16/11/2021

பண்டிட் தீனதயாள் உபாத்யாய - பொன்மொழிகள் - 6

-பேரா. பூ.தர்மலிங்கம்



இன்றைய காலகட்டத்தில் நாம் நம்மைச் சுற்றிக் காண்கின்ற தர்மத்தின் சிதைவுகள் பெரும்பாலும் மேலைநாட்டுக் கல்வியின் விளைவாகும்.  ‘மதம்’ என்ற ஆங்கிலச் சொல் தர்மத்தின் பரிசுத்தமான அர்த்தத்தை சிதைப்பதில் முக்கியப் பங்களித்துள்ளது. 

பிரிட்டிஷார்கள் இந்தியாவிற்கு வந்தபோது தான், இந்த ‘தர்மம்’ என்ற வார்த்தையை முதன்முதலாகக் கேள்விப்பட்டார்கள். தர்மம் என்பதற்கு ஒரு சமமான, விரிவான அர்த்தம் அவர்களிடம் இல்லை. எனவே அவர்கள் அதை ‘மதம்’என மொழிபெயர்த்தனர். இத்தகைய மொழிபெயர்ப்பு இந்தியச் சொற்களின் அர்த்தத்தைச் சிதைத்து விட்டது. 

தர்மம் என்பது, பல்வேறு மதங்களை உள்ளடக்கிய ஒரு பரந்த சொல். இந்த பாரதத்தில் ஒவ்வொரு மதமும் ஒரு வழிபாட்டு முறையையும் பல அமைப்பு முறைகளையும் கொண்டிருக்கின்றன. ஆனால், இவ்வாறு பல அமைப்பு முறைகளும் மதப்பிரிவுகளும் இருப்பினும், தர்மம் ஒன்றேயாகும். தர்மம் என்பது இவ்வாறான வழிபாட்டு முறைகளுக்கு அப்பாற்பட்டு அனைவருக்கும் நன்மை தரக்கூடிய மற்றும் அருளுகின்ற வழியைத் திறக்க வல்லது.

***
முந்தைய காலங்களில் மையமாக்கல், ஏகபோகமயமாக்கல் ஆகியன அறிந்தும் அறியாமலும், நடைமுறைப் பழக்கங்களாக இருந்தன. திட்டமிடுபவர்கள், பெரிய அளவிலான மையப்படுத்தப்பட்ட தொழில் மட்டுமே பொருளாதாரம் என எண்ணினர். எனவே, அதன் விளைவுகளைப்பற்றி கவலைப்படாமல், அல்லது தெரிந்தே எந்தவித உதவியுமின்றி, அவர்கள் அந்த திசையில் தொடர்ந்து பயணித்தனர். சுதேசியின் தலைவிதியும் அதுவாக இருந்தது. 

சுதேசி என்ற கருத்து பழைய பாணியாகவும் பிற்போக்குத்தனமாகவும் கருதப்பட்டு கேலி செய்யப்படுகிறது. நாமும் பெருமையுடன் வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்துகிறோம். சிந்தனை, மேலாண்மை, மூலதனம், உற்பத்தி முறைகள், தொழில்நுட்பம் போன்றவை முதல் நமது நுகர்வுக் தன்மை மற்றும் தரங்கள் வரை நாம் வெளிநாட்டு உதவியைச் சார்ந்தே வளர்ந்திருக்கிறோம். இது முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்குமான பாதையில்லை. 

நாம் நமது தனித்துவத்தை மறந்து மீண்டும் உண்மையான அடிமைகளாக மாறி விடுவோம். எனவே, சுதேசியின் நேர்மறையான பொருண்மையை நமது பொருளாதாரத்தின் புனரமைப்பிற்கான அடித்தளமாகப் பயன்படுத்த வேண்டும்.

***
பழைய இந்துத் திருமணத்தின்படி திருமணமான தம்பதியர் இருவரும் விரும்பினாலும்கூட விவாகரத்து செய்துகொள்ள முடியாது. நடத்தை என்பது அவர்களின் விருப்பப்படி நடப்பது அன்று, தர்மத்தால் கட்டுப்படுத்தப்பட்டது என்பதே கொள்கை ஆகும். தேசத்திலும் இதே நிலை தான். 

காஷ்மீரின் 40 லட்சம் மக்களும் தாங்கள் பிரிந்து செல்ல விரும்புவதாகக் கூறினாலும், கோவா மக்கள் பிரிந்து செல்வதாகக் கூறினாலும் அல்லது சிலர் போர்த்துக்கீசியர் திரும்பவும் ஆட்சிக்கு வர வேண்டும் எனக் கூறினாலும், இவை அனைத்தும் தர்மத்திற்கு எதிரானது. 

