13/11/2020

அர்த்தமுள்ள மனு தர்மம்

-ஆசிரியர் குழு



பிறப்பால் வருவது அல்ல உயர்வு தாழ்வு; ஒருவன் செய்யும் செயலால் வருவதே. இதற்கு சிறந்த உதாரண புருஷர்கள், வால்மீகியோ, மகரிஷி வியாசரோ, காளிதாசரோ, ரிஷி விஸ்வாமித்ரரோ பிறப்பால் பிராமணர் அல்ல. 

ஆனால், இந்து மதத்தைத் தாக்க பகைவர்கள் எடுக்கும் முதல் ஆயுதம், மனு தர்மம், ஏற்றத்தாழ்வை உருவாக்கும் வர்ணாசிரமத்தை ஆராதிக்கும் நூல் என்பது.  அது உண்மையா? வாருங்கள் பகுத்தறிவோம்...
 
மனு தர்மம் என்றால் என்ன?
 
மனு தர்மம் என்பது மானவ தர்மம் - அதற்கு மானுட அறம் என்று பொருளாகும்.

பாரத்ததில் பிறந்த அனைவரும் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள், அற ஒழுக்க விதிமுறைகளை ஒழுங்குபடுத்திக் கூறிய நூல்.

நமது பண்பாட்டில் ஸ்ருதிகள், ஸ்மிருதிகள் இரண்டும் முக்கியமானவை. ஸ்ருதிகள் என்பவை மாற்ற இயலாதவை. நால் வேதங்களும் பகவத்கீதையும், பிரமாணங்களும், உபநிடதங்களும் பாரத்தின் ஞானக் கருவூலங்கள். அவை ஸ்ருதிகள் ஆகும். அவை எக்காலத்து மாற்ற இயலாதவை. 

முதலில் ஸ்மிருதி என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். 

ஆதியிலிருந்து தொடர்ந்து வருபவை ‘ஸ்ருதி’ என்கிற செவிவழியாக,  தலைமுறை தலைமுறையாய் மிகுந்த மரியாதையுடன் ஏற்கப்பட்டு வரும் கோட்பாடுகள். நான்மறைகளும் அவற்றின் அடியற்றி வரும் உபநிடதங்களும் இவ்வகையைச் சேர்ந்தவை.  

‘ஸ்மிருதி’ எனப்படுபவை ஏட்டில் பதிவு செய்யப்பட்ட விதிமுறைகள். வேத காலத்திற்குப் பின் வெகு காலம் கழிந்த பிறகுதான் இவை உருவாயின. பொதுவாக தர்ம சாஸ்திரங்கள் எனக் கருதப்படுபவைதாம் ஸ்மிருதி என்று அழைக்கப்படுகின்றன.

மாறும் காலத்திற்கேற்ப மாற்றம் கொள்பவைதாம் தர்ம சாஸ்திரங்கள். அவ்வாறு மாற்றம் கொள்ளாமல் சில விதிமுறைகள் முரண்டு பிடித்தால் மூலாதாரமான ஸ்ருதிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து, ஸ்ருதிகள் என்ன சொல்கின்றனவோ அவற்றை ஏற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட ஸ்மிருதியின் கூற்றைத் தள்ளிவிட வேண்டும் என்று, தர்ம சாஸ்திரங்களான ஸ்மிருதிகளே அறிவுறுத்தியிருக்கின்றன. 

ஸ்மிருதிக்கும் ஸ்ருதிக்கும் ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு காணப்படுமானால், ஸ்ருதியில் சொல்லப்பட்டிருப்பதைத்தான் சரியென்று கொள்ள வேண்டும் என மனு ஸ்மிருதியும் தனது இரண்டாவது சருக்கத்தின் பனிரெண்டாவது, பதிமூன்றாவது செய்யுள்களில் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

ஆக, பாரத்தின் பாரம்பரியக் குடிகளான ஹிந்து சமுதாயத்திற்கு ஸ்ருதிகளான வேதங்கள்தாம் வழிகாட்டும் அறநெறிகள். மனு ஸ்மிருதியே ஒப்புக்கொண்டுள்ளவாறு, ஸ்மிருதிகள் இரண்டாம் பட்சம் தான். 

