16/11/2021

வடபுலத்தில் ஒரு புறநானூற்றுப் பேரரசி

-வி.சண்முகநாதன்

ஜான்சி ராணி லட்சுமிபாய்
(பிறப்பு: 1828  
நவ.19 –  பலிதானம்: 1858 ஜூன் 18

    தமிழகத்தில் ராணி வேலு நாச்சியார் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடியவர். அவர் இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார். அவரைப்போலவே வீரம் செறிந்த பெண் ஒருவர் நமது நாட்டின் வடதிசையில் தோன்றினாள். அந்த வீரம் செறிந்த பெண், நமது புறநானூற்றுப் புலவர் காவற்பெண்டு பாடியதைப்போலவே காணப்பட்டார்.

சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன்
யாண்டுளனோ? என வினவுதி, என் மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும்
புலி சேர்ந்து போகிய கல்அளை போல,
ஈன்ற வயிறோ இதுவே;
தோன்றுவன் மாதோ! போர்க்களத் தானே!

(புறம் – 86)

(பொருள்: என் வீட்டில் உள்ள நல்ல தூணைப் பற்றிக்கொண்டு நின்று “உன் மகன் எங்கு இருக்கிறான்?” என வினவுகிறாய். அவன் எங்கு இருக்கிறானோ எனக்குத் தெரியாது. புலி வெளியேறியுள்ள கல்குகை போல அவனைப் பெற்றெடுத்த வயிறு இதுவே. அவன் போர்க்களத்தில்தான் இருப்பான். அங்கே சென்று அவனைக் காண்பாயாக!)
 
இன்றைக்குச் சரியாக 192 ஆண்டுகளுக்கு முன்பு, 1828ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் நாள் வாரணாசியில் மோரோபந்த் தம்பே- பகீரதி பாய் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார் லட்சுமிபாய். இவர்தான் பின்னாளில் வாளெடுத்து பிரிட்டிஷாரை எதிர்த்து தைரியமாகப் போர்தொடுத்து வீரமங்கை ஜான்சி ராணியாக வருவாள் என்று பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் மணிகர்ணிகா.

மணிகர்ணிகாவின் தந்தையாகிய மோரோபந்த் தம்பே, கங்கைநதிக் கரையில் அமைந்துள்ள பித்தூரிலுள்ள பேஷ்வா நீதிமன்றத்தில் வேலை செய்தார். சிறு வயதிலேயே மணிகர்ணிகா கல்வியில் சிறந்து விளங்கினார்; வீர விளையாட்டுகளில் பங்கேற்றார். அதனால் பித்தூரின் பேஷ்வா சந்தோஷப்பட்டு மணிகர்ணிகாவைத் தன் சொந்த மகள் போல வளர்த்தார். மணிகர்ணிகா தன் சிறுவயதில் வீரத்துடன் குதிரையேற்றமும், வாள் வீச்சும் கற்றுக்கொண்டார்.

இவரது தந்தை, மணிகர்ணிகாவுக்குத் திருமணம் செய்து முடிக்க தக்க வயதில் ஒரு மாப்பிள்ளையைத் தேடினார். ஜான்சியை ஆண்ட ராஜா கங்காதர ராவ் நெவல்கருக்கு 1842ஆம் ஆண்டு மணிகர்ணிகாவை திருமணம் செய்து வைத்தார். அன்றுமுதல் மணிகர்ணிகா ராணி லட்சுமிபாய் என்று அழைக்கப்பட்டதுடன் ஜான்சியின் ராணியாகவும் போற்றப்பட்டார்.

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகு. 

 (குறள் – 774)

என்ற குறள்படி திருமணம் புரிந்தார்.

அதாவது கையில் இருந்த வேலை ஒரு யானையின்மேல் எறிந்து துரத்திவிட்டு, வருகின்ற வேறு யானையைத் தாக்க தன் மார்பில் தைத்திருந்த எதிரியின் வேலைக் கண்டு பறித்துச் சிரித்து எய்பவன் வீரன். அவ்வாறு தாய்மண்ணின் தன்மானம் காக்க வேண்டும் என்ற மனநிலையோடு மணம் புரிந்தாள்.

