02/11/2021

‘புதிய ருஷ்யா’ கவிதையும் கவிஞரின் தீர்க்கதரிசனமும்

-சேக்கிழான்


(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு-30)

    மகாகவி பாரதி பலமொழிகள் தெரிந்திருந்ததும், உலக அரசியலைக் கூர்ந்து கவனிக்கும் நுண்ணறிவு கொண்டிருந்ததும், அவரது பத்திரிகைப் பணிகளில் வெளிப்படுகின்றன.

    ஆரம்பத்திலிருந்தே உலக அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த பாரதி, இத்தாலியின் மாஜினி, அயர்லாந்து விடுதலைப் போராட்டம், ரஷ்யாவில் நடந்துவந்த போராட்டங்கள் குறித்து எழுதி இருக்கிறார். வெளிநாடுகளில் நடைபெறும் சுதந்திர வேட்கை மிகுந்த போராட்டங்கள் குறித்து தமது பத்திரிகைகளில் வெளியிட்டால், அதைப் படித்து நம்மவர்களும் சுதந்திர வேட்கை கொள்வார்கள் என்பதே அவரது உள்ளக் கிடக்கை.

    1905ஆம் ஆண்டில் தன்னிடம் கோரிக்கை மனு அளிக்க வந்த ரஷ்ய மக்களை ஜார் மன்னன் நூற்றுக்கணக்கில் சுட்டுக் கொன்றதைக் கண்ட பாரதி, தான் நடத்தி வந்த ‘இந்தியா’ பத்திரிகையில், “சுயாதீனத்தின் பொருட்டும் கொடுங்கோன்மை நாசத்தின் பொருட்டும் நமது ருஷ்யத் தோழர்கள் செய்து வரும் உத்தமமான முயற்சிகள் மீது ஈசன் பேரருள் செலுத்துவாராக” என்று எழுதினார்.

 
    இச்சம்பவம் நடந்த 12 ஆண்டுகளுக்குப் பின்னர் 1917ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரஷ்யாவில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடைபெற்று ஜார் மன்னன் பதவியிலிருந்து அகற்றப்பட்டு கெரன்ஸ்கி என்பவன் தலைமையில் அரசாங்கம் அமைந்தபோது, சுதேசமித்திரனில், ‘காக்காய் பார்லிமெண்ட்’ என்ற கட்டுரையில் “கேட்டீர்களா, காகங்களே, அந்த ருஷ்யா தேசத்து ஜார் சக்கரவர்த்தியை இப்போது அடித்துத் துரத்தி விட்டார்களாம். அந்த ஜார் ஒருவனுக்கு மாத்திரம் கோடான கோடி சம்பளமாம்” என்று எழுதினார்.

    இந்தக் கட்டுரையை மகாகவி பாரதி எழுதி ஏழு மாத காலங்களுக்குள், 1917 நவம்பர் 7 ஆம் தேதி உலகப் புகழ் பெற்ற ரஷ்யப் புரட்சி விளாடிமிர் லெனின் தலைமையில் வெற்றி பெற்றது. அதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த மகாகவி பாரதி பாடினார்:

“மாகாளி பராசக்தி உருசிய நாட்
    டினிற் கடைக்கண் வைத்தாளங்கே
ஆகாவென் றெழுந்தது பார் யுகப்புரட்சி
    கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்...”

    மகாகவி பாரதியின் நெருங்கிய நண்பர், மண்டயம் திருமலாச்சாரி (எம்.பி.டி.ஆச்சார்யா) ஓர் எல்லை கடந்த புரட்சியாளர்; நாட்டு விடுதலைக்காக உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டத் துணிந்த தேசபக்தர். இவர் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா என பல நாடுகளில், புரட்சி இயக்கத்திற்காக பணியாற்றியவர். ரஷ்யாவின் விளாடிமிர் லெனின் அமைத்த, கம்யூனிஸ மூன்றாம் அகிலத்திலும் (1921) இவர் பங்கேற்றிருந்தார். (இவரை இன்றைய இந்திய கம்யூனிஸ்ட்கள் துரோகியாகவே சித்தரிக்கின்றனர் என்பது அவர்களது அவலம்).

