02/11/2021

கங்கா ஸ்நானமும் காவேரி ஸ்நானமும்

-காஞ்சி பரமச்சாரியார்


முன்னுரை 

    ஸ்ரீ மஹா பெரியவர் ஸ்ரீகாளஹஸ்தியில் 1966ம் ஆண்டு எழுந்தருளியிருந்த போது, தீபாவளிக்கு அண்மையில் அவர்களைத் தரிசிக்கச் சென்ற அடியார்களில் ஒருவர், “தீபாவளிக்கும் கங்கா ஸ்நானத்துக்கும் என்ன தொடர்பு?” என்று விளக்கி வைக்குமாறு பெரியவர்களை வேண்டிக் கொண்டார்.

பெரியவர்கள் புன்னகை பூத்து, “ஏன், தீபாவளிக்கும் கங்கைக்கும் சம்பந்தம் இருக்க முடியாதென்று நினைக்கிறாயா? தீபாவளி க்ருஷ்ண பரமாத்மா நரகாஸுரனைக் கொன்றதால் ஏற்பட்ட பண்டிகை. கங்கையோ பரமேச்வர ஸம்பந்தமுள்ளது. யமுனைதான் கிருஷ்ணனுடைய நதி. ‘யமுனா தீர விஹாரி’ என்றே அவரைச் சொல்கிறோம். அதனால் தீபாவளியில் கங்கா ஸ்நானம் என்று ஏன் விசேஷம் கொடுத்திருக்கிறது என்று உனக்குத் தோன்றுகிறதாக்கும்?” என்று கேட்டார்.

அந்த அடியார் அப்படித்தான் எண்ணியிருப்பார் போலும். பேசாமல் இருந்தார்.

“அது இருக்கட்டும்; தீபாவளிக்கு நாம் எல்லோரும் கங்கா ஸ்நானம் பண்ணுகிறோமென்றால் அதற்குக் காரண புருஷரான கிருஷ்ணர் அன்றைக்குக் காவேரி ஸ்நானம் பண்ணினார் என்று நீ கேள்விப் பட்டிருக்கிறாயோ?” என்று ஓர் அபூர்வ விஷயத்தை வினாவாக விடுத்தார் ஸ்ரீ ஜகத்குரு.

“இல்லை. பெரியவாள்தான் சொல்லி அநுக்ரஹம் செய்ய வேணும்” என்று அவர் விண்ணப்பித்துக் கொண்டார்.

கூடியிருந்தவர்களில் வேறு எவருக்காவது அந்தக் கதை தெரியுமா என்று பெரியவர்கள் அலுக்காமல் ஒவ்வொருவராக்க் கேட்டார். எவருக்கும் தெரியவில்லை.

பண்டிதராகத் தோன்றிய ஒருவர், “ஸ்ரீமத் பாகவதத்தில் நரகாஸுர வதத்தைச் சொல்லியிருக்கும் இடத்தில், அதற்கு தீபாவளி, கங்கை, காவேரி ஆகிய எந்த ஸம்பந்தமுமே சொல்லியிருக்கவில்லை” என்றார். அவர் சொன்ன மாதிரியிலிருந்து, அதனால் இவ்விஷயங்களை ஏற்பதற்கில்லை என்பது போலிருந்தது.

“பாகவதத்திலே இல்லாவிட்டாலும் புராணந்தரங்களில் (வேறு புராணங்களில்) இந்த ஸமாசாரங்கள் இருக்கின்றன. ராமாயண, பாரத, பாகவதாதிகளில் வால்மீகியும், வியாஸரும், சுகப்ரம்மமும் சொல்லாமல் விட்ட அநேக விஷயங்கள் வேறு புராணங்களிலும், உப புராணங்களிலும், ஸ்தல புராணங்களிலும் வருகின்றன. கதைப் போக்கு, கதா பாத்திரங்களுடைய குண விசேஷம், லோகத்துக்கு இதனால் கிடைக்கிற உபதேசம் என்று எப்படிப் பார்த்தாலும் இவை பெரும்பாலும் மூல ராமாயண, பாரத, பாகவதாதிகளுக்கு complementaryயாகவே (இட்டு நிரப்பி முழுமை தருவனவாகவே) இருக்கின்றன. ஆகையால், மூலக்ரந்தத்துக்கு contradictoryயாக (முரணாக) இல்லாதவரை இப்படிப்பட்ட additional (கூடுதலான) ஸமாசாரங்களையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்” என்று கூறிய பெரியவர்கள், “நரகாஸுரனை பகவான் ஸம்ஹாரம் பண்ணினவுடன் பூமாதேவி வந்து அவரிடம் பிரார்த்தித்துக் கொண்டதாக பாகவதத்தில் வருகிறதோ இல்லையோ?” என்று தெரியாதவர் போலப் பெரியவாள் பண்டிதரைக் கேட்டார்.

“வருகிறது, நரகன் அபஹரித்திருந்த இந்திரனுடைய குடையையும், (இந்திரனின் தாயாரான) அதிதியின் குண்டலங்களையும் பூமாதேவிதான் கொண்டு வந்து பகவானிடம் அர்ப்பணித்தாள் என்று வருகிறது. அப்போது அவள் செய்த ஒரு ஸ்தோத்திரமும் இருக்கிறது. ஆனால் இது பொதுப்படையான ஸ்துதியாக இருக்கிறதே தவிர, நரகனின் ஞாபகார்த்தமாகத் தீபாவளி கொண்டாடப்பட வேண்டும் என்று அவள் வரம் கேட்டதாக இல்லை” என்று கூறிய பண்டிதர் “நரகாஸுரனுடைய பிள்ளை பகதத்தனை பகவான் தான் ரக்ஷிக்க வேண்டும் என்று பூமாதேவி ஒப்புக்கொடுத்ததாகவும் இருக்கிறது” என்றார்.

“வாலியை ராமர் ஸம்ஹாரம் பண்ணினவுடன் அவன், பிள்ளை அங்கதனை அவருடைய guardianshipலேயே விட்ட மாதிரி” என மொழிந்த ஜகத்குரு, “அது ஸரி; நரகாஸுரனே இப்படி, தான் வதமான தினத்தை லோகமெல்லாம் பண்டிகையாகக் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் இன்னொரு version (கதாபேதம்) கேள்விப்பட்டிருக்கிறாயோல்லியோ?” என்று கேட்டார்.

“கேட்டிருக்கிறேன்” என்றார் அவர்.

“எனக்கென்னவோ அவனுடைய அம்மாவான பூமாதேவி இப்படி வரம் கேட்டாள் என்பதுதான் ரொம்ப விஸேஷமாக மனஸில் படுகிறது. பகவான் ஹஸ்தத்தால் மரணமடைந்து அவருக்குள்ளேயே ஐக்கியமாகிற ஸ்டேஜில் இருக்கும் ஒருத்தனுக்கு நல்லறிவு உண்டாகி இம்மாதிரி வேண்டிக் கொள்வதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால் ஒரு பெற்ற தாய் புத்ர சோகத்தில் வயிறெரியாமல், பரம துக்கமான ஸமயத்தில், நம் பிள்ளை போனாலும், அவன் போனதற்காகவே, லோகத்தில் ஸமஸ்த ஜனங்களும் ஸந்தோஷமாக விழா கொண்டாட வேண்டும் என்று வேண்டிக் கொண்டாளென்றால் அதுதான் நெஞ்சைத் தொடுகிற மாதிரி இருக்கிறது. பொறுமைக்கு பூமாதேவி என்பது இங்கேதான் நிரூபணமாகிறது. அந்தத் தாயாருடைய தியாக சக்தியினால்தான் தேசம் பூராவிலும் வேறெந்தப் பண்டிகைக்குமில்லாத பிராதான்யம் (முதன்மை) தீபாவளிக்கே ஏற்பட்டிருக்கிறது என்று எனக்கு அபிப்ராயம்” என்றார்.

கண்ணன் காவேரி ஸ்நானம் செய்த கதையைத் தெரிந்து கொள்வதில் தங்கள் ஆர்வத்தைச் சில பக்தர்கள் தெரிவித்துக் கொண்டனர்.

“அவன் (முதலில் விண்ணப்பித்த அடியார்) ‘கங்கா ஸ்நான ஸம்பந்தத்தைச் சொல்லு’ என்று கேட்டான். நான் காவேரி ஸ்நானத்தைப் பற்றிச் சொல்கிறேனென்றால், “ஸ்வாமிகளுக்கு நாம் கேட்ட விஷ்யம் தெரியாது” என்று நினைக்க மாட்டானா? அதனால், கங்கா ஸ்நானம், காவேரி ஸ்நானம் எல்லாவற்றையும் பற்றிச் சொல்கிறேன்” என்று குறும்பாகக் கூறிய குருநாதர், மேலும் குறும்பாக “இவர் (பண்டிதர்) ”பாகவதத்திலே வந்தால்தான் ஒப்புக் கொள்வேன்” என்று சொன்னாலும் நான் அதோடு வேறு கதைகளையும் போட்டுப் பிசைந்து அவியலாகத்தான் சொல்லப் போகிறேன். காவேரி மகாத்மியத்தைப் பற்றி ஸ்காந்தம், ஆக்நேய புராணம், பிரம்ம வைவர்த்த புராணம் முதலானதுகளில் இருக்கிறது. அதிலொன்றில்* துலா காவேரி மஹிமையைச் சொல்கிற இடத்தில் தான் தீபாவளிக் கதை வருகிறது. சுகருக்கு பாகவதத்தை உபதேசித்த அதே வியாஸாசாரியாள்தான் இந்த எல்லாப் புராணங்களையும் கொடுத்திருக்கிறார்” என அர்த்த புஷ்டியுடன் மொழிந்து, நிமிர்ந்து அமர்ந்து, கதை கூற ஆயத்தமானார்.