1851-இல் அவர்களுக்குப் பிறந்த மகனான தாமோதர் ராவ் நான்கு மாதக் குழந்தையாக இருந்தபோது இறந்து போனார். அதன் பிறகு ராஜா கங்காதர ராவ் நெவல்கரும் ராணி இலட்சுமிபாயும் ஆனந்த் ராவைத் தத்தெடுத்து ‘தாமோதர் ராவ்’ என்று பெயரிட்டனர். ராஜா கங்காதராவ் 1853ஆம் ஆண்டு நவம்பர் 21-இல் உடல்நலம் குன்றி இறந்துவிட்டார். அதன் பிறகு வளர்ப்பு மகன் தாமோதர் ராவை ஆட்சியில் அமர்த்த எண்ணினார் ஜான்சி ராணி. ஆனால் அன்றைய ஆங்கிலேய ஆதிக்க அரசு அதை அனுமதிக்கத் தயாராக இல்லை.

1848ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆளுநராக இருந்த டல்ஹெளசி பிரபுவால் கொண்டுவரப்பட்ட புதிய கொள்கையான ‘வாரிசு இழப்புக் கொள்கை’யைப் பயன்படுத்தி, வாரிசு இல்லாத அரசுகள் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் இணைக்கப்படும் என்று ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி அரசு அறிவித்திருந்தது.

இக்கொள்கையின்படி மராட்டிய சிவாஜி வம்சத்தவரால் ஆளப்பட்ட சதாரா என்ற அரசு முதல் பலியாகி பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் இணைக்கப்பட்டது. அதன்பின் நாக்பூர், சம்பல்பூர், ஜெய்ப்பூர், உதய்பூர், ஜான்சி போன்ற ராஜ்ஜியங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் இணைக்கப்பட்டன. 1854ஆம் ஆண்டு, மார்ச் மாதம், ஆங்கிலேயர்கள் ரூ. 60,000யை ராணி லட்சுமிபாய்க்கு ஓய்வூதியமாகக் கொடுத்து ஜான்சி கோட்டையை விட்டு வெளியேறச் சொன்னார்கள்.

1857ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி சிப்பாய் கலகம் என்று ஆங்கிலேய வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படும் சுதந்திர உரிமைப் போர், மீரட்டில் ஆரம்பமாகியது. போர் வீரர்களுக்குப் புதிதாக வழங்கப்பட்ட துப்பாக்கி குண்டுகளில் பசுவின் கொழுப்பும், பன்றியின் கொழுப்பும் தடவப்பட்டதால் போர்வீரர்களுக்கிடையே கிளர்ச்சி பரவத் தொடங்கியது. அனைத்து இந்தியர்களும் ஒன்று சேர்ந்து ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டதால் இந்நிகழ்வை ‘முதல் இந்திய சுதந்திரப் போர்’ என்று சுதந்திரப் போராட்டத் தியாகி வீர சாவர்க்கர் தனது ‘எரிமலை: இந்திய சுதந்திரப் போராட்டம் 1857’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இச்சந்தர்ப்பத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியக் கிளர்ச்சியில் கவனம் செலுத்தியதால் ஜான்சி மீது அதிகக் கவனம் செலுத்தவில்லை. எனவே, ராணி இலட்சுமிபாய் எந்த இடையூறுமின்றி சுதந்திரமாக ஜான்சியை ஆட்சி செய்துவந்தார்.

வடமத்திய இந்தியாவில் ஜான்சி அமைதியான நாடாக இருந்தமையைக் காட்டுவதற்காகவும், எந்தவிதமான முற்றுகை அபாயத்தையும் எதிர்கொள்ளவில்லை என்பதனைத் தெளிவுப்படுத்துவதற்காகவும், கணவர் நீண்ட ஆயுளுடன் இருக்க மஞ்சள் மற்றும் குங்குமத்தினை பரிமாறிக்கொள்ளும் பண்டிகையான ஹல்திகுங்குமப் பண்டிகை ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டாடப்பட்டது.