    தனது நண்பர் எம்.பி.டி.ஆச்சார்யா மூலமாகவே ருஷ்ய, ஐரோப்பிய நிகழ்வுகள் பற்றி மகாகவி பாரதி அறிந்து, அவற்றை தனது பத்திரிகையில் பிரசுரித்திருக்கிறார். 

காண்க: 

    ரஷ்யாவில் நிகழ்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க மாற்றத்தை மாகாளியின் கடைக்கண் பார்வையால் நிகழ்ந்த யுகப் புரட்சி என்று மகாகவி பாரதி பாடியபோதும், அங்கு நிகழ்ந்த வன்முறைகளில் அவருக்கு விருப்பம் இல்லை. ரஷ்யாவிலிருந்து தொடர்ந்து கிடைத்த செய்திகளும் அவருக்கு உவப்பாக இல்லை. ஆட்சி அதிகாரம் மிக்கவர்கள் நடத்தும் வன்முறைகளால் நாட்டு மக்களுக்கு பயனேதும் கிடைக்காது என்று அவர் தீர்மானமாக நம்பினார்.

    எனவேதான், சுதேசமித்திரனில், தனது சந்தேகங்களை ஒரு கட்டுரையாகவும் வடித்தார். அதில் இவ்வாறு கூறுகிறார்:

 “கொலை, கொலையை வளர்க்குமே தவிர, அதை நீக்க வல்லாது. அநியாயம், அநியாயத்தை விருத்தி பண்ணுமே அல்லது அதை நீக்காது. பாபத்தை புண்ணியத்தாலேதான் வெல்ல வேண்டும். மேலும் ரஷ்யாவிலும்கூட, இப்போது ஏற்பட்டிருக்கும் சோஷலிஸ்ட் ராஜ்யம் எக்காலமும் நீடித்து நிற்கும் இயல்புடையது என்று கருத வழியில்லை.”

    மகாகவி பாரதியின் தீர்க்கதரிசன வார்த்தைகள் இப்போது உண்மையாகி விட்டதைக் காண்கிறோம். ஆயுதபலத்தாலும், வன்முறையாலும் நாட்டு மக்களை அடக்கி வைத்திருந்த கம்யூனிஸக் கூட்டம் 1990களில் சிதிலமடைந்து வீழ்ந்ததை உலகம் கண்டது. பல்வேறு நாடுகளை ஆயுதபலத்தால் சேர்த்து ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யக் குடியரசு (யுஎஸ்எஸ்ஆர்) என்ற வல்லரசாகத் தோற்றம் அளித்த ரஷ்யா பலகூறுகளாக இன்று சிதறிவிட்டது. அங்கு இப்போது லெனின் சிலைகள் உடைக்கப்படுகின்றன; கம்யூனிஸம் ஒரு கெட்ட வார்த்தையாகிவிட்டது.

    தெய்வீக அருள் பெற்ற, தேசபக்தியே வாழ்வாகக் கொண்ட, உலகப் பார்வை மிகுந்த மகாகவி பாரதியின் தீர்க்கதரிசனத்துக்கு அவரது கவிதையும், இந்தக் கட்டுரையுமே சான்றாக விளங்குகின்றன.

    ஆனால், தமிழகத்தில் உள்ள கம்யூனினிஸ்டுகள், மகாகவி பாரதி ரஷ்யப் புரட்சியைப் பாராட்டி கவிதை பாடியதை மட்டுமே சொல்லி மகிழ்ந்து கொள்கிறார்கள்.  ‘லெனின் வழி சரியான வழி இல்லை’ என்றும் அவர் சொல்லி இருப்பதைக் காணாமல் கடந்து விடுவார்கள். 

