16/11/2021

தமிழும் சனாதனமும்

-அரவிந்தன் நீலகண்டன்


கருப்பனும் வெள்ளையனும்

 “அவன் உன்னை உயிருக்கு உயிராக காதலிக்கிறான் தெரியுமா?”

 “யார் அவன்?”

 “அந்த மலைநாட்டுக்காரன்...”

 “எந்த மலை?”

 “எந்த மலையா? மலை முழுக்க காடுகளால் பச்சைப் பசேலென இருக்குமே அந்த மலை. பச்சை மால் என கிருஷ்ணன் போல மலையும் அதில் ஓடும் வெள்ளருவி அவன் அண்ணன் பலராமன் போலவும் இருக்குமே, அந்த மலை. அம்மலைத் தலைமகன் உன்னைத் தேடி தேடி வருகிறான். உன் கடைக்கண் பார்வை கிடைக்காதா என்று உருகுகிறான். அவன் நல்லவன். உறுதியானவன். நீயோவென்றால் அவனைப் பார்க்கவே மாட்டேன் என்கிறாய். நான் சொல்வதையாவது நம்பு. என்னை உன் தோழியாக ஏற்றுக் கொண்டாயென்றால் என் வார்த்தைகளில் நம்பிக்கை வேண்டும்...”

-இப்படிப் போகிறது ஓர் உரையாடல், தோழிக்கும் தலைவிக்கும். நற்றிணைப் பாடல்; கபிலரின் பாடல். துறை: தலைவிக்கு தோழி குறை நயப்பக் கூறியது.
 
காதலை சொல்லும் பாடல். சமயம் குறித்த பாடல் அல்ல. இயற்கையை வர்ணிக்கிறாள் தோழி - மலைக்கு கண்ணன். அருவிக்கு அவன் அண்ணன் பலராமன். இந்தியா முழுக்க கண்ணன் கருமை, அண்ணன் பலராமன் வெள்ளை. சங்க இலக்கியத்தில் மலைக்கும் அருவிக்குமான வர்ணனையில் அதே சித்திரம்.

நேரடியாக பக்தியைச் சொல்லும் பாடல்களைப் போல முக்கியமானது இது - எந்த அளவு சனாதன ஹிந்து சமயம் சங்கத் தமிழரின் வாழ்வின் பிரிக்கவே முடியாத உயிர் நாடியாக விளங்கியது என்பதற்கான ஒரு தரவு இது.

இதோ அந்தப் பாடல்...

மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்
வாலியோன் அன்ன வயங்குவெள் அருவி
அம்மலை கிழவோன் நம்நயந்து என்றும்
வருந்தினன் என்பதோர் வாய்சொல் தேறாய்.

***

மெல்லத் தொடங்கியது இருப்பின் இரவு

எத்தனை எத்தனை பிரபஞ்சங்கள்!
அவற்றில்தான் எத்தனை எத்தனை இயல்விதிகள்!
ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் எத்தனை விஸ்தீரண அண்டவெளிகள்!
அவற்றுள் ஆங்காங்கே அகணித விண்மீன் கூட்டங்கள்! அவற்றுள் தாரகை மண்டலங்கள்! அவற்றுள் கோள்கள். அக்கோள்களில் ஏதோ ஒரு கோளில் உயிர்கள்!
இப்படி எத்தனையோ தாரகை மண்டலங்களில் எத்தனை எத்தனை கோள்களில் என்னென்ன உயிரினங்கள்!
எந்த ஒரு கோளிலும் கூட எத்தனை முடிவிலி உயிரினத்தொகைகள்! அவற்றின் விசித்திரங்கள்!

இவை அனைத்தும் முடிந்துறங்க
இருப்பவை யாவும் கரைந்து
மூல இயற்கையில் மூழ்கி
கண்ணயரும் இரவு.

மாபெரும் பிரளய இரவு.

உயிரெனும் இயக்கம் அதன் எண்ணிலி முடிவிலி விகசிப்புகளனைத்தும் பின்னிழுத்து மொட்டுக்களாய், அம்மொட்டுக்கள் நூல் கோர்த்து ஆரத்தில் அடங்கி அமிழும் சம்கார இரவு.

அந்த இரவிலும் ஒரு ஆட்டம்! எங்கெங்கும் கண்களாய் எத்திசையும் இயக்கமாய் அந்த இரவில் அவன் ஆடுகிறான்.

அனைத்திருப்பும் நாத அதிர்வென்றான் ஒரு இயற்நூலோன். அந்த நாதப்பறை முழக்கி சம்ஹார இரவில் அவன் ஆடுகிறான்.

அவன் இறைவன். இமயமுறை ஈசன். ஆனால் காலவெளியிலும் நில வரையறையிலும் அடங்காத முக்கண்ணன்.

அவன் ஆட ஆட அங்கு அனைத்தும் அடங்குகிறது. இன்மை இருப்பை விழுங்கும் பின்னணியில் அவன் நடனம்.

இன்மையில் தனிமையில் அவனும் கரைந்திடுவானெனில் இனி இருப்பென எதுவும் முகிழ்த்திட முடியாது.