ஆனாலும் ராணி இலட்சுமிபாய் தங்களை எதிர்க்கக் கூடும் என்ற அச்சம் ஆங்கிலேயர்களிடம் இருக்கவே செய்தது. அந்தக் கருத்து எவ்வாறு, எப்படி உருவாகும் என்பதை, புறநானூற்றுப் புலவர் கருங்குழல் ஆதனார் பின்வருமாறு பாடுகிறார்:

களிறு கடைஇய தாள்,
கழல் உரீஇய திருந்து அடிக்,
கணை பொருது கவிவண் கையால்,
கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து,
மாமறுத்த மலர் மார்பின்,
தோல் பெயரிய எறுழ் முன்பின்,
எல்லையும் இரவும் எண்ணாய்!

(புறம் – 7)

(பொருள்: நின்னுடைய யானையை உதைத்துச் செலுத்தும் பாதங்களில் வீரக்கழல்கள் ஒலிக்கும். அம்புகளைச் செலுத்தும் கலை வேலைப்பாடு அமைந்துள்ள வில்லையேந்திய தோளும் மார்பும் யானையை தாக்கும் வலிமையுடையன. பகைவரை அளிப்பது பற்றியே இரவும், பகலும் நீ எண்ணிக் கொண்டிருப்பாய்.)

அவ்வாறு ஆங்கிலேயர்கள் அச்சப்பட்டனர்; பழி சுமத்தத் திட்டம் தீட்டினர். 1857ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8ஆம் தேதி, ஜோகன்பாக்கில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தின் அதிகாரிகளைப் படுகொலை செய்ததில் ராணி லட்சுமிபாய்க்கும் பங்கு உள்ளதாகப் பொய் செய்தியைப் பரப்பினர். பொதுமக்களும், விவசாயிகளும் ராணி லட்சுமிபாய் மீது வைத்திருந்த மதிப்பைச் சீர்குலைக்கவே இவ்வாறு கூறினர். இதனையே காரணமாக வைத்து, 1858ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி சர் ஹியூ ரோஸ் தலைமையில் ஆங்கிலேயர்களின் படை ஒன்று ஜான்சியைக் கைப்பற்றுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

ஜான்சியின் படைகளுக்கு உதவி செய்வதற்காக தாந்தியா தோபே 20,000 பேரைக் கொண்ட படையை அனுப்பினார். அப்படையின் ஆயுதங்களை மார்ச் 31ஆம் தேதி ஆங்கிலேயப் படைகள் கைப்பற்றினர். தாந்தியா தோபேயும் கான்பூர் மன்னரும் வரும் வழியில் தங்களது ஆயுத வண்டிக்காக காத்திருந்த சமயம், ஆயிரம் பேர் கொண்ட சர் ஹியூ ரோஸ் தலைமையிலான குதிரைப்படை என்ஃபீல்ட் ரக துப்பாக்கிகளின் உதவியோடு அவர்களைத் தாக்கி 1500 இந்திய வீரர்களை மரணமடையச் செய்தது. பின்னால் வந்த தாந்தியா தோபேயின் ஆயுத வண்டியும் கொள்ளையடிக்கப்பட்டு பாதுகாவலர்களும் கொல்லப்பட்டனர்.

ஜான்சி ராணிக்கு உதவுவதற்காகக் கொண்டு வரப்பட்ட ஆயுதங்கள் அவருக்கே எதிராக ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்டன. ஆனாலும் ஜான்சி ராணி பிரிட்டிஷாருக்கு அடிபணிய மறுத்துத் தனது படைகளுடன் இணைந்து கடுமையாகப் போர் புரிந்தார். தனது மகனை முதுகில் சுமந்து, குதிரைமீது ஏறி, உக்கிரமாக ஆவேசத்துடன் போர்ர்களம் புகுந்தார்.

புறநானூற்றுப் புலவர் ஒக்கூர் மாசாத்தியார் பின்வருமாறு பாடினார்:

கெடுக சிந்தை; கடிதுஇவள் துணிவே;
மூதின் மகளிர் ஆதல் தகுமே;
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை,
யானை எறிந்து, களத்துஒழிந் தனனே;
நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன்,
பெருநிரை விலக்கி, ஆண்டுப்பட் டனனே;
இன்றும் செருப்பறை கேட்டு, விருப்புற்று மயங்கி,
வேல்கைக் கொடுத்து, வெளிதுவிரித்து உடீஇப்,
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி,
ஒருமகன் அல்லது இல்லோள்,
செருமுக நோக்கிச் செல்க என விடுமே!