ஓர் அம்மாள் “நரகாஸுர வதக்கதையைக்கூடப் பெரியவாள் வாயாலே கேட்கணும்” என்று விஞ்ஞாபித்துக் கொண்டாள்.

“எல்லாக் கதையும்தான்! ஏதோ இப்போது எனக்கு நினைவு வருகிற வரைக்கும் சொல்கிறேன்” என்று ஸர்வக்ஞர் கடல் மடையாகத் தொடங்கினார். பண்டிதரும் ஓரிரு இடங்களில் எடுத்துக் கொடுக்க, அது மேலும் பொங்கிப் பெருகச் செய்தார்.

கங்கையும் காவேரியுமாக இருந்த அந்தப் பிரவாஹத்தை இங்கே வாசகர்களுக்கு வழங்குகிறோம்.

(குறிப்பு: * பிரம்ம வைவர்த்த புராணத்தில்)

***
நரகாஸுரனும் அவன் ஊரும்

    நம்முடைய தேசத்தில் இருக்கிற அநேக ராஜ்யங்களில் ஒரே மலைகளும், பிரம்மபுத்ரா மாதிரியான காட்டாறுகளும் மலை ஜனங்களுமே ஜாஸ்தி இருக்கிற அஸ்ஸாமுக்கு அவ்வளவு பெருமை இருப்பதாக நாம் நினைப்பதில்லை. ஆனால் லோகத்திலேயே ‘மாக்ஸிமம்’ மழை பெய்கிற சிரப்புஞ்ஜி அங்கேதான் இருக்கிறது. ஆதி காலத்தில் அதற்கு நிரம்பப் பெருமை இருந்திருக்கிறது. அப்போது அதற்குக் ‘காமரூபம்’ என்று பேர். ஏன் அப்படிப் பேர் என்றால், தக்ஷிணத்தில் பராசக்தி காமாக்ஷியாக இருக்கிற மாதிரி அங்கேயும் ‘காமா’ என்ற பெயரில் பிரசித்தமான சக்தி பீடத்தில் இருக்கிறாள். ‘காமாக்யா’ என்று சொல்வார்கள். ‘ஆக்யா’ என்றால் பெயர். சிவ நாம மகிமையைச் சொல்வதாக ஸ்ரீதர ஐயாவாள் செய்திருக்கிற ஸ்துதிக்கு ‘ஆக்யா ஷஷ்டி’ என்றே பெயர். ‘காமாக்யா’ என்றால் ‘காமா’ என்று நாமமுடையவள். அவளுடைய வாஸஸ்தலமானதால் அஸ்ஸாமுக்கே காமரூபம் என்று பெயர். அதற்கு இன்னொரு பெருமை என்னவென்றால் பகவான் வராஹ அவதாரமெடுத்து, ஹிரண்யாக்ஷணை ஸம்ஹாரம் பண்ணி, ஜலத்துக்குள் முழுகியிருந்த பூலோகத்தைத் தம்முடைய நெற்றிப் பல் நுனியில் கொத்தி எடுத்துக் கொண்டு வந்தபோது அவருடைய பல் பட்ட இடம் இந்தக் காமரூபம்தான். மலையும் குன்றுமாகக் கரடு முரடாக இருந்ததால் இந்தப் பிரதேசம்தான் வழுக்கி விழாமல் ‘பாலன்ஸ்’ பண்ணிக் கொள்ள ஏற்றதாக இருந்தது போலிருக்கிறது.

இப்படி பூமாதேவியோடு வராஹ மூர்த்திக்கு ஸ்பரிசம் ஏற்பட்டதிலிருந்து ஒரு புத்திரன் ஸம்பவித்தான். பகவத் லீலை நமக்குப் புரியாது. ஸாக்‌ஷாத் பகவானே ஓர் அஸுரனைக் கொன்று, நம்மெல்லோரையும் தாயாகத் தாங்குகிற பூமாதேவிக்கு அநுக்ரஹித்த இந்தப் புத்திரன் எதனாலோ அஸுரனாக இருந்தான். நல்லதற்கு மட்டும் God, கெட்டதற்கு Satan (சாத்தான்) என்றில்லாமல், நல்லது கெட்டது எல்லாவற்றுக்கும் ஒரே பரமாத்மாதான் மூலம் என்றுதானே நம் சாஸ்திரம் சொல்லுகிறது? அதனால் இப்படி பகவானுக்கும் பூமாதேவிக்குமே அஸுரப் பிள்ளை பிறந்தது போலிருக்கிறது.

அந்தப் பிள்ளைதான் நரகாஸுரன்.

அவன் ப்ரம்மாவைக் குறித்து தபஸ் பண்ணி மஹா பலத்தைப் பெற்றான். லோகங்களையெல்லாம் ஹிம்ஸித்து நரக பாதைக்கு ஆளாக்கினான். அதனால்தான் அவனுக்கு நரகாஸுரன் என்றே பேர் வந்ததோ என்னவோ? ‘பெளமன்’ என்றும் அவனுக்கு இன்னொரு பெயர். ‘பூமியின் பிள்ளை’ என்பதால் இப்படிப் பேர் வந்தது. அங்காரகனும் (செவ்வாயும்) பூமி குமாரனானதால் அவனுக்கும் ‘பெளமன்’ என்ற பெயருண்டு. ஸங்கல்பத்தில் செவ்வாய்க் கிழமையை மங்களவாரம் என்றோ, அங்காரக வாரம் என்றோ சொல்லாமல், ‘பெளம வாஸர யுக்தாயாம்’ என்றுதான் சொல்கிறோம். ‘அஸ்ட்ரனாமிப்படி’யும் மார்ஸ் (செவ்வாய்) கிரஹத்தில்தான் நம்முடைய உலகம் மாதிரியே நம்மைப் போன்ற உயிரினம் இருக்கக் கூடும் என்று சொல்கிறார்கள். கிரேக்க-ரோம ‘மைதாலஜி’களில், செக்கச் செவேலென்றிருக்கிற அந்தக் கிரஹத்தை யுத்த தேவதையாகச் சொல்கிறார்கள். ‘செவ்வாய்’ என்றே தமிழில் சிவப்பை வைத்துப் பெயர் இருக்கிறது. செக்கச் செவேலென்ற சிவ நேத்ராக்னியில் தோன்றி தேவஸேநாதிபதியாக இருக்கும் முருகனை அங்காரகனோடு இணைத்து நினைக்கிறோம்.

இந்த பெளமனோ கன்னங் கரேலென்று, தான் போகிற இடத்தையெல்லாமும் நரக இருட்டாகப் பண்ணுகிறவனாக இருந்தான்! தேவலோகத்துக்குப் போய் தேவர்களை அடித்து நொறுக்கி ஹதாஹதம் பண்ணினான். இந்திரனுடைய குடையையும் – குடைதான் பெரிய ராஜச் சின்னம்; ’வெண்கொற்றக் குடை’ – என்கிறோம். ‘சத்ரபதி’, ‘சத்ரபதி சிவாஜி’ என்றெல்லாம் சொல்கிறபோது ‘சத்ரம்’ என்றால் குடைதான் – அப்படிப்பட்ட இந்திரனுடைய குடையையும், இந்திரனுடைய தாயார் அதிதியின் குண்டலங்களையும் நரகாஸுரன் பறித்துக் கொண்டு வந்தான். காம ரூபத்தில் ப்ராக்ஜ்யோதிஷபுரம் என்கிற ஊரைத் தலைநகராக வைத்துக் கொண்டு கொடுங்கோல் ராஜ்யம் நடத்தினான். ‘ஜ்யோதிஷபுரம்’ என்றால் ப்ரகாசமான பட்டணம்’ என்று புரிந்து கொள்வீர்கள். ‘ப்ராக்’ என்றால் முன்பக்கம், கிழக்குத் திசை என்று அர்த்தம். ஸூர்யோதயம் கிழக்கில் தானே? இந்தியாவுக்கே கீழ்க்கோடியில் காம்ரூபத்தில் இருந்ததால், தன்னுடைய இருட்டு ஊருக்கு ப்ராக்ஜ்யோதிஷபுரம் என்று பெயர் வைத்தான்.

பஹு காலம் இந்திரனும் பகவானிடம் முறையிடாமல் பொறுத்துக் கொண்டே இருந்தான். வேறே யாரோ அஸுரன் என்றால் பகவானிடம் ‘கம்ப்ளெயின்’ பண்ணலாம். இவனோ பகவானுக்கே அல்லவா பிள்ளையாக இருந்தான்? அதனால், ‘உன் பிள்ளையின் அழகைப் பார்’ என்று பிராது கொடுத்தால் அது பகவானையே குத்திக் காட்டுகிற மாதிரிதானே என்று நினைத்துப் பொறுத்துக் கொண்டேயிருந்தான்.

