13/11/2020

பாரதியின் பாஞ்சாலி

-தஞ்சை வெ.கோபாலன்



(மகாகவி பாரதி பிறந்த தினம்: 1882 டிச 11)


"பாரத பூமி பழம்பெரும் பூமி, நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்" என்றான் பாரதி. இந்த பாரத புண்ணிய தேசத்தில் தலைசிறந்த இதிகாசங்களாகப் போற்றப்படுபவை இராமாயணமும், மகாபாரதமும். மகாபாரதத்தின் உயிர்நாடி பாஞ்சாலி. பாஞ்சாலிக்கு ஏற்பட்ட துன்பம்தான் அவளை மகாபாரத காப்பியத்தின் உயிர்நாடியாக ஆக்கியது. 

வியாச முனிவரின் மூலநூலான பாரதத்தை அடியொற்றி, அதன் ஒரு பகுதியான பாஞ்சாலியின் சபதத்தை மகாகவி பாரதி கவிதையில் வடித்துத் தந்திருக்கிறான். இந்தப் பாஞ்சாலி சபதம் இரண்டு பாகங்களாக எழுதப்பட்டது;  எழுபத்து மூன்று தலைப்புகளைக் கொண்டது; முன்னூற்றியெட்டு பாடல்களை உள்ளடக்கியது.

வியாசர் மட்டுமல்ல, தமிழில் வில்லிபுத்தூராரும் பாரதக் கதையை எழுதியிருக்கிறார். காப்பியத்தில் சூதுப்போர் சருக்கம் மட்டும் பாரதியின் வாக்கால் பாஞ்சாலி சபதமாக உருவெடுத்திருக்கிறது. காரணம் கதையின் உயிர்நாடி மட்டுமின்றி, பாரதப் போருக்கும் இந்த பாஞ்சாலி செய்த சபதமே காரணமாக ஆகிறது என்பதுதான். 

பாஞ்சாலியின் கதையை பண்டிதர்கள் மட்டுமல்ல, பாமரனும் அறிந்து பாடி உணர்ந்து கொள்ளத்தான் பாரதி இந்தக் காப்பியத்தை விருத்தப் பாக்களாகப் பாடாமல், நொண்டிச் சிந்திலும், நாடோடிகள் பாடிவந்த ராகங்களையும் இணைத்து பாஞ்சாலி சபத்தை இயற்றியிருக்கிறார். 

துரியோதனின் நெஞ்சில் கொழுந்துவிட்டெரிந்த பொறாமைத் தீயின் விளைவு, சகுனியின் சாமர்த்தியத்தால் சூதாட்டத்தில் வந்து முடிந்தது. ஆட மனமில்லாத தருமனை அரச தர்மம் எனும் சங்கிலியால் பிணைத்து ஆடவைத்த சாமர்த்தியம் சகுனியின் சூதுமனத்தால் முடிந்தது. தொடர்ந்து பலவற்றை இழந்தபிறகு தருமன் மனம் சோர்ந்து அமர்ந்தபோது அவனைத் தூண்டிய சகுனி "நீ இழந்ததெல்லாம் பின்னே, நின்னிடத்தே மீளும், சோர்வடைந்திடாதெ தருமா ஊக்கமெய்து" என்கிறான். துரியனின் நெஞ்சில் விளைந்த தீ, குரு வம்சத்தையே அழிக்கும் பெருந்தீயாகக் கொழுந்து விட்டெரிந்தது, பாஞ்சாலி செய்த சபதத்தின் பயனாக. இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் ஒன்றுவிடாமல், கோவையாகச் சொல் சித்திரமாக வரைந்து காட்டிய பாரதியை என்ன சொல்லிப் போற்றுவது? 

பாஞ்சாலி சினம் கொண்டு இறுதியில் சபதம் ஏற்கிறாள். இடையில் காப்பியத்தில் பலரும் பல நேரங்களில் சினத்தீயால் மற்றவர்களைச் சுட்டு எரிக்கின்றனர். 