(புறம் : 279)

(பொருள்: முன்னர் நடந்த போரில் இவள் தந்தை போர்க்களம் சென்று பகைவரின் யானையை வீழ்த்தித் தானும் மடிந்தான். நேற்று நடந்த போரில் இவள் கணவன் திரளான ஆநிரைகளைக் காத்து அப்போரில் இறந்தான். இன்றைய நாளிலும் போர்ப்பறை கேட்டுத் தன்னுடைய குலத்தினரும் போர் செய்ய வேண்டும் என்னும் விருப்பம் கொண்டவளாய், அறிவு மயங்கித் தனக்கு ஒருவனே அன்றி வேறு மகன் இல்லாத நிலையில் அவன் மிகவும் சிறியவன் ஆதலால் தலைக்கு எண்ணெய் தடவி வாரியும், வெண்மையான ஆடையை உடுக்கச் செய்தும், கையில் வேலைக் கொடுத்துப் போர்க்களம் நோக்கிச் செல்க என ஏவினாள்.)

தமது நாட்டை விட்டுக்கொடுக்க மறுத்த ஜான்சி ராணி லட்சுமிபாய், தமது படை வீரர்களை முன்னின்று வழி நடத்திச் சென்று பெரும் ஆற்றலுடனும் மிகுந்த துணிச்சலுடனும் போர் புரிந்தார். எனினும் மூன்று நாட்களுக்குப் பின்னர், ஆங்கிலேயர்கள் அத்துமீறி நுழைந்து ஜான்சி நகரத்தைக் கைப்பற்றினர். நாட்டின் ஆயிரக்கணக்கான வீரர்களுடன் மாவீரன் குதாபஷ்,பீரங்கிப் படைத் தளபதி கெளசல்கான் ஆகியோரும் மரணமடைந்தனர்.

சமநிலை இழந்து ஆத்திரப்பட்ட பிரிட்டிஷார் அரண்மனையைச் சூறையாடிப் பொருட்களைக் கொள்ளையடித்தனர். ஆங்கிலக் கொள்ளையர்கள் நகர வீடுகளில் புகுந்து மாணிக்க மணிகளையும், பொன்னையும், பொருளையும் பல இடங்களில் பெண்களையும் சூறையாடி தங்களது வெற்றியைக் கொண்டாடினர்.

1858ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி இரவு நேரத்தில் தனது தத்துக் குழந்தையுடன், தன்னுடைய குதிரையான பாகல்மீது ஏறி மதில் சுவரைத் தாண்டி தப்பினார். அதிகமான பெண்கள் தன் பின்தொடர்ந்துவர ஜான்சி ராணி நகரத்தை விட்டு நீங்கினார்.

ஆங்கிலேயர் ஜான்சியைவிட்டு வெளியேறச் சொல்லிப் பிறப்பித்த ஆணை ஜான்சி ராணியை எழுச்சியுறச் செய்தது. தனது நிலையை வலுப்படுத்தத் தொடங்கினார் லட்சுமிபாய். அதில் வீரம் மிக்க பெண்கள் படையும் இடம் பெற்றது. அண்டை நாடுகளான ஒரிஸா மற்றும் டாட்யா (ராஜஸ்தான் – ஜோத்பூர் மாவட்டம்) மீது படையெடுத்து, அந்நாட்டு வீரர்களைச் சேர்த்துக்கொண்டு ஆங்கிலேயர்களை எதிர்த்தார். தமது படை வீரர்களை முன்னின்று வழி நடத்திச் சென்று பெரும் ஆற்றலுடனும், மிகுந்த தைரியத்துடனும் ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் புரிந்தார்.

