16/11/2021

கர்மயோகி - விளம்பரம்

-மகாகவி பாரதி


(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 64)


    தமிழின் முன்னோடி இதழாளரான மகாகவி பாரதி, பத்திரிகைத் துறையில் பல முன்னோடி முயற்சிகளை மேற்கொண்டவர். ஆங்கில பத்திரிகையை தமிழாக்கம் செய்து வெளியிடுவதற்காகவே ஒரு பத்திரிகையை நடத்தியவர் என்பது கீழ்க்கண்ட விளம்பரத்திலிருந்து தெரிகிறது. பாரதி ஆசிரியராக இருந்த ‘விஜயா’ பத்திரிகையில் வெளிவந்த விளம்பரம் இது (கீழே...).  
    தான் நடத்தும் பத்திரிகையில்  ‘விஷயதானம் செய்பவர்’ என்று  தன்னையே குறிப்பிடும் விளம்பர உத்தியையும் கவனிக்கவும். 
 அது மட்டுமல்ல,  ‘மாணவர்களுக்கு குறைந்த சந்தா’ என்று புதிய அணுகுமுறையை அவர் அறிமுகப்படுத்தி இருப்பதையும் இங்கு காணலாம்.
    பொதுவாகவே மகாகவி பாரதி பணிபுரிந்த பத்திரிகைகளில்  ‘சுதேசமித்திரன்’ தவிர்த்த பிற அனைத்துமே , பெயரளவில் ஆசிரியர் வேறொருவராக இருந்தாலும், பாரதியை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கியவை என்பது குறிப்பிட வேண்டிய தகவல்.
-ஆசிரியர் குழு
***

கர்மயோகி

    இனிய, தெளிய, தமிழ் நடையில் பிரசுரமாகும் மாதாந்தப் பத்ரிகை. கல்கத்தாவில் ஸ்ரீமான் அரவிந்த கோஷ் ‘கர்மயோகின்’ என்ற பத்ரிகையில் எழுதும் உபந்யாசங்களும், குறிப்புகளும் இதில் அனைவருக்கும் பொருள் விளங்கும்படி எளிய நடையில் மொழிபெயர்த்துக் கொடுக்கப்படும். இது தவிர வேறு பல வியாசங்களும் சரித்திரங்களும் வர்த்தமான குறிப்புகளும் தேச பக்தி பாடல்களும் அடங்கியிருக்கும். சித்திரங்கள் பதிப்பிக்கப்படும்.

    ஆரிய தர்மம், பாரத நாட்டு கலைகள், தொழில்கள், காரியங்கள், சாஸ்திரங்கள், ராஜாங்க விஷயங்கள் முதலானவற்றையெல்லாம் பற்றி விவகரிப்பது.

    விஷயதானஞ் செய்வோர்:
    ஸ்ரீ ஸி.சுப்பிரமணிய பாரதி

    சந்தா: வருஷமொன்றுக்கு 3 ரூபாய், வெளிநாடுகளுக்கு ரூபாய் 4.

    ஏழை மாணாக்கர்களுக்குக் குறைந்த சந்தா. இதை எழுதிக் கேட்டுக்கொள்ளலாம்.

கார்யகர்த்தா (மானேஜர்)
