13/11/2020

சூரியனிடம் புன்னகைக்கும் சிறுமி (கவிதை)

-க.ரகுநாதன்



ஒளிர்ந்திடும் மத்தாப்பின்
சரசர வெடிப்பொலியில் கேட்கிறது
சாலையோரச் சிறுமியின் குறுஞ்சிரிப்பு.
சங்குச் சக்கர கிறுகிறுப்பில்
கரகரவென சுற்றியவளின் கிழிந்த பாவாடை
பலூனாக ஊதிச்சுழன்று அமிழ்கிறது.
பாம்புக் குளுவையிலிருந்து எட்டிப் பார்க்கும்
ஆதிசேஷனின் பெருமூச்சில்
புஸ்வாண ஒலி கொண்டு
ராக்கெட்டுகளாய் சிறிப் பாய்கின்றன
பிளவுண்ட நாவுகள்.
அவள் கனவில் ஏறி
அரவத்தின் உடலாய் நீண்ட
சாட்டைக் கங்குகளின் ஒளியில்
இதழோரம் மின்னுகிறது ஒரு சுடர்.
தகரக் கதவில் ஒளியின் புதிர்த் தடம்
ஊர்ந்து வந்த புலரியில்
வாசலில் எட்டிப் பார்த்தவளின் முகத்தில்
தன்னுடல் வெடிப்பின் மென் கதிர்களை
பாய்ச்சிய இளஞ்சூரியனிடம்
புன்னகைத்துப் பாடுகிறாள்-
நான் சிரித்தால் தீபாவளி...


குறிப்பு:

திரு. க.ரகுநாதன், திருப்பூர் மாவட்டம்- ஊத்துக்குளியைச் சேர்ந்த கவிஞர்.


No comments:

Post a Comment