதலை… விடுதலை!
    பாடியவர்: டி.ஆர்.மகாலிங்கம்
2. ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே!
    பாடியவர்: டி.கே.பட்டம்மாள்
3. வெற்றி எட்டு திக்கும்
    பாடியவர்: டி.கே.பட்டம்மாள்
4. சோலைமலர் ஒளியோ…
    பாடியோர்: டி.ஆர்.மகாலிங்கம், டி.எஸ்.பகவதி
5. வாழிய செந்தமிழ்!
    பாடியோர்: டி.எஸ்.பகவதி,தேவநாராயணன்

2. வேதாள உலகம் - 1948
இசை: ஆர்.சுதர்சனம்

1. செந்தமிழ் நாடென்னும் போதினிலே…
    பாடியவர்: டி.ஆர்.மகாலிங்கம்
2. தீராத விளையாட்டு பிள்ளை…
    பாடியவர்: டி.கே..பட்டம்மாள்
3. ஓடி விளையாடு பாப்பா!
    பாடியோர்: டி.ஆர்.மகாலிங்கம், எம்.எஸ்.ராஜேஸ்வரி
4. தூண்டில் புழுவினைப் போல்
    பாடியவர்: டி.கே.பட்டம்மாள்

3. கப்பலோட்டிய தமிழன் - 1961
இசை: ஜி.ராமநாதன்

1. என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?
    பாடியவர்: திருச்சி லோகநாதன்
2. வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்!
    பாடியோர்: சீர்காழி எஸ்.கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன்)
3. காற்று வெளியிடை கண்ணம்மா…
    பாடியோர்: பி.பி.சீனிவாஸ், பி.சுசீலா)
4. தண்ணீர் விட்டோ வளர்த்தோம்?
    பாடியவர்: திருச்சி லோகநாதன்
5. ஓடி விளையாடு பாப்பா…
    பாடியோர்: சீர்காழி எஸ்.கோவிந்தராஜன், ஜமுனாராணி, ரோகிணி
6. நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி…
    பாடியவர்: சீர்காழி எஸ்.கோவிந்தராஜன்
7. பாருக்குள்ளே நல்ல நாடு…
    பாடியவர்: சீர்காழி எஸ்.கோவிந்தராஜன்
8. வந்தேமாதரம் என்போம்!
    பாடியவர்: சீர்காழி எஸ்.கோவிந்தராஜன்
9. சின்னக் குழந்தைகள்…
    பாடியவர்: பி.சுசீலா.

4. ஏழாவது மனிதன் - 1981
இசை: எல்.வைத்தியநாதன்

1. காக்கைச் சிறகினிலே நந்தலாலா..
    பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
2. வீணையடி நீ எனக்கு…
    பாடியோர்: கே.ஜே.யேசுதாஸ், பி.நீரஜா
3. வீணையடி நீயெனக்கு…
    பாடியவர்: பி.நீரஜா
4. நல்லதோர் வீணை செய்தே…
    பாடியவர்: ராஜ்குமார் பாரதி
5. அச்சமில்லை அச்சமில்லை…
    பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
6. நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறமுமின்றி…
    பாடியவர்: ராஜ்குமார் பாரதி
7. ஓடி விளையாடு பாப்பா..
    பாடியோர்: கே.ஜே.யேசுதாஸ், சாய்பாபா
8. மனதில் உறுதி வேண்டும்…
    பாடியவர்: பி.நீரஜா
9. செந்தமிழ் நாடென்னும் போதினிலே…
    பாடியவர்: பி.சுசீலா
10. ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே!
    பாடியோர்: தீபன் சக்கரவர்த்தி, மாதங்கி, பி.சுசீலா, சாண்டில்யன்
11. எந்த நேரமும் நின்மையல் ஏறுதடி…
    பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்

5. பாரதி - 2000
இசை: இளையராஜா

1. நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே…
    பாடியவர்: ஹரிஷ் ராகவேந்திரா
2. கேளடா மானிடவா இங்கு கீழோர் மேலோர் இல்லை…
    பாடியவர்: ராஜ்குமார் பாரதி
3. நின்னைச் சரண் அடைந்தேன்…
    பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ
4. நின்னைச் சரணடைந்தேன்...
    பாடியவர்: இளையராஜா
5. பாரத சமுதாயம் வாழ்கவே!
    பாடியவர்: K.J.யேசுதாஸ்
6. வந்தேமாதரம் ஜெய வந்தேமாதரம்!
    பாடியவர்: மது பாலகிருஷ்ணன்
7. அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்…
    பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
8. நல்லதோர் வீணை செய்தே…
    பாடியோர்: மனோ, இளையராஜா

