02/11/2021

ஆர்எஸ்எஸ் அமைப்பும் கால மாற்றமும்

-ராம் மாதவ்




ஆர்எஸ்எஸ் (ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்) அமைப்பைப் புரிந்துகொள்வது கடினம்; தவறாகப் புரிந்து கொள்வது சுலபம். 1925இல் ஆரம்பிக்கப்பட்டு நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது. அரசு சாரா அமைப்புகளில் இத்தனைக் காலம் வாழ்ந்தவை வெகு சிலவே. இதுவே பலருக்கு புதிராக உள்ளது.

இடதுசாரி சிந்தனையாளர்களும் ‘லிபரல்’ என்று சொல்லிக்கொள்ளும் அறிவுஜீவிகளும் ஆர்எஸ்எஸ் அமைப்பைப் பழிக்கின்றனர்; எதிர்க்கின்றனர். இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரில் பலர் அதன் நோக்கம் பற்றி அச்சப்படுகின்றனர். ஆனால் ஒட்டுமொத்த இந்திய சமூகத்தில் பல்வேறு பிரிவினர் இடையேயும் பல்வேறு தளங்களிலும் ஆர்எஸ்எஸ் வரவேற்கப்படுகிறது; புகழப்படுகிறது. சுருக்கமாக சொல்லப்போனால் ஆர்எஸ்எஸ் அமைப்பை நீங்கள் புகழலாம், அல்லது இகழலாம்; ஆனால் அலட்சியப்படுத்த முடியாது.
 

கருத்தியல் அல்ல, பரிணமிக்கும் சிந்தனை:

‘எல்லாக் கருத்தியல்களும் முட்டாள் தனமானவை. அது அரசியலோ மதமோ, எதுவாக இருந்தாலும். கொள்கை சார்ந்த சிந்தனை, கொள்கை சார்ந்த உலகம் எல்லாமே மனிதனைப் பிரிக்கின்றன; எனவே முட்டாள் தனமானவை’ என்று வருந்துவார் சிந்தனையாளர் ஜே.கிருஷ்ணமூர்த்தி.

ஐரோப்பா கருத்தியல்களின் தாய்; ஆதம் ஸ்மித்-தின் முதலாளித்துவம் முதல் தாமஸ் ஹோபஸ் மற்றும் ஜான் லாக்-கின் சமூக பழமைவாதம் வரையிலும், ஜான் ஸ்டூவர்ட் மில்-லின் தாராளவாதம் தொடங்கி காரல் மார்க்ஸின் கம்யூனிஸம் வரையிலும் எல்லாக் கருத்தியல்களும் தோன்றியது ஐரோப்பாவில் தான். இந்தக் கருத்தியல்களால்தான் உலகம் பிளவுபட்டு துண்டு துண்டாகி நிற்கிறது என்று சுட்டிக்காட்டுகிறார் ஜே.கிருஷ்ணமூர்த்தி. 'உங்களுக்கு இருப்பது கருத்து; உங்களைப் பீடித்திருப்பது கருத்தியல்' என்று எச்சரிக்கின்றார் அமெரிக்க வரலாற்றாளரும் சமூக சிந்தனையாளருமான மோரிஸ் பர்மன்.

இந்தியா கருத்துக்களின் தேசம் என்று அதன் வரலாறு காட்டுகிறது. வேத காலம் துவங்கி, மகாவீரர், புத்தர், சங்கரர், விவேகானந்தர், அரவிந்தர், காந்தி என இந்தியாவின் மகத்தான மனிதர்கள் எல்லாருமே தத்துவ ஞானிகளாக, மனித இனத்தின் நன்மைக்கான கருத்துக்களை முன்வைத்தவர்களாகவே இருக்கின்றனர்.

ஆர்எஸ்எஸ் இப்படித்தான் ஒரு கருத்தாக - கருத்தியலாக அல்ல - பிறந்தது. கேசவ பலிராம் ஹெட்கேவர் நாகபுரியைச் சேர்ந்த மருத்துவர்; காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த சுதந்திரப் போராட்ட வீரர். அவர்தான் 1925இல் விஜயதசமி தினத்தில், ஆர்எஸ்எஸ் அமைப்பை ஆரம்பித்தார். அதனை ஆரம்பிக்கும் போது அதற்கு பெயரும் இல்லை, விதிமுறைகளும் இல்லை. ஓரிரு மாதங்களுக்குப் பிறகு ஆரம்ப உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றத்திற்குப் பிறகே பெயர் வந்தது. அமைப்பின் விதிமுறைகள் இரண்டு பத்தாண்டுகளுக்குப் பிறகு 1949இல் ஏற்பட்டது.

சாரமாகப் பார்த்தால், ஆர்எஸ்எஸ் என்பது தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் கருத்து. அதற்கு இரண்டு அடிப்படைகள் உள்ளன. அவை: நுண்ணிய அளவில் அல்லது தனிமனித அளவில் ஒவ்வொருவரும் சரியாக இருப்பது; ஒட்டுமொத்த அளவில் சமூகங்களின் ஒற்றுமையும் நல்லிணக்கமும். ஆர்எஸ்எஸ் காலத்துக்கேற்ப, புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப, புதிய விஷயங்களை ஏற்றுக் கொண்டு தன்னை மாற்றிக் கொள்கிறது. ஆனால் எந்த நிலையிலும் தன்னுடைய அடிப்படையான இணை பார்வையை கைவிடுவதில்லை.

