16/12/2021

ஹிந்து தர்மம் தொடர்பான சில கட்டுரைகள்

-மகாகவி பாரதி

    (மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 81)


1. ஹிந்து தர்மம்

 சுதேசமித்திரன்

29 நவம்பர் 1917

     வாரீர் நண்பர்களே, ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஹிந்து தர்மத்தைப் பரவும்படி செய்ய வேண்டுமானால் அதற்கு இதுவே மிகவும் ஏற்ற தருணம். ஆஹா! ஸ்வாமி விவேகாநந்தரைப் போலே பத்துப் பேர் இப்போதிருந்தால் இன்னும் ஒரு வருஷத்துக்குள் ஹிந்து தர்மத்தின் வெற்றிக் கொடியை உலகமெங்கும் நாட்டலாம். அந்தக் கண்டங்கள் யுத்தமாகிய சுழற் காற்றுக்குள்ளே அகப்பட்டுத் தத்தளித்துக் கொண்டிருக்கையிலே, ஹிந்து தர்மத்தை எவன் கவனிப்பான் என்று கூறிச் சிலர் ஆக்ஷேபிக்கலாம். அந்த ஆக்ஷேபம் சரியன்று. சண்டைக் காலந்தான் நமக்கு நல்லது. இந்த ஸமயத்திலேதான் மனுஷ்ய அஹங்காரத்தின் சிறுமையும் தெய்வத்தினுடைய மஹிமையும் மனுஷ்யனுடைய புத்திக்கு நன்றாக விளங்கும். இவ்வுலக இன்பங்களை தர்மத்தினாலே பெற்றாலொழிய அவை இன்பங்கள்போலே தோன்றினாலும் துக்கமாகவே முடியும். அவரவர் கர்மத்தின் பயனை அவரவரே அனுபவிக்க வேண்டும். வினை விதைத்தவன் வினை அறுப்பான்; தினை விதைத்தவன் தினையறுப்பான். நாம் இன்று நூறு ஸப்மரீன் வைத்துக்கொண்டு பிறருடைய கப்பல்களைத் தகர்த்தால் நாளை மற்றொரு ஜாதியார் ஆயிரம் ஸப்மரீன் கட்டி நம்முடைய கப்பல்களை நொறுக்கிப் போடுவார்கள். பாம்பைக் கொல்ல ஒரு கீரிப் பிள்ளையுண்டு; பகை பகையை வளர்க்கும். நாம் மற்றவரை அடிமைப்படுத்தினால் நம்மை அடிமைப்படுத்த வேறு யாரேனும் முளைப்பார்கள்.

 
இவ்வுலகத்தில் நாம் செய்கிற ஒவ்வொரு செய்கையும், ஸ்வப்ரயோஜனத்தைக் கருதாமல், லோகோபகாரத்தை முன்னிட்டுக் கொண்டு செய்ய வேண்டும். தீராத ஆவலும், அவஸரமும், ஓயாத பரபரப்பும் உள்ள ஜ்வர வாழ்க்கை நாகரிகமாக மாட்டாது. சரியான நாகரிகத்துக்கு சாந்தியே ஆதாரம். யந்திரப் பீரங்கிகளும் ஸப்மரீன்களும் நாகரிகத்துக்கு அடையாளமல்ல. நிலக்கரிச் சுரங்கங்களும் ஆகாச வெடிகுண்டுகளும் அபிவிருத்திக்கு லக்ஷணமல்ல. அவை மனுஷ்யனுக்குப் பலமல்ல, துணையல்ல; அவை மனிதனுக்குப் பகை. மனுஷ்யனையும் அவனுடைய நாகரிகத்தையும் அழிக்கும் குணமுடையன.