கண்ணனிடம் முறையீடு

    அப்புறம் பகவான் கிருஷ்ணாவதாரம் பண்ணினார். எளியவர்களுக்குள் எளிய இடைப் பசங்களோடும் கோபிகா ஸ்திரீகளோடும் பரம பிரேமையோடு உறவாடிக் கொண்டே, அதிமாநுஷ்யமான அற்புதங்களையும் பண்ணினார். பூதனையிலிருந்து ஆரம்பித்து அநேக அஸுரர்களை அதி பால்யத்திலேயே ஹதம் பண்ணினார். இந்த இந்திரனே ஏழு நாள் மழை பெய்துவிட்டு ஓய்ந்து போய்த் தன் காலில் விழுந்து சரணாகதி பண்ணி, கோவிந்த பட்டாபிஷேகம் செய்யும்படியாக்க் கோவர்த்தன கிரியைச் சுண்டு விரலில் தூக்கி, கோக்களையும், கோபர்களையும் ரக்ஷித்தார்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் ப்ரம்மா, ‘இதென்ன நம் தகப்பனாரான பரமாத்மா இப்படி மாயத்தில் மாட்டிக் கொண்டு, மாடு மேய்த்துக் கொண்டு திரிகிறாரே! இந்த மந்தையையெல்லாம் நாம் மறைத்து விட்டாலாவது அவருக்கு மாயை போகுமா?’ என்று தப்பாக நினைத்து, ஆநிரை முழுதையும், ஆயப் பசங்கள் அத்தனை பேரையும் கடத்திக் கொண்டே போய்விட்டார்! ஷண காலத்தில் பாலகிருஷ்ணன் அவ்வளவு பேருக்கும் ‘டூப்ளிகேட்’ ஸ்ருஷ்டி பண்ணிவிட்டார். ஒரு வருஷம் முழுக்க அந்த டூப்ளிகேட் ஸ்ருஷ்டியையேதான் கோகுலத்திலே இருந்த தாய், தகப்பன்மார்களெல்லாம் ‘ஒரிஜினல்’ என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள்! பரிபாலனை தெய்வமான கிருஷ்ணரால் இப்படி ஸ்ருஷ்டி செய்ய முடிந்தாலும், ஸ்ருஷ்டிக்குத் தெய்வமான ப்ரம்மாவால் தாம் கடத்திக் கொண்டுபோன பசுக் கூட்டத்தையும், இடைப் பசங்களையும் பரிபாலித்துச் சமாளிக்க முடியவில்லை! தெரியாத காரியத்தை இழுத்துப் போட்டுக் கொண்டு திண்டாடினார். ஸம்ஹாரம் செய்து விடலாமா என்றால், ப்ரம்மா ஸம்ஹார மூர்த்தியுமில்லையே! கிருஷ்ணர் பச்சைக் குழந்தையாயிருந்ததிலிருந்து அநேக அஸுரர்களை வதம் செய்திருக்கிறாரே, அப்படிச் செய்ய ப்ரம்மாவுக்கு ஸம்ஹார சக்தியுமில்லை; மனஸும் இல்லை. அப்போதுதான் அவருக்கு மும்மூர்த்தி என்றிருந்தாலும், தாம் தகப்பனாருக்குக் கொஞ்சங்கூட ஸமதையில்லை. தம் ஸ்ருஷ்டி சக்திகூட தகப்பனாரின் அநுக்ரஹத்தினால் கிடைத்ததுதான் என்று தெரிந்தது. ‘தகப்பனார் எந்த மாயைக்கும் ஆளாகவில்லை. மாயை எவருக்கு அடிமையாக வேலை செய்கிறதோ அப்படிப்பட்ட ப்ரபு அவர். இதைப் புரிந்து கொள்ளாதபடி நம்மைத்தான் மாயை மூடியிருந்தது’ என்று பிரம்மாவுக்கு அறிவு பிறந்தது. அவர் தாம் கடத்திக் கொண்டு போனவர்களையெல்லாம் கிருஷ்ணரிடமே கொண்டு வந்து கொடுத்து, ஏகமாக ஸ்தோத்திரம் பண்ணி, மன்னிப்புக் கேட்டுக்கொண்டு போனார்.

ப்ரம்மா தப்புப் பண்ணின போது, பெற்ற பிள்ளையென்றும் பாராமல் அவரை இப்படித் திணறப் பண்ணின கிருஷ்ணர்தான் வெளியிலே என்ன வேஷம் போட்டாலும் உள்ளூர பந்து-மித்ரர் என்ற பந்த பாசமே இல்லாமல் தர்ம நியாயப்படி பண்ணுகிறவர்; இவரால்தான் புத்திரன் என்றும் பார்க்காமல் நரகாஸுரனைக் கொல்ல முடியும் என்று இந்திரனுக்குத் தீர்மானமாயிற்று. ஆனாலும், அவதாரம் பண்ணின நாளிலிருந்து எப்போது பார்த்தாலும் அஸுர ஸம்ஹாரத்துக்கே அவரை இழுத்து ச்ரமப்படுத்துவதா என்று இன்னும் கொஞ்சம் பொறுத்துக் கொண்டிருந்தான்.

கம்ஸ வதமாகி, ஜராஸந்தனைத் துரத்திவிட்டு, பகவான் துவாரகாபுரியை நிர்மாணம் பண்ணிக்கொண்டு அங்கே கொஞ்ச காலம் விச்ராந்தியாக இருந்தார். அப்புறம் ருக்மிணியின் உறவுக்காரர்களோடு சண்டை போடு அவளைக் கல்யாணம் பண்ணிக் கொண்டார். அதற்கப்புறம் ஸத்யபாமா முதலான அநேக பத்னிகளையும் விவாஹம் செய்து கொண்டார். இதிலெல்லாமும் நடுவே சண்டைகள் வந்தன. அப்புறம் கொஞ்ச காலம் எந்தச் சண்டையுமில்லாமல் பத்தினிகளோடு ஸந்தோஷமாக, சாஸ்திரோக்தமான கிருஹஸ்த தர்மங்களைச் செய்துகொண்டு துவாரகையில் வாழ்ந்து வந்தார்.

இனிமேல் அவரை உபத்திரவப்படுத்தினால் பரவாயில்லை என்று இந்திரன் அவரிடம் வந்து நரகாஸுரனுடைய ஹிம்ஸையைப் பற்றி முறையிட்டான்.

நரகாஸுர வதம்; ஸத்யபாமாவின் பங்கு

    உடனே கிருஷ்ணர் ஸாக்ஷாத் மஹாவிஷ்ணுவைப் போல் கருடனை அழைத்து அவன் மேலேறிக் கொண்டு, ஸத்ய பாமாவையும் துணை சேர்த்துக் கொண்டு ப்ராக்ஜ்யோதிஷபுரத்துக்குப் புறப்பட்டு விட்டார். ஸத்யபாமாவை எதற்கு அழைத்துக்கொண்டு போனாரென்றால், அவள் பூமாதேவியின் அவதாரம்தான். ருக்மிணி, ஸ்ரீதேவி. பாமா பூதேவி. பொதுவாக ருக்மிணிதான் அடக்கம் முதலான உத்தம குணங்கள் உள்ளவள், பாமாவுக்கு அஹங்காரம் ஜாஸ்தி என்று நினைக்கிறோம். பகவானும் மாய நாடகமாடி, பாமாவுக்கு ரொம்ப அநுகூலமாயிருக்கிறது போலக் காட்டியே கடைசியில் ருக்மிணியின் முன் அவள் ‘மூக்கு அறுபடும்படி’ செய்திருப்பதாகக் கதைகள் இருக்கின்றன. ஆனால் இப்போது ஸத்ய பாமாவிடம் இருந்த உயர்ந்த குணங்கள் தெரிவதற்காகவே அவளை அழைத்துக் கொண்டு போனார். என்ன இருந்தாலும் அவர் புருஷர். ஆதலால் பெற்ற பிள்ளையை வதம் பண்ணுவதற்கான நெஞ்சுரம் அவருக்கு இருந்ததுகூட ஆச்சரியமில்லை. லோகத்துக்கே விரோதியாகத் தன் பிள்ளை இருக்கிறான் என்பதால் அவன் சாக வேண்டியது தான் என்று ஒரு தாயார் நினைப்பதுதான் இதைவிட விசேஷம். இப்படி நினைத்துத் தன் துஷ்டப் பிள்ளை சாவதையும் தன் கண்ணாலேயே பார்த்து லோக ‌க்ஷேமத்தை நினைக்கக் கூடிய உசந்த குணம் ஸத்ய பாமாவுக்கு உண்டு என்று தெரியப்படுத்துவதற்காகவே அவளை அழைத்துக் கொண்டு போனார்.

தர்மத்துக்காகப் போராடிய வீராங்கனைகளாகச் சில ராஜ ஸ்திரீகள் ஆதியிலிருந்து, ஸமீபத்து அஹில்யா பாய், ஜான்ஸி ராணி வரை இருந்திருக்கிறார்கள். கைகேயி ஸம்பராஸுர யுத்தத்தின் போது தசரதருக்கு ரத ஸாரத்யம் செய்திருக்கிறாள். கெளஸல்யை யுத்த பூமிக்குப் போனதாக இல்லை. அவள் அடக்க குணம் நிறைந்தவள். அதே மாதிரி ருக்மிணி. அவளை பகவான் யுத்த பூமிக்கு அழைத்துப் போனதில்லை. கைகேயி மாதிரி இளையாளாகவும், கொஞ்சம் ‘தாட் பூட்’ உள்ளவளுமான பாமாவைத்தான் அழைத்துப் போனார். கருட வாஹனத்துக்குப் பதில் ஸத்யபாமாதான் இந்தக் கதையில் பகவானை ரதத்தில் வைத்து ஸாரத்தியம் செய்துகொண்டு போனாள் என்றும் ஒரு கதாபேதம் உண்டு.

பொறுமைக்கு உருவமான பூமியினாலேயே துஷ்ட ராஜாக்கள் படுத்தும் பாடு தாங்க முடியாமல், அவள் பசுரூபம் எடுத்துக் கொண்டு போய், மஹாவிஷ்ணுவிடம் பிரார்த்தித்துக் கொண்டதன் மேல்தான் அவர் பூபாரம் தீர்ப்பதற்கென்றே கிருஷ்ணாவதாரம் செய்திருக்கிறார். அதில் கம்ஸன், சிசுபாலன், ஜராஸந்தன், துர்யோதனன் முதலானவர்களைத் தீர்த்துக் கட்டினால் மட்டும் போதாது; இவர்களையெல்லாம் விட க்ரூரமான நரகாஸுரனைத் தாயும் தந்தையுமான இரண்டு பேருமே சேர்ந்து வதம் பண்ண வேண்டும் என்று தம்பதியாகப் போனார்கள்.