தன் மகன் துரியோதனின் இழிந்த சூழ்ச்சி கண்டு கண் இழந்த திருதராட்டிரன் ஒரு கட்டத்தில் நெஞ்சில் பொங்கி எழுகிறது சினம் எனும் தீ. அந்தத் தீயை அவனுடைய புத்திர பாசம் அணைத்து விடுகிறது. தீ மனம் கொண்ட துரியனின் சூழ்ச்சிக்கு கண்ணற்ற மன்னனும் துணை போய்விடுகிறான். எழுந்து எரிக்க வேண்டிய தீ அங்கு புத்திரபாசத்தால் அணைந்துவிடுகிறது. 

இரண்டாவது தீ சூதில் தன் தம்பியாகிய அர்ச்சுனனை இழந்த கையறு நிலையில் தருமனின் மனதில் எழுகிறது வெஞ்சினத் தீ. அவன் நெஞ்சை மேலும் சுட்டுப் புண்ணாக்குகிறான் சகுனி. என்ன செய்கிறோம் என்பதையே உணராத நிலை தருமனுக்கு. பாரதி சொல்கிறார்:

"தருமன் தக்கது செய்தல் மறந்தனன் - உளஞ் 
சார்ந்திடும் வெஞ்சின வெள்ளத்தில் 
எங்கும் அக்கரை இக்கரை காண்கிலன்" 

-என்கிறார். 

சினத் தீயால் விழுங்கப்பட்ட தருமன், மீண்டும் பீமனைப் பணயம் வைத்தும் இழக்கிறான். 

மூன்றாவது தீ சூதாடும் மன்றத்தில், மன்னர் அவைக்களத்தில் சூதில் பணயமென்றே திரெளபதியை வைத்து தருமன் இழந்தபோது, பீமன் உள்ளத்தில் எழுகிறது சினத்தீ.

"மாடு நிகர்த்த துச்சாதனன் - அவள் 
மைக்குழல் பற்றி இழுக்கிறான் - இந்தப் 
பீடையை நோக்கினன் பீமனும் - கரை 
பீறி எழுந்தது வெஞ்சினம்" 

பீமனின் வெஞ்சினம் கரையில் வந்து மோதி மேலெழும் அலையைப் போல, தீக்கங்குகள் அவன் உள்ளத்தில் மோதி மேலெழுந்ததாம். 

 பாஞ்சாலியைச் சூதில் கெலித்துவிட்ட சுயோதனாதியர் கூட்டம் கொக்கரித்து ஆர்ப்பரிக்கிறது. புத்தியுள்ள விதுரன் அறிவுரை சொல்கிறான். "அறியாமையால் செய்த நீண்ட பழியிதனை நீர் பொறுப்பீர்" என்று சொல்லி பாண்டவரைத் தங்கள் வள நகருக்கே செல்ல விடீர்" செய்யத் தவறினால் பாரதப் போர் வரும், நீர் அழிந்திடுவீர்" என்று எச்சரிக்கிறான். 

பாஞ்சாலி அரசனின் மன்றுக்கு அழைக்கப்படுகிறாள். ஒரு சேவகன் சென்று அரண்மனையில் தனித்திருக்கும் பாஞ்சலியை அரசவைக்கு மன்னன் அழைத்துவரச் சொன்னதாகச் சொல்லுகிறான். அப்படிச் சொல்லும் முன்பாம அவன் பாஞ்சாலியை என்னவென்று அழைக்கிறான் என்பதைப் பார்க்க வேண்டும். "அம்மனே போற்றி, அறம் காப்பாய் தாள் போற்றி" என்றெல்லாம் விளிக்கிறான்.

"யார் பணியால் என்னை அழைக்கின்றாய்? சூதர் சபைதனிலே தொல்சீர் மறக்குலத்து மாதர் வருதல் மரபோடா?" என்று மரபியல் பேசுகிறாள். 