கர்வத்தினாலே மரணம் உண்டாகும். அடக்கம் பொறுமை ஜீவகாருண்யம் என்ற குணங்களே உண்மையான நாகரிகத்தையும் நித்ய ஜீவனையும் விளைக்கும். இப்படி நூற்றுக் கணக்கான ஹிந்து தர்மக் கொள்கைகளை நாம் உலகத்தார் கேட்க முழங்குவதற்கு இதுவே நல்ல தருணம். இந்த ஸமயத்தில் மனுஷ்ய ஸமூகம் அழிந்து போகாமல் அதைக் காப்பாற்றி நல்ல வழியிலே சேர்க்கக் கூடிய ஜாதியார் நம்மைத் தவிர வேறு யாருமில்லை. கண்ணைத் திறந்து பூமண்டல முழுதையும் ஒரே பார்வையாகப் பார்த்தால் நான் சொல்வதுண்மை யென்பது தானே விளங்கும். இவ்விஷயத்தை ஆழ்ந்து யோசனை பண்ணி இங்கிருந்து வெளிநாடுகளுக்கு நூற்றுக் கணக்கான பிரசங்கிகளை அனுப்பும்படி ராஜாக்களையும் ஜமீன்தார்களையும் செட்டியார்களையும் மடாதிபதிகளையும் பிரார்த்தனை செய்து கொள்ளுகிறேன்.

***

2. தெலுங்க மஹா சபை 
  சுதேசமித்திரன்

9 ஜூன், 1917

     சென்ற வெள்ளிக்கிழமையன்று நெல்லூரில் கூடிய ஆந்திர மஹாசபையில் ஸ்ரீ வேங்கடப்பய்ய பந்தலு செய்த உபந்நியாஸம் கவனிக்கத்தக்கது. ராஜநீதி சாஸ்திரத்தில் தெலுங்கர் நெடுங்காலத்துப் பெருமையுடையார்…

மேற்படி கொள்கைக்கு நல்ல திருஷ்டாந்தமாக, இக்காலத்திலும் கூடத் தெலுங்கு தேசத்தார் தமிழரைக் காட்டிலும் ராஜாங்க வ்யவஹாரங்களில் தீவிர புத்தி செலுத்தியிருக்கிறார்கள். ஆனால் நமக்குள் ஜாதிபேதமிருக்கிறது என்றால் ஜாதிபேதம் இந்தியாவில் மாத்திரமில்லை, உலகத்தில் எல்லா தேசங்களிலும் இருக்கிறது. .இந்தியாவில் கொஞ்சம் தீவிரமாகவும், விநோதமாகவும், மாற்றுவது கஷ்டமாகவும் இருக்கிறது. இப்போது பூமி முழுவதிலும் நடந்துவரும் மஹா ப்ரளயத்தில் இந்த ஜாதிபேதம் தவிடு பொடியாகப் போய்ப் புதிய மாதிரி உண்டாகும். இதுவெல்லாம் ஏன் சொல்ல வந்தேனென்றால், தமிழ்நாட்டு ஜனங்கள் வீண் சண்டைகளிலே பொழுது போக்குகிறார்கள். தெலுங்கர் ஜனாபிவிருத்திக்கு வழியாகிய நல்ல உபாயங்களிலே புத்தி செலுத்துகிறார்கள். சுதேசிய விஷயத்தில் இப்போது தெலுங்கருக்குள் இருக்கும் பக்தி சிரத்தையிலே நாலிலொரு பங்குகூடத் தமிழ் ஜனங்களிடம் இல்லை. சென்ற வெள்ளிக்கிழமையன்று கூட மேற்படி நெல்லூர் ஆந்த்ர மஹாசபைப் பந்தலில் வந்தே மாதரம் என்ற கோஷம் அபரிமிதமாக இருந்ததென்று தந்தி சொல்லுகிறது. கொஞ்ச காலத்துக்கு முன்பு, கடலூரில் கூடிய மாஹாண சபையில் “வந்தே மாதரம்” பாட்டுக் கூடப் பாடவில்லையென்று கேள்விப்பட்டேன். தெலுங்கு ஜில்லாக்களில் ஒரு சபை கூட அப்படி நடந்திராது. இது நிற்க.

மேற்படி சபையில் வேங்கடப்பய்யா சபாநாயகராகப் பேசிய வார்த்தைகளின் ஸாரம் பின்வருமாறு:-

தெலுங்கு தேசத்தைத் தனி மாகாணமாகப் பிரிக்க வேண்டும்.

இந்தியாவுக்கு தன்னாட்டி கொடுக்க வேண்டும்.