ப்ராக்ஜ்யோதிஷபுரத்துக்குள் யாரும் நுழைய முடியாதபடி அநேக கோட்டைகளைக் கட்டிக் கொண்டு உள்ளே வஸித்தான் நரகன். வெளி எல்லையில் முதலில் மலைகளையே கோட்டையாக அமைத்துக் கொண்டிருந்தவன் அதற்குள்ளே ஆயுதங்களாலேயே ஆன கோட்டை, அப்புறம் ஜலத்தை மந்திர சக்தியால் எழுப்பி நிறுத்தி அமைத்துக் கொண்ட ஜலக் கோட்டை, அதற்கப்புறம் உள்ளே நெருப்பாலேயே ஆன அக்னிக் கோட்டை, அப்புறம் வாயுக்கோட்டை என்று பலவற்றைக் கட்டிக் கொண்டு உள்ளுக்குள்ளே இருந்தான்.

பகவான் ஒவ்வொரு கோட்டையையும் தவிடு பொடியாக்கிக் கொண்டு ஊருக்குள்ளே வந்து, பாஞ்சஜன்ய (சங்க)த்தை ‘பூம் பூம்’ என்று முழக்கி அஸுரனை யுத்தத்துக்குக் கூப்பிட்டார்.

முதலில் நரகாஸுரனுடைய ஸேனாதிபதியான முரன் என்கிறவன் சண்டைக்கு வந்தான். அவனுக்கு ஐந்து தலை. வீர பராக்கிரமத்தோடு சண்டை போட்டான். பகவான் ஸுதர்சன சக்ராயுதத்தால் அவனுடைய ஐந்து தலைகளையும் அறுத்து அவனை ஸம்ஹாரம் செய்தார்.

கருடன் எப்படி விஷ்ணுவின் வாஹனமோ, அப்படியே ஸுதர்சன சக்ரம் விஷ்ணுவின் ஆயுதம். கருடாரூடரான கிருஷ்ணர், இந்தச் சக்கரம், விஷ்ணுவின் கதையான கெளமோதகீ முதலானதுகளையும் தரித்திருக்கிறார். ராமர் முதலான அவதாரங்கள் இப்படிச் செய்ததில்லை. இதனால்தான் கிருஷ்ணரையே மஹாவிஷ்ணுவின் பூர்ணாவதாரம் என்பது.

முரனை வதைத்ததாலேயே அவருக்கு முராரி, முரஹரி என்ற பெயர்கள் ஏற்பட்டன. முரனுக்கு அரி (சத்ரு) முராரி. த்ரி-புரம் என்ற மூன்று புரங்களில் உருவமாயிருந்த அஸுரர்களுக்கு விரோதியானதால் ஈச்வரனுக்குப் புராரி என்று பெயர். முரஹரி என்றாலும் முரனை அழித்தவர்.

முரன் கதை முடிந்ததும் அவனுடைய ஏழு புத்திரர்களும் வந்து யுத்தம் பண்ணி, அவன் போன கதிக்கே தாங்களும் போய்ச் சேர்ந்தார்கள்.

கடைசியில் ஒரு பெரிய யானை மேல் ஏறிக் கொண்டு நரகாஸுரனே யுத்த பூமிக்கு வந்தான்.

கருடனின் மேலிருந்து கொண்டு பகவான் அவனோடு சண்டை போட்டார். அவனுடைய ஸைன்யத்தை வதம் பண்ணுவதில் கருடன், ஸத்யபாமா இரண்டு பேரும் அவருக்கு ஸஹாயம் செய்தார்கள். தாமே எதையும் ஸாதித்துக் கொள்ள முடியுமாயினும், அவர்கள் வெறுமனே வேடிக்கை பார்த்ததாக இருக்கக் கூடாது என்று நினைத்து, அவர்களுக்கும் இப்படி ஸேவா பாக்யத்தைக் கொடுத்தார்.

அஸுர ஸைன்யம் முழுவதும் நிர்மூலமான பின் பகவானுக்கும் நரகாஸுரனுக்கும் நேருக்கு நேர் உக்ரமான யுத்தம் நடந்தது. பகலோடு முடியாமல் ராத்திரியெல்லாம் சண்டை நீடித்தது. ராவேளையில் அஸுரர்களுக்கு பலம் விருத்தியாகும். ஆனாலும் பரமாத்மாவானதால் நரகனின் தாக்குதலைச் சமாளித்தார். அவனால்தான் இவருக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

முடிவிலே அருணோதய காலத்தில் பகவான் நரகாஸுரனைச் சக்ராயுதத்தால் ஸம்ஹாரம் செய்துவிட்டார்.

அன்று விடிந்தபோது லோகத்துக்கே பெரிய விடிவு காலமாயிற்று!

இது நடந்தது ஒரு ஆச்வின மாஸத்துக் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசியிலாகும். மறுநாள் அமாவாஸ்யை.

ஆச்வினம் என்பதை ஆச்வியுஜம் என்றும் சொல்வதுண்டு. நம்முடைய புரட்டாசி அமாவாஸ்யைக்கு மறுநாளான ப்ரதமையிலிருந்து ஐப்பசி அமாவாஸ்யை முடிய இருக்கிற சுமார் முப்பது நாளுக்கே ஆச்வினமாஸம் என்று பெயர். அந்த மாசத்தில்தான் க்ருஷ்ணபக்ஷ சதுர்த்தசியில் நரகாஸுரவதம்.

கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி என்பது பரமேச்வரனுக்கு ரொம்பவும் ப்ரீதியானது. மாஸம்தோறும் வரும் அந்தத் திதிக்கு மாஸ சிவராத்ரி என்றே பெயர். மாசி மாஸத்தில் இப்படி வருவதைத்தான் மஹா சிவராத்திரி என்று கொண்டாடுகிறோம். ஒரு ஐப்பசி மாஸ சிவராத்திரி முழுதும் விழித்துக் கொண்டு சண்டை போட்டே பகவான் நரகாஸுரனை வதம் பண்ணியிருக்கிறார்!

ஸத்யபாமாவேதான் நரகனை ஸம்ஹாரம் பண்ணினது என்று இன்னொரு விதமாகவும் சொல்வதுண்டு.

யாரானாலும், இரண்டு பேருமே அதிலே ஸந்தோஷப் பட்டு, லோக க்ஷேமத்தையே புத்ர நாசத்தை விடப் பெரிதாக மதித்திருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

பூமாதேவியின் பிரார்த்தனை

    இப்படிச் சாகிற சமயத்தில்தான் நரகாஸுரன், தான் அழிந்த தினத்தை லோகமெல்லாம் மங்கள ஸ்நானம் பண்ணி மங்களோத்ஸவமாகக் கொண்டாடி மகிழ வேண்டும் என்று வேண்டிக் கொண்டதாக ஒரு version.

பரம மங்களம் கங்கா ஸ்நானமே. அந்த ஸ்நான புண்யம் எந்த ஜலத்தில் ஸ்நானம் பண்ணுகிறவருக்கும் அன்றைய தினத்தில் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டான். இன்னொரு கதைப்படி, நரகனின் தாயாரான பூமாதேவி இப்படிப் பிரார்த்தித்து வரம் பெற்றதாக இருக்கிறது. முன்னேயே சொன்ன மாதிரி ஸாக்ஷாத் பரமாத்மாவின் கையால் வதமாகி ஸாயுஜ்ய முக்திக்குப் போகிற நிலையில் இருக்கிற நரகன் இப்படி லோகோபகாரமாக வரம் கேட்டுக் கொண்டதில் விசேஷம் எதுவும் தெரியவில்லை. அவனுடைய பெற்ற தாயார் இப்படிக் கேட்டாளென்றால்தான் அது மஹா உசத்தி என்று தோன்றுகிறது. தன் பிள்ளை எத்தனையோ வருஷமாக லோகத்தை அழவைத்ததற்குப் பிராயச்சித்தமாக எதிர்காலத்தில் வரப்போகிற அத்தனை வருஷமும் ஜனங்கள் அவன் பேரைச் சொல்லிக் கொண்டு, தங்கள் வாழ்க்கைப் போராட்ட அழுகைகளை மறந்து, ஆனந்தமாகப் பண்டிகை கொண்டாட வேண்டும் என்று நினைத்து இப்படி வரம் கேட்டாள்.

பூமாதேவியின் அவதாரமான ஸத்யபாமாவே ஸம்ஹாரத்துக்கு ஸஹாயம் பண்ண, தனியாக பூமாதேவி வந்து நரகாஸுரன் அபஹரித்திருந்த குடை, குண்டலங்களைக் கிருஷ்ணருக்கு ஸமர்ப்பணம் செய்துவிட்டு இப்படிப் பிரார்த்தித்தாள் என்று சொல்லியிருக்கிறதே என்று தோன்றலாம். ஒரு தெய்வம் அவதாரம் பண்ணின பிறகும், அந்த மூல தெய்வமும் இருக்கிறபடியே இருந்து கொண்டு அவதாரமும் தனியாக இருந்திருக்கிறது. பரமேச்வர அவதாரமான ஆசார்யாளே கைலாஸத்தில் ஈச்வர தரிசனம் பண்ணிப் பஞ்ச லிங்கங்களை வாங்கிக் கொண்டிருக்கிறார். பாகவதத்திலேயே பிற்பாடு ஒரு பிராம்மணனின் செத்துப் போன குழந்தைகளை விஷ்ணு லோகத்திலிருந்து மீட்டு வருவதற்காக கிருஷ்ணர் அர்ஜுனனோடு அங்கே போனதாகவும், அங்கே சேஷ சயனத்திலிருந்த நாராயண மூர்த்தியைப் பார்த்ததாகவும் விஷ்ணுவும் கிருஷ்ணரும் ஸம்பாஷித்துக் கொண்டதாகவும் வருகிறது. அப்படித்தான் இப்போது பூமாதேவி, பாமா இரண்டு பேரும் ஏக காலத்தில் வெவ்வேறாக இருந்திருக்கிறார்கள்.

