16/11/2021

பதிவிரதை

-மகாகவி பாரதி

(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 57)

இந்தக் காலத்தில், பல பொய்கள் இடறிப் போகின்றன.பல பழைய கொள்கைகள் தவிடு பொடியாகச் சிதறுகின்றன. பலஅநீதிகள் உடைக்கப்படுகின்றன. பல அநியாயக்காரர்கள் பாதாளத்தில் விழுகிறார்கள்.

இந்தக் காலத்தில், யாருக்கும் பயந்து நாம் நமக்குத் தோன்றுகிற உண்மைகளை மறுக்கக் கூடாது. பத்திரிகைகள்தான், இப்போது உண்மை சொல்ல, சரியான கருவி. பத்திராதிபர்கள் இந்தக் காலத்தில் உண்மைக்குப் புகலிடமாக விளங்குகிறார்கள்.

 ‘ஸ்திரீகள் பதிவிரதையாக இருக்க வேண்டும்’ என்றுஎல்லாரும் விரும்புகிறார்கள். அதிலே கஷ்டம் என்ன வென்றால், ஆண் பிள்ளைகள் யோக்கியர்கள் இல்லை. ஆண் மக்களில் ஒவ்வொருவனும் தன் மனைவி மக்கள் பதிவிரதைகளாக இருக்க வேண்டுமென்பதில் எத்தனை ஆவலோடு இருக்கிறானோ,அத்தனை ஆவல் இதர ஸ்திரீகளின் பதிவிரத்யத்திலே  காட்டுவதில்லை ஒவ்வொருவனும் ஏறக்குறைய தன் இனத்து ஸ்திரீகளைப் பதிவிரதை என்று நம்புகிறான்.


ஆணும் பெண்ணும் ஒன்றுக்கொன்று உண்மையாக இருந்தால் நன்மையுண்டாகும்; பதிவிரதைக்கு அதிக வீரமும் சக்தியும் உண்டு. சாவித்ரீ தனது கணவனை எமன் கையிலிருந்துமீட்ட கதையில் உண்மைப் பொருள் பொதிந்திருக்கிறது. ஆனால், பதிவிரதை இல்லை என்பதற்காக ஒரு ஸ்திரீயை வதைத்து ஹிம்சை பண்ணி அடித்து ஜாதியை விட்டுத் தள்ளி ஊரார் இழிவாக நடத்தி அவளுடன் யாவரும் பேசாமல் கொள்ளாமல் தாழ்வுபடுத்தி அவளைத் தெருவிலே சாகும்படிவிடுதல் அநியாயத்திலும் அநியாயம்.

அட பரம மூடர்களா! ஆண் பிள்ளைகள் தவறினால் ஸ்திரீகள் எப்படி பதிவிரதையாக இருக்க முடியும்? கற்பனைக்கணக்குப் போட்டுப் பார்ப்போம். ஒரு பட்டணத்தில் லக்ஷம் ஜனங்கள், ஐம்பதினாயிரம் பேர் ஆண்கள், ஐம்பதினாயிரம் பேர் பெண்கள். அதில் நாற்பத்தையாயிரம் ஆண்கள் பரஸ்திரீகளை இச்சிப்பதாக வைத்துக்கொள்வோம் அதிலிருந்து குறைந்த பக்ஷம் நாற்பத்தையாயிரம் ஸ்திரீகள் பரபுருஷர்களின் இச்சைக்கிடமாக வேண்டும். இந்தக் கூட்டத்தில் இருபதினாயிரம் புருஷர்கள் தம் இச்சையை  ‘ஓரளவு’  நிறைவேற்றுவதாக வைத்துக்கொள்வோம். எனவே குறைந்தபக்ஷம் இருபதினாயிரம் ஸ்திரீகள் வ்யபசாரிகளாக இருத்தல் அவசியமாகிறது. அந்த இருபதினாயிரம் வ்யபசாரிகளில் நூறுபேர்தான் தள்ளப்படுகிறார்கள். மற்றவர்கள் புருஷனுடன் வாழ்கிறார்கள். ஆனால், அவளவளுடைய புருஷனுக்கு மாத்திரம் அவளவள் வ்யபசாரி என்பது நிச்சயமாகத் தெரியாது. தெரிந்தும் பாதகமில்லையென்று சும்மா இருப்பாருமுளர்.