இயன்றவரை, இந்தியா முழுவதையும், பாஷைகளுக்குத் தக்கபடி வெவ்வேறு மாகாணமாக்கவேண்டும். அதாவது மதறாஸ், பம்பாய், ஐக்ய மாகாணம், மத்ய மாகாணம், பஞ்சாப், பங்காளம் என்ற பிரிவுகளை மாற்றித் தமிழ்நாடு, தெலுங்கு நாடு, மராட்டிய நாடு, கன்னட நாடு, ஹிந்துஸ்தானம், வங்க நாடு என்று பாஷைக்கிரமப்படி வகுக்கவேண்டும்.

ஸ்வபாஷைகளில் கல்விப் பயிற்சி செய்விக்க வேண்டும். ராஜ்ய காரியங்களும் இயன்றவரை ஸ்வபாஷையில் நடக்க வேண்டும்.

மேற்படி நாலம்சங்களில் முதலாவது, மூன்றாவது, நாலாவது இம்மூன்றும் ஒரு பகுதி; இரண்டாவது மற்றொரு பகுதி. இரண்டாவது தாய்ப் பகுதி; மற்றவை கிளைப் பகுதிகளாகும்.

என்னுடைய அபிப்ராயத்தில் மேற்கண்ட கொள்கையெல்லாம், நியாயமென்றே தோன்றுகிறது. ஆனாலும், இந்த ஸமயத்தில் ஆந்திரரைத் தனிப் பிரிவாக ருஜுப்படுத்துவதைக் காட்டிலும், ஆஸேது ஹிமாசல பர்யந்தம் உள்ள ஹிந்துக்களெல்லாம் ஒன்று என்ற மூல மந்திரத்தை நிலை நாட்டுவதே அவசியமென்று என் புத்திக்குத் தோன்றுகிறது. ஹிந்துக்களெல்லாம் ஒரே கூட்டம். வேதத்தை நம்புவோரெல்லாம் ஸஹோதரர். பாரத பூமியின் மக்களெல்லாம் ஒரே தாய்வயிற்றுக் குழந்தைகள். நமக்குள் ஜாதிபேதம் குலபேதம் பாஷைபேதம் ஒன்றுமே கிடையாது. இந்தக் கொள்கைதான் இந்தக் காலத்துக்கு யுக்தமானது. ஹிந்து மதத்தை உண்மையாக நம்புவோரெல்லாம் ஒரே ஆத்மா, ஒரே உயிர், ஒரே உடம்பு, ஒரே ரத்தம், ஒரே குடர், ஒன்று.

ஹிந்துக்கள் உயர்ந்த நிலைமைக்கு வரவேண்டுமென்றால் ஐக்யநெறியை உடனே அனுசரிக்க வேண்டும். போன வருஷம் கீழ்க்கடலோரத்தில் பெரிய புயற்காற்றடித்தது. ஒன்றுகூடியிருந்த வீடுகள் பிழைத்தன. தனிக் குடில்களெல்லாம் காற்றிலே பறந்துபோயின. உலகத்தில் புதிய ஞானம், புதிய வாழ்க்கை, புதிய அறம், புதிய நெறி தோன்றக்கூடிய காலம் பிறந்துவிட்டதென்று மேதாவிகளெல்லாம் ஒருங்கே சொல்லுகிறார்கள். இங்ஙனம் புதிய ஞானம் பிறக்க வேண்டுமானால் அதற்கு ஹிந்து மதமே முக்ய ஸாதனமென்று நாம் சொல்லுகிறோம். ஸ்வாமி விவேகாநந்தர், ரவீந்திரநாத டாகுர், ஜகதீச சந்திர வஸு முதலிய பெரியோர்களும் அங்ஙனமே சொல்லுகிறார்கள். இந்த ஸமயத்தில் ஹிந்துக்கள் பிரிவு பேசலாமோ? ஹிந்துக்கள் பிரிந்துகிடந்தால், ஹிந்து தர்மத்தின் மஹிமையை உலகத்தார் காண்பதெப்படி?