தன் பிள்ளை போன தினத்தில் எல்லோருக்கும் கங்கா ஸ்நான புண்ணியம் கிடைக்க வேண்டும் என்று பூமாதேவி கேட்டுக் கொண்ட விசேஷம்தான் இன்றைக்கும் நாம் தீபாவளியன்று ‘கங்கா ஸ்நானம்’ செய்வது.

உறவுக்காரர்கள் ‘போய்’விட்டால் ஸ்நானம் பண்ணுவது வழக்கம். எதுவாவது உபயோகமில்லை என்று முடித்துவிட்டால் ‘முழுக்குப் போட்டுவிட்டேன்’ என்கிறது இதனால்தான். செத்துப்போனதாலேயே லோகத்துக்கெல்லாம் உபகாரம் பண்ணின நரகாஸுரனை அத்தனை பேரும் எத்தனையோ தலைமுறைகளாக உறவுக்காரனாக நினைத்து வருஷா வருஷம் அவனுக்காக முழுக்குப் போடும்படி அவனுடைய அம்மா செய்திருக்கிறாள்! ஆனால் இது துக்க முழுக்கு இல்லை: ஸந்தோஷ முழுக்காக இருக்க வேண்டும் என்றே அவள் இதை மங்கள ஸ்நானமாக, அதாவது எண்ணைய் தேய்த்துக் கொண்டு செய்யும் ஸ்நானமாகப் பண்ணினாள். துக்க முழுக்கானாலும், உபவாஸ விரதாநுஷ்டானத்துக்கான ‘மடி’யான ஸ்நானமானாலும் பச்சைத் தண்ணீரில்தான் குளிக்க வேண்டும். ஆனால் இதுவோ ஸந்தோஷமான பண்டிகை அல்லவா? அதனால்தான் எண்ணைய் தேய்த்துக் கொண்டு அப்புறம் வெந்நீரில் ஸ்நானம் செய்ய வேண்டும் என்றும் வித்தியாசமாக அவள் வரம் வாங்கி வைத்திருக்கிறாள். ‘ஐப்பசி மாதம் அடைமழை’ என்பது வசனம். அதிலே எண்ணைய் தேய்த்துப் பச்சைத் தண்ணீர் ஸ்நானம் செய்தால் குளிர் நடுக்கும்; ஜலதோஷம், ஜ்வரம் வரும். நரகாஸுரனைச் சபிப்போம்! அதனால்தான் ஹிதமாக, ஸெளக்கியமாக வெந்நீர் ஸ்நானம் பண்ணும்படி வேண்டிக் கொண்டிருக்கிறாள்!

இதிலே இன்னொரு புதுமை –- ஸூர்யோதயத்துக்கு முன்னாடி அப்யங்கனம் (எண்ணைய்க் குளியல்) பண்ணக் கூடாது என்பது விதி. ஆனாலும் இதற்கு வித்யாஸமாக ஒரு விதி சாக்ஷாத் பகவானிடமிருந்து வரமாக வாங்கி விட்டாலே பிள்ளையைப் பற்றி விசேஷமாக நினைக்கத் தூண்டும் என்று பூமாதேவி நினைத்தாள். அதனால்தான் தீபாவளி ஒரு நாளில் மட்டும் ஸூர்யோதயத்துக்கு முந்தி அருணோதய காலத்திலேயே தைல ஸ்நானம் பண்ண வேண்டும் என்று வரம் கேட்டு அதற்குப் பகவானின் அங்கீகாரத்தைப் பெற்றாள்.

அருணோதயம் என்றால் அருணனின் உதயம். அருணன் என்பவன் ஸூர்யனுடைய தேரோட்டி. அவன் ஒரே சிவப்பாக இருப்பான். நல்ல சிவப்புக்கு அருண வர்ணம் என்றே பெயர். ‘ஆனை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே’ என்கிறது போல சூரியன் அடிவானத்தில் தெரிகிறதற்கு ஒரு முஹூர்த்த காலத்துக்கு முந்தியே அங்கே சிவப்பு பரவ ஆரம்பித்து விடுவதைத்தான் அருணோதயம் என்பது. ஒரு முஹூர்த்தம் என்பது இரண்டு நாழி. அதாவது நாற்பத்தெட்டு நிமிஷம். தீபாவளியன்று ஸூர்யோதயத்துக்கு ஒரு முஹூர்த்தம் முந்தியே எண்ணைய் தேய்த்துக் குளிக்க வேண்டும். விடிவதற்கு முன்னால் அப்யங்கனம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக, ராத்திரி இரண்டு மணி, மூன்று மணிக்கே ஸ்நானம் செய்வது தப்பு.

இந்த ஸ்நானத்திலே நாம் வைத்துக் கொள்கிற எண்ணையில் லக்ஷ்மி தேவி வாஸம் பண்ண வேண்டும் என்றும், குளிக்கிற வெந்நீரில் கங்கா தேவி வஸிக்க வேண்டும் என்றும் பூமாதேவி கேட்டுக் கொண்டாள். அதன் பின்பாதியை ஒட்டித்தான், பிரஸித்தமாக தீபாவளியன்று ‘கங்கா ஸ்நானம்’ என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் தைலத்தில் லக்ஷ்மி என்பதை நாம் மறந்து விட்டோம் என்றாலும் அதுதான் தீபாவளிக் கதையை பூமாதேவியோடு மட்டுமல்லாமல் ஸ்ரீதேவியுடனும் சேர்த்து வைக்கிறது! வடக்கே தீபாவளியை விசேஷமாக லக்ஷ்மி பூஜையாகவே செய்து, வியாபாரிகள் புதுக் கணக்கு ஆரம்பிக்கிறார்கள். இதிலேயும் பூமாதேவியின் பெருமை தெரிகிறது. தன்னை எந்தத் தினுஸிலும் பெருமைப்படுத்திக் கொள்ளாமல் சக்களத்தியான ஸ்ரீதேவிக்கும், பரமேச்வரனின் பத்னி ஸ்தானத்தில் நினைக்கப்படும் கங்கா தேவிக்குமே பண்டிகையில் ஸம்பந்தம் இருக்கும்படி செய்திருக்கிறாள்.

கங்காதரன் என்று ஈச்வரனுக்குப் பேர் இருப்பதால் கங்கை என்றவுடன் சிவ ஸம்பந்தமானது என்று தோன்றினாலும் அதற்கு விஷ்ணு சம்பந்தமும் நிரம்ப உண்டு. வாமன ப்ரம்மசாரி த்ரிவிக்ரமனாக வளர்ந்து லோகம் முழுவதையும் முதல் அடியால் அளந்துவிட்டு, தேவ லோகத்தை இரண்டாம் அடியால் அளந்தபோது ப்ரம்மா ஓடோடி வந்து அந்தப் பாதத்தில் வார்த்த தீர்த்தம்தான் ஆகாச கங்கையாயிற்று. அந்த கங்கையின் ஒரு தாரையையே பகீரதன் தன்னுடைய பித்ருக்களைக் கடைத்தேற்றுவதற்காகப் பூலோக கங்கையாகக் கொண்டு வரத் தபஸ் பண்ணினான். ஆகாச தாரையின் வேகத்தைப் பூமி தாங்க முடியாது என்றே பரம கருணாநிதியான ஈச்வரன் அதைத் தம் ஜடாபாரத்தில் தாங்கி, அடக்கி, பூமி தாங்கும்படியான வேகத்தில் கட்டுப்படுத்தி விட்டார். ஆகக்கூடி கங்கைக்கு விஷ்ணு, சிவன் இருவர் ஸம்பந்தமும் இருக்கிறது.

தன் பிள்ளையின் நினைவுக்காகப் புதிதாக ஒன்றைப் பண்ணி விட்டால் மட்டும் போதாது, அதனால் ஸகல ஜனங்களும் ஸந்தோஷப்பட்டு விட்டாலும் போதாது, அவர்களுக்குப் புண்ணியமும் கிடைக்கும்படி செய்ய வேண்டுமென்றுதான் தைலத்தில் லக்ஷ்மியின் ஸாந்நித்யமும், வெந்நீரில் கங்கா ஸாந்நித்யமும் இருக்கும்படி பூமாதேவி செய்தாள்.

கீதை : தீபாவளியின் தம்பி

    கங்கை சிவ ஸம்பந்தமா, விஷ்ணு ஸம்பந்தமா என்பதை பூமாதேவி நினைக்கவில்லை. சைவ-வைஷ்ணவ வித்யாஸமில்லாமல் ஸமஸ்த ஜன்ங்களும் புண்ய தீர்த்தங்களுக்குள் அக்ர [முதன்மை] ஸ்தானம் தருவது கங்கைக்குத் தானே? அதனால் தீபாவளி ஸ்நானத்துக்கு கங்கா ஸ்நான பலன் ஏற்படவேண்டும் என்று வரம் பெற்றாள்.