ஆர்எஸ்எஸ் அமைப்பை விமர்சிப்பவர்கள் அது கடந்த காலம் என்னும் இருளில் உறைந்து கிடப்பதாக தவறாகக் கூறுகின்றனர். உண்மையில் அவர்கள்தான் சரியாகப் புரிந்து கொள்ளாமல், இறந்தகாலத்தில் வாழ்கிறார்கள் என்பதை பத்ரி நாராயணனின் ‘இந்துத்துவ குடியரசு’ (Republic of Hindutva) என்ற நூல் சுட்டிக் காட்டுகிறது.


 
இந்துத்துவ இணை பார்வை:

ஹெட்கேவாரையும் அவரது இளம் தொண்டர்களையும் எழுச்சியூட்டிய கருத்து, மிகவும் எளிமையான ஒன்று. இந்தியா அடிமைபட்டுக் கிடப்பது அதன் வலிமைக் குறைவினால் அல்ல, தனி மனிதனின் பண்பு வீழ்ச்சியாலும், சமூக ஒற்றுமை இல்லாததாலும் தான்.

இதுபற்றி டாக்டர் அம்பேத்கரும் அரசியல் சாசன சபையில் நிகழ்த்திய ‘மூன்று எச்சரிக்கைகள்’ என்ற அவரது புகழ்பெற்ற உரையில் குறிப்பிட்டுள்ளார்.

“இந்தியா எப்பொழுதும் சுதந்திரமான நாடாக இருந்ததில்லை என்று கூற முடியாது. அவள் (இந்தியா) தன் சுதந்திரத்தை ஒருமுறை இழந்துள்ளாள். இரண்டாவது முறையும் எழுந்து விடுவாளோ என்னுடைய அச்சம் எல்லாம், அவள் தனது சுதந்திரத்தை இழந்ததல்ல -ஆனால் அவ்வாறு இழந்ததற்கு அவளது சொந்த மக்களின் துரோகமும் நம்பிக்கையின்மையும்தான் காரணம் என்பதே”

-என்று அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் வரலாற்றைப் பற்றி ஹெட்கேவாருக்கும் அதே போன்ற புரிதல் இருந்தது. எனவே ஆர்எஸ்எஸ் அமைப்பை ஆரம்பிக்கும்போது அதற்கு இரண்டு லட்சியங்களை முன்வைத்தார். ஒன்று, உள்ளூர் அளவில் ஹிந்து சமுதாயத்தை ஒருங்கிணைப்பது; இரண்டு, தேச விடுதலைக்காகப் பாடுபடுவது.

அப்போதிருந்த பல தேசியத் தலைவர்கள் ஹிந்து சமூக சீர்திருத்தத்தை தேசிய இயக்கத்தின் ஒரு பகுதியாகக் கருதினர். பாலகங்காதர திலகர் அதற்காக முயற்சித்தார். மதன் மோகன் மாளவியா அதற்காகப் பாடுபட்டார். வீரசாவர்க்கரும் டாக்டர் அம்பேத்கரும் அதற்காகப் போராடினார்கள். காந்தி அதை சுதந்திரப் போராட்டத்தின் அங்கமாகவே ஆக்கினார்.

ஹெட்கேவார் அளித்த இணை பார்வைக்கு அவருக்குப் பின்னர் தலைவரான குருஜி கோல்வல்கர் ஒரு தத்துவார்த்த மெருகூட்டினார். ஹெட்கேவார் புரட்சிகரப் போராளியும் சுதந்திரப் போராட்ட வீரரும் ஆவார். எனவே அவர் சமூக- அரசியலுக்கு அழுத்தம் தந்தார். கோல்வல்கரோ ராமகிருஷ்ண மிஷனில் பயிற்றுவிக்கப்பட்ட துறவி. அவர் ஆர்எஸ்எஸ் தர்ம, ஆன்மிகப் பாதையில் பயணிக்க உத்வேகம் அளித்தார். அவரது 33 ஆண்டுகாலத் தலைமை ஆர்எஸ்எஸ் என்ற கருத்துக்கு தத்துவார்த்த உயர்வை அளித்தது.

விடுதலை இயக்கத்தின் விளைவாக இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது என்றாலும், தலைமையின் தோல்வியால் தேசத்தின் உணர்வுப்பூர்வமான ஒற்றுமையையும் முழுமையான நிலப்பரப்பையும் காப்பாற்ற முடியவில்லை. இது ஆர்எஸ்எஸ் என்ற கருத்தை அதன் இரண்டாவது தளத்துக்கு வளர்த்தது. இந்தியா இரண்டாவது முறை தனது சுதந்திரத்தை இழந்துவிடுமோ என்று அம்பேத்காரின் அச்சத்தைப் போக்குவதற்கும், எதிர்காலத்தில் மேலும் பிரிவினைகள் ஏற்படாமல் தவிர்ப்பதற்கும் குருஜி கோல்வல்கர் முன்னுரிமை அளித்தார்.

தொன்மையான பண்பாடு மற்றும் நாகரிகம் கொண்ட இந்தியா என்ற சிந்தனையை ஆர்எஸ்எஸ் என்ற கருத்தின் உள்ளீடாக வைத்தார் கோல்வல்கர். அதை அவர் ‘இந்து ராஷ்டிரம்’ என்று வர்ணித்தார். இந்த அடையாளமே தேசத்தின் உணர்வுப்பூர்வமான ஒற்றுமையையும் புவியியல் ஒற்றுமையையும் கட்டிக் காக்கும் என்றார்.