ஹிந்து தர்மம் பெருமாள் கோயிலைப்போலே; நிற்பது எங்கே நின்றாலும் அத்தனை பேருக்கும் ப்ரஸாதமுண்டு. பகவத் ஸந்நிதியில் ஜாதிபேதமில்லை. அத்தனை பேரும் கலந்து நிற்கலாம். ஹிந்து தர்மம் சிதம்பரத்தைப் போலே. அதனுள்ளே, பறையரும் ஒளியில் கலந்துவிடலாம். 

***

3. பசு

சுதேசமித்திரன்

8 நவம்பர் 1917

    
பசுவின் சாணத்துக்கு நிகரான அசுத்த நிவாரண மருந்து உலகத்தில் அக்நியைத்தான் சொல்லலாம். வீடடையும், யாகசாலையையும், கோவிலையும் நாம் பசுவின் சாணத்தால் மெழுகிச் சுத்தப்படுத்துகிறோம். அதனைச் சாம்பர் ஆக்கி அச்சாம்பரை விபூதி என்று ஜீவன் முக்திக் குறியாக வழங்குகிறோம்.

பசுவென்பது ஒளிக்குப் பெயர்.

பசுமாடு பத்தினிக்கும் மாதாவுக்கும் ஸமானம்.

அதன் கண்ணைப் பார்!

அதன் சாணமே விபூதி; அதன் பால் அமிர்தம்.

வைத்தியரும் யோகிகளும் பசுவின் பாலை அமிர்தம் என்கிறார்கள். வேதமும் அப்படியேதான் சொல்லுகிறது.

பசுவை ஹிந்துக்களாகிய நாங்கள் தெய்வமாக வணங்குவதால், நாங்கள் பெரும் பகுதியாக வாழ்வதும், எங்களுடைய பூர்வீக சொத்துமாகிய இந்த தேசத்தில் பஹிரங்கமாகப் பசுவின் கொலை யாரும் செய்யாமல் இருப்பதே மரியாதை யாகும்.

இதைத்தான் ஆப்கானிஸ்தானத்து அமீர் சாஹெப் நமது தேசத்து முஸல்மான்களிடம் சொல்லிவிட்டுப் போனார். ஹிந்துக்களின் கண்ணுக்குப் படாமல் என்ன இழவு வேண்டுமானாலும் செய்துகொண்டு போங்கள்.

பகிரங்கமாக எங்கள் நெஞ்சை உடையும்படி செய்வதில் உங்களுக்கு லாபமென்ன? போகாரில் கலகம் நேர்ந்ததுபோல் மொஹரம் பண்டிகை சமயத்தில் நாட்டில் வேறெந்தப் பக்கத்தில் எவ்விதமான கலகமும் நடக்காமல், மொஹரம் பண்டிகை சுபமாக முடிவெய்தி, ஹிந்து மஹமதிய ஸஹோதரத்வம் ஸ்தாபனமாய்விட்டது பற்றி நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்.

ஒரே, ஓரிடத்தில் மாத்திரம் கலகம்! அதுவும் நடக்காமல் இருந்திருக்க வேண்டும்! அந்தப் பக்கத்து ஜனத் தலைவருடைய குற்றம்; போனால் போகிறது. ஹிந்து முஸ்லிம் ஒன்று; இணங்கி வாழ்வது நன்று.

பசுவையும், காளையையும் ஹிந்துக்கள் தெய்வமென்று கும்பிடுவதுபோல், கஷ்டப் படுத்தாமல் மரியாதையாக நமது முன்னோர் நடத்தியபடி இப்போது நடத்துவதில்லை. வண்டிக்காரன் மாட்டைக் கொல்லுகிறான். இடையன் பசுவுக்குப் பொய்க் கன்றுக்குட்டி காட்டி, அதன் சொந்தக் கன்றைக் கொல்லக் கொடுக்கிறான். ஹிந்துக்களாகிய நாம் பார்த்துக் கொண்டு சும்மா தானே இருக்கிறோம்? வெறுமே பூவைப் போட்டுக் கும்பிட்டால் மாத்திரம் போதுமா?

