16/11/2021

மகாகவி பாரதி- சில நினைவுகள்

-தஞ்சை வெ.கோபாலன்


(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 43)


இன்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வுலக வாழ்வை நீத்து அமரரானார் மகாகவி பாரதியார். இளமையின் உச்சத்தில் இன்னும் எவ்வளவோ அரிய கவிதைகளைக் கவி காளிதாசன் போல், கவியரசர் கம்பன் போல் அளிக்க வாய்ப்பிருந்த நிலையில் தன் முப்பத்தி ஒன்பதாம் அகவையில் அமரர் ஆனார் அவர். அவரது நினைவுகள் என்றென்றும் மக்கள் மனங்களில் கோலோச்சிக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

சொற்களைக் கோர்த்து பொழுதுபோக்காகக் கவிதைகள் புனைந்தவனில்லை மகாகவி. ஒவ்வொரு கவிதையின் பின்னாலும் ஒரு பெருங்கதை மறைந்து கொண்டிருப்பதைப் புரிந்து கொண்டு அந்தக் கவிதைகளைப் படிக்கும்போதுதான் அதன் சிறப்பினை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

புதுச்சேரியில் அந்தக் காலத்தில் புழக்கத்திலிருந்தது புஷ் வண்டி எனப்படும் பயண சாதனம். அதில் புதுவை உப்பளம் பகுதியைச் சேர்ந்த ஒரு புஷ்வண்டியோட்டி மகாகவிக்கு அடிக்கடி சவாரி வருவது வழக்கம். அப்படியொரு நாள் அந்த மனிதர் பாரதியிடம், “ஐயா நான் உப்பளம் பகுதியில் வசிக்கிறேன். தாங்கள் ஒருநாள் எங்கள் பகுதிக்கு வர வேண்டும். வந்து, அங்கு கோயில் கொண்டிருக்கும் முத்துமாரியம்மனைத் தரிசித்து அங்கு ஒரு பாட்டுப் பாட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான்.
 
இவனைப் போல உள்ளத்தில் உண்மை அன்பு கொண்ட ஏழைகள் யார் அழைத்தாலும் மறுக்காமல் போகும் குணமுடைய பாரதி, அவன் அழைப்பை ஏற்றுக்கொண்டார். மறுநாளே தன் இளைய மகள் சகுந்தலாவையும் அழைத்துக்கொண்டு அந்த புஷ்வண்டிக்காரனின் வண்டியிலேயே பயணம் செய்து உப்பளம் சென்றார்.

அங்கு தேசமுத்துமாரி எனும் பெயரால் ஒரு ஆலயம் இருந்தது. அந்த ஆலயத்தில் பூஜைகள் செய்து வந்தவன் ஒரு வள்ளுவ இளைஞன். அந்த இளைஞன் மாரியம்மனுக்கு முறைப்படி வழிபாடுகள் நடத்தி தீபாராதனை செய்து வைத்தபோது, அதனைக் கண்டு பரவசமடைந்த பாரதியார் அருகிலிருந்த தன் மகளிடம் “பாப்பா! அதோ பார், அந்த இளைஞன் அந்தணத் தொழிலை எத்தனை அழகாகச் செய்கிறான் பார்!” என்று சொல்லி வியந்து போனார்.

அவனுடைய அந்த ஈடுபாட்டைக் கண்டு அவனைத் தன் இல்லத்துக்கு அடிக்கடி வரவேண்டுமென்று கேட்டுக்கொண்டதோடு, அவனுக்கும் கனகலிங்கத்துக்கு பூணூல் அணிவித்ததைப் போன்றே பூணுல் அணிவித்தார். இவர் செய்யும் காரியத்தை அதிசயமாகப் பார்த்தவர்களிடம், அவன் செய்யும் அந்தணத் தொழிலுக்கு இது தேவை என்றார் பாரதி.