45 கோடி இந்திய மக்களில் 44,99,99,000 பேர் தர்மத்திற்கு எதிரான ஒன்றைத் தேர்வு செய்தாலும், அது உண்மையாகாது. மறுபுறம், தர்மத்தின்படி ஒருவர் நின்றாலும், அது உண்மையை உருவாக்குகிறது. ஏனென்றால், உண்மை தர்மத்துடன் வாழ்கிறது. வாய்மையின் வழிநின்று மக்களை மாற்றுவது அந்த ஒரு மனிதனின் கடமையாகும்.
***
முதலாளித்துவம், சோசலிசம் ஆகிய இரண்டு அமைப்புமுறைகளும் - ஒருங்கிணைந்த மனிதனையும், இவரது உண்மையான மற்றும் முழுமையான ஆளுமையையும் விருப்பங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தவறிவிட்டன. 

பொருளாதாரம், அரசியல் இரண்டிலும் மைய மயமாக்கப்பட்ட அதிகாரமே இருப்பதால், முதலாளித்துவமும் சோசலிசமும் மனிதனிடம் மனிதநேயமற்ற தன்மையை விளைவிக்கின்றன. எனவே, கடவுளின் மிக உயர்ந்த படைப்பான மனிதன் தனது அடையாளத்தை இழக்கிறான். 

நாம் மனிதனை சரியான நிலையில் மீண்டும் நிலைநிறுத்த வேண்டும். தனது சிறப்பை அவர் உணருமாறு செய்ய வேண்டும். அவரது திறன்களை மீண்டும் எழுப்ப வேண்டும். மேலும் அவரது உள்ளார்ந்த ஆளுமையின் மிகச்சிறப்பான இடத்தை அடைவதற்கு அவரை ஊக்குவிக்க வேண்டும். இதை ஒரு பரவலாக்கப்பட்ட பொருளாதாரத்தின் மூலமே நிறைவேற்ற முடியும்.

***
இந்த நாட்டிலுள்ள அறிவுஜீவிகள் சமூக வாழ்வில் தீண்டாமையைப் பாவமாகக் கருதுகிறார்கள். ஆனால், ஆச்சரியத்துக்குரிய வகையில் அரசியல் தீண்டாமையைப் பெருமைக்குரிய விஷயமாகக் கருதுகிறார்கள்.

***
ஒவ்வொரு மனிதனும் ஒரு ஆன்மாவுடன் பிறக்கிறான். மனித ஆளுமை, ஆன்மா மற்றும் குணநலன் அனைத்தும் ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடுகின்றன. ஆளுமை என்பது ஒரு தனிமனிதனின் அனைத்துச் செயல்பாடுகள், எண்ணங்கள் மற்றும் கருத்துப் பதிவுகள் ஆகியவற்றின் ஒட்டுமொத்த விளைவிலிருந்து விளைகிறது. ஆனால், ஆன்மா இந்த வரலாற்றால் பாதிக்கப்படவில்லை. இதேபோல தேசியக் கலாச்சாரம் - தொடர்ச்சியாக மாற்றியமைக்கப்பட்டு வரலாற்றுக் காரணங்களாலும் சூழ்நிலைகளாலும் (பாதிப்பின்றி) விரிவாக்கப்படுகிறது. 

***
முதலாளித்துவப் பொருளாதாரம் சுயநலம் மிக்க ‘ஒரு பொருளாதார மனிதனை’ மட்டுமே அங்கீகரிக்கிறது. அதன் முடிவுகள் அனைத்தும் பொருள் சார்ந்த செல்வத்தின் அடிப்படையில் ஆதாயம் மற்றும் இழப்புக் கணக்கீடுகளை அடிப்படையாகக் கொண்டவை.

முதலாளித்துவ அமைப்பில் நுகர்வோரின் தேவைகளை முதலாளிகள் நிர்ணயிக்கின்றனர். நுகர்வோரின் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு மாறாக, அவர்களின் வாங்கும் சக்தியால் மட்டுமே வழி நடத்தப்படுகிறார்கள். மேலும் பசியோடு இருப்பவர்களின் தேவையை விட, வசதி படைத்தவர்களின் தேவைகளே பூர்த்தி செய்யப்படுகின்றன. ஏழைகளின் அடிப்படைத் தேவைகள் கூட பூர்த்தி செய்யப்படுவதில்லை. உற்பத்தியின் மையமாக்கல் மற்றும் ஏகபோகம், நுகர்வோரின் ஆதிக்கத்தை முற்றிலும் பலவீனப்படுத்துகிறது.

முதலாளித்துவ அமைப்பு ஓர் ஒருங்கிணைந்த மனிதனின் வளர்ச்சிக்கு உதவ இயலாது என்பது இதன்மூலம் தெளிவாகிறது.

***
சீனாவும் பாகிஸ்தானும் முன்வைக்கும் அச்சுறுத்தலின் பின்னணியில், அவர்களிடமிருந்து சிலர் கருத்தியல் உத்வேகம் பெறுகின்றனர். எனவே, அவர்களின் எண்ணங்களோடு ஒத்துப்போகின்ற நமது நாட்டினரின் செயல்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும். 

நாடு எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். சீனா அல்லது பாகிஸ்தான், நமது நாட்டினரை அவர்களுக்குச் சாதகமாக பயன்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இவர்கள் எப்போது, எங்கே அமைதியைக் குலைக்கின்றனர் அல்லது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றனர் என்பதைக் கண்டுணர்ந்து அவை இரக்கமின்றி அடக்கப்பட வேண்டும். மேலும், இந்த சக்திகளை அரசியல் மட்டத்திலும் சரி செய்ய வேண்டும்.