மனு நீதி சாஸ்திரம் எனப்படும் மனு ஸ்மிருதியானது ஹிந்து சமுதாயத்தின் ஒரேயரு ஸ்மிருதியல்ல. மொத்தம் உள்ள பதினெட்டு ஸ்மிருதிகளுள் ஒன்றுதான் அது.  காலத்துக்கேற்ப மாற்றம் கொள்ளும் சட்ட நூல்களே ஸ்மிருதிகள் என்று அழைக்கப்பட்டன. 

நாரத ஸ்மிருதி, யாக்ஞவல்கியர் ஸ்மிருதி, பராசரர் ஸ்மிருதி, சங்க ஸ்மிருதி, லிகித ஸ்மிருதி,  விஷ்ணு ஸ்மிருதி, யம ஸ்மிருதி, மனு ஸ்மிருதி எனப் பல ஸ்மிருதிகள் காலத்துக்கேற்றபடி நடைமுறையில் இருந்துள்ளன. அதில் கடைசியாக வந்ததுதான் ‘மனு ஸ்மிருதி’ எனப்படும் மனு தர்மம். 

மனு தர்மத்தின் நல்ல அம்சங்களுக்கு வேறெங்கும் செல்ல வேண்டாம்; நம் தமிழகத்தில்  ‘மனுநீதிச் சோழன்’ அறம் தழுவாமல் இதனை முழுமையாகப் பின்பற்றி ஆட்சி செய்ததாகப் போற்றப்படுகிறார். தனது மகன் தேரோட்டியபோது அதன் சக்கரத்தில் சிக்குண்டு கன்று ஒன்று உயிரிழந்ததற்காக, தனது மகனையே தேர்க்காலில் இட்டுக் கொன்று நீதியை நிலைநாட்டிய அவரது ஆட்சியே, மனு தர்மத்தின் சாட்சி.

மனு தர்மம் பற்றி பேசும் எத்தனை பேர், அதனை முழுவதும் படித்துவிட்டு பேசுகிறார்கள்? வில்லியம் ஜோன்ஸ் என்பார் 1794-இல் சமஸ்கிருத நூலில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது அல்ல உண்மையான மனு தர்மம்.

அன்னியன் ஒருவரால் நம்மைப் பிரித்தாளும் சூழ்ச்சியில் புனையப்பட்ட, திரிக்கபட்ட மனு தர்மம் அல்ல, நம் இந்திய மூதாதையரின் வாழ்வியல் நெறிமுறை வழிகாட்டி.

ஆங்கிலேயர் ஒருவரின், அதுவும் இந்தியர்களை அடக்குமுறை சட்டத்தில் தீர்ப்பு எழுதிய நீதிபதி பதவியில் இருந்த ஒருவரின் மொழிபெயர்ப்பு எவ்வாறு இருக்கும் பகுத்தறிவு பேசும் நண்பர்களே?

மனு தர்ம வரலாறு:

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில்
உள்ள மனுநீதி சோழன் சிலை

ஆரம்பத்தின் மனு தர்மத்தை சுவாயம்பு (மனு) எனும் பண்டைய வேத கால முனிவர் தொகுத்தார்.

இது 2685 செய்யுள்களாகவும், 3 பகுதிகளாகவும், 12 அத்தியாயங்களாகவும் அமைந்துள்ளது.

பொ.யு.முன் 200 தொடக்கம் பொ.யு.முன் 150 ஆண்டுகளுக்குள் எழுதப்பட்ட இந்து சமூக நீதி நூல் என்று தற்காலத்தில் இனங்காட்டப்படும் இந்த நூல் செய்யுள் (ஸ்லோகங்கள்) வடிவில் இயற்றப்பட்டுள்ளது.