அந்த ஒருநாள் உப்பளம் விஜயம் அந்தப் பகுதி மக்களிடையே ஒரு எழுச்சியை ஏற்படுத்திவிட்டது. பாரதி தங்கள் ஆலயத்துக்கு வந்ததைப் பலரும் அறியவில்லை என்பதால் அதே புஷ் வண்டிக்காரன் பாரதியை மீண்டும் ஒருமுறை தங்கள் ஆலயத்துக்கு வரவேண்டுமென்றும், அந்தப் பகுதி மக்கள் அவர் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

அவன் வேண்டுகோளை ஏற்று பாரதி மீண்டும் மறுநாளே உப்பளம் சென்றார். அங்கு வாழுகின்ற மக்கள் தங்கள் வீதிகளை சுத்தம் செய்து தண்ணீர் தெளித்து கோலமிட்டு, தோரணங்கள் கட்டி அவர்களும் தலை முழுகி ஈரத் தலையுடன் இவரை வரவேற்றனர். ஆலயத்தில் வழிபாடு முடிந்ததும் பாரதியை ஒரு பாட்டுப் பாடவேண்டுமென்று கேட்க, அவரும் சிறிது நேரம் கண்களை மூடிக்கொண்டிருந்து விட்டு “உலகத்து நாயகியே எங்கள் முத்து மாரியம்மா” எனும் பாடலையும் “தேடியுனைச் சரணடைந்தேன் தேசமுத்து மாரி” எனும் பாடலையும் உரத்த குரலில் பாடினார். உடனே அருகிலிருந்த அந்தப் பகுதி ஆண்கள் தாரை தப்பட்டை ஒலியோடு தாளமிட்டுக் கொண்டு ஆடத் துவங்க, பாரதியும் ஆடிக்கொண்டே அந்தப் பாடலைப் பாடி முடிக்கிறார்.

தன்னை மறந்து தேசமுத்து மாரி மீது பாடிய அந்தப் பாடலின் இந்தப் பின்னணியைத் தெரிந்து பாடினால்தான் அதே உணர்வு நமக்கும் ஏற்படும்.

உப்பளம் சென்று வீடு திரும்பும்போது தந்தையும் மகளும் ஈஸ்வரன் தர்மராஜா கோயிலினுள் நுழைகின்றனர். அங்கிருந்த சிலைகளையெல்லாம் காட்டி, ‘இவர் யார், இது என்ன?’ என்று பாப்பா எனும் சகுந்தலா கேள்வி கேட்டுக் கொண்டு வருகிறாள். அது தருமன், இது பீமன், இது அர்ஜுனன் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு வந்த பாரதி, திரெளபதியின் உருவச்சிலையைக் காட்டி இவர் யார் என்று கேட்டதும் மெளனமாகிவிட்டார். மகளும் தந்தையின் மனநிலையைப் புரிந்து கொண்டு மவுனமாக வீடு திரும்பிவிட்டனர். வீடு திரும்பிய பாரதி யாருடன் பேசாமல் அங்கும் இங்குமாக நடந்து நிறைவில் காலைத் தரையில் உதைத்துக் கொண்டு தன் கவிதை வரிகளை உதிர்க்கத் தொடங்கினார். அப்போது பிறந்ததுதான் அழியாக் காவியமான ‘பாஞ்சாலி சபதம்’.

மற்றுமொரு சிறிய பாடல், ‘அம்மாக்கண்ணு பாட்டு’. அதில் “பூட்டைத் திறப்பதுங் கையாலே, நல்ல மனந் திறப்பது மதியாலே, பாட்டைத் திறப்பது பண்ணாலே, இன்ப வீட்டைத் திறப்பது பெண்ணாலே” எனும் வரிகளுடன் தொடங்கும். அந்தப் பாடல் தோன்றிய விதம் என்ன தெரியுமா?

