16/11/2021

தமிழகத்தின் தார்மீகக் குரல்

-ஆசிரியர் குழு

சோ ராமசாமி
(1934 அக். 5 - 2016 டிச. 7)

(ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி)

    வழக்கறிஞர், நாடகக் கலைஞர், நாடக எழுத்தாளர், இயக்குநர், நகைச்சுவை நடிகர், எழுத்தாளர், பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர், இதழாசிரியர் எனப் பல முகங்களைக் கொண்டவர் திரு. சோ.ராமசாமி. அவர் 1970-இல் துவங்கி நடத்திய, இன்றும் வெளிவரும் ‘துக்ளக்’ வார இதழ் அரசியல் விழிப்புணர்வு மேம்பட உதவும் இதழ் மட்டுமல்ல, அநியாயத்தைத் தட்டிக் கேட்கும் குரலாகவும் ஒலித்தது; ஒலிக்கிறது.

1934 அக். 5-இல் பிறந்த சோ, 2016 டிச. 7-இல் மறைந்தார். அனைத்து அரசியல் தலைவர்களுடனும் நட்புறவு கொண்டிருந்தபோதும், தனக்கு சரியானது என்று தோன்றும் கருத்தை வெளிப்படுத்தவோ, தவறு செய்யும் அரசியல்வாதிகளைக் கண்டிக்கவோ அவர் தயங்கியதில்லை.

அவரது அரசியல் விமர்சனங்களில் நையாண்டியும் நாகரிகமும் மிளிர்ந்தன. தமிழகத்தின் அரசியல் மனசாட்சியாக அவர் விளங்கினார். அரசியலின் பல துருவங்களையும் ஒருங்கிணைக்கும் மேடையாக அவர் திகழ்ந்தார்.

 
அவர் இருந்ததாலேயே, பலர் நாகரிகமாகப் பேச முயன்றதையும் தமிழகம் கண்டது. தகுதியற்ற பலரும் கூட அரசியல் மேடைகளில் தற்போது உளறுவதைக் காணும்போதுதான், அவரது மறைவால் ஏற்பட்ட வெற்றிடமும் தார்மீகக் குரலின் முக்கியத்துவமும் புலப்படுகிறது.

தமிழகத்தில் நாத்திகவாதம் தலைவிரித்தாடிய போதும், நெருக்கடி நிலையின்போதும், அவர் தன்மானத்துடன் நியாயத்தின் பக்கம் நின்றார். தேசநலன் ஒன்றே அவரது ஆதாரஸ்ருதி. அதற்காகவே தனது எழுத்தாற்றலையும் நட்புறவுகளையும் அவர் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தினார்.

அவரது நினைவுதினத்தை ஒட்டி, அவரது ஆரம்பகால நேர்காணல் ஒன்று இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது.

***


 1969 டிசம்பரில் ‘துக்ளக்’ ஆரம்பிப்பதற்கான முன்னேற்பாடுகளில் இருந்தபோது, ‘ஆனந்த விகடன்’ வார இதழில் வெளிவந்த சோ அவர்களின் பேட்டி இது…


நிருபர்: நீங்கள் பத்திரிகை ஆரம்பிக்கப் போவதாகப் பலர் சொல்கிறார்களே, உண்மையா?

சோ: யாரெல்லாம் சொன்னார்கள்?

நிருபர்: மன்னிக்கவும்! நான் உங்களைப் பேட்டி காண வந்திருக்கிறேனா அல்லது நீங்கள் என்னைப் பேட்டி காணப் போகிறீர்களா?

சோ: நான் உங்களைக் கேள்வி கேட்க ஆரம்பித்ததிலிருந்தே, நானும் ஒரு பத்திரிகைக்காரனாக மாறிக் கொண்டிருக்கிறேன் என்று தெரியவில்லையா?

நிருபர்: உங்களுக்கு இந்த ஆசை எப்படி வந்தது?

சோ: அது தமிழ்நாட்டின் தலைவிதி!

நிருபர்: உங்கள் பத்திரிகையின் ஆசிரியர் யார்?

சோ: ஒரு சகலகலா வல்லவர்!

நிருபர்: யார் அது?

சோ: நான்தான்.

நிருபர்:
பத்திரிகை ஆரம்பிக்கும் நோக்கம், லட்சியம் என்ன?

சோ: மக்களுக்கு நல்வழி காட்டி ஒரு புதிய பாரதத்தை உண்டாக்க வேண்டும்; நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக எல்லா மக்களும் தோள் கொடுத்துச் செயலாற்ற வேண்டும்; 

ஒவ்வொரு தமிழனும் தன் கடமையை உணர்ந்து தன்னைப் பெற்ற தாய்க்கும், தான் பிறந்த மண்ணிற்கு பெருமை தேடித் தர வேண்டும்; இலக்கியம், பண்பாடு, இந்தியக் கலாசாரம் இவை ஓங்கி வளர வேண்டும்.

-இந்த லட்சியங்களுக்காகத்தான் நான் பத்திரிகை ஆரம்பிக்கப் போகிறேன் என்று நீங்கள் எதிர்பார்த்தால், அது என் தவறல்ல!

பத்திரிகை ஆரம்பிக்க வேண்டும் என்று தோன்றியது; ஆரம்பிக்கப் போகிறேன். அவ்வளவுதான்!

நிருபர்: உங்கள் பத்திரிகை எப்போது வெளிவரும்?

சோ: பொங்கல் ரிலீஸ்!

நிருபர்: முதல் இதழில் உங்கள் பத்திரிகையில் என்னென்ன வரும் என்று சற்று விளக்கமாகக் கூற முடியுமா?

சோ: ஏன்? துக்ளக்கை யாரும் வாங்கக் கூடாது, உங்கள் ஆனந்த விகடனையே படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று பார்க்கிறீர்களா?

நிருபர்: சரி! உங்கள் பத்திரிகையின் அமைப்பைப் பற்றி ஏதாவது கூற முடியுமா?

சோ:
எவற்றையெல்லாம் பார்த்து எனக்குச் சிரிப்பு வருகிறதோ அவற்றையெல்லாம் பார்த்து மக்களையும் சிரிக்க வைக்க முயலப் போகிறேன்…


காண்க:  

.

No comments:

Post a Comment