ஆ. பிற படங்களில் இடம்பெற்ற பாடல்கள்

1. வாழ்க நிரந்தரம், வாழ்க தமிழ்மொழி!
திரைப்படம்: மேனகா- 1935
இசை: டி.கே.முத்துசாமி.
(டி.கே.எஸ்.சகோதரர்கள் தயாரிப்பு- ராஜா சாண்டோ இயக்கம்)

2. ஆடுவோமே பள்ளு பாடுவோமே..
திரைப்படம்: அதிர்ஷ்டம் – 1939
இசை: சர்மா சகோதரர்கள்
இயக்கம்: ச.து.சு.யோகியார்

3. செந்தமிழ் நாடெனும் போதினிலே…
திரைப்படம்: உத்தமபுத்திரன் – 1940
இசை: ஜி.ராமநாதன்
பாடியவர்: பி.யு.சின்னப்பா

4. தூண்டில் புழுவினைப் போல…
திரைப்படம்: பில்ஹனன் – 1948
இசை: டி.கே.கல்யாணம்.
பாடியவர்: டி.கே.சண்முகம்

5. பாரத சமுதாயம் வாழ்கவே!
திரைப்படம்: வாழ்க்கை- 1949
இசை: ஆர்.சுதர்சனம்
பாடியவர்: டி.கே.பட்டம்மாள்

6. கொட்டு முரசே… கொட்டு முரசே…
திரைப்படம்: ஓர் இரவு – 1951
இசை: ஆர்.சுதர்சனம்
பாடியோர்: கே.ஆர்.ராமசாமி, எம்.எஸ்.ராஜேஸ்வரி, வி.ஜே.வர்மா.

7. சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா…

திரைப்படம்: மணமகள் – 1951
இசை: சி.ஆர்.சுப்புராமன்
பாடியோர்: எம்.எல்.வசந்தகுமாரி, வி.எஸ்.சுந்தரம்.

8. காணிநிலம் வேண்டும்…
திரைப்படம்: அந்தமான் கைதி – 1952
இசை: ஜி.கோவிந்தராஜ் நாயுடு
பாடியவர்: சி.எஸ்.ஜெயராமன்.

9. நெஞ்சு பொறுக்குதில்லையே…
திரைப்படம்: பராசக்தி -1952
இசை: ஆர்.சுதர்சனம்
பாடியவர்: சி.எஸ்.ஜெயராமன்.

10. மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை…
திரைப்படம்: பெண்- 1954
இசை: ஆர்.சுதர்சனம்
பாடியவர்: டி.ஏ.மோத்தி

11. மோகத்தைக் கொன்றுவிடு…
திரைப்படம்: விளையாட்டு பொம்மை – 1954
இசை: டி.ஜி.லிங்கப்பா
பாடியவர்: டி.ஆர்.மகாலிங்கம்

12. தீர்த்தக் கரையினிலே...
திரைப்படம்: விளையாட்டு பொம்மை – 1954
இசை: டி.ஜி.லிங்கப்பா
பாடியவர்: டி.ஆர்.மகாலிங்கம்

13. மனதில் உறுதி வேண்டும்
திரைப்படம்: கள்வனின் காதலி – 1955
இசை: ஜி.கோவிந்தராஜுலு நாயுடு, கண்டசாலா.
பாடியோர்: டி.எம்.சௌந்தர்ராஜன், பானுமதி.

14. நல்லதோர் வீணை செய்தே…
திரைப்படம்: கள்வனின் காதலி – 1955
இசை: ஜி.கோவிந்தராஜுலு நாயுடு, கண்டசாலா.
பாடியோர்: பானுமதி.

15. ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா!
திரைப்படம்: ரங்கூன் ராதா -1956
இசை: டி.ஆர்.பாப்பா
பாடியவர்: டி.எஸ்.பகவதி

16. சுட்டும் விழிச் சுடர்தான்…
திரைப்படம்: புது வாழ்வு- 1957
இசை: ஜி.ராமநாதன், சி.என்.பாண்டுரங்கன்
பாடியவர்: எம்.கே.தியாகராஜ பாகவதர்

17 . திக்குத் தெரியாத காட்டில்…
திரைப்படம்: பானை பிடித்தவள் பாக்கியசாலி- 1958
இசை: எஸ்.வி.வெங்கட்ராமன், எஸ்.வி.ராஜேஸ்வர ராவ்
பாடியோர்: ஜிக்கி, திருச்சி லோகநாதன்.