ஒரு சமயம் செல்லம்மாவும் சகுந்தலாவும் கடையத்துக்குப் போயிருந்தார்கள். பாரதி புதுவையில் தன் இல்லத்தின் வாயிலை ஒரு பூட்டைப் போட்டுப் பூட்டிவிட்டு எங்கோ வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது தான் வைத்திருந்த பூட்டின் சாவி இல்லாதது கண்டு திகைத்துப் போனார். எங்கெல்லாமோ தேடி அலுத்துப்போய் நின்று கொண்டிருந்த சமயம் வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த (சம்பளம் எதையும் எதிர்பார்க்காமல் அன்புக்காகப் பணியாற்றிக்கொண்டிருந்த மூதாட்டி அவர்) அம்மாக்கண்ணு எனும் பெண்மணி தற்செயலாக அந்தப் பக்கம் வந்தவர், பாரதியார் பூட்டைத் திறக்க சிரமப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து, அவரை நகர்ந்து கொள்ளச் சொல்லிவிட்டு தானே கையால் அசைத்து அந்தப் பூட்டைத் திறந்து விட்டாள். இதைக் கண்டு மகிழ்ந்து போய் பாரதி அந்த அம்மாக்கண்ணுவின் பெயரால் இந்தப் பாட்டைப் பாடினாராம்.

புதுவை வாசத்தின்போது பாரதியார் குவளைக்கண்ணன் போன்ற நண்பர்களுடன் வெல்லச்சுச் செட்டியார் என்று அழைக்கப்பட்ட பாரதியாரின் நண்பருடைய மாந்தோப்புக்குச் சென்று அங்குள்ள மடு ஒன்றில் குளித்துவிட்டு வருவார். அங்கு சென்று குளிப்பதற்காக குவளை பாரதியைப் போய் அழைத்து வருவது வழக்கம். ஒரு நாள் பாரதியே சீக்கிரமாக எழுந்து வந்து குவளையின் வீட்டுக்கு வந்து அவரை அழைக்கிறார். அப்போது குவளையின் தாயார் பாரதியாரிடம், “அப்பா! பாரதி நீதான் பாட்டெல்லாம் நன்றாகப் பாடுவாயாமே! ஒரு சுப்ரபாதம் பாடேன்” என்கிறாள். ஆகா! அதற்கென்ன பாடினால் போச்சு என்று சொல்லிவிட்டு நண்பர்களுடன் மடுவில் பாரதி குளிக்கச் சென்று விடுகிறார். போகும் வழியில் சுப்ரபாதம் என்றால் இறைவனை எழுப்பப் பாடப்படும் திருப்பள்ளி எழுச்சி என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, குளித்துவிட்டு வரும் வழியில் உரத்த குரலில் பாரத நாட்டையே தெய்வமாக வைத்து ‘பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி’ என்று இப்போது நமக்கெல்லாம் அறிமுகமாகியிருக்கும் பாடலான “பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்” எனும் பாடலைப் பாடிக்கொண்டு ஆடிக்கொண்டும் வந்தாராம். இதனை பாரதிதாசன் நன் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

மகாகவி பாரதியாரின் நாவில் கலைமகள் குடிகொண்டிருந்தார் என்பது உண்மையான சத்திய வாக்கு. பொய்யே பேசாதவர், அவர் சொல்லும் வாக்கு ஒவ்வொன்றும் அருள் வாக்கு என்பதை பல நேரங்களில் அவர் நிரூபித்திருக்கிறார்.

பாரதி புதுவையில் குடியிருந்த ஈஸ்வரன் தர்மராஜா கோயில் தெருவில் அடுத்த வீட்டில் வசித்தவர் செல்வந்தர் பொன்னு முருகேசம் பிள்ளை. பாரதியார் குடும்பத்தின் தேவையறிந்து அவ்வப்போது பல உதவிகளைச் செய்து வந்தவர்கள் பிள்ளையும் அவரது மனைவியும்.