ராதா குமுத முகர்ஜியின் ‘இந்தியாவின் அடிப்படை ஒற்றுமை’ (1914) என்ற நூலும் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா-வின் ‘ஆனந்தமடம்’ என்ற நாவலில் (1882) சேர்க்கப்பட்ட ‘வந்தே மாதரம்’ என்ற பாடலும் காந்தியின் ‘ராம ராஜ்ஜியம்’ கோட்பாடும் அதே உணர்வை வெளிப்படுத்துகின்றன.

பிரிப்பதல்ல, ஒருங்கிணைப்பது:

‘ஹிந்து ஒற்றுமை என்றால் முஸ்லிம் விரோதம்’ என்ற மோசடியான விஷயத்தை முஸ்லிம் லீக் முன்வைப்பதற்கு முன்பு, இந்தியாவின் பண்பாட்டு ஒற்றுமை எந்தச் சர்ச்சையும் இன்றி எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. காங்கிரஸ் தலைவர்களில் சிலர் முகமது அலி ஜின்னாவையும் முஸ்லிம் லீகையும் தாஜா செய்வதற்காக அந்தப் போலியான வாதத்தை ஏற்றுக் கொண்டனர். இடதுசாரி அறிவுஜீவிகள் அதை வளர்த்தனர். ஆனால் கோல்வல்கரும் சாவர்க்கரும் அதை ஏற்க மறுத்ததுடன், ஹிந்துவின் அரவணைத்துச் செல்லும் பண்பை வலியுறுத்தினர்.

‘இந்துத்துவத்தின் அடிப்படை கூறுகள்’ (1923) என்ற நூலில் ”ஹிந்து, ஹிந்துஸ்தான் பற்றிய முகமதியர்களின் கூற்றை நல்மனம் கொண்ட ஆனால் அவசர புத்தி உடைய நம் நாட்டினர் சிலரின் புத்தி ஏற்றுக்கொண்டு விட்டது. இது வெறும் முட்டாள்தனம்” என்று, சாவர்க்கர் அவர்களது சந்தேகத்தை சாடியுள்ளார். “முகமது நபி பிறப்பதற்கும் முன்னால், இல்லை இல்லை, அரேபியர்கள் என்ற மக்கள் கூட்டத்தினர் அறியப்படுவதற்கு முன்னமே, இந்தத் தொன்மையான தேசம் ஹிந்து அல்லது சிந்து என்று நமக்கும் வெளிநாட்டினருக்கும் தெரியும்” என்றும் அவர் எழுதியுள்ளார்.

ஆர்எஸ்எஸ் அனைவரையும் ஹிந்துவாக மாற்ற முயல்கிறது என்ற பிரசாரத்தை கோல்வல்கர் உறுதியாக மறுத்துள்ளார். 1971இல் இரானிய அறிஞர் சைபுதீன் ஜிலானி என்பவருக்கு கோல்வல்கர் அளித்த பேட்டியில் அவர் கூறியது:

“நாமெல்லோரும் இம்மண்ணின் மைந்தர்கள் என்பதை உணர வேண்டும். மண்ணுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். நாம் எல்லோரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். முன்னோர்கள் நம் அனைவருக்கும் பொதுவானவர்கள். நம்முடைய நாட்டமும் பொதுவானதே. இந்த இந்திய தன்மையை உண்மையான அர்த்தத்தில் புரிந்து கொள்ள வேண்டும்…

“இந்தியத் தன்மை என்றால் ஒருவர் தன்னுடைய மத முறைமையை விட்டுவிட வேண்டும் என்பதல்ல. நாம் இதைச் சொல்லவில்லை. சொல்லப் போவதுமில்லை. உங்களுடைய மதத்தைப் பின்பற்றுங்கள். இஸ்லாம், கிறிஸ்தவம், ஹிந்து மதங்கள் கூறும் கடவுள் ஒருவரே. நாமெல்லோரும் அவனது பக்தர்கள். இஸ்லாம் பற்றிய உண்மையான அறிவை மக்களுக்குக் கொடுங்கள். ஹிந்து பற்றிய உண்மையான அறிவை மக்களுக்குக் கொடுங்கள். எல்லா மதங்களும் மனிதனை சுயநலம் அற்றவனாக, உயர்ந்த பண்புகளைக் கொண்டவனாக, பக்தி உள்ளவனாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்துவதை சொல்லிக்கொடுங்கள். இந்தியத் தன்மையுள்ளவர்கள் ஆக்குவது என்றால் எல்லோரையும் ஹிந்துக்கள் ஆக்குவது அல்ல”

-என்று தனது பேட்டியில் குருஜி கோல்வல்கர் கூறியுள்ளார்.

‘பொதுவான முன்னோர்கள்’, ‘பொதுவான நாட்டங்கள்’ என்பதை கோல்வல்கர் மட்டுமே பேசவில்லை. 1948இல் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்களிடையே பேசிய பிரதமர் ஜவஹர்லால் நேரு கூறியவை இவை:

“அறிவையும் பண்பாட்டு முதன்மையையும் நமக்களித்த நமது முன்னோர் பற்றியும் நமது பாரம்பரியம் பற்றியும் நான் பெருமை கொள்கிறேன் என்று ஏற்கனவே சொல்லி உள்ளேன்…

“நம் கடந்த காலத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களை அதன் வாரிசுகளாக, பங்குதாரர்களாகக் கருதுகிறீர்களா? எனக்கு இருப்பதைப் போலவே உங்களுக்கும் அதில் பெருமிதம் ஏற்படுகிறதா? அல்லது நீங்கள் அதிலிருந்து வேறுபட்டவர்களாக, உங்களுக்குத் தெரியாமலேயே உங்களிடம் வந்ததாக நினைக்கிறீர்களா? இந்த மாபெரும் பொக்கிஷத்திற்கு நாம் வாரிசுகள் என்றும், அறங்காவலர்கள் என்றும், அதனால் ஏற்படும் சிலிர்ப்பை உணர்கிறீர்களா?...