அந்தச் செய்யுள்கள் சரிவர மொழிபெயர்க்கப்பட்டுள்ளனவா அல்லது சரிவரப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளனவா என்பது வினாக்குறியாகவே உள்ளது.

வெள்ளையர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியின் ஒரு பகுதிதான் இந்த மனு தர்ம திரிபு மொழிபெயர்ப்பு,

‘மனு தர்மம் - இந்தியாவின் பழைய சட்ட நூல்’ என்னும் இந்நூலை முதலில் ஆங்கிலேய அரசின் கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நீதியரசர் சர்.வில்லியம் ஜோன்ஸ் என்பார் 1794-இல் சமஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். மொழிபெயர்த்தார் என்பதைவிட மனு தர்மத்தை திரிபு செய்து இந்துக்களைப் பெயர்த்தார் என்றே சொல்ல வேண்டும்.

அதை ஆதாராமாக வைத்துக் கொண்டுதான் இன்றுவரை இந்து மதத்தின் மீது சேறு வீசுகிறார்கள். அப்படியே ஆனாலும் இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை விடக் கொடியது அல்ல மனு தர்மம்.

மனு தர்மத்தின் உண்மையான முகம்:

உண்மையுருவில் மனு தர்மம் பல சமூக நியதிகளை வகுத்துக் கொடுத்துள்ளது. அது 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமூகத்தின் கட்டுப்பாடுகளுக்காக வகுக்கப்பட்ட நெறிமுறைகளின் தொகுப்பே. 

இந்நூலைப் பின்பற்றி சந்திரகுப்த மௌரியரின் தலைமை அமைச்சரான கௌடில்யர் என்ற சாணக்கியர், ‘அர்த்த சாஸ்திரம்’ என்ற அரசு நிர்வாகம் தொடர்பான நூலை எழுதிப் புகழ் பெற்றார்.

தற்காலத்தில், மனு தர்மத்தில் கொடுக்கப்பட்டுள்ள வர்ணாசிரம தர்மத்தை மையப்படுத்தியே மனு தர்மம் என்னும் மொத்த படைப்பும் விமர்சிக்க படுகிறது. எனவே அந்த வர்ணாசிரமத்தை கொஞ்சம் பார்ப்போம்.

மனு ஸ்மிருதியில், ரிஷி பரத்வாஜரும், பிருகு முனிவரும் உரையாடுவதாக இப்பகுதி அமைந்துள்ளது.

சமூகத்தில் கட்டமைப்பை உருவாக்கும்போருட்டு என்னென்ன விஷயங்கள்-செல்வங்கள் ஒரு மனிதனுக்கு அதிகாரத்தை- சக்தியை- வாழ்வாதாரத்தைக் கொடுக்கின்றன என்று வகைப்படுத்தினார்கள். அவை,

1. அறிவு (கல்வி)
3. ஆயுதம் (போர்- ஆட்சி அதிகாரம்)
3. செல்வம் (வணிகம்)
4. நிலம் (விவசாயம்)

இவை ஒரே இடத்தில் குவிவதால் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும் என்பதால், ஒருவர் ஒரு செல்வத்துக்கு மேல் வைத்திருக்கக் கூடாது என்றும் முறைப்படுத்தினார்கள்.

கல்வி அறிவு பெற்று பிரம்ம ஞானத்தைப் பெற்றவன் பிராமணன்; 

ஆயுதம் கொண்டு நாட்டைக் காத்து அதிகாரம் செலுத்துபவன் ஷத்திரியன்;

வணிகம் மூலம் செல்வம் தேடுபவன் வைசியன்;

நிலத்தைக் கொண்டு தானியம் விளைவிப்பவன் சூத்திரன்

-என்றும் வகைப்படுத்தினார்கள்.