    உண்மையில் பாரதி கூறியிருக்கும் அறவுரையில் கூறியிருப்பது போல, ரஷ்யப் புரட்சியாளர்கள் நடந்திருந்தால் உலகமே அற்புதமாக மாறி இருக்கும். என்ன செய்வது, அந்தப் புரட்சியை, காளியின் கடைக்கண்ணால் நடந்ததாக பாரதி நினைத்து வாழ்த்தியபோதும், அது ஆன்மிக நம்பிக்கையற்ற காலிகளால் நடத்தப்பட்டது என்பதால்தான் அதில் மனிதத்தன்மை மறைந்துபோனது. இதுதானே சரித்திரம் காட்டும் உண்மை?

    இதோ, அந்தக் கவிதையும், கட்டுரையும்....

***

1

புதிய ருஷ்யா

(ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சி)

மாகாளி பராசக்தி உருசியநாட்
    டினிற்கடைக்கண் வைத்தாள், அங்கே,
ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி,
    கொடுங்காலன் அலறி வீழ்ந்தான்,
வாகான தோள்புடைத்தார் வானமரர்,
    பேய்க ளெல்லாம் வருந்திக் கண்ணீர்
போகாமற் கண்புதைந்து மடிந்தனவாம்,
    வையகத்தீர், புதுமை காணீர்!

இரணியன்போ லரசாண்டான் கொடுங்கோலன்
    ஜாரெனும்பே ரிசைந்த பாவி
சரணின்றித் தவித்திட்டார் நல்லோரும்
    சான்றோரும்; தருமந் தன்னைத்
திரணமெனக் கருதிவிட்டான் ஜார்மூடன்,
    பொய்சூது தீமை யெல்லாம்
அரணியத்திற் பாம்புகள்போல் மலிந்துவளர்ந்த
    தோங்கினவே அந்த நாட்டில்.

உழுதுவிதைத் தறுப்பாருக் குணவில்லை,
    பிணிகள் பலவுண்டு பொய்யைத்
தொழுதடிமை செய்வாருக்குச் செல்வங்க
     ளுண்டு, உண்மை சொல்வோர்க் கெல்லாம்
எழுதரிய பெருங்கொடுமைச் சிறையுண்டு,
    தூக்குண்டே யிறப்ப துண்டு,
முழுதுமொரு பேய்வனமாஞ் சிவேரியங்லே
    ஆவிகெட முடிவ துண்டு.

இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால்
    வனவாசம், இவ்வா றங்கே
செம்மையெல்லாம் பாழாகிக் கொடுமையே
    அறமாகித் தீர்ந்த போதில்
அம்மைமனங் கனிந்திட்டாள், அடிபரவி
    உண்மைசொலும் அடியார் தம்மை
மும்மையிலும் காத்திடுநல் விழியாலே
    நோக்கினாள்ஈ முடிந்தான் காலன்.

இமயமலை வீந்ததுபோல் வீழ்ந்துவிட்டான்
    ஜாரரசன் இவனைச் சூழ்ந்து
சமயமுள படிக்கெல்லாம் பொய்கூறி
    அறங்கொன்று சதிகள் செய்த
சுமடர் சடசடவென்று சரிந்திட்டார்,
    புயற்காற்றுங் குறை தன்னில்
திமுதிமென மரம்விழுந்து காடெல்லாம்
    விறகான செய்தி போலே!

குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
    மேன்மையுறக் குடிமை நீதி
கடியொன்றி லெழுந்ததுபார்; குடியரசென்று
    உலகறியக் கூறி விட்டார்;
அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது
    அடிமையில்லை அறிக என்றார்,
இடிப்பட்ட சுவர்ப்போல் கலிவிழுந்தான்,
    கிருத யுகம் எழுக மாதோ!