“நீங்கள் முஸ்லிம்கள். நான் இந்து. நாம் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். ஏன் மதம் சாராதவர்களாகவும்கூட இருக்கலாம். ஆனால் இது எதுவும் கலாச்சாரத்தின் வாரிசுகளாக என்னையும் உங்களையும் இல்லாமல் செய்துவிட முடியாது. கடந்த காலம் நம்மை இணைக்கிறது. நிகழ்காலமும் எதிர்காலமும் உணர்வுபூர்வமாக நம்மை ஏன் பிரிக்க வேண்டும்?”

-என்று முஸ்லிம் மாணவர்களிடையே நேரு பேசியுள்ளார்.

2018இல்ஆர்எஸ்எஸ் அமைப்பின் தற்போதைய தலைவர் மோகன் பாகவத், “நாம் முஸ்லிம்களை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அது ஹிந்துத்துவமே அல்ல. ஹிந்துத்துவம் என்பது இந்தியத் தன்மை. அனைவரையும் அரவணைத்து கொள்வது” என்று கூறியுள்ளார். இது இந்துத்துவத்தின் சாரமான தத்துவம் பற்றிய எல்லா விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய பதிலாகும்.


தலைமை: கீழிருந்து மேல் நோக்கி:

காந்தி, அம்பேத்கர் தொடங்கி பிரணாப் முகர்ஜி வரை, பலரும் ஆர்எஸ்எஸ் பற்றிய நெருங்கிய, நேரடி அனுபவம் பெற்றதும் அதன் அமைப்புத் திறன் மற்றும் சீரான வளர்ச்சி குறித்து திகைப்படைந்துள்ளனர். இன்று உலகத்திலேயே மிகப் பெரிய அரசு சாராத அமைப்பு ஆர்எஸ்எஸ் தான் என்பதில் சந்தேகமில்லை. சுமார் 60,000 கிளைகளில் தினசரி சந்திப்பு, பல டஜன் துணை அமைப்புகள் என, இது ‘சங்பரிவார்’ (சங்கக் குடும்பம்) என்று அழைக்கப்படுகிறது. இதன் தொண்டர்கள் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான சேவைப் பணிகளையும் 25,000 பள்ளிகளையும் நடத்தி வருகின்றனர். இதன் உறுப்பினர்கள் அரசியல் மற்றும் பொது வாழ்வில் மிகப் பெரிய பதவிகளில் உள்ளனர்.

இருந்தாலும், இந்த பிரம்மாண்டமான அமைப்பு எந்த விளம்பரமும் இல்லாமல், எந்தவிதமான உரசலும் இல்லாமல் அமைதியாக நடக்கிறது. இது ஒரு முறை கூட பிளவுபடவில்லை. தலைமைப் பொறுப்புக்கு எந்த மோதலும் இல்லை. அடுத்தடுத்து வந்த சர்சங்கசாலக்குகள் (தேசிய தலைவர்கள்) தனக்கு அடுத்தவரை நியமிக்கிறார்கள். இதில் மூப்புக்கு என்றும் முன்னுரிமை இல்லை. இதில் எந்த ஆரவாரமோ குழப்பமோ இல்லை.

1940இல் ஹெட்கேவார் 35 வயதேயான மாதவ சதாசிவ கோல்வல்கரை -அவர் அமைப்புக்கு மிகவும் இளையவர்- தனக்குப் பின் தலைவராக நியமித்தார். அப்போது அமைப்பில் மூத்தவராக இருந்த அப்பாஜி ஜோஷியிடம் சிலர் சென்று, “நீங்கள் தான் தலைவராக வேண்டும்” என வலியுறுத்தினர். அதற்கு அப்பாஜி ஜோஷி அளித்த பதில், ஆர்எஸ்எஸ் வளர்த்துவரும் பண்பாட்டை விளக்குவதாக இருந்தது. அவர் ஹெட்கேவாரின் வலதுகரமாகச் செயல்பட்டவர் என்பது சந்தேகமே இல்லை. ஆனால், “நான் ஹெட்கேவாரின் வலதுகரம் தான்; கோல்வல்கர் அவரது இதயம்” என்று அவர் சொன்னார்.

2000 மார்ச்சில், கு.சி.சுதர்சன் சர்சங்க சாலக்காக ஆனபோது நடந்தது எனக்கு பசுமையாக நினைவில் உள்ளது. அப்போது அடல் பிகாரி வாஜபேயி பிரதமராக இருந்தார். அதனால் ஊடகங்கள் ஆர்எஸ்எஸ் புதிய தலைவராக வருபவர் யார் என்பதை விழிப்புடன் கவனித்துக் கொண்டிருந்தனர். அப்போது சுதர்சனை விட மூத்தவரான ஹொ.வே.சேஷாத்திரி இயல்பாகவே ராஜேந்திர சிங்கிற்குப் பிறகு தலைவராவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். அப்படி நடக்காதபோது, அவரிடம் சென்று “இது பற்றி உங்களுக்கு ஏதாவது வருத்தம் உள்ளதா?’’ என்று சிலர் கேட்டனர். சேஷாத்ரி அவர்களைப் பார்த்தார்; “எனக்கு தலைவராகும் தகுதி இல்லை” என்று பணிவுடன் சொன்னார்.