இவர்களுள் யாரும் உயர்ந்தவர் என்றோ தாழ்ந்தவர் என்றோ, எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.

அதேபோல, இந்த நால்வரும் தங்களிடம் உள்ள செல்வ அளவால் சமூகத்தில் உயர்ந்த நிலயை அடைய முடியாது; மாறாக, ஒருவர் தனது செல்வத்தால் எவ்வளவு நல்ல விஷயங்களைச் செய்தார், அவரது ஈகை- தியாகம் போன்றவற்றின் மூலமே அவரது அந்தஸ்து தீர்மானிக்கப்படுகிறது.

இதற்கு அண்மைய சிறந்த உதாரணமாக, சடையப்ப வள்ளல் என்னும் வேளாளர், கம்பரால் சோழனினும் உயர்வாகப் பேசப்பட்டதைக் கூறலாம்.

பிறப்பால் இந்த வர்ணங்கள் (பேதங்கள்) தீர்மானிக்கப்படவும் இல்லை. ஏனெனில் வால்மீகி மகரிஷியோ, வேத வியாசரோ, கவி காளிதாசரோ, ரிஷி விஸ்வாமித்திரரோ பிறப்பால் பிராமணர்கள் அல்ல. ஆனால் இவர்கள் மிகவும் போற்றப்பட்ட, பூஜிக்கபட்ட மகான்கள். இதுதான் உண்மையான மனு சாஸ்திரம். அதற்கு மேற்பட்டு சொல்லப்பட்டவை இடைச்செருகல்களும் திரிபுகளுமேயாகும்.

இந்திய பாரம்பரிய அறிவியல் உள்ளிட்ட பல்வேறு சாஸ்திரங்களைக் கற்றும் போதித்தும் வந்தவர்கள் பிராமணர்கள்.

கிறிஸ்தவ மதம் பரப்ப வந்த வெளிநாட்டவர்கள் முதலில் இந்தியர்களிடம்  தங்களை தாழ்வாக எண்னவைக்கவும், மேற்கு நாடுகளை உயர்வாக எண்ண வைக்கவும் திட்டமிட்டுச் செயல்பட்டார்கள். அப்போது, இந்திய அறிவையும் ஆன்மிகத்தையும் உண்மையான வரலாற்றையும் அழிக்க, பிராமணர்களை பிற ஜாதி மக்களுக்கு எதிரிகளாக சித்தரிக்க அந்நியர்களால் ஏவப்பட்ட பல ஆயுதங்களில் ஒன்றுதான் இந்த மனு தர்ம பிரச்னை. 

இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குடியுரிமைச் சட்டம் ஆகியவை  இயற்றப்படும் முன், இந்தியாவை ஆண்ட இஸ்லாமியர்களும் பிரித்தானியர்களும், நாட்டில் இந்து மக்களுக்கு எதிரான குற்ற வழக்குகளிலும், குடியுரிமை வழக்குகளிலும் மனு தரும சாத்திரத்தின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கியுள்ளனர். 

மனு தர்மம் பற்றிய புனைவுகள்:


ஒரு குலத்துக்கொரு நீதி என்பதுவே மனு நீதி என்று ஓசை நயத்திற்காகப் பேசிப் பேசி, சமுதாயத்தைப் பிளவுபடுத்தி, மக்களிடையே ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் பழங்காலத்துப் பிற்போக்கான சட்ட நூல்தான் மனு நீதி சாஸ்திரம் என்கிற எண்ணம் தமிழகத்தில் உண்டாக்கப்பட்டது இந்திய விரோதிகளால். 

ஆனால், விருப்பு வெறுப்பின்றி, முன்கூட்டியே தீர்மானித்த அபிப்பிராயத்துடன் அணுகாமல் ஆராய்ந்து பார்த்தால்தான் மனு தர்மம் என்கிற மனு ஸ்மிருதி வகுத்திருக்கும் விதிமுறைகள் எத்தகையன என்னும் முடிவுக்கு வர முடியும்.