ஆகவே, பெரும்பாலோர் வ்யபசாரிகளுடனே தான் வாழ்கிறார்கள். இதனிடையே, பாதிவ்ரத்யத்தைக் காப்பாற்றும் பொருட்டாக ஸ்திரீகளைப் புருஷர்கள் அடிப்பதும், திட்டுவதும்,கொடுமை செய்வதும் எல்லையின்றி நடைபெற்று வருகின்றன. சீச்சீ! மானங்கெட்ட தோல்வி, ஆண்களுக்கு! அநியாயமும் கொடுமையும் செய்து பயனில்லை!

இதென்னடா இது! ‘என்மேல் ஏன் விருப்பம் செலுத்தவில்லை?’ என்று ஸ்திரீயை அடிப்பதற்கு அர்த்தமென்ன? இதைப்போல் மூடத்தனம் மூன்று லோகத்திலும் வேறே கிடையாது.

ஒரு வஸ்து நம்முடைய கண்ணுக்கு இன்பமாக இருந்தால், அதனிடத்தில் நமக்கு விருப்பம் இயற்கையிலே உண்டாகிறது. கிளியைப் பார்த்தால் மனிதர் அழகென்று நினைக்கிறார்கள். தவளை அழகில்லை என்று மனிதர் நினைக்கிறார்கள் இதற்காகத் தவளைகள் மனிதரை அடித்தும், திட்டியும், சிறையிலே போட்டும் துன்பப்படுத்த அவற்றுக்கு வலிமை இருப்பதாக வைத்துக் கொள்வோம் அப்படி அவைசெய்தால் நாம் நியாயமென்று சொல்லுவோமா?

தேசங்களில் அன்னியர் வந்து கொடுங்கோல் அரசு செலுத்துகிறார்கள். அவர்களிடம் அந்த ஜனங்கள் ராஜ பக்தி செலுத்த வேண்டுமென்றும் அங்ஙனம் பக்தி செய்யாவிட்டால், சிறைச்சாலையிலே போடுவோம் என்றும் சொல்லுகிறார்கள்.அப்படிப்பட்ட ராஜ்யத்தை உலகத்து நீதிமான்கள் அவமதிக்கிறார்கள்.

அந்த அரசுபோலே தான், ஸ்திரீகள் மீது புருஷர் செய்யும் ‘கட்டாய ஆட்சி’யும்  என்பது யாவருக்கும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவாக விளங்கும். கட்டாயப்படுத்தி, என்னிடம் அன்பு செய் என்று சொல்வது அவமானமல்லவா?

ஸ்திரீகள் புருஷர்களிடம் அன்புடன் இருக்கவேண்டினால், புருஷர் ஸ்திரீகளிடம் அசையாத பக்தி செலுத்தவேண்டும். பக்தியே பக்தியை விளைவிக்கும். 

நம்மைப்போன்றதொரு ஆத்மா நமக்கு அச்சத்தினாலே அடிமைப்பட்டிருக்கும் என்று நினைப்பவன் அரசனாயினும்,குருவாயினும், புருஷனாயினும் மூடனைத் தவிர வேறில்லை. அவனுடைய நோக்கம் நிறைவேறாது. அச்சத்தினால் மனுஷ்ய ஆத்மா வெளிக்கு அடிமைபோல் நடித்தாலும் உள்ளே துரோகத்தை வைத்துக் கொண்டுதான் இருக்கும்.

அச்சத்தினால் அன்பை விளைவிக்க முடியாது.

No comments:

Post a Comment