ஆர்எஸ்எஸ் தலைவர் என்ற பெரிய அதிகாரம் உள்ள பதவி இவ்வளவு இயல்பாக மாறுவது, தற்போதைய அரசியல் சூழ்நிலையில் கற்பனைக்கு அப்பாற்பட்டது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமை மதிக்கப்படுகிறது. இருந்தாலும் அதன் உண்மையான வலிமை அதன் கட்டமைப்பில் தான் உள்ளது. ஜைன தத்துவமான ‘அனேகாந்தா’வில் உள்ளது போல, ஆர்எஸ்எஸ்-ஸின் கட்டமைப்பு, சிக்கலான வலையமைப்பைக் கொண்டது; உண்மையான அதிகாரமும் வல்லமையும் அடிமட்டத்தில் உள்ள கிளைகளில் உள்ளது.

‘போர்க்கலை’ என்ற சன் ஷூவின் தத்துவத்தில் கூறியுள்ளதைப் போல தன் நோக்கத்தை அடைய பல்வேறு இலக்குகளை ஆர்எஸ்எஸ் கொண்டிருக்கிறது. இடைக்கால வரலாற்றில் இருந்த குடியரசுகளைப் போல, தனிமனிதப் புகழை வெறுத்து, குழுத்தலைமை என்னும் சீரிய பண்பாட்டை வளர்கிறது. தலைவர்களுக்கு சிறப்பு அந்தஸ்தை -முதலிரண்டு தலைவர்களைத் தவிர்த்து - ஆர்எஸ்எஸ் அளிப்பதில்லை.

அடிமட்டத்தில் இருந்து மேல்நோக்கி வளரும் தலைமை முறையை அது வளர்த்துள்ளது. அதன் தொண்டர்கள் தங்கள் சீருடையில் எப்படி சகஜமாக வருகிறார்களோ அதுபோலவே கொரானா காலத்தில் கவச உடையை அணிந்தனர் (சேவை செய்தனர்). நவீன மாநகரங்களில் வசிக்கும் மென்பொருள் பொறியாளர்களை எப்படி அணுகுகிறார்களோ, அதேபோன்ற உற்சாகத்துடன் அடர்ந்த காடுகளில் வசிக்கும் வனவாசிகளையும் அவர்கள் அணுகுகிறார்கள்.

அதிகாரப் பகிர்வு, குழுவாக முடிவெடுத்தல் என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்முறை. சிலர் இது, சூழ்நிலைக்கு உடனடியாக பதில் சொல்ல முடியாமல் தாமதப்படுத்துவதாகவும், அலுப்பூட்டக் கூடியதாகவும் இருப்பதாக நினைக்கின்றனர். ஒரு மூத்த அரசியல்வாதி, ஒருமுறை ஆர்எஸ்எஸ் அமைப்பை ஆமையுடன் ஒப்பிட்டார். ஆமை எப்பொழுதும் நிதானமாகவே செல்லும். அவசரம் என்பது அதற்கு கிடையாது. தாக்கப்பட்டால் உடனடியாக தன் கை,கால்களை ஓட்டுக்குள் முடக்கிக் கொள்ளும் என்றார் அவர். இந்த ஒப்பீடு மிகவும் தவறானது.

நெருக்கடியான காலங்களில் சவாலை ஏற்கும் முதல் அமைப்பாக ஆர்எஸ்எஸ் எப்பொழுதும் இருந்துள்ளது. அதுமட்டுமன்றி இலக்கை வெற்றிகரமாக அடைந்ததையும் அதன் வரலாறு காட்டுகிறது. காரல் மார்க்ஸும் எங்கெல்ஸும் ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’யை 1848-ல் வெளியிட்டனர். ஆனால் முதல் கம்யூனிஸ்ட் ஆட்சியை ரஷ்யாவில் லெனின் அமைப்பதற்கு எழுபது ஆண்டுகள் ஆனது. லிபரல்கள் தங்கள் அறிக்கையை வெளியிட அதைவிட அதிக ஆண்டுகள் ஆனது. இவற்றோடு ஒப்பிடும்போது ‘இந்திய ஆமை’ சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. அதன் உறுப்பினர்கள் 1977 அரசிலும் இருந்தனர்; இந்த புதிய நூற்றாண்டின் துவக்கத்திலோ, பொது வாழ்வின் பல்வேறு துறைகளிலும் தலைமை ஏற்று நடத்துகின்றனர்.

ஆர்எஸ்எஸ் மீதான விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கும் விஷயத்தில் வேண்டுமானால் ஆமை ஒப்பீடு பொருந்தலாம். பல பத்தாண்டுகளாக அதன்மீது நியாயமற்ற விமர்சனங்கள், ‘பாசிசம், ஹிட்லரிசம்’ போன்ற சொற்களால் மீண்டும் மீண்டும் ஆர்எஸ்எஸ் வசை பாடப்பட்டு வருகிறது. ஆனால் ஆர்எஸ்எஸ் அவற்றுக்கு, வழக்கமான எந்த வகையிலும், பதில் அளிப்பதில்லை. ‘ஆர்எஸ்எஸ் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமானால் ஆர்எஸ்எஸ்-ஸில் சேருங்கள்’ என்பதே அதன் பதிலாக உள்ளது. ஆனாலும், சமீப ஆண்டுகளில் பொதுமக்கள் தொடர்பு மற்றும் பிரசாரத்தை அந்த அமைப்பு சிறந்த முறையில் மேற்கொண்டு வருகிறது.