***
2.

லெனின் வழி சரியான வழி இல்லை


        செல்வத்தைக் குறித்த வேற்றுமைகளையும் இல்லாமற் பண்ணிவிட வேண்டும் என்ற கொள்கையும், உலகத்தில் மிக தீவிரமாக பரவி வருகிறது. ஐரோப்பாவிலே தான், இந்த முயற்சி வெகு மும்முரமாக நடந்து வருகிறது. ஒரு தேசத்தில் பிறந்த மக்கள் அனைவருக்கும், அந்த தேசத்தின் இயற்கைச்செல்வ முழுவதையும் பொது உடமையாக்கி விட வேண்டும் என்ற கொள்கைக்கு இங்கிலிஷில் 'சோஷலிஸ்ட்' கொள்கை என்று பெயர். அதாவது கூட்டுறவுக் கொள்கை. 

    இந்த கூட்டுறவு வாழ்வு கொள்கை ஐரோப்பாவில் தோன்றியபோது, இதை அங்கு முதலாளிகளும் மற்றபடி பொதுஜனங்களும் மிக ஆத்திரத்துடனும், ஆக்ரஹத்துடனும், எதிர்த்து வந்தனர். நாளடைவில், இக்கொள்கையின் நல்லியல்பு, அந்த கண்டத்தாருக்கு மென்மேலும் தெளிவுபட்டு, வரலாயிற்று.... எனவே இதன்மீது ஜனங்கள் கொண்டிருக்கும் விரோதம், குறைவுபட்டுக் கொண்டு வரவே, இக்கொள்கை மேன்மேலும் பலமடைந்து வருகிறது.

    ஏற்கனவே, ரஷ்யாவில் ஸ்ரீமான் லெனின், ஸ்ரீமான் த்ரோஸ்கி (TROTSKY)
முதலியவர்களின் அதிகாரத்தின் கீழ் ஏற்பட்டிருக்கும் குடியரசில், தேசத்து
விளைநிலமும், பிற செல்வங்களும், தேசத்தில் பிறந்த அத்தனை
ஜனங்களுக்கும் பொது உடைமை ஆகிவிட்டது. இக்கொள்கை, ஜெர்மனியிலும், ஆஸ்திரியாவிலும், துருக்கியிலும் அளவற்ற வன்மை கொண்டு வருகிறது. ருஷ்யாவிலிருந்து, இது ஆசியாவிலும் தாண்டிவிட்டது. வட ஆசியாவில் பிரம்மாண்டமான பகுதியாக நிற்கும் சைபீரியா தேசம் ரஷ்யாவின் ஆதிக்கத்தை சேர்ந்தது ஆதலால். அங்கும் இந்த முறைமை அனுஷ்டானத்திற்கு வந்துவிட்டது.

    அங்கிருந்து இக்கொள்கை மத்திய ஆஅசியாவிலும் பரவிவருகிறது. ஐரோப்பாவில் உள்ள பிரான்ஸ், இங்கிலாந்து முதலிய வல்லரசுகள், இந்த முறையை தம் நாடுகளுக்குள்ளும் பிரவேசித்தது வரக்கூடும் என்று பயந்து, அதன் பரவுதலை தடுக்குமாறு பல விதங்களில் பிரயத்தனங்கள் புரிந்து வருகிறார்கள். ‘ரஷ்யாவில் சமீபத்திலே, அடுக்கடுக்காக நிகழ்ந்துவரும் பல புரட்சிகளின் காரணத்தால் , அவ்விடத்து சைன்யங்களில் பெரும் பகுதியார், தொழிற்கட்சியையும் அபேதக்கொள்கைகளையும் சார்ந்தோராகி விட்டனர். இதனின்றும், அங்கு ராஜ்யாதிகாரம், தொழிற்கட்சிக்கு கிடைத்துவிட்டது. தேசத்து நிதியனைத்தையும் சகல ஜனங்களுக்குப் பொதுவாகச் செய்து, எல்லாரும் தொழில் செய்து ஜீவிக்கும்படி விதித்திருக்கிறார்கள்.