ஒரு தனி நபர், ஒரு குடும்பம், ஒரு கிராமம், ஒரு சமுதாயம், ஒரு தேசம் ஆகியவை கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க விதிகளைத் தான் எழுதப்பட்ட காலத்திற்கேற்ப வகுத்துள்ளது மனு ஸ்மிருதி. 

விண்ணியல், மருத்துவம் முதலான விஷயங்கள் குறித்தும் அது பேசுகிறது.

மனு ஸ்மிருதி எப்பொழுது எழுதப்பட்டது என்பதற்கு வரலாற்றுப் பூர்வமான ஆதாரம் தெளிவாக இல்லை. எந்தக் கால கட்டத்தில் அது ஹிந்து சமூகத்தால் வார்த்தை பிசகாமல் அனுசரிக்கப்பட்டது என்பதற்கும் ஆதாரம் இல்லை. சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து இந்நூல் புழக்கத்தில் இருந்திருக்கலாம் என்பது அனுமானமே. 

ஸ்ருதிகளான வேதங்கள் தோன்றி நீண்ட நெடுங்காலம் கழிந்த பிறகே  ஸ்மிருதிகளுள் கடைசியான மனு ஸ்மிருதி தோன்றியது. மனு ஸ்மிருதிக்குப் புனித அந்தஸ்தை அளிப்பதற்காக, அதனை இயற்றியவர், விஸ்வகர்மாவின் வழி தோன்றலான மனு என்கிற ஆதி புருஷன் என்று கற்பிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் பதினான்கு மன்வந்தரங்கள் கொண்டது ஒரு கல்ப காலம் என்றும், ஒவ்வொரு மன்வந்தரத்திற்கும் ஒரு மனு ஆதியானவர் என்றும் புராணங்கள் குறிப்பிடுகின்றன.

தற்சமயம் நடப்பது ஏழாவது மன்வந்தரம். இதன் ஆதிபுருஷர் வைவஸ்த மனு என்கிறது, புராணம். இந்த மனு எழுதி வைத்ததுதான் மனு ஸ்மிருதி என்று எவரும் கூறினால் அதை ஏற்பது எளிதல்ல.

வரலாற்றுக் கண்ணோட்டப்படிப் பார்த்தால் சுங்க வம்சத்துப் பேரரசர் புஷ்யமித்திரர் காலத்தில்தான் ‘மனு ஸ்மிருதி’ என்கிற பெயரில் ஒரு சாஸ்திரம் எழுதப்பட்டது என்று ஒரு தரப்பினரால் கருதப்படுகிறது. ஆனால் இதற்கும் உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை. 

ஆக, புராதன வேத காலத்து ஹிந்து சமுதாயம் இந்த மனு ஸ்மிருதியை அனுசரித்திருக்க வாய்ப்பில்லை. மனு ஸ்மிருதி எழுதப்பட்ட காலம் (சுமார்) பொ.யு.முன் 200 என்று ஏற்பது பொதுவான ஆய்வு நெறிமுறையாக உள்ளது. 

மனு ஸ்மிருதி மக்களின் வாழ்வில் பயன்பாட்டில் இருந்தாலும், அதுபற்றிய வெளியாரின் மதிப்பீடுகள், பிரதானக் கருத்துகள் ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர்தான் வெளிப்படலாயின. 

இவை பெரும்பாலும் ஹிந்து சமய நம்பிக்கைகளையும் ஹிந்து சமூக நடைமுறைகளையும் இழிவானவை என நிறுவ வேண்டும் என்கிற கிறிஸ்தவ மதமாற்ர நோக்கத்துடன்தான் தெரிவிக்கப்பட்டன.