நம்முடைய பக்தியை நாம் செய்கையில் காண்பிக்க வேண்டும். காண்பித்தால் பிறரும் நமது கொள்கைகளுக்கு அவமதிப்புச் செய்யாமல் மரியாதையாக நடந்து கொள்வார்கள்.

***
4. ஹிந்து மதாபிமான சங்கத்தார் (கவிதை)


(காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்தாரைப் பாராட்டி 
மகாகவி பாரதி எழுதிய வாழ்த்துப் பா இது)

மண்ணுலகின் மீதினிலே எக்காலும்
    அமரரைப் போல் மடிவில் லாமல்
திண்ணமுற வாழ்ந்திடலாம், அதற்குரிய
    உபாயமிங்கு செப்பக் கேளீர்!
நண்ணியெலாப் பொருளினிலும் உட்பொருளாய்ச்
    செய்கையெலாம் நடத்தும் வீறாய்த்
திண்ணியநல் லறிவொளியாய்த் திகழுமொரு
    பரம்பொருளை அகத்தில் சேர்த்து.

செய்கையெலாம் அதன்செய்கை,நினைவெல்லாம்
    அதன்நினைவு, தெய்வ மேநாம்
உய்கையுற நாமாகி நமக்குள்ளே
    யொளிர்வ தென உறுதி கொண்டு,
யொய்,கயமை, சினம், சோம்பர், கவலை, மயல்,
    வீண் விருப்பம், புழுக்கம், அச்சம்,
ஐயமெனும் பேயையெலாம் ஞானமெனும்
    வாளாலே அறுத்துத் தள்ளி.

எப்போதும் ஆனந்தச் சுடர் நிலையில்
    வாழ்ந்துயிர்கட் கினிது செய்வோர்,
தப்பாதே இவ்வுலகில் அமரநிலை
    பெற்றிடுவார்; சதுர்வே தங்கள்
மெய்ப்பான சாத்திரங்கள் எனுமிவற்றால்
    இவ்வுண்மை விளங்கக் கூறும்
துப்பான மதத்தினையே ஹிந்துமத
    மெனப்புவியோர் சொல்லு வாரே.

அருமையுறு பொருளிலெலாம் மிக அரிதாய்த்
    தனைச்சாரும் அன்பர்க் கிங்கு
பெருமையுறு வாழ்வளிக்கும் நற்றுணையாம்
    ஹிந்துமதப் பெற்றி தன்னைக்
கருதியதன் சொற்படி யிங் கொழுகாத
    மக்களெலாம் கவலை யென்னும்
ஒருநரகக் குழியதனில் வீழ்ந்துதவித்
    தழிகின்றார் ஓய்வி லாமே.

இத்தகைய துயர்நீக்கிக் கிருதயுகந்
    தனையுலகில் இசைக்க வல்ல,
புத்தமுதாம் ஹிந்துமதப் பெருமைதனைப்
    பாரறியப் புகட்டும் வண்ணம்;
தத்துபுகழ் வளப்பாண்டி நாட்டினிற்
    காரைக்குடியூர் தனிலே சால
உத்தமராந் தனவணிகர் குலத்துதித்த
    இளைஞர்பலர், ஊக்கம் மிக்கார்.

உண்மையே தாரகமென் றுணர்ந்திட்டார்,
    அன்பொன்றே உறுதி யென்பார்,
வண்மையே குலதர்ம மெனக்கொண்டார்
    தொண்டொன்றே வழியாக் கண்டார்;
ஒண்மையுயர் கடவுளிடத் தன்புடையார்;
    அவ்வன்பின் ஊற்றத்தாலே
திண்மையுறும் ஹிந்துமத அபிமான
    சங்கமொன்று சேர்த்திட்டாரே.

பலநூல்கள் பதிப்பித்தும்,பல பெரியோர்
    பிரசங்கம் பண்ணு வித்தும்
நலமுடைய கலாசாலை புத்தகசா
    லைபலவும் நாட்டி யுந்தம்
குலமுயர நகருயர நாடுயர
    உழைக்கின்றார், கோடி மேன்மை
நிலவுறஇச் சங்கத்தார் பல்லூழி
    வாழ்ந்தொளிர்க, நிலத்தின் மீதே!

***

No comments:

Post a Comment