சூதர் சபைக்குச் சென்று ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திக் கொண்டு வா, என்கிறாள் பாஞ்சாலி. அது என்ன விஷயம்? "வல்ல சகுனியிடம் மாண்பிழந்த நாயகர் தாம் என்னை முன்னே கூறி இழந்தாரா? தம்மையே முன்னம் இழந்து முடித்து என்னைத் தோற்றாரா?" விடை தெரிந்து வா என்கிறாள். நடுங்கித் தவிக்கும் அந்த சேவகன் வில்லில் புறப்பட்ட அம்பு போல பாய்ந்தோடினான் பாவையின் தீப்பார்வையிலிருந்து தப்பிப் பிழைத்து. 

தூதனின் சொல் கேட்டு சினத்தீயில் கொந்தளிக்கிறான் துரியோதனன். "அவள் வேண்டிய கேள்விகள் கேட்கலாம், சொல்ல வேண்டிய வார்த்தைகள் சொல்லலாம் -- இங்கு இந்த மன்னர் சபைக்கு அவள் நெரிடவே வந்த பின்பு" என பதில் சொல்லி அவளை இழுத்துவரப் பணிக்கிறான். மீண்டும் சென்ற தூதனிடம் பாஞ்சாலி கேட்கிறாள்.

"கெளரவ வேந்தர் சபை தன்னில் - அறம் 
கண்டவர் யாவரும் இல்லையோ? - மன்னர் 
செளரியம்* வீழ்ந்திடும் முன்னரே - அங்கு 
சாத்திரம் செத்துக் கிடக்குமோ?  

-என்கிறாள் பாஞ்சாலி (*சௌரியம்= பலம்/வீரம்). 

மன்னர் அவைக்கு அவளைக் கொண்டு வரமுடியவில்லை என்றதும் ஆத்திரம் உச்சிக்கு ஏற துரியோதனன் தன் தம்பி துச்சாதனனை அவளிடம் அனுப்பி அவளைக் கொண்டு வா இங்கே என்கிறான். இவ்வுரை கேட்ட துச்சாதனன் அண்ணனின் இச்சையை மெச்சி எழுந்தனன். 

அங்கு போய் பாஞ்சாலியிடம் வாதிட்டுப் பேசிச் சொல்கிறான், "ஆடி விலைப்பட்ட தாதி நீ - உன்னை ஆள்பவன் அண்ணன் சுயோதனன். இனி ஒன்றும் சொல்லாது என்னோடு ஏகுவாய்" என்கிறான். 'மாதவிலக்காய் ஒற்றை ஆடையில் இருக்கிறேன், தார்வேந்தர் பொற்சபைக்கு என்னை இப்படி அழைத்தல் மரபில்லை" என்று மறுக்கிறாள் பாஞ்சாலி. 

மாடு நிகர்த்த துச்சாதனன் "கக் கக் கவென்றே கனைத்தே’’ பெரு மூடன் பாஞ்சாலியின் கூந்தலைக் கையால் பற்றி கர கர என இழுத்தான். ஐயகோ என்றே அலறி உணர்வற்றுப் பாண்டவர் தம் தேவி அவள் பாதி உயிர் கொண்டு இழுத்த இழுப்பில் சென்றாள். 

அப்போது ஊரவர் தம் நிலைமையை என்னவென்று சொல்லுவது? பாவி துச்சாதனன் மெல்லிடையாள் பாஞ்சாலியின் மயிரைப் பிடித்து இழுத்துச் செல்லும் காட்சியை வழிநெடுக மொய்த்த மக்கட்கூட்டம் "என்ன கொடுமை இது என்று சொல்லிக்கொண்டு பார்த்திருந்தார்கள். ஊரவர் தம் கீழ்மை உரைக்கும் தரமாமோ? வீரமில்லா நாய்கள். விலங்காம் இளவரசன் தன்னை மிதித்துத் தராதலத்திற் போக்கியே, பொன்னை அவள் அந்தப் புரத்தினில் சேர்க்காமல், நெட்டை மரங்களென நின்று புலம்பினார், பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?" இது கவியின் வாக்கால் வெளிப்படும் கோபத் தீ.