அதனால்தான், மனு ஸ்மிருதியின் மீதான கடுமையான விமர்சனங்கள் பெரும்பாலும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்துவிட்டுத்தான் தெரிவிக்கப்படுபவையாக உள்ளன. 

மனு ஸ்மிருதியில் uள்ல ஒவ்வொரு ஸ்லோகமும் (செய்யுள்) ஒரு ஒழுக்க விதியை, நடைமுரைகேற்ர வாழ்வியல் நெறியை வலியுறுத்துகிறது.

ஆனால் இந்த விதிமுறைகள் அனைத்தும் எந்தக் கால கட்டத்திலேனும் ஹிந்து சமூகத்தால் பாரத தேசம் முழுவதும் ஒட்டுமொத்தமாகக் கடைப்பிடிக்கப்பட்டன என்று முழுமையாகக் கூறுவதற்கில்லை.

மனு ஸ்மிருதியை ஆதாரம் காட்டிப் பேசப்படுகின்ற விதிமுறைகள் பலவும் அவரவர் கன்ணோட்டப்படியான விளக்கவுரைகளேயன்றி நேரடியான மொழிபெயர்ப்புகள் அல்ல என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த தலை சிறந்த சமூக சீர்திருத்தத் துறவியும், ஆரிய சமாஜம் என்னும் அமைப்பை உருவாக்கியவருமான சுவாமி தயானந்த சரஸ்வதி, மனு ஸ்மிருதிக்கு ஒரு விளக்கம் தந்துள்ளார். மனு ஸ்மிருதியின் செய்யுள்களிலேயே பல ஒன்றுக்கொன்று முரண்படுவதை அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது, ஒவ்வொரு கால கட்டத்திலும் அவ்வப்போதைய தேவைகளுக்கு இணங்க மனு ஸ்மிருதியில் இடைச் செருகல்கள் நுழைந்து விட்டிருக்கின்றன என்பதுதான்.

ஒன்றோடொன்று முரண்படும் விதிமுறைகளைக் கண்டறிந்து, இன்றைய காலகட்டத்திற்கு எந்த விதிமுறைகள் பொருந்துகின்றனவோ அவற்றை மட்டும் ஏற்றுக்கொண்டு, பொருந்தாதவற்றைப் புறக்கணிப்பதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும்.

எடுத்துக்காட்டாக, மனு ஸ்மிருதியின் இரண்டாம் சருக்கத்தின் 97-வது செய்யுள், ‘கீழான குணவியல்புகள் உள்ளவர்கள் வேதமெய்ப்பொருளை அறியவியலாது’ என்று கூறுகிறது. பிறவியின் அடிப்படையில் பேசப்படாமல் குண நலன்களையே வலியுறுத்துவதாக இது இருப்பதால் இதனை ஏற்பதுதான் முறையாக இருக்கும்.

ஆண்- பெண் பேதமின்றி எல்லாக் குழந்தைகளையும் ஐந்து அல்லது எட்டாவது வயதிலாவது கட்டாயக் கல்வி பெறச் செய்வது பெற்றோருக்கு மட்டுமின்றி அரசுக்கும் நிர்வாக சபைகளுக்கும் கடமையென்று ஏழாவது சருக்கத்தின் 152-வது செய்யுள் விதிக்கிறது. குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்யத் தவறுவது தண்டனைக்குரிய குற்றம் என்றே இச்செய்யுள் எச்சரிக்கிறது. எனவே பெண்களுக்குக் கல்வி அவசியமில்லை என வேறு விதிமுறை ஏதும் இதே நூலில் இருக்குமானால் முரண்பாடான அந்த விதியைத் தூக்கி  எறிந்துவிடலாம்.