யாரும் வந்து உதவி செய்கிறேன் என்று சொல்லி செய்தால் அதை சுயமரியாதை காரணமாக பாரதி நிராகரித்து விடுவது வழக்கம். அவருக்கு உதவி செய்ய விரும்புகிறவர்கள் அவர் அறியாமல் அந்த உதவிப் பொருட்களை அவர் வீட்டில் வைத்துவிட்டுச் சென்றுவிட வேண்டும். நெசவுத் தொழில் செய்துவந்த அவருடைய நண்பரும், பாரதி குயில் பாட்டைப் பாடிய மாந்தோப்புக்குச் சொந்தக்காரரும், பாரதியால் வெல்லச்சுச் செட்டியார் என்று அன்போடு அழைக்கப்பட்ட நண்பர்கூட பாரதிக்குப் பண உதவி செய்யும்போது அவர் அறியாமல் பணத்தை அவர் வீட்டில் வைத்துவிட்டு வந்து விடும் வழக்கமுடையவர். பாரதியார் வீட்டில் சமையலுக்கு அரிசியோ, காய்கறிகளோ ஒரு பையில் போட்டு ஒருவரும் அறியாமல் அவர் வீட்டு சமையல் அறையில் வைத்து விடுவாராம் பொன்னு முருகேசம்பிள்ளையின் மனைவி.

அப்படிப்பட்டவரின் மகன் ராஜாபாதர் என்பவர் படிப்பதற்காக பிரான்சு நாட்டிற்குச் சென்றார். அப்போது முதல் உலக யுத்தம் முடியும் தறுவாயில் இருந்தது. வெகுகாலம் ஆகிவிட்டபடியால் தன் மகனைப் பார்க்க தந்தை முருகேசம் பிள்ளையின் மனம் துடித்துக் கொண்டிருந்தது. மகனுடைய பிரிவு அவரை மிகவும் துன்புறுத்தியது. அப்போது ராஜாபாதர் ஊர் திரும்புவதாக ஒரு செய்தி வந்தது, தந்தைக்கு அளவிடமுடியாத மகிழ்ச்சி. தொடர்ந்து சில நாட்களுக்குள் ராஜாபாதர் பயணம் செய்த கப்பல் நடுக்கடலில் உடைந்துவிட்டது என்ற செய்தி இடிபோல வந்து பிள்ளையைத் தாக்கியது. மனம் பேதலித்த பொன்னு முருகேசம் பிள்ளை நடமாட்டம் இல்லாமல் படுத்த படுக்கையாக தன் மகன் நினைவோடு கிடந்தார். பலரும் பல விதங்களில் அவரைத் தேற்ற முயன்றும் ஒன்றும் பயனளிக்கவில்லை. மகன் பயணம் செய்த கப்பல் கடலில் மூழ்கவில்லை என்றொரு பொய்த் தந்தியைத் தயார் செய்து கொண்டு வந்து காட்டியும் பார்த்துவிட்டனர். ஒன்றுக்கும் அவர் மனம் தேறவில்லை. கடைசியில் பாரதியார் வந்து சொல்லட்டும் நான் நம்புகிறேன் என்றார் பொன்னு முருகேசம் பிள்ளை.

அவர் உடல்நலம் தேறவேண்டுமென்கிற நல்ல எண்ணத்தில் சுற்றத்தார் பாரதியாரிடம் வந்து ராஜாபாதருக்கு ஒரு கெடுதலும் நேரவில்லை என்று பிள்ளையிடம் சொல்லுமாறு வேண்டிக் கொண்டனர். செய்வதறியாது திகைத்த பாரதி எப்படி இப்படியொரு பொய்யைச் சொல்லி ஒரு நல்ல மனிதரை ஏமாற்றுவது என்று தயங்கினார். இதுபோன்ற இக்கட்டான சந்தர்ப்பங்களில் பொய் சொல்வது தவறில்லை; மகாபாரதத்தில்கூட தர்மரை ‘அஸ்வத்தாமன்’ இறந்து விட்டதாகப் பொய் சொல்லச் சொன்னபோது தயக்கத்துடன் அவர் ‘அஸ்வத்தாமா ஹத: குஞ்சர:’ (அஸ்வத்தாமன் எனும் யானை இறந்தது) என்று குஞ்சர: எனும் சொல்லை மெல்லச் சொல்லிவிடவில்லையா. ஆகவே முருகேசம் பிள்ளையின் உயிரைக் காக்கவேண்டுமானால் அப்படியொரு பொய்யைச் சொல்வதில் தவறில்லை என்று கருதி, அவரிடம் சென்று “ஐயா! கப்பலே கவிழ்ந்தாலும் பராசக்தியருளால் நம் ராஜாபாதருக்கு ஒரு கெடுதலும் நேராது. அதற்கு நான் ஜவாப்தாரி” என்று ஆறுதல் கூறினாராம். எனினும் மனத் துன்பம் காரணமாக பிள்ளை ஓரிரு நாட்களில் உயிர் துறந்து விட்டார்.