    தேசத்து பிறந்த சர்வ ஜனங்களுக்கும் தேசத்து செல்வம் பொது என்பது
உண்மையாய்விடின், ஏழைகள்- செல்வர் என்ற வேற்றுமையினால் உண்டாகும் தீமைகள் இல்லாமற் போகும்படி சகலரும் தொழில் செய்துதான் ஜீவிக்க வேண்டும் என்ற விதி வழங்குமானால், தேசத்துத் தொழில் மிகவும் அபிவிருத்தி அடைந்து, ஜனங்களின் க்ஷேமமும் சுகங்களும் மேன்மேலும் மிகுதியுறும். எனவே, ருஷ்யாவிலுள்ள அபேதவாதிகளுடைய கொள்கைகள் அவ்வளவு தீங்குடையவையல்ல.

    …ஆனால் அவற்றை வழக்கப்படுத்தும் பொருட்டு, அவர்கள் நாட்டில்
ஏற்படுத்தியிருக்கும் தீராச்சண்டையும் அல்லலுமே, தீங்கு தருவனவாம்.
ருஷ்ய கொள்கைகளை இப்போது அனுஷ்டிக்கப்படும் ருஷ்ய முறைகளின்படி உலகத்தில் ஸ்தாபனம் பெற்று வெற்றி பெற வேண்டுமானால், அதற்குள்ளே முக்காற்பங்கு ஜனம் கொலையுண்டு மடித்து போவார்கள். வெளிநாட்டுப் போர் அத்தனை பெரிய விபத்து அன்று. நாட்டுக்குள்ளேயே செல்வர்களும் ஏழைகளும் ஒருவரை ஒருவர் வெடிகுண்டுகளாலும் துப்பாகிகளாலும் பீரங்கிகளாலும் தூக்கு மரங்களாலும் கொல்ல தொடங்குவார்களாயின், அது தீராத தொல்லையாய் விடுமன்றோ?

    ஆனால், இந்த முறைமை, போர், கொலை, பலாத்காரம் மூலமாக உலகத்தில் பரவிவருவது எனக்கு சம்மதம் இல்லை. எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதருக்குள்ளே சண்டைகளும், கொலைகளும் நடக்கக் கூடாது என்பது என்னுடைய கருத்து. அப்படியிருக்க, ஸமத்வம், ஸஹோதரத்வம் என்ற தெய்வீக தர்மங்களை கொண்டோர், அவற்றை குத்து, வெட்டு, பீரங்கி, துப்பாக்கிகளால் பரவச் செய்யும்படி முயற்சி செய்தல், மிகவும் பொருந்தாத செய்கை என நான் நினைக்கிறேன்.

    பலாத்காரமாக முதலாளிகளின் உடமைகளையும், நிலச்சுவான்தார்களின் பூமியையும் பிடுங்கி, தேசத்திற்கு பொதுவாக செய்ய வேண்டும் என்ற கொள்கை ரஷ்யாவில் வெற்றி பெற்றதற்கு பல பூர்வ காரணங்கள் இருக்கின்றன. நெடுங்காலமாகவே ருஷ்ய தேசத்தில் ஆட்சி புரிவோரின் நிகரற்ற கொடுங்கோன்மையாலும் அநீதங்களாலும் செல்வர்களின் குரூரத் தன்மையாலும், பல ராஜாங்க புரட்சிகள் நடந்து வந்திருக்கிற படியால், இந்த மாறுதல் அங்கு அமைப்பது சுலபமாகிவிட்டது.

    மற்ற ஐரோப்பிய தேசங்களில், முதலாளிகளும் செல்வர்களும், இன்னும் முற்றிலும் பலஹீனம் அடைந்து போகவில்லை. பெரும்பாலும் அவர்களிடத்திலேயே எல்லா பலங்களும் சக்திகளும் அமைந்திருக்கின்றன. அங்கெல்லாம் சோஷலிஸ்ட் கூட்டுறவு வாழ்க்கை கட்சி, ருஷ்யாவிலுள்ள சக்தியும் பராக்கிரமுமும் பெற்று விடவில்லை.

    அங்ஙனம் பெறுவதற்கு இன்னும் பல வருஷங்கள் செல்லும் என்றே தோன்றுகிறது. தவிரவும், அங்ஙனம் ஸோஷலிஸ்ட் கட்சியார் பலமடைந்தபோதிலும், அந்த பலத்தை உபயோகிப்பது நியாயமில்லை என்று நான் சொல்லுகிறேன்.