திருமணத்தைப் பற்றிப் பேசும்போது, தனது ஒன்பதாவது சருக்கத்தின் 90-வது செய்யுளில், ஒரு பெண்ணுக்கு உரிய பருவத்தில் தன் தகுதிக்கு ஏற்ற கணவனைத் தேர்வு செய்துகொள்ளும் உரிமையை மனு ஸ்மிருதி உறுதிசெய்கிறது. எனவே பாலிய விவாகத்தை அது வலியுறுத்துவதாகக் கருதத் தேவையில்லை.

திருமணப் பொருத்தம் என்பது மனப் பொருத்தம், குண இயல்புகளுக்கு இயைந்த கருத்தொற்றுமை, உடல் ஆரோக்கியம் ஆகியவைதான் என்று மனு ஸ்மிருதி கூறுகிறது. அவரவர் வகுப்பில் மணம் செய்துகொள்வது அவசியம் என்று கூறுகையில் இவற்றைத்தான் மனு ஸ்மிருதி வலியுறுத்துகின்றதே அல்லாமல், பிறப்பின் மூலம்வருகின்ற வகுப்பை  (ஜாதி) குறிப்பிடவில்லை.

பெண்களை மிக உயர்வாகப் போற்றும் பல செய்யுள்களை மனு ஸ்மிருதியில் காணலாம். மூன்றாவது சருக்கத்தின் 62-வது செய்யுள், மனைவியைக் கணவன் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என விதிக்கிறது. மகிழ்ச்சியில்லாத மனைவி இருக்கிற குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்காது என்று மனு ஸ்மிருதி எச்சரிக்கிறது.

பெண்களை தந்தைமாரும் சகோதர்களும், ஏன் கணவனும்கூட வணங்கக் கடமைப் பட்டிருப்பதாக அது கூறுகிறது. பெண்களுக்குக் குடும்பங்களில் நல்ல உணவு, சிறந்த ஆடையாபரணங்கள் ஆகியவற்றை அளித்து மகிழ்விக்க வேண்டும் என்று மனு ஸ்மிருதி விதிக்கிறது. பெண்கள் மதிக்கப்படுகின்ற குடும்பங்களிலும் சமுதாயத்திலும்தான் சிறந்த மனிதர்கள் தோன்றுவார்கள் என்று மனு ஸ்மிருதி அறிவுறுத்துகிறது.

பெண்கள் துன்புறும் நிலை இருக்கின்ற குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது என்று அது எச்சரிக்கிறது. பெண்களை மதிக்காத சமுதாயத்தில் எத்தனை நல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவற்றால் பயன் விளையாது என்கிறது மனு ஸ்மிருதி. அதன் மூன்றாவது சருக்கத்தில் 55- 59  செய்யுள்கள் மகளிர் நலனையே பிரதானமாக வலியுறுத்துகின்றன.

‘தகப்பன் பெயர் இல்லையேல் தாயின் பெயரால் பிள்ளைகள் அறியப்படட்டும்’ என்று சொல்கிற நடைமுறை, வேத கால சமுதாயத்தில் இருந்திருக்கிறது. பெண்கள் ஆண்களோடு சரிசமானமாக அமர்ந்து தத்துவ விசாரங்களிலும் தர்க்கங்களிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள் என்பதற்கும் சான்றுகள் உண்டு. எனவே பெண்ணடிமை முறையும், பெண்களை அறிவார்ந்த சபைகளிலிருந்து விலக்கி வைக்கும் போக்கும் இடையில்தான் 9அடிமைப்பட்ட காலத்தில்தான்) நுழைந்திருக்கக்கூடும் எனப் புரிந்துகொள்ள வேண்டும்.

அதற்கு சமூக அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மனு ஸ்மிருதியில் அதற்கு ஏற்ற இடைச் செருகல்கள் உள்நோக்கத்துடன் நுழைக்கப்பட்டிருக்கலாம் என யூகிக்க முடியும்.