18. மங்கியதோர் நிலவினிலே…
திரைப்படம்: திருமணம்- 1958
இசை: ஜி.ராமநாதன்
பாடியவர்: டி.எம்.சௌந்தர்ராஜன்

19. மங்கியதோர் நிலவினிலே…
திரைப்படம்: பாவை விளக்கு -1960
இசை: கே.வி.மகாதேவன்
பாடியவர்: சி.எஸ்.ஜெயராமன்.

20. எங்கிருந்தோ வந்தான்...
திரைப்படம்: படிக்காத மேதை- 1960
இசை: கே.வி.மகாதேவன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

21. கண்ணன் மனநிலையை…
திரைப்படம்: தெய்வத்தின் தெய்வம்- 1962
இசை: ஜி.ராமநாதன்.
பாடியவர்: எஸ்.ஜானகி

22. சிந்துநதியின் மிசை நிலவினிலே…
திரைப்படம்: கை கொடுத்த தெய்வம்- 1963 ,
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி
பாடியோர்: டி.எம்.செளந்தரராஜன், ஜே.வி.ராகவலு, எல்.ஆர்.ஈஸ்வரி,

23. வெள்ளைக் கமலத்திலே…
திரைப்படம்: கௌரி கல்யாணம் -1966
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: சூலமங்கலம் ராஜலட்சுமி

24. காக்கைச் சிறகினிலே நந்தலாலா

திரைப்படம்: திருமால் பெருமை – 1968
இசை: கே.வி.மகாதேவன்
பாடியவர்: சூலமங்கலம் ராஜலட்சுமி

25. தீ எரிக. (வசன கவிதை-காட்சி – ஞாயிறு - 8)
திரைப்படம்: அக்ரஹாரத்தில் கழுதை -1977
இசை: எம்.பி.ஸ்ரீநிவாசன்
பின்னணியில் வசனம் ஒலிப்பு

26. தீர்த்தக் கரையினிலே…

திரைப்படம்: வறுமையின் நிறம் சிவப்பு- 1980
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

27. நல்லதோர் வீணை செய்தே…

திரைப்படம்: வறுமையின் நிறம் சிவப்பு- 1980
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

28. மனதில் உறுதி வேண்டும்
திரைப்படம்: சிந்துபைரவி – 1985
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்.

29. நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி…

திரைப்படம்: கண்ணே கனியமுதே – 1986
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியோர்: கே.ஜே.யேசுதாஸ், வாணி ஜெயராம்.

30. சின்னசிறு கிளியே கண்ணம்மா…
திரைப்படம்: நீதிக்குத் தண்டனை - 1987
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியோர்: கே.ஜே.யேசுதாஸ், சொர்ணலதா

31. என்று தணியுமிந்த சுதந்திர தாகம்?
திரைப்படம்: இனி ஒரு சுதந்திரம் – 1987
இசை: கங்கை அமரன்
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்

32. மங்கியதோர் நிலவினிலே…
திரைப்படம்: ஒரு மனிதனின் கதை (தொ.கா.தொடர்)
இசை: சங்கர் கணேஷ்.
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
(திரைப்படம்: தியாகு – 1990)

33. தேடிச் சோறு நிதம் தின்று… (செய்யுள் வடிவம்)
திரைப்படம்: மகாநதி - 1994
இசை: இளையராஜா
பாடியவர்: கமல்ஹாசன்

34. சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா…
திரைப்படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - 2000
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்: ஹரிஹரன்

35. காற்று வெளியிடை கண்ணம்மா…

திரைப்படம்: தன்மத்ரா (மலையாளம்) – 2005
இசை: மோகன் சித்தாரா
பாடியோர்: விது பிரதாப், ஷீலாமணி

36. சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா…

திரைப்படம்: குற்றம் கடிதல் – 2015
இசை: சங்கர் ரங்கராஜன்
பாடியோர்: ராகேஷ் ரகுநந்தன், யாஷினி


***
மீள்பதிவு - நன்றி: 
‘விஜயபாரதம்’ வார இதழ். 
தமிழ் ஹிந்து இணையதளம்








No comments:

Post a Comment