ஆனால்-

அவன் கொடுங்கொட்டி ஆட அவனுடன் இணைந்து இயக்கமேதும் தீண்டாது உறைகிறாள் அவள்.

அவளால் அவன் இன்மையில் கரைந்திடான். அனைத்தும் இன்றான பிறகும் அவள் இருப்பாள். அதனால் அவன் இருப்பான். அவள் கண் பார்வையால் அவன் எழுவான்.

எனவே சிருஷ்டி மீண்டும் உதயமாகும்.

இப்பெரும் அதி பிரபஞ்ச கூத்தை அரங்கக் கூத்தாக்கி ஆடுகிறான் பறையூர் கூத்த சாக்கி்யன். இதோ இமயம் உறை இறையவனின் சம்ஹாரக் கூத்து

திருநிலைச் சேவடிச் சிலம்புவாய் புலம்பவும்
பரிதரு செங்கையிற் படுபறை ஆர்ப்பவும்
செங்கண் ஆயிரம் திருக்குறிப்பு அருளவும்
செஞ்சடை சென்று திசைமுகம் அலம்பவும்,

இப்படி எல்லாம் அவன் ஆட ஆட பிரபஞ்சமும் காலமும் வெளியும் பிரபஞ்ச மாறிலிகளும் கரைய கரைய, அவள், அவனோடு பாகம் பிரியாது இருக்கும் அவள் எப்படி இருக்கிறாள்?

பாடகம் பதையாது சூடகம் துளங்காது
மேகலை ஒலியாது மென்முலை அசையாது
வார்குழை ஆடாது மணிக்குழல் அவிழாது
உமையவள் ஒருதிறன் ஆக ஓங்கி
இமையவன் ஆடிய கொட்டிச்சேதம்

-இதைத்தான் பறையூர் கூத்தச் சாக்கையன் ஆடுகிறான். இங்கு இளங்கோவடிகள் வார்த்தைகளால் வடித்து தரும் சித்திரம் அன்னையின் திருநாமங்களில் ஒன்றிற்கான வார்த்தைச் சித்திரம். தியான வடிவை நமக்குத் தருகிறார் இளங்கோவடிகள்.

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தின் 571 ஆவது திருநாமம்-  ‘மஹா ப்ரளய ஸாக்ஷிணி’. செயலில் அவள் பங்கு கொள்ளவில்லை. அவள் அச்செயலால் பாதிப்பும் அடையவில்லை. ஆனால் அவள் அச்செயலின் அனைத்து இயக்கங்களினூடாகவும் பார்க்கிறாள். பார்த்துக்கொண்டே இருக்கிறாள். விஸ்வ சாட்சியாக இருப்பவள் அவள். இருப்புக்கும் இருப்பின் அனைத்தும் இயக்கங்களுக்கும் அவள் விஸ்வசாட்சிணி. ஆனால் அவளுக்கு சாட்சி என்று எதுவும் இல்லை. சாட்சி வர்ஜிதா.

ஆனால் இருப்புக்கு மட்டுமல்ல, இருப்பின் சம்ஹார இரவுக்கும் அந்த ஊழிக்கூத்து உகந்தாடும் இறைவருக்கும் அவள் சாட்சி.

மகா பிரளய சாட்சிணி. 

இப்போது மீண்டும் சிலப்பதிகார வரிகளைப் படியுங்கள்:

திருநிலைச் சேவடிச் சிலம்புவாய் புலம்பவும்
பரிதரு செங்கையிற் படுபறை ஆர்ப்பவும்
செங்கண் ஆயிரம் திருக்குறிப்பு அருளவும்
செஞ்சடை சென்று திசைமுகம் அலம்பவும்,
பாடகம் பதையாது சூடகம் துளங்காது
மேகலை ஒலியாது மென்முலை அசையாது
வார்குழை ஆடாது மணிக்குழல் அவிழாது
உமையவள் ஒருதிறன் ஆக ஓங்கி
இமையவன் ஆடிய கொட்டிச்சேதம்
பால்தரு நால்வகை மறையோர் பறையூர்க்
கூத்தச் சாக்கையன் ஆடலின் மகிழ்ந்து...

சனாதன தர்மம் இல்லாமல் தமிழை அனுபவிக்க முடியாது. படித்துக் கொண்டிருக்கும் போதே உடனே மனதில் வந்தது மஹா ப்ரளய ஸாக்ஷிணி.

பேராசிரியர் கனகராஜ் ஈஸ்வரன் அவர்கள்,  இப்பாடலுக்குத் தொடர்புடைய மற்றொரு திருநாமத்தை நினைவூட்டினார். 232 ஆவது திருநாமம்- ‘மஹேச்வர மஹாகல்ப மஹாதாண்டவ ஸாக்ஷிணி’

மஹா கல்பம் என்பது பிரபஞ்சம் யாவும் அழிந்து போகும் மஹா பிரளயம். மஹேச்வர மஹா கல்பம் - பிரபஞ்சமனைத்தும் ஈஸ்வரனிடம் மறையும் திரோதானம். அப்போது ஈஸ்வர தாண்டவத்தின் ஒரேசாட்சியாக அன்னையே இருக்கிறாள்.


No comments:

Post a Comment