மனு ஸ்மிருதியின் பத்தாவது சருக்கத்தில் உள்ள 65-வது செய்யுள், ஒரு சூத்திரன் பிராமணனின் நிலைக்கு உயர்வதும், அதேபோல, ஒரு பிராமணன் சூத்திரனின் நிலைக்குத் தாழ்வதும் சாத்தியம் என்று சொல்கிறது. ஷத்திரியர், வைசியர் விஷயத்திலும் இது பொருந்தும் என்று அது மேலும் விளக்குகிறது. இதிலிருந்து, பிறப்பியின் பயனாக வர்ணங்கள் அமைவதில்லை;  குணநலன்களின் அடிப்படையில்தான் அவை நிர்ணயிக்கப்படுகின்றன என்று மனு ஸ்மிருதி வலியுறுத்துவதாகக் கொள்ள முடியும்.

மேலும், பிராமணன் ஒரு குற்றம் இழைத்தால் அதற்கு மிக அதிக பட்சமாகவும், அதே குற்றத்தை இழைத்த சத்திரியனுக்கு அதைவிடச் சிறிது குறைவாகவும் வைசியனுக்கு அந்தக் குற்றத்திற்கு மேலும் குறைவாகவும், சூத்திரனுக்கு மிக மிகக் குறைவாகவும் தண்டனை விதிக்க வேண்டும் என்று மனு ஸ்மிருதி நிர்ணயிக்கிறது. 

காரணம், பிராமணனாக அறிவு நிலையில் உயர்ந்திருப்பவன் தெரிந்தே குற்றம் இழைத்திருப்பான் என்று கொள்ளவேண்டும் என அது விளக்குகிறது. பிற பிரிவினரை ஓரளவுக்கே விவரம் தெரிந்தவர்களாகக் கருத வேண்டுமாதலால் அதற்கேற்பக் குறைவாகவும், சூத்திரன் தனது அறியாமையால் குற்றம் இழைத்திருப்பான் என்பதால் மிக மிகக் குறைவாகவும் அதே குற்றத்திற்குத் தண்டனை விதிப்பதே பொருத்தம் என்கிறது மனு ஸ்மிருதி.

ஹிந்து சமூகத்தைக் குறை கூறி, மேற்கத்திய நாகரிகமும் சம்பிரதாயங்களும்தாம் மேன்மையானவை என்று மனதில் பதிய வைப்பதற்காக சில ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட முயற்சி வென்றுவிட்டதை அண்மைக்கால விவாதங்கள் காட்டுகின்றன.

ஆங்கிலக் கல்வி வழியாகத் தம் தாயகத்தின் கலாசாரத்தையும் நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் காணப் பழகியவர்களுக்கு காலனியாதிக்கக் கல்வியாளர்கள் மனு ஸ்மிருதி பற்றி வெளியிட்ட கருத்துகள்தாம் வேத வாக்காக அமைந்துவிட்டன. அந்த அடிச்சுவட்டில் தொடர்ந்து நடப்பவர்களிடையே மனு ஸ்மிருதியைப் பற்றி ஒருதலைப்பட்சமான கருத்து நிலவுவது இயற்கைதான்.

திருக்குறள் போன்று செய்யுள் வடிவில் உள்ளதற்கு எவர் வேண்டும் என்றாலும் அவரவர் விருப்பத்துக்கேற்ப,  அரசியல்- சமூக தேவைக்குத் தகுந்தாற்போல  விளக்க உரை எழுத இயலும். ஆகையால் மனு தர்மத்தை மொழிபெயர்த்தல் என்பதே உண்மையில் தவறு!

காமாலைக்காரனுக்கு காண்பதெல்லாமே மஞ்சள் என்பது போல,  தவறான குற்ற எண்னத்துடன் பொருள் கொண்டால், அது மனு தர்மத்தின் தவறு அல்ல.

‘தீதும், நன்றும், பிறர் தர வாரா’.


 குறிப்பு:

முகநூலில் வெளியான சிலரது பதிவுகளின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்பட்டடுள்ளது.


No comments:

Post a Comment