அப்படியானால் கவியின் வாக்கு பொய்த்து விட்டதா? இல்லை, கப்பல் உடைந்த போதும் ராஜாபாதர் உயிர் பிழைத்து புதுவைக்கு வந்து சேர்ந்தார். மகாகவி சொன்ன வாக்கு “ஐயா! நாம் ஜவாப்தாரி; பராசக்தி காப்பாற்றுவாள்” என்று அவர் சொன்னதை பராசக்தி நிறைவேற்றி விட்டாள். இந்த அதிசயத்தைச் சொல்லிச்சொல்லி அனைவரும் மகிழ்ந்து போனார்கள்.

மற்றுமொரு தெய்வீக அனுபவத்தை பாரதியாரின் மகள் சகுந்தலா பாரதி சொல்லுகிறார். புதுச்சேரியில் அவர்கள் குடியிருந்த வீடு விளக்கெண்ணெய் செட்டியார் என்று பாரதியாரால் பெயரிடப்பட்ட ஒருவரின் பழைய இல்லம். இன்றோ நாளையோ இடிந்து தலையில் விழக்கூடிய நிலையில் இருந்தது அந்த வீடு. முழுவதும் இடித்துவிட்டுக் கட்டினாலொழிய அந்த வீட்டில் வாழ்வது என்பது முடியாத நிலை. அதற்கு நேர் எதிரில் கெட்டியான ஒரு மச்சுவீடு. அந்த வீட்டுக்கு ஒரு போலீஸ் அதிகாரி குடிவருவதாகத் தகவல் இருந்தது.

பாரதியாரை வேவு பார்க்க ஏராளமான போலீஸார் சுற்றிக் கொண்டிருக்கும் நேரத்தில் நேரெதிர் வீட்டுக்கு ஒரு போலீஸ் அதிகாரி குடிவருவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அவர் குடிவருவதைத் தடுக்க வேண்டுமானால் இவர்கள் அந்த வீட்டுக்குக் குடி போக வேண்டும், அந்தப் போலீஸ் அதிகாரி இந்த பழைய வீட்டுக்குக் குடி வரமாட்டார். வேறு வழியில்லை அந்த மச்சுவீட்டுக்கு பன்னிரெண்டு ரூபாய் வாடகை என்றபோதும், அது அதிகம் தான் என்றாலும் அங்கு குடி போனார்கள்.

அது கார்த்திகை மாதம். இவர்கள் புதிய வீட்டுக்குக் குடிபோன மறுநாள் இரவு கடுமையான மழை, அதனைத் தொடர்ந்து பேய்க்காற்று வீசத் தொடங்கியது. ஆம்! புயல்காற்று தொடங்கிவிட்டது. பாரதியாரின் இரண்டு பெண் குழந்தைகளும் ஓர் அறையில் படுத்துவிட்டனர். பாரதியும் செல்லம்மாவும் விடிய விடிய கண்விழித்து இறைவனைப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். நடு இரவில் சுற்றுப் புறங்களில் மரங்கள் ‘மடேர் மடேர்’என்று ஒடிந்து விழும் ஓசை. ஓசைகேட்டு எழுந்த சகுந்தலாவை பாரதியார் ஆறுதல் சொல்லி “காற்றும் மழையும் பெரிதாக இருக்கிறது பாப்பா, பயப்படாதே” என்று ஆறுதல் சொன்னார். விடியற்காலையில் மகளை அழைத்துக் கொண்டு பாரதி வெளியே வந்தார். அப்போது வாயுதேவனின் விளையாட்டைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். சாலை மரங்களெல்லாம் வேரோடு பெயர்ந்து விழுந்து கிடந்தன. ஏராளமான காக்கைகளும் ஏனைய பறவையினங்களும் கூட்டம் கூட்டமாக இறந்து கிடந்தன. தந்தி மரங்கள் அறுந்து விழுந்து கிடந்தன. வரிசையாக தென்னை மரங்கள் அனைத்துமே வீழ்ந்து கிடந்தன. அப்போது பாரதி பாடிய பாடல்தான்: ”காற்றடிக்குது கடல் குமுறுது கண்ணை விழிப்பாய் நாயகனே!” எனத் தொடங்கும் பாடல்.