ஜான்சி ராணி லட்சுமிபாய், தாமோதர் ராவுடனும் தமது படைகளுடனும் கல்பிக்குச் சென்று, தாந்தியா தோபேயின் படையுடனும் ராவ்சாஹிப் பேஷ்வாவின் படையுடனும் ஏனைய புரட்சிப் படைகளுடனும் இணைந்து கொண்டார். இவர்கள் குவாலியருக்குச் சென்று குவாலியரின் மகாராஜா ஜியாஜி ராவ் சிந்தியா’வின் படையை தோற்கடித்து, குவாலியரின் கோட்டையொன்றைக் கைப்பற்றிக் கொண்டார்கள். வெள்ளையரின் படை குவாலியரைக் கைப்பற்ற முகாமிட்டது.

1858ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி, கோட்டா கி சராய் என்ற இடத்தில் வெள்ளையரை எதிர்த்து ஜான்சி ராணி போரிட்டார். அப்பொழுது எதிரிகளின் வியூகத்தைப் பிளந்துகொண்டு புரட்சிப்படை முன்னேறலாயிற்று. எதிரிகளின் பீரங்கிப்படை அதைத் தடுத்தது. ஜான்சி அமர்ந்து சென்று போர் செய்த குதிரை குவாலியர் படையைச் சேர்ந்தது. அது துரோகியாக மாறி நகர மறுத்தது. இருப்பினும் நாற்புறங்களிலும் சுழன்று சுழன்று போரிட்டு வாளால் எதிரிகளை வெட்டி வீழ்த்தினாள் ஜான்சி.

அப்போது பின்னிருந்து ஒருவன் ஜான்சி ராணியின் தலையை வாளால் வெட்டினான். அவரது தலையின் இடப்பாகம் பிளந்தது; ரத்தம் பெருகியது. மானமுள்ள மகாராணி வீரத்துடன் அப்பொழுதும் தன் கை வாளை விட்டுவிடவில்லை. மற்றொருவன் தன் மார்பில் குத்திய பொழுதும் குத்தியவனை வெட்டி வீழ்த்தினார் அந்த வீர மங்கை.

தன் முடிவு நெருங்கிவிட்டது என்று உணர்ந்தாள். தன் உடல் பகைவர்களிடம் சிக்கிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள் ஜான்சி ராணி. இது பற்றி முன்னரே தன் சகாக்களிடம் கூறியிருந்தாள். அவள் தலை கீழே சாயும்முன் அருகிலிருந்த குடிசைக்கு அவளைக் கொண்டு சென்றனர். அங்குதான் அவள் உயிர் இப்பூவுலகை விட்டுப் பிரிந்தது. 1858ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி இந்த வீரமரணம் நடந்தேறியது. இதைக்கண்ட மக்கள் தங்களது ஈடுஇணையற்ற தலைவியின் இழப்பை நினைத்து கண்ணீர் வடித்தனர்.

புறநானூற்றுப் புலவர் பூங்கணுத்திரையார் பின்வருமாறு பாடினார்:

மீன்உண் கொக்கின் தூவி அன்ன
வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறுஎறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே! கண்ணீர்
நோன்கழை துயல்வரும் வெதிரத்து
வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே.

(புறம் : 279)

(பொருள்: மீனை உண்ணும் கொக்கின் இறகு போன்று மிகவும் வெண்மையான கூந்தலையுடைய மூதாட்டியின் புதல்வன் மிக்க இளையவனாக இருப்பினும், போரில் தன்னை எதிர்த்து வந்த யானையைக் கொன்று தானும் அப்போரில் விழுப்புண்பட்டு இறந்தான். அச்செய்தியைக் கேட்ட அவள் தாய், அவனைப்பெற்ற காலத்திலும் பெரிதும் மகிழ்ந்தவளாய்க் கண்ணீர் பெருக்கினாள். அவள் கண்களிலிருந்து பெருகிய துளிகள் வலிமையான மூங்கிலையுடைய வெதிர மலையில் பெருமழை பெய்ய, அது அம்மூங்கில் இலைகளிலிருந்து சொட்டும் நீர்த்துளிகளினும் மிகுதியாக இருந்தது).


குறிப்பு:


திரு.வி.சண்முகநாதன்,  மேகாலயா மாநில முன்னாள் ஆளுநர்; தமிழக ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர்களுள் ஒருவர்.

No comments:

Post a Comment