பாஞ்சாலிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டு மட்டுமா மக்கள் நெடுமரங்களாய் நின்றார்கள். பாரத அன்னையை அன்னியர்க்கு அடிமையாக்கி இந்த மண்ணை மீட்க போராடிய நம்மவர்களை அவன் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாக்கியபோதுமல்லவா நெட்டை மரங்களென நின்று புலம்பினார்கள். 

பாரத புண்ணிய பூமியில் அறிவில் சிறந்து விளங்கிய பெண் குலத்தை மொத்த அடிமைகளாக ஆக்கி இருட்டில் பூட்டி வைத்திருந்த அவலம் அரங்கேறியிருந்த போதும் வாய் மூடி மெளனிகளாய், செயலற்று நின்று வேடிக்கைப் பார்த்த கூட்டம் தானே இது? 

பாரதியின் உணர்ச்சிகள் தீப்பிழம்பாய் இந்த நெட்டை நெடுமரங்கள் மீது பாய்ந்தது, பாஞ்சாலி படும் துயருக்காக மட்டுமல்ல, பாரத நாட்டு விடுதலை, பெண்களின் அடிமைத் தளை இவற்றைக் கண்டும் பொங்கிய பகுதி இது. 

சூது சரியா? சூதில் பணயமென ஒரு பெண்ணை வைத்தல் சரியா? அந்தப் பெண்ணை மன்றுக்கு அழைத்து வந்து அவமானம் செய்தல் சரியா? என்றெல்லாம் பாஞ்சாலி சாடியபோது எல்லாம் அறிந்த பீஷ்மாச்சாரியார் இன்றைய தர்மப்படி அதெல்லாம் சரியே என்கிறார். பெண்ணை அடிமையென விற்கலாம். கற்றறிந்த வீட்டுமனும் இவ்வுரை சொல்ல பாஞ்சாலி மீண்டும் கொதித்து எழுகிறாள்.

"ஆடை குலைவுற்று, ஆவென்று அழுது துடிக்கும் பாஞ்சாலியை மாடு நிகர்த்த துச்சாதனன் அவள் மைக்கூந்தலைப் பிடித்து இழுத்ததைக் கண்டு துடிக்கிறான் வீமன். அவனுக்குக் கரை மீறி எழுந்தது வெஞ்சினம்." 

அண்ணன் தருமனைப் பார்த்து "அண்ணே, யாரைப் பணயம் வைத்தாய், மாதர் குலவிளக்கை, அன்பே வாய்ந்த வடிவழகை, துருபதன் மகளை, திஷ்டத்துய்மன் உடன்பிறப்பை இருபகடை என்றாய், ஐயோ! இவர்க்கடிமை என்றாய், இது பொறுப்பதில்லை, தம்பீ, எரிதழல் கொண்டு வா, கதிரை வைத்திழந்தான் அண்ணன் கையை எரித்திடுவோம்" என்கிறான். 

 பீமனைக் காட்டிலும் அதிகம் கோபப் படவேண்டியவன் அர்ச்சுனன். வீரத்தில் குறைவில்லை. சாதிக்கக்கூடிய வல்லமை படைத்தவன். எவரையும் வெல்லும் காண்டீபம் கைக்கொண்டவன். அவன் அங்கு பீமனைப் போல் பொங்கி எழவில்லையாயினும், அவனைச் சமாதானம் செய்வித்து, “தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும், தருமம் மறுபடி வெல்லும் எனும் இயற்கை மருமத்தை நம்மாலே இவ்வுலகம் கற்கும், வழிதேடி விதி இந்தச் செய்கை செய்தான், கருமத்தை மேன்மேலும் காண்போம், இன்று கட்டுண்டோம், பொறுத்திருப்போம் காலம் மாறும், தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்" என்று சொல்லித் தன் கைவில்லை எடுத்துக் காண்பித்துச் சொல்லுகிறான் "தனு உண்டு, காண்டீவம் அதன் பேர்" என்கிறான். 