அதில் வரும் சில வரிகள் அவருடைய அனுபவத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்தது. அது, “நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே, இந்த நேரமிருந்தால் என்படுவோம்? காற்றென வந்தது கூற்றமிங்கே, நம்மைக் காத்தது தெய்வ வலிமையன்றோ” என்ற பாடல்.

நிறைவாக வங்கத்தில் தோன்றிய ‘வந்தேமாதரம் எனும் சொல் தமிழகத்தில் வ.உ.சி., சுப்பிரமனிய சிவா, பாரதி ஆகியோரால் முழங்கப்பட்டு அந்த முழக்கங்களே முதல் இருவரையும் சிறையில் அடைத்ததையும் வரலாறு சொல்லுகிறது. அந்த வந்தேமாதரம் எனும் மந்திரச்சொல்லை நாம் சொல்ல வேண்டிய, இல்லை இல்லை முழங்க வேண்டியதன் அவசியத்தை பாரதி ஒரு கவிதையில் சொல்லுகிறார்.

இந்த பாரத புண்ணிய பூமி பழம்பெரும் பூமி; நாமதன் மக்கள் இந்நினைவகற்றாதீர் என்று மக்களுக்கு உரைத்தவர் பாரதி. அந்த பாரத பூமியின் மண் எத்தகையது தெரியுமா? இந்த புனிதமான மண்ணில்தான் நம் தந்தையும் தாயும், அவர்களது முன்னோர்களும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்தனர். அந்தப் புனித மண்ணில் அவர்கள் சிறு பிள்ளைகளாக ஓடியாடி விளையாடியதையும், அறிவிலே தேர்ச்சி பெற்று வளர்ந்து நின்றதையும், திருமணமாகி இன்புற்று வாழ்ந்ததையும், பின்னர் முதுமையடைந்து மாண்டுபோன பின்பு இதே மண்ணில் அவர்கள் பூந்துகளாக மாறி மண்ணோடு மண்ணாகக் கலந்து கிடப்பதையும், அத்தகைய புனிதமான மண்ணை சிந்தையில் இருத்தி வந்தனை கூறி வாயுற வாழ்த்தேனோ, இதை “வந்தேமாதரம், வந்தேமாதரம்” என்று வணங்கேனோ என்கிறார்.

உலகிலே கர்மபூமி எனப் புகழ்பெற்று புனித நதிகளால் வளமூட்டி, வானுயர்ந்த மலைகளும், காடுகளும், வனங்களும், நதி தீரங்களும், புண்ணியத் தலங்களும் சூழ்ந்து கிடக்கும் இந்த புண்ணிய நாட்டை வணங்குவோம் என்று உரக்கக் குரல் கொடுத்த அந்த மகாகவியை இந்த நினைவு நூற்றண்டில் வணங்கி அவன் வழி நடப்போம்.

வந்தேமாதரம்!
 
குறிப்பு: 

இக்கட்டுரை, பாரதி பயிலகம் வலைப்பூ’ என்ற தனது தளத்தில் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்கள் 2015-இல் எழுதியது; சிறு திருத்தங்களுடன் இங்கு மீள்பதிவாகிறது.

காண்க: தஞ்சை வெ.கோபாலன்

No comments:

Post a Comment