16/11/2021

மன்யு சூக்தம் (தமிழாக்கம்)

-ஜடாயு


கோபத்தின் தேவதைக்கு ஒரு வேதப்பாடல்: மன்யு சூக்தம்

கோபத்தின் தேவதையாக  ‘மன்யு’வை வேதம் கூறுகிறது. 

‘ருத்திரனே உன்னுடைய கோபத்திற்கு நமஸ்காரம்’ (நமஸ்தே ருத்ர மன்யவ) என்று தான் புனிதமான ஸ்ரீருத்ரம் தொடங்குகிறது. 

மன்யு என்ற சொல்லுக்கு கோபம், ஆவேசம், குமுறல், சீற்றம் (fury), உணர்ச்சிகரம் (passion), பேரார்வம் (zeal) ஆகிய அர்த்தங்கள் உண்டு. இந்தத் தேவனின் அருள் என்றென்றும் தர்மவீரர்களான நமக்கு வேண்டும்.

மன்யுவே உனக்கு நமஸ்காரம்!
மன்யு சூக்தம்

(ரிக்வேதம் பத்தாம் மண்டலம் 83வது சூக்தம், ரிஷி: தாபஸ மன்யு)

---------------------------------------------

வஜ்ராயுதன் பகையை அழிப்பவன் நீ
மன்யுவே உன்னைப் போற்றும் மானிடன்.
உனது ஆற்றலால் தன்னை வளப்படுத்திக் கொள்கிறான்.
வெல்வோம் யாம் தாசனையும் ஆரியனையும்
வெல்வோனும் பலவானுமான உன்னுடன் இணைந்து. (1)

(தாசனையும் ஆரியனையும் – கீழானதும் மேலானதுமான தன்மைகளை)

மன்யு இந்திரன்.
மன்யுவே தேவனாயிருந்தவன்.
மன்யுவே (வேள்விக்கழைப்போனான) ஹோதாவும் வருணனும்.
ஜாதவேதஸ் (எனப்புகழ்பெற்ற) அக்னியும்.
மன்யுவையே மானுடர் போற்றுவர்.
மன்யுவே தவத்துடன் இணைந்து நீ
எம்மைக் காத்திடுக. (2)

மன்யுவே எங்களிடம் வருக.
வலியர்களிலும் வலியன் நீ.
உனது நட்பான தவத்துடன் இணைந்து
எமது பகையை வென்றிடுக.
நட்பற்றவர்களைத் துரத்துவோன் நீ.
விருத்திரர்களை தஸ்யுக்களைத் துளைப்பவன் நீ.
செல்வங்களை எமக்கு நல்கிடுக. (3)

(விருத்திரர்கள் – அசுர இயல்புகள்; 
தஸ்யுக்கள் – ஆத்மஞானத்தை கொள்ளையிடும் சக்திகள்)

மன்யுவே நீ வெல்லும் சக்தியுள்ளவன்.
ஸ்வயம்பு பயங்கரன் பகையை அழிப்பவன்.
அனைவரையும் பார்ப்பவன் நிலைத்திருப்பவன் வலியன்.
போர்களிலே எமக்கு வலிமையை நல்கிடுக. (4)

வலியனாகிய உன்னுடைய செய்கையில்
நான் கலந்து கொள்ளவில்லை.
எனவே (பகையிடமிருந்து) பின்வாங்கினேன்.
அறிஞனே மன்யுவே,
செயலற்ற யான் உன்னிடம் கோபமானேன்.
என் தேகத்துடனே உள்ள நீ
பலத்தை அளிக்க என்னிடம் வருக. (5)

இங்கு வருக மன்யுவே.
நான் உனக்கு உரியவனாயிருக்கிறேன்.
வெல்வோனே அனைத்தையும் தாங்குவோனே,
என்னை முன்னே நோக்கிடுக.
உனது தோழனாக எண்ணி
என்னிடம் வருக வஜ்ரதரனே.
தஸ்யுக்களை வென்றிடுக. (6)

அணுகிடுக.
என் வலப்புறத்திருந்திடுக.
பகைவர் தொகையை அழிப்போம் யாம்.
இனியதும் சிறந்ததுமான மதுவை
உனக்கென அளிக்கிறேன்.
தனிமையில் அதனை நாம் பருகிடுவோமாக. (7)

(மது – சோமம், இன்ப நிலையைக் குறிக்கிறது)


குறிப்பு:

திரு. ஜடாயு வேத மந்திரங்களையும் உபநிஷதங்களையும் தொடர்ந்து மொழியாக்கம் செய்து விளக்கக் குறிப்புகளுடன் எழுதி வருகிறார். இது தொடர்பான அவரது அனைத்து பதிவுகளையும் இங்கு காணலாம்.

இந்த மந்திரத்தை ஒலிவடிவில் இங்கு கேட்கலாம்.



 

No comments:

Post a Comment