95 ஆண்டுகளுக்கும் மேலான தனது பயணத்தில் இந்திய சமுதாயத்தின் விளிம்பிலிருந்து தேசத்தின் மையத்திற்கு வந்துள்ளது ஆர்எஸ்எஸ். இதனை இந்தியாவின் மிகப்பெரிய எதிரி என்று கருதி வந்த ஒரு முற்போக்கு பத்திரிகையாளர் சில ஆண்டுகளுக்கு முன் என்னிடம் ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்டார். “நான் உங்களை சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் பைத்தியக்கார அமைப்பு என்று நினைத்து வந்தேன். உங்களை அம்பலப்படுத்துவதை என்னுடைய பணியாகக் கருதினேன். இருபது ஆண்டுக்காலம் அதைத்தான் செய்து வந்தேன். இப்பொழுது பாருங்கள், எங்கள் ஊடகத்திற்கு உங்கள் நேர்காணலை வேண்டி வந்துள்ளேன். நீங்கள் இப்போது மையத்தில் இருக்கிறீர்கள், நாங்கள் விளிம்பில் நிற்கிறோம்” என்றார் அவர்.



சமுக- பண்பாடு × சமுக- அரசியல்:

ஆர்எஸ்எஸ் எதிர்கொண்ட உண்மையான சவால், கருத்தியல் ரீதியிலானதோ, அமைப்பு ரீதியிலானதோ அல்ல. அது அரசியல் ரீதியிலானது. ஆர்எஸ்எஸ் மீதான முதல், பெரிய அரசியல் தாக்குதல், மகாத்மா காந்தி கொலையுடன் தொடர்புபடுத்தி நடத்தப்பட்டது. ஹெட்கேவார் ஆர்எஸ்எஸ் அமைப்பை ஆரம்பித்தபோது அது ஒரு சமூக- அரசியல் முன்னெடுப்பாக இருந்தது. விடுதலைக்குப் பிறகு கோல்வல்கர் அதன் சாரத்தை சமூக- பண்பாடாக மாற்றினார். அப்போது அமைப்புக்குள் ஒரு விவாதம் எழுந்தது.

அப்போது அமைப்பில் மூத்தவராக இருந்தவரும் 1973இல் கோல்வல்கருக்குப் பின்னர் தலைவரானவருமான பாளாசாஹேப் தேவரஸும் அவரது சகோதரர் பாபுராவ் தேவரஸும் ‘அரசியலிலிருந்து விலகி இருக்க வேண்டும்’ என்ற கோல்வல்கரின் கருத்துடன் மாறுபட்டனர். அதனால் சில ஆண்டுகள் அமைப்பிலிருந்து விலகியும் இருந்தனர்.

ஆனால் தனது 33 ஆண்டுகால நீண்ட தலைமையில் அக்கருத்தை கோல்வல்கர் ஆழப் பதிய வைத்தார். சில மூத்த ஊழியர்களை (தீனதயாள் உபாத்யாய, நாணாஜி தேஷ்முக், அடல் பிகாரி வாஜபேயி, லால் கிருஷ்ண அத்வானி, சுந்தர் சிங் பண்டாரி உள்ளிட்டோர்) சியாம பிரசாத் முகர்ஜியின் பாரதிய ஜன சங்கத்துக்கு கடனாகக் கொடுத்தபோதும், தனது ‘அரசியல் சாராத சங்கம்’ கருத்தை அவர் ஏற்க வைத்தார்.

கோல்வால்கரின் சமூக- பண்பாட்டு அடையாளத்தை ஆர்எஸ்எஸ் ஏற்றுக் கொண்ட பிறகு அதன் வளர்ச்சி பன்மடங்கு பெருகியது. ஆரம்பத்தில் அதனுடன் கருத்தியல் ரீதியாக மாறுபட்ட நேரு 1963 குடியரசு தின அணிவகுப்பில் ராணுவ வீரர்களுடன் ஸ்வயம்சேவகர்களைப் பங்கேற்கச் செய்யும் நிலைக்கு வளர்ந்தது. 1963 குடியரசு தின அணிவகுப்பில் அரசின் அழைப்பை ஏற்று 2,500 ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் சங்கச் சீருடையில் அணிவகுத்தனர். 1965இல் இந்தியா-பாகிஸ்தான் போரின்போது அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வல்கரை அழைத்து ஆலோசனை கேட்டார்.