ஸாதாரணமாக எந்த க்ஷேத்திரத்தின் ஸ்தல புராணத்தைப் பார்த்தாலும், ‘இது காசிக்கு ஸமமானது; அல்லது காசியையும் விட உசந்தது’ என்றே இருக்கும். இப்படி ஒரு க்ஷேத்திரத்தை மற்ற எந்த க்ஷேத்திரத்தோடும் ‘கம்பேர்’ பண்ணாமல் காசியோடேயே எல்லா க்ஷேத்திரங்களையும் ஒப்பிட்டிருப்பதாலேயே காசிதான் க்ஷேத்ர ராஜா என்று தெரிகிறது. இப்படியே மற்ற புண்ய தீர்த்தங்களைப் பற்றிய புராணங்களிலும் அவற்றை ஒன்றோடொன்று ஒப்பிட்டு உசத்தி சொல்லாமல், அந்தந்த நதியையும் பற்றி ‘இது கங்கா துல்யமானது’ அல்லது ‘கங்கயை விட விசேஷமானது’ என்றுதான் சொல்லியிருக்கும். இதனாலேயே கங்கைதான் தீர்த்தங்களில் தலைசிறந்தது என்று ‘ப்ரூவ்’ ஆகிறது. நம் ஆசார்யாளே

பகவத்கீதா கிஞ்சித் அதீதா
கங்கா ஜலலவ கணிகா பீதா
ஸக்ருதபி யேன முராரி ஸமர்ச்சா
க்ரியதே தஸ்ய யமேந சர்ச்சா

என்று ’பஜகோவிந்த’த்தில் சொல்கிறார். ‘எவன் கொஞ்சமாவது கீதா பாராயணம் பண்ணி, துளியாவது கங்கா தீர்த்தத்தைப் பானம் பண்ணி, ஒரு தடவையாவது முராரிக்கு அர்ச்சனை பண்ணுகிறானோ அவனுக்கு யமனிடம் வியவஹாரம் ஒன்றுமில்லை – அதாவது யமலோகத்துக்கு, நரகத்துக்குப் போகாமல், புண்ய லோகத்துக்கு அவன் போகிறான்’ என்று அர்த்தம். “நமனை அஞ்சோம்” என்று அப்பர் ஸ்வாமிகளும், “நலியும் நரகும் நைந்த; நமனுக்கிங்கு யாதொன்றுமில்லை” என்று நம்மாழ்வாரும் சொன்ன மாதிரி, கங்கா தீர்த்த பானம் பண்ணினவனிடம் யமனுக்கு ‘ஜூரிஸ்டிக்‌ஷன்’ [ஆணையைல்லை] இல்லை என்று பகவத்பாதாள் சொல்கிறார்.

இந்த ஸ்லோகத்தில் ஒரு ஆச்சரியம், இதில் சொல்லியிருக்கிற கீதை, கங்கை, முராரி, யமன் ஆகிய நாலுக்குமே தீபாவளி ஸம்பந்தம் இருப்பதுதான்!

கீதையை நான் தீபாவளியின் தம்பி என்று சொல்வது வழக்கம். ஏன்? தீபாவளிக்கு நான் என்ன சிறப்புச் சொன்னேன்? சற்றும் எதிர்பாராத ஒரு சூழ்நிலையில், அதாவது மஹத்தான புத்ர சோகத்தின் மத்தியில் இப்படிப்பட்ட கோலாஹலமான பண்டிகையை ஒரு தாயார்க்காரி உண்டாக்கிக் கொடுத்ததால்தான் அது பண்டிகைகளுக்கே ராஜாவாக இருக்கிறது என்று தானே சொன்னேன்? இதே மாதிரிதான், எத்தனை மதப் புஸ்தகங்கள், தத்வ சாஸ்திரங்கள் இருந்தாலும், அதற்கெல்லாம் சிகரமாக ‘கீதை’, ‘கீதை’ என்றே ஆதிகால மதாசாரியர்களிலிருந்து திலக், காந்தி, இப்போதுள்ள பல ஸாதுக்கள், பிலாஸஃபிக்காரர்கள், அரசியல்வாதிகள் வரை எல்லோரும் கொண்டாடுவதைப் பார்க்கிறோம். கீதையும் தீபாவளி மாதிரியேதான் கொஞ்சமும் எதிர்பார்க்க முடியாத சந்தர்ப்பத்தில் பிறந்த தியாக சக்தியிலிருந்து தோன்றியிருக்கிறது. ஸாதாரணமாகத் தத்வோபதேசம் என்றால் விச்ராந்தியான ஆசிரமத்திலே வயஸான குரு, வயஸில் சின்னவனான சிஷ்யனுக்குச் செய்வதாக இருக்கும். ஆனால் இந்த பகவத்கீதையோ நேர்மாறாக யுத்த பூமியில், கோரமான ரணகளத்தில் பிறந்தது. அர்ஜுனன் தனக்கு ஸம வயஸினனான கிருஷ்ணரிடம், தான் யஜமானனாயிருந்து, அவர் வண்டிக்காரனாகத் தேரோட்டுகிறபோது பெற்றுக் கொண்ட உபதேசம். அடுத்த க்ஷணமே தன் தலை போனாலும் போகக் கூடும் என்கிற ஆபத்தான் ஸந்தர்ப்பத்தில் பிராணனை விட ஸத்யத்தைத் தெரிந்து கொள்வதுதான் பெரிசு என்ற தியாக புத்தியுடன் அர்ஜுனன் பகவானிடம், ‘சிஷ்யஸ்தேஹம் சாதி மாம் த்வாம் ப்ரபன்னம்’ — “சிஷ்யனாக நான் உன்னிடம் சரணாகதி பண்ணிவிட்டேன். எனக்கு உபதேச ரூபமாக உத்தரவு போடு” என்று நமஸ்காரம் செய்த போது கீதை பிறந்தது. இதனால்தான் பண்டிகைகளில் தீபாவளி மாதிரி புஸ்தகங்களில் கீதை உச்சியாக இருக்கிறது. தீபாவளி, கீதை இரண்டையும் கிருஷ்ணரே தான் கொடுத்திருக்கிறார்.

அடுத்ததாக ஆசார்யாள் சொல்கிற கங்கைக்கும் தீபாவளிக்கும் உள்ள ‘கனெக்‌ஷன்’ இத்தனை நாழி பார்த்தோம்.

மூன்றாவதாக முராரியை அர்ச்சிக்க வேண்டும் என்கிறார். பகவானுடைய பெயர்கள் எத்தனையோ இருக்க ‘முராரி ஸமர்ச்சா’ என்றே சொல்கிறார். நரகாஸுரனின் ஸகாவான முரனைக் கொன்றபோதுதான் பகவான் முராரியானார் என்பதைச் சற்றுமுன்தான் பார்த்தோம்.

கடைசியில் ஆசார்யாள் யமனைப் பற்றிச் சொல்கிறார். நரகன் என்றவுடனேயே நரகத்தின் ஞாபகமும் யமதர்மராஜா ஞாபகமும்தான் வருகின்றன. அதுவும் தவிர, தீபாவளியன்று யமனுக்குத் தர்ப்பணம் பண்ண வேண்டுமென்று சொல்லியிருக்கிறது. வட தேசத்தில் தீபாவளிக்கு முதல் நாள் ‘யம தீபம்’ என்றே போடுகிறார்கள்.

ஏன் கங்கா ஸ்நானம்?

    இப்படியாக தீபாவளியை நினைத்துக் கொண்டே பகவத்பாதாள் இந்த ச்லோகத்தைப் பண்ணின மாதிரி இருக்கிறது. அது இருக்கட்டும். ‘கங்கா ஸ்நானம்’ என்று ஏன் தீபாவளியன்று வைத்திருக்கிறது என்ற கேள்விக்குப் பதில் சொல்ல வந்தேன்.

’பிள்ளை போன நாளைப் பண்டிகையாக எல்லோரும் எந்தக் காலத்திலும் நின்று போகாமல் செய்து வரவேண்டும்’ என்று பூமாதேவி ஆசைப்பட்டாள். பண்டிகை என்பதால் மங்கள ஸ்நானம், புது வஸ்திர தாரணம், பக்ஷண போஜனம் எல்லாவற்றையும் ஏற்படுத்திக் கொடுத்தாள். இதிலே பிள்ளை நினைவு வரும்படி புதிசாக, நூதனமாக ஏதாவது இருக்க வேண்டுமென்று உதயத்துக்கு முந்தியே தைல ஸ்நானம் செய்ய வேண்டும் என்று வரம் வாங்கினாள். பகவானே இதற்கு ஒப்புக் கொண்டும் கூட, இப்படி சாஸ்திர விரோதமாக அப்யங்கனம் பண்ண யாராவது பயப்படப் போகிறார்களே என்று நினைத்து, பயம் போகும்படியாக என்ன செய்யலாம் என்று பார்த்தாள். ‘அன்றைக்கு அந்த வேளையில் தேய்த்துக் கொள்கிற எண்ணையில் லக்ஷ்மியும், குளிக்கிற வெந்நீரில் கங்கையும் வஸிக்கும்படி செய்துவிட்டால் யாரும் பயப்பட மாட்டார்கள்; லக்ஷ்மியும் கங்கையும் வேண்டாம் என்று எவருமே நினைக்க மாட்டார்கள். இதனால் ஸகல ஜனங்களுக்கும், பண்டிகை என்ற ஸந்தோஷத்துடன் புண்ணியம் என்பதும் கிடைக்கும்’ என்று நினைத்தாள். இதனால்தான் அந்த ஸ்நானத்துக்கு கங்கா ஸ்நானம் என்றே பேர் ஏற்பட்டது.

இப்படி கங்கா ஸ்நானம் பண்ணியவர்களுக்கு நரக பயமும், அபமிருத்யுவும் (அகால மரணம், கோர மரணம்) ரோகங்களும் ஏற்படாமலிருக்க வேண்டும் என்று கூடுதலாக நம்மெல்லோருக்காகவும் வரம் வாங்கித் தந்தாள். அவள் நரகனுக்கு மட்டுமில்லை, நம் எல்லோருக்குமே தாய் அல்லவா? Mother earth என்றே இங்கிலீஷில்கூடச் சொல்கிறார்களே! பசு, பூமி, வேதம் மூன்றையும் ஸகலருக்கும் தாயாராகவே சொல்லியிருக்கிறது.