***
ஜனநாயகத்தை வரையறுக்கும்போது, அது மக்களின் அரசாங்கம் என்று சொன்னால் மட்டும் போதாது. அது மக்களின் நலனுக்கான அரசாங்கமாக இருக்க வேண்டும். மக்களின் நன்மை எது என்பதை தர்மம் மட்டுமே தீர்மானிக்க முடியும். எனவே, ஒரு ஜனநாயக அரசானது தர்மத்தின்படியே நடக்க வேண்டும். அதாவது, தர்மராஜ்யமாக ஆகவேண்டும். 

ஜனநாயகம் என்பதற்கான வரையறையில், அதாவது  ‘மக்களுடைய அரசாங்கம், மக்களால் மற்றும் மக்களுக்காக’ என்பதில் உள்ள  ‘உடைய’ (of) என்பது சுதந்திரத்தைக் குறிக்கிறது,  ‘ஆல்’ (by) என்பது ஜனநாயகத்தைக் குறிக்கிறது மற்றும் ‘ஆக’ (for) என்பது தர்மத்தைக் குறிக்கிறது. இதனால், சுதந்திரமும் தர்மமும் உள்ள இடங்களில் மட்டுமே உண்மையான ஜனநாயகம் இருக்கிறது.

***
ஒவ்வொரு மனிதரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்களில் அங்கமாக இருக்கிறார். அவர் தனது குடும்பத்திலும் சமுதாயத்திலும் ஓர் உறுப்பினராக இருக்கிறார். அவர் ஒரு தொழிலைச் செய்து கொண்டிருந்தால், தனது சக தொழில் வல்லுநர்கள் அடங்கிய சில சங்கத்தின் உறுப்பினராகவும் இருக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, அவர் தேசம் மற்றும் சமூகத்தின் உறுப்பினராவார். நாம் இன்னும் விரிவான ஆதிக்க எல்லையைக் கருத்தில் கொண்டால், அவர் முழு மனித குலத்திலும் மற்றும் முழு பிரபஞ்சத்திலும் உறுப்பினராக உள்ளார்.

உண்மையில் ஒருவர் தனித்த மனிதரன்று. ஒன்றுக்கும் மேற்பட்ட மனிதர்களின் கூட்டு. அவர் பல நிறுவனங்களின் அங்கமாக இருக்கிறார்; பல விதமான வாழ்க்கையை வாழ்கிறார். இது போன்ற பல்வேறுபட்ட ஆளுமையை உடையவராக இருப்பினும், அவர் தனது வாழ்க்கையின் அம்சங்களுக்குள் ஒன்றுக்கொன்று முரண்பாடில்லாதவாறு வாழ முடியும். அவ்வாறு வாழ வேண்டியதும் இன்றியமையாததாகும். ஆனால், அவை ஒன்றுக்கொன்று தாங்குவதும், உதவுவதும் மற்றும் ஒருங்கிணைவதாகவும் உள்ளன. இந்த குணம் மனிதனுக்கு இயல்பானது. இந்த குணத்தை சரியாகப் பயன்படுத்துபவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். மறுபுறம், அவ்வாறு பயன்படுத்தாதோர் துன்பத்தை அறுவடை செய்கிறார்கள்.

***
மக்களின் மகிழ்ச்சியின்மைக்குக் காரணம், அவர்கள் ஒருங்கிணைந்த மனிதனைப் பற்றி சிந்திக்கவில்லை. நமது நாட்டில், இதைப்பற்றி நாம் முழுமையாக எண்ணிப் பார்க்கிறோம். அதனால் தான், மனிதனின் முன்னேற்றம் என்பது, உடல், மனம், புத்தி மற்றும் ஆன்மா ஆகியவற்றின் ஒருமித்த வளர்ச்சி என நாம் குறிப்பிடுகிறோம். 

பாரதிய கலாச்சாரம் ஆன்மாவின் முக்தியைப் பற்றி நினைக்கிறது. மற்றவற்றைப் பற்றி இது கவலைப்படுவதில்லை என்று விமர்சிக்கப்படுகிறது. அது உண்மையல்ல, நாம் ஆன்மாவைப் பற்றி சிந்திக்கின்றோம். அதேவேளையில், உடல், மனம் மற்றும் புத்தி ஆகியவற்றையும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறோம்.

***
வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் பல்வேறு வடிவங்களில் ஒற்றுமையின் வெளிப்பாட்டைக் கொணர்வது ஆகியன பாரதிய கலாச்சாரத்தின் முதன்மையான எண்ணமாக, முக்கிய சிந்தனையாக இருந்து வருகின்றன. இந்த உண்மையானது முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டால், பல்வேறு அதிகார மோதலுக்கு அவசியமே இருக்காது. மோதல் என்பது கலாச்சாரமோ அல்லது இயற்கையின் அடையாளமோ அல்ல. மாறாக, இது விபரீதத்தின் அறிகுறியாகும்.

-பண்டிட் தீனதயாள் உபாத்யாய

No comments:

Post a Comment