கோல்வல்கர் காலமானபோது நாடாளுமன்றத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது இந்திரா காந்தி, “இந்த அவையில் உறுப்பினராக எப்போதும் இருந்திராத பிரபலம் ஸ்ரீ கோல்வல்கர். அவர் காலமாகிவிட்டார். நம்மில் பலருடன் அவர் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும், தன் ஆளுமையாலும் கொள்கை பற்றினாலும் தேசிய வாழ்வில் முக்கிய இடம் பெற்றவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நூற்றாண்டின் இறுதி கால் நூற்றாண்டில் நடந்த இரு முக்கிய நிகழ்வுகள் ஆர்எஸ்எஸ் ஸின் முக்கியத்துவத்தை உணர்த்தின. முதல் விஷயம் நெருக்கடிநிலை (1975- 77) நடைமுறைப்படுத்தப்பட்டபோது, சங்கம் தடை செய்யப்பட்டதை எதிர்த்து, இந்திரா காந்திக்கு எதிராக, சத்தியாகிரக போராட்டத்தை ஆர்எஸ்எஸ் மேற்கொண்டது. தங்களுக்கு அரசியல் சாசனத்தின்படி கிடைத்த உரிமைக்காகப் போராடுமாறு ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

1948இல் மகாத்மா காந்தி கொலையுடன் தொடர்புபடுத்தியதால் ஏற்பட்ட களங்கத்தைத் துடைத்தெறிய அரசை எதிர்த்து சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்தினார்கள். ஆனால் நெருக்கடி நிலையில் நடந்தது வேறு விதமானது. சமூக- பண்பாட்டு இயக்கம் சமூக- அரசியல் என்ற போர்வையை அணிய வேண்டியிருந்தது. 1977இல் அமைக்கப்பட்ட ஜனதா கட்சியும், அதன் அரசு, 1980இல் ஆர்எஸ்எஸ் பற்றிய (முன்னாள் பாரதீய ஜனசங்கத்தைச் சேர்ந்த ஜனதா உறுப்பினர்கள் இரட்டை உறுப்பினராக இருக்கலாமா?) கேள்வியால் ஏற்பட்ட சரிவும், ஆர்எஸ்எஸ் அமைப்பை அரசியல் களத்திற்கு மேலும் இழுத்தது.

1980- 90களில் ஏற்பட்ட ராமஜன்ம பூமி எழுச்சி, வரலாற்று- அரசியல் பூச்சைக் கொண்டது. இந்த விஷயத்தில் ஆர்எஸ்எஸ் அதன் விளைவுகளை தீர ஆராய்ந்த பிறகே ஒரு உறுதியான முடிவை எடுத்தது.

இந்திரா காந்திக்கு எதிரான போராட்டமும், பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்த ராமஜன்ம பூமி போராட்டமும் ஆர்எஸ்எஸ் பற்றிய மதிப்பான பார்வையை ஏற்படுத்தின. அது பண்பாட்டு இயக்கமாக மட்டுமன்றி அரசியல் செல்வாக்குள்ள பெரிய சமூக அமைப்பாகப் பார்க்கப்பட்டது. மேற்கத்திய போலி மதச்சார்பின்மை பற்றிய கேள்வியை எழுப்பி, நேருவிய தேசியத்தில் இருந்து பண்பாட்டு தேசியம் என்ற கருத்தியல் நிலைக்கு இந்திய அரசியல் சூழ்நிலையை ஆர்எஸ்எஸ் மாற்றி அமைத்தது.

அமெரிக்கா போல இந்தியாவும் ஒரு ‘சரியான நாடு’; 120 ஆண்டுகளுக்கு முன்னர், ‘தர்ம பிராண பாரதம் - தர்மத்தை ஆன்மாவாகக் கொண்ட இந்தியா’ என்று சுவாமி விவேகானந்தர் தெளிவாகக் கூறினார். இது இந்தியாவின் அடிப்படையான தேசியப் பண்பு என்று காந்தியும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் நம்புகின்றனர்.

அடிப்படையில் ஆன்மிக பூமியான இதன்மீது, தேச விடுதலைக்குப் பிறகு, மேற்கத்திய சிந்தனைகளின் உத்வேகத்தால் மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்பு வெற்றி பெற முடியவில்லை. உளுத்துப்போன மேற்கத்திய சிந்தனைக் கட்டமைப்பு கடந்த நூற்றாண்டின் இறுதியில் சரிந்து விழுந்தது. இந்தியாவின் சாரமான பண்பாடு பொது வாழ்வின் எல்லாத் தளங்களிலும் எழுச்சி கொண்டது. ‘இந்து’ என்பது இன்று இழிச்சொல் இல்லை; ‘இந்து’ என்பது இனி வகுப்பு வாதமல்ல. உண்மையான இந்து யார்? ஆர்எஸ்எஸ் அமைப்பினரா, அவர்களைப் பழிப்பவர்களா என்பதுதான் இப்பொழுது விவாதப் பொருள். இந்த அடிப்படை மாற்றத்துக்கு காரணம் ஆர்எஸ்எஸ்-ஸே என்றால் மிகையல்ல.

இப்போது ஆர்எஸ்எஸ் தன் மௌனத்தைக் கலைத்து, எந்தக் குழப்பமும் இல்லாதபடி தெளிவாக சமூக- அரசியல் களத்தில் வெளிப்படையாக வந்துள்ளது. பொருளாதாரக் கொள்கைகள் முதல் எல்லைப் பிரச்னை வரையிலும், சூழலியல் முதல் ஒரு பாலுறவு விவகாரம் வரையிலும், அது எந்த விஷயத்தையும் தவிர்ப்பதில்லை.

பிரம்மாண்டமான அமைப்புச் செயல்பாடுகள், வெளிநாடுகளிலும் தொடர்பு, நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் ஆர்எஸ்எஸ் அமைப்பின் குரல் இப்போது நாடு முழுவதும் உரக்க எதிரொலிக்கிறது.