இருந்தாலும் நரகனை நேரே தான் பெற்றதால் அவனிடம் அதிகப் பிரியம் வைத்து இந்த நாளுக்கு ‘நரக சதுர்த்தசி’ என்றே பேர் ஏற்பட வேண்டும் என்று வரம் வாங்கிக் கொண்டாள். ஆனாலும் இப்போது பஞ்சாங்கத்தில்தான் அந்தப் பேர் போட்டிருக்கிறதே தவிர, நாம் தீபாவளி என்றே சொல்கிறோம். ‘தீபாவளி’ என்றால் தீப வரிசை. வடக்கேதான் இப்படி விளக்கேற்றி வைத்து நிஜ தீபாவளியாக்க் கொண்டாடுகிறார்கள். நாம் கார்த்திகை தீபோத்ஸவம் என்று வைத்துக் கொண்டு விட்டோம்.

இதுவரைக்கும் நான் சொன்னதில் ஸாரமான கதாபாகம் அநேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இப்போது தெரியாத கதைக்கு – காவேரி ஸ்நானக் கதைக்கு – போகிறேன்.

பகவானுக்கும் தோஷம்

    ஸமஸ்த ஜனங்களுக்கும் கங்கா ஸ்நானத்தால் தோஷங்கள் போய், அவர்கள் ஸந்தோஷமாகப் பண்டிகை கொண்டாடும்படி வரம் கொடுத்த கிருஷ்ண பரமாத்மாவோ இப்போது தம்மையே ஒரு தோஷத்துக்கு ஆளாக்கிக் கொண்டார்! தெய்வமேயானாலும் சாஸ்திரம் சொல்கிற விதி நிஷேதங்களின்படி – ‘இதைச் செய்’ என்பது விதி; ‘இதைச் செய்யாதே’ என்பது நிஷேதம்; இதுகளின்படி – பலன்களை ஏற்றுக் கொண்டு அநுபவித்துக் காட்டினால்தான் லோகத்தில் தர்மாநுஷ்டானம் நிற்கும் என்பதால் இப்படிப் பண்ணினார். என்ன செய்தாரென்றால், ‘வீர ஹத்தி’ என்ற தோஷத்தைத் தாம் ஏற்றுக் கொண்டார். மஹா வீரனாக உள்ள ஒருவரைக் கொன்றால் அதனால் ஏற்படும் தோஷம்தான் ‘வீரஹத்தி’. நரகாஸுரன் துஷ்டனானாலும் உண்மையான வீரமுள்ளவனானதால், இப்போது பகவான் வீர்ஹத்திக்குத் தம்மை ஆளாக்கிக் கொண்டார்.

வீரஹத்தி தோஷம் பிடித்ததால் பகவானுடைய நீலமணி மாதிரியான பிரகாச ஸ்வரூபம் மங்கிப் போயிற்று. கறுத்து, வாடிக் கிடப்பவர்களை “பிரம்மஹத்தி மாதிரி இருக்கு” என்கிறோமல்லவா? பிராம்மணனைக் கொல்வதால் ஏற்படும் தோஷந்தான் பிரம்மஹத்தி. இம்மாதிரிக் கொலை பாதகங்களால் தேஹ காந்தி, தேஜஸ் போய்விடும்.

ராமசந்திர மூர்த்தி ராவணனைக் கொன்றதால் அவருக்கு வீரஹத்தி மட்டுமில்லாமல் ப்ரம்மஹத்தி, சாயாஹத்தி என்று மொத்தம் மூன்று தோஷங்கள் ஸம்பவித்தன. ராவணன் ப்ராம்மணன், விச்ரவஸ் என்ற ரிஷியின் பிள்ளை அவன். நன்றாக வேத அத்யயனம் பண்ணியிருந்த அவன், கைலாஸத்துக்கு அடியில் மாட்டிக் கொண்டபோது ஸாம கானத்தோடு வீணா கானம் செய்தே ஈச்வர்னை ப்ரீதி பண்ணி மீண்டு வந்தான். அதனால் அவனைக் கொன்றதில் ராமருக்கு ப்ரம்மஹத்தியும் ஏற்பட்டது. 

‘சாயா’ என்றால் பிரகாசம், ஒளி என்று அர்த்தம்; figurative ஆக [உருவகமாக] ‘சாயா’ என்பது கீர்த்திக்குரிய எந்தக் குணத்தையும் குறிக்கும். இங்கிலீஷில் கூட lustre-illustrious, glow-glory என்கிற போது பிரகாசம் என்பதே கீர்த்திக்குரிய தன்மைகளையும் குறிக்கிறதைப் பார்க்கிறோம். ராவணனுக்கு ரூப காம்பீர்யம், வேத சாஸ்திரப் படிப்பு, ஸங்கீத ஞானம், சிவ பக்தி என்றிப்படி அநேக ‘சாயா’க்களிருந்ததால் அவனை வதைத்ததில் ராமருக்கு சாயா ஹத்தி தோஷம் உண்டாயிற்று. 

இந்த மூன்றில் ப்ரம்மஹத்தி போக அவர் ராமேச்வரத்திலும், வீரஹத்தியிலிருந்து விமோசனம் பெற வேதாரண்யத்திலும், சாயாஹத்தி விலகுவதற்காகக் கும்பகோணத்துக்குப் பக்கத்திலுள்ள பட்டீச்வரத்திலும் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தார். ராமேச்வர விஷயம் மட்டும் இப்போது எல்லோருக்கும் தெரிகிறது. ஆனால் இதே மாதிரி மற்ற இரண்டு ஊர் கோவில்களிலும் கூட ‘ராமலிங்கம்’ என்றே இப்போதும் இருக்கிறது.

ஈசன் சொன்ன பிராயச்சித்தம்

    பூர்வாவதாரத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தது போலவே, இப்போதும் கிருஷ்ண பரமாத்மா வீரஹத்தி போக என்ன வழி என்று பரமசிவனிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள நினைத்தார்; கைலாஸத்துக்குப் போனார்.

சைவ-வைஷ்ணவர்களாகிய நம்மில் சில பேருக்குத் தான் சிவன், விஷ்ணு என்ற இர்ண்டு பேரில் யார் யாரை விடப் பெரியவர் என்று கட்சி கட்டத் தோன்றுகிறது. அவர்கள் இரண்டு பேருக்குமோ, ‘தாங்கள் இரண்டு பேருமே ஸாரத்தில் ஒன்றுதான். லீலைக்காகவும், லோகாநுக்ரஹத்துக்காகவும், நிர்வாஹம் – ஸம்ஹாரம் என்று தொழில் பிரிவினை பண்ணிக் கொண்டதற்காகவும் தான் வேறு வேறு மாதிரி வேஷம் போடுகிறோம்’ என்று தெரியும். அதனால் அவரும் இவர் காலில் விழுவார்; இவரும் அவர் காலில் விழுவார். அடித்துக் கொண்டு சண்டையும் போட்டுக் கொள்வார்கள். அதில் ஒரு ஸமயம் ஒருவர் தோற்பார்; இன்னொரு ஸமயம் மற்றவர் தோற்பார். அப்படியே அன்பிலே நெருக்கமாகித் தாங்கள் இரண்டு பேருமே ஒரே தேஹத்தில் பாதிப்பாதியாகச் சேர்ந்தும் இருப்பார்கள்.

இப்போது க்ருஷ்ண பரமாத்மா கைலாஸத்துக்குப் போய் ஈச்வரனிடம், “என்னுடைய வீரஹத்தி தோஷம் விலகுவதற்கு ஒரு பிராயச்சித்தம் சொல்லுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.

ப்ராயச்சித்தான்–யசேஷாணி தப: கர்மாத்மகாநி வை
யாநி தேஷாம் அசேஷாணாம் க்ருஷ்ணாநுஸ்மரணம் பரம்.

அதாவது, “ப்ராயச்சித்தங்களாக அநேக வித தபஸ்கள், கர்மாநுஷ்டான்ங்கள் என்று எத்தனையோ இருக்கின்றன. இவை எல்லாவற்றுக்கும் மேலான ஸர்வப்பிராயச்சித்தம் என்னவென்றால் க்ருஷ்ண ஸ்மரண்ந்தான்” என்று சொல்லியிருக்கிறது.

அப்படிப்பட்ட பதிதபாவனர் தமக்கு தோஷம் வந்ததாகவும் பிராயச்சித்தம் சொல்லவேண்டுமென்றும் கேட்ட போது, சிவனும் லோகத்தின் படிப்பினைக்காவே அவர் இப்படிக் கேட்கிறார் என்று புரிந்து கொண்டு, என்ன தோஷபரிஹாரம் சொல்லலாம் என்று யோசித்தார். ‘நீ தோஷரஹிதன்’ என்று சொன்னால் அவர் ஒப்புக் கொள்ள மாட்டார். எல்லா தோஷமும் போகத்தான் கங்கா ஸ்நானம் இருக்கிறதே, அதைச் சொல்லலாமா என்றால், அது ஸகல தோஷ நிவாரணம் என்பதாலேயே குறிப்பாக ஒரு பெரிய தோஷம் ஸம்பவித்திருக்கிறபோது அதற்குப் போதுமா என்று தோன்ற ஆரம்பித்துவிடும். நமக்கு ஃபாமிலி டாக்டர் என்னதான் பெரிய ஜெனரல் ஃபிஸிஷியன் ஆனாலும், ஹார்ட், லங்க்ஸ் என்று ஏதாவதொன்றுக்கு ஒரு பெரிய கோளாறு வந்தால், அதற்கென்றே வேறே ஒரு ஸ்பெஷலிஸ்டிடம் போனால் தான் தேவலை என்று தோன்றும். ஃபாமிலி டாக்டரும் அப்படித்தான் அனுப்பி வைப்பார். 