    ஏனென்றால், பிறர் உடமையை தாம் அபகரித்து வாழவேண்டும் என்கின்ற எண்ணம் உடையவர்களும், சர்வ ஜனங்களும் ஸமமான சௌகர்யங்களுடன் வாழவேண்டும் என்ற கருத்து இல்லாத பாவிகளும், தம்முடைய கொள்ளை விருப்பங்களை நிறைவேற்றும் பொருட்டு, வாள், பீரங்கி, துப்பாக்கியால் அநேகரை கொலை செய்து, ஊர்களையும், வீடுகளையும் கொளுத்தியும் அநியாயங்கள் செய்வது, நமக்கு அர்த்தமாகக்கூடிய விஷயம். ஆனால், எல்லா மனிதரும் உடன் பிறந்த ஸஹோதரர் ஆவார்கள் என்றும், எல்லாரையும் ஸமமாகவும், அன்புடனும் நடத்தவேண்டும் என்று கருதும் தர்மிஷ்டர்கள், தம்முடைய கருனாதர்மத்தை நிலை நிறுத்த, கொலை முதலிய மகா பாதகங்கள் செய்வது, நமக்கு சிறிதும் அர்த்தமாகாத விஷயம்.

    கொலையாலும், கொள்ளையாலும் அன்பையும், சமத்வத்தையும் ஸ்தாபிக்கப் போகிறோம் என்று சொல்வோர், தம்மைத் தாம் உணராத பரம மூடர்கள் என்று நான் கருதுகிறேன்.

    ‘இதற்கு நாம் என்ன செய்வோம்? கொலையாளிகளை அழிக்க கொலையைத்தானே கைக்கொள்ள நேருகிறது? அநியாயம் செய்வோரை, அநியாயத்தாலே தான் அடக்கும்படி நேரிடுகிறது’ என்று ஸ்ரீமான் லெனின் சொல்லுகிறார்.

    இது முற்றிலும் தவறான கொள்கை. கொலை, கொலையை வளர்க்குமே தவிர, அதை நீக்க வல்லாது. அநியாயம், அநியாயத்தை விருத்தி பண்ணுமே அல்லது அதை நீக்காது. பாபத்தை புண்ணியத்தாலேதான் வெல்ல வேண்டும். மேலும் ரஷ்யாவிலும்கூட, இப்போது ஏற்பட்டிருக்கும் சோஷலிஸ்ட் ராஜ்யம் எக்காலமும் நீடித்து நிற்கும் இயல்புடையது என்று கருத வழியில்லை.

    சமீபத்தில் நடந்த மகா யுத்தத்தால், ஐரோப்பிய வல்லரசுகள் ஆள்பலமும், பணபலமும், ஆயுதபலமும் ஒரேயடியாகக் குறைந்துபோய், மஹாபலஹீனமான நிலையில் நிற்பதையோட்டி, மிஸ்டர் லெனின் முதலியோர், ஏற்படுத்தியிருக்கும் ‘கூட்டு வாழ்க்கை குடியரசை’ அழிக்க மனமிருந்தும், வலிமையற்றோராக நிற்கின்றனர்.

    நாளை, இந்த வல்லரசுகள், கொஞ்சம் சக்தியேறிய மாத்திரத்திலேயே, ரஷ்யாவின் மீது பாய்வார்கள். அங்கு உடமை இழந்த முதலாளிகளும், நிலச்சுவான்தார்களும், இந்த அரசுகளுக்கு துணையாக நிற்பர். இதனின்றும் இன்னும் கோரமான யுத்தங்களும், கொலைகளும் கொள்ளைகளும் ரத்தப்ரவாஹங்களும் ஏற்பட இடமுண்டாகும். லெனின் வழி சரியான வழி இல்லை."

(சுதேசமித்திரன்)

***


No comments:

Post a Comment