இந்த மாற்றத்தின் உடனடியான பெரும் பயனாளி பாஜக. அதனுடன் ஆர்எஸ்எஸ் தொப்புள்கொடி உறவு உண்டு என்பது மட்டுமன்றி, அதற்கு மனிதவள ஆதரவும் கொடுத்துள்ளது. பாஜக முன்னர் சங்பரிவாரின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டது. இப்போது அது ‘நீர்யானை’ போல பெரிதாக வளர்ந்து உள்ளது. இரண்டு அமைப்புகளும், உயர் மட்டத்தில் மதிப்புக்குரிய இடைவெளியைக் கடைபிடிக்கின்றன. ‘ஆலோசனை தருவோம், தலையிட மாட்டோம்’ என்ற வகையில் அது அமைந்துள்ளது.

ஜன சங்கத்துக்கு மனிதவளத்தைப் பகிரும்போது அதனுடன் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி குருஜி கோல்வல்கர் கூறுகையில், “ரயில் தண்டவாளங்கள் போல ஒன்றை ஒன்று தொடாது. ஆனால் மிக விலகியும் போய்விட முடியாது” என்று கூறியுள்ளார். சமூக- பண்பாடு என்பதன் மீது பரவக் கூடியதாக, ஆக்கிரமிக்கக் கூடியதாக சமூக- அரசியல் இன்று இருக்கிறது என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டதல்ல.

இந்தச் சிக்கலான சவாலைப் பற்றி ஆர்எஸ்எஸ் தலைமை உணர்ந்தே இருக்கிறது. அரசியல் சக்தியின் மீது தார்மீக அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் அதே வேளையில், நிஜ அரசியல் களத்தில் ஏற்படும் புயல்களைச் சந்தித்து தனது அரசியல் கரத்தை வெற்றிகரமாக நிலைநிறுத்த மறு உருவாக்கம் செய்யும் திறமையும் சாமர்த்தியமும் சங்கத் தலைமைக்குத் தேவைப்படுகிறது.

எதிர்காலச் சவால்கள்:

கோல்வல்கரின் சமூக- பண்பாட்டு நோக்கம் அநேகமாக நிறைவேறிவிட்டது. இந்தியாவின் மைய நீரோட்டத்தில் இடம்பிடித்துள்ள ஆர்எஸ்எஸ் அடுத்தகட்டமாக கட்டமைப்பில் சீர்திருத்தம் கொண்டு வருவதில் முனைந்துள்ளது. தீனதயாள் உபாத்யாயா இதுபற்றி தனது ‘ஒருங்கிணைந்த மானவ தரிசனத்தில்’ (ஏகாத்ம மானவ வாதம்) பேசியுள்ளார்.

இந்திய மனங்களில் பதிய வைக்கப்பட்ட, முறையற்ற மேற்கத்திய சிந்தனைகளையும் கருத்துக்களையும் நீக்கிவிடலாம். ஆனால் அவர்கள் விட்டுச்சென்ற அமைப்புகளும் வாரிசுகளும் அப்படியே இருக்கின்றன. அந்த அமைப்புகள் விசையுடன் வெளிப்படுத்தும் சக்திகள் - ஜாதிச் சண்டை, மதவாத அரசியல், மாநில- மொழி ஆதிக்கம், அந்நிய அரசு முன்மாதிரிகள், திறமையற்ற நிர்வாகக் கட்டமைப்பு - சவாலாக உள்ளன.

அவை இன்று உறங்குவது போலத் தெரிகிறது. ஆர்எஸ்எஸ் என்ற கருத்துக்கு அரசின் அதிகாரமும் பின்புலமும் இருப்பது அதற்குக் காரணமாக இருக்கலாம். அரசு அதிகாரம் குறைந்தாலோ அல்லது இல்லாமல் போனாலோ, அந்த தீய சக்திகள் மீண்டும் தலைதூக்கும்.

இந்திய அரசியல் சாசனம் என்ற பரந்த வரம்புக்குள், கல்வி, அரசு நிர்வாகம், நீதி பரிபாலனம், சமூக முறைமைகள் போன்றவற்றில் உயர்ந்த இந்தியப் பண்புகளை ஆர்எஸ்எஸ் ஏற்படுத்த வேண்டியுள்ளது. இந்த முயற்சிக்கு மிகப்பெரிய அளவில் பொதுமக்களின் ஆதரவும் பங்களிப்பும் தேவைப்படுகிறது.

இன்று மக்கள்தொகையில் பெரும்பான்மையினராக இருக்கும் இளைஞர்கள் ஒரு பக்கம் தேசியவாதிகளாக பெருமை கொள்கின்றனர். இன்னொரு பக்கம் உலகப் பிரஜைகளாக இருக்கின்றனர். வளமும் புதுமையும் அவர்களது மந்திரமாக உள்ளது.

அவர்களது எதிர்பார்ப்புகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் மைய விசையாக இருக்கக் கூடிய சக்தி படைத்தது ஆர்எஸ்எஸ் மட்டுமே. அதற்கு, அது தன்னுடைய தோற்றத்தையும் நோக்கத்தையும் சீரிய முறையில் மறுகட்டமைப்பு செய்ய வேண்டும்.


குறிப்பு:

 



சிந்தனையாளரும் எழுத்தாளருமான திரு. ராம் மாதவ், பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய பொதுச்செயலாளர்; தற்போது ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய செயற்குழுவில் உள்ளார். புது தில்லியில் ‘இந்தியா ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பை நிறுவி நடத்தி வருபவர்.
ஆங்கில இணையதளமான OPENஇல் அவர் எழுதிய 'The Sangh and Modernity' என்ற கட்டுரையின் தமிழ் வடிவம் இது…

தமிழில்: திருநின்றவூர் இரவிக்குமார்



No comments:

Post a Comment