தெய்வ விஷயமாகவே எடுத்துக் கொண்டாலும், சிவனோ அம்பாளோ, மஹாவிஷ்ணுவோ எவர் ஒருத்தருமே பரப்ரம்ம ஸ்வரூபமானதால் ஸகல அநுக்ரஹமும் பண்ண முடியும் என்றாலும், விக்னம் விலகணுமானால் பிள்ளையாரைப் பூஜிக்க வேண்டும், படிப்பு வேண்டுமானால் ஸரஸ்வதியைப் பூஜை பண்ண வேண்டும், ஆரோக்யம் வேண்டுமானால் ஸூர்ய நமஸ்காரம் பண்ண வேண்டும் என்றுதானே தோன்றுகிறது? அதே மாதிரி இப்போது ‘க்ருஷ்ணருக்கு கங்கா ஸ்நானத்தைச் சொன்னால் போதாது. ஸ்பெஷலாக ஒன்று சொல்லியாக வேண்டும். கங்கா ஸ்நானம் பாப நிவாரணம் என்று பச்சைக் குழந்தைக்குக்கூடத் தெரியும். அதைப் போய் கிருஷ்ணரிடம் சொன்னால் அவரை முட்டாளாக்கினதாக ஆகும். கங்கையாலும் போக்க முடியாத தோஷத்தைத் தாம் பண்ணி விட்டதாகவும் அதற்கு அதை விட சக்தி வாய்ந்த ப்ராயச்சித்தம் சொல்ல வேண்டுமென்றும் அவர் கேட்பார்.’

இப்படி யோஜனை பண்ணி ஈச்வரன், “இது துலா மாஸம். (அதாவது நம் ஐப்பசி)1. இந்த மாஸம் பூராவும் புரதி தினமும் அருணோதயத்திலிருந்து உதயாதி ஆறு நாழிகை (2 மணி 24 நிமிஷம்) வரை அறுபத்தாறு கோடி புண்ய தீர்த்தங்களும் காவேரியில் வாஸம் செய்கின்றன. அதிலே ஸ்நானம் பண்ணினால் வீர ஹத்தி தோஷம் போயே போய்விடும்” என்று சொன்னார்.

(குறிப்பு: **ஆச்வினம் என்று முன்பு சொன்ன மாதம் சாந்திரமானம் எனும் பஞ்சாங்கப்படியானதாகும். அதில் பின் பகுதியோடு அதற்கடுத்த கார்த்திகத்தின் முன் பகுதியும் சேர்ந்ததே ஸௌரமானப் பஞ்சாங்கப்படி துலாமாதம். தீபாவளி அதில் நிகழ்வது.)

காவேரி துலா கட்டம்

    காவேரி முழுவதிலும் இப்படி துலா மாஸத்தில் ஸகல தீர்த்த ஸாந்நித்யம் இருப்பதாகச் சொன்னாலும், இப்படிச் சொல்வதும் ஜெனரலாக இருப்பதால், இதிலும் ஸ்பெஷலாக ஒன்று வேண்டும் போலிருக்குமே, அதனால் – மாயவரத்தில் [மயிலாடுதுறையில்] மட்டும் துலா ஸ்நானம் அதி விசேஷமாகச் சொல்லப்படுகிறது. மாயூரம் என்பது அதன் சரியான பெயர். மயில் என்று அர்த்தம். மயிலாப்பூரில் எப்படி கல்பகாம்பாள் மயிலாகிப் பரமேச்வரனைப் பூஜித்தவளோ அப்படியே அபயாம்பாள் மயிலாக ஈச்வராராதனை செய்ததால் மாயூரம், கெளரீ மாயூரம் என்று அந்த க்ஷேத்திரத்துக்குப் பேர் ஏற்பட்டது.

அங்கே காவேரிப் படித்துறை ஒன்றை ‘லாகடம்’ என்பார்கள். ‘துலா கட்டம்’ என்பதுதான் இப்படி முதலெழுத்தை உதிர்த்து லாகடமாகியிருக்கிறது! ஜனங்களில் பல பேர் சில வார்த்தைகளின் முதல் எழுத்தையோ, உள்ளே வருகிற எழுத்தையோ ‘சாப்பிட்டு’ விடுவார்கள்! ‘தொள்ளாயிரம்’ என்பதை ‘த்ளாயிரம்’ என்பார்கள். ‘மாயவரம்’ என்பதை ‘மாயரம்’ என்றுதான் சொல்வார்கள். ‘வியாபாரம்’ என்பதை ‘யாபாரம்’ என்பார்கள். தொள்ளாயிரம் த்ளாயிரம் ஆகிற மாதிரி, ‘துலா’ கட்டம் ‘த்லா’ கட்டமாகி, லாகட்டமாகி, ‘மூட்டை’யில் ‘ட்’ போய் ‘மூடை’ என்கிறது போல ‘லாகட’மாகியிருக்கிறது!

இந்தத் துலா கட்டத்தில் ஐப்பசி மாஸம் பூராவும் ஸ்நான விசேஷத்துக்காக ஜனங்கள் சேருவார்கள். அங்கேதான் கிருஷ்ணரை வீரஹத்தி நிவ்ருத்திக்காக ஈச்வரன் ஸ்நானம் பண்ணச் சொன்னார். சொன்னதோடில்லாமல் தாமும் கூட வந்தார்.

யமுனாதீர விஹாரி தீபாவளியன்று நம் எல்லோருக்கும் கங்கா ஸ்நானம் கிடைக்கும்படியாக அநுக்ரஹம் செய்துவிட்டுத் தாம் காவேரிக்கு வந்து துலா ஸ்நானம் பண்ணினார்.

உடனே அவருக்கு வீரஹத்தி தோஷம் போய்விட்டது. அதற்கு visible proof-ஆக [பிரத்யக்ஷ நிரூபணமாக] ஹத்தி தோஷத்தால் மங்கியிருந்த அவருடைய தேஹ காந்தி இப்போது முன் மாதிரியே பளீரென்று ஜ்வலிக்கிற நல்ல நீலமாக மாறிற்று.

ஸகல தேவதைகளும் இந்த ஆச்சரியத்தைப் பார்த்து, ஈச்வரன், பெருமாள் இரண்டு பேரையும் ஒன்றாகத் தரிசிக்கிற பாக்யத்தைப் பெற்று, தாங்களும் காவேரி ஸ்நானம் செய்தார்கள்.

பூமாதேவி இந்த ஸந்தர்ப்பத்தில்தான் நரகாஸுரன் ஞாபகமாக கங்கா ஸ்நானம் முதலான வரங்களைக் கேட்டதாகக் காவேரி புராணத்தில் இருக்கிறது.

தீபாவளியில் காவேரி ஸ்நானம்

    ஆகையால் தீபாவளிக்கு கங்கையோடு காவேரி ஸம்பந்தமும் இருக்கிறது. அன்றைக்கு ஒரு நாள் மட்டும் எல்லா வெந்நீரிலும் அருணோதயதிலிருந்து ஸூர்யோதயம் வரை ஒரு முஹூர்த்தம் – அதாவது இரண்டு நாழிகை – கங்கை இருக்கிறாளென்றால், துலா மாஸம் முழுக்கவே அருணோதயத்தில் ஆரம்பித்து ப்ராதக்காலம் முடிகிறவரை, அதாவது ஸூர்யன் உதித்து ஆறு நாழிகை வரை காவேரியில் கங்கை உள்பட ஸகல தீர்த்தங்களும் இருக்கின்றன.

அதனால் தீபாவளியன்று முதலில் நாம் அருணோதயத்தில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு கங்கா ஸ்மரணத்தோடு வெந்நீர் ஸ்நானம் பண்ண வேண்டும். அப்புறம் ஸூர்யோதயமானபின், ஆனால் ஆறு நாழிகைக்குள், பச்சை ஜலத்தில் இன்னொரு ஸ்நானம் செய்ய வேண்டும். இந்த ஸ்நானத்தின் போது துலா காவேரியை ஸ்மரித்துக்கொண்டு பண்ணவேண்டும். முதல் ஸ்நானத்தில் நரகாஸுரன், பூமாதேவி, ஸத்யபாமா, கிருஷ்ணர் எல்லார் நினைவும் வரும். இரண்டாம் ஸ்நானத்தில் பரமேச்வரன் நினைவும் வந்துவிடும்.

இந்தப் புண்ய ஸ்மரணம்தான் பெரிய ஸ்நானம். உன் அழுக்கையெல்லாம் அகற்றி ஜீவனைக் குளிப்பாட்டிப் பரிசுத்தி பண்ணுவது அதுதான். ‘கோவிந்தேதி ஸதா ஸ்நானம்’ என்பதுண்டு. இப்படிச் சொன்னதால் வெளியே இருக்கிற கங்கா, காவேரியெல்லாம் அவசியமில்லை, பிரயோஜனமில்லை என்று அர்த்தம் பண்ணிக்கொண்டு விடக்கூடாது. அந்த கோவிந்தனேதான் நம்மிடம் கருணையோடு நமக்கு கங்கா ஸ்நானத்தைக் கொடுத்து, தானே காவேரி ஸ்நானம் பண்ணிக் காட்டியிருக்கிறான். அவனுடைய ஸ்மரணத்தோடு இப்படி ஸ்நானம் பண்ணினால் அது உள்ளத்துக்கு ஸ்நானம் என்பது மட்டுமில்லை, உள்ளத்துக்குப் புது வஸ்திர அலங்காரம், மதுரமான பக்ஷணம் எல்லாமும் அதுவேதான்!


ஆதாரம்: தெய்வத்தின் குரல்

காண்க: காஞ்சி பரமாசாரியார் 





No comments:

Post a Comment