பொங்கும் போது பொங்கி, காலம் வந்தபோது தாக்கி தருமத்தை நிலைநாட்ட விரும்புகிறான் அர்ச்சுனன். 

அப்போதும், தர்மம் பேசவேண்டிய தருமன் வாய் திறக்கவில்லை. தருமம் அனைத்தையும் அறிந்த வீட்டுமன் அநியாயத்துக்குத் துணை போனான். பாஞ்சாலியின் கூற்றுக்கு ஆதரவு தெரிவித்து எழுந்த ஒரே குரல் பாண்டவர் பக்கத்தது அல்ல. துரியோதனின் தம்பி விகர்ணன் என்பான் கொடுத்த குரல்தான் அது. 

அவன் சொல்கிறான், "எந்தையர் தம் மனைவியரை விற்றதுண்டோ? இதுகாறும் அரசியரைச் சூதில் தோற்ற விந்தையை நீர் கேட்டதுண்டோ?" என்று பீஷ்மர் சொன்ன நியாயத்தை அடித்து நொறுக்குகிறான். 

விலைமாதர்க்கு விதித்த பிற்கால நீதிக்காரர் சொந்தமென சாத்திரத்தில் புகுத்திவிட்டால் அதனை தர்மம் என்று பேச வந்த பீஷ்மர் மீது விகர்ணனுக்கு அத்தனை ஆத்திரம். 

அநியாயம் கோலோச்சும் அவையில் நியாயத்தின் குரல் எடுபடுமா? விகர்ணனை அதட்டியே உட்கார வைத்தனர் அநியாயக்காரர்கள். கர்ணன் ஏசுகிறான் விகர்ணனை. "நீ விரகிலாய் (விவேகமில்லாதவன்) புலனும் (அறிவும்) இலாய்" என்கிறான். 

பாண்டவர் தம் மேலாடைகளை கழற்றிப் போட்டனர். அடிமைகளுக்கு மார்பில் துணி எதற்கு என்பது கர்ணனின் வாதம். துச்சாதனன் எழுந்தான் அன்னையின் துகிலினை மன்றில் உரிதலுற்றான். பாஞ்சாலி எவ்வழி உய்வோம் என்று தியங்கினாள் இணைக்கை கோர்த்தாள். 

விதுரன் "அச்சோ தேவர்களே" என்று மயங்கிச் சாய்ந்தான். அந்தப் பேயன் துச்சாதனன் துகிலினில் கை வைத்த போது அன்னை உட்ஜோதியில் கலந்தாள், உலகத்தை மறந்தாள், ஒருமையுற்றாள். 

“ஹரி, ஹரி ஹரி என்று வாய் கதற, கண்ணா! அபயம் அபயம் உனக்கு அபயம்” என்றலறினாள். அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. 

பொய்யர்களுக்கு வரும் அடுக்கடுக்கான துன்பங்களைப் போலவும், புண்ணியம் செய்தோருக்குக் கிடைக்கும் புகழினைப் போலவும், தையலார்க்கெல்லாம் இருக்கும் கருணையைப் போலவும், கடலில் சலசலத்திடும் அலைகளைப் போலவும், பெண்மையைப் போற்றுவாரிடம் சேரும் செல்வத்தைப் போலவும், கண்ணனின் அருளால் தம்பி கழற்றிடக் கழற்றிட வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தன பொற் சேலைகள். அன்னையின் மானம் காப்பாற்றப்பட்டது. 

தேவர்கள் பூச்சொரிந்தார். ஓம், ஜய ஜய பாரத சக்தி என்றே! பீஷ்மன் எழுந்து கை தொழுதான். சாவடி மறவரெல்லாம் ஓம் சக்தி, ஓம் சக்தி என்று கரம் குவித்தார். அரவுயர்த்த வேந்தன் வெட்கி தலைகுனிந்தான் என்கிறார் பாரதி பாஞ்சாலியின் பெருமையை ஊருக்கு விளக்கிக் காட்டிட. 

தொடர்ந்து பீமன் எழுந்து சபதம் செய்தான், 'நாய் மகனாம்' துரியோதனனின் தொடையைப் பிளந்து உயிர் மாய்ப்பேன் என்றும், தம்பி சூரத் துச்சாதனன் தன்னையும் ஆங்கே கடைபட்ட தோள்களைப் பிய்ப்பேன், அதில் ஊறும் இரத்தத்தைக் குடிப்பேன் என்றும் பயங்கரமான சபதத்தைச் செய்கிறான். 'தான்' எனும் அகந்தையாலொ, தன் வீரத்தாலோ அல்ல, தடையற்ற தெய்வத்தின் வார்த்தை இது என்று அறிவிப்பினைச் செய்தபின், "இது சாதனை செய்க பராசக்தி!" என்ற வேண்டுதலோடு முடிக்கிறான். 

 பார்த்தனும் எழுந்து உரை செய்கிறான். "இந்தப் பாதகக் கர்ணனைப் போரில் மடிப்பேன்" என்கிறான். எப்படி இந்த சாதனை நிகழும்? அவனே சொல்கிறான். பெரும் புகழ் விஷ்ணு, எங்கள் சீரிய நண்பன் கண்ணன் கழல் ஆணை, கார்த்தடங்கண்ணி எந்தேவி அவள் கண்ணிலும், காண்டீப வில்லின் மீதும் ஆணை" என்கிறான் அர்ச்சுனன். அப்போது போர்த்தொழில் விந்தைகள் காண்பாய்! ஹே! பூதலமே! என்று உலகுக்கு அறிவிப்பினைச் செய்கிறான்.

உலகோர் போற்றும் பெரும்புகழ் பாஞ்சாலியும் சபதமேற்கிறாள். "ஓம்! தேவி பராசக்தி ஆணை உரைத்தேன். பாவி துச்சாதனன் கைகளை பீமன் பிய்த்ததும் பீச்சியடிக்கும் அவன் செந்நீரையும், அந்தப் பாழ் துரியோதனன் தொடையைப் பிளந்த ஆக்கை இரத்தம் மேவி இரண்டும் கலந்து குழல் மீதினில் பூசி நறு நெய் குளித்த பின்பே சீவிக் குழல் முடிப்பேன்" என்கிறாள். பராசக்தியின் மீது இட்ட ஆணை அல்லவா? 

ஓம் என்று உரைத்தனர் தேவர், ஓம் ஓம் என்று சொல்லி உறுமியது வானம். பூமி அதிர்ச்சி உண்டாச்சு. விண்ணைப் பூழிப் படுத்தியது சுழற் காற்று என்று கதையை முடிக்கிறார் பாரதி. 

பாஞ்சாலியைத் தன் கதையின் நாயகியாக பாரதி தேர்ந்தெடுத்தது ஏன்? அவளை அடிமைப்பட்ட பாரத தேசத்தின் உருவகமாக, பாரத தேவியாக பாவித்ததன் விளைவா? 

அல்லது அடிமைப் பட்டுக் கிடந்த பெண் இனத்தை விடுவிக்க வந்த எழுச்சிக் குரலா? எது எப்படியாயினும் ஒரு வரலாற்று நிகழ்வை நாம் மறந்துவிட முடியாது. 


காண்க:

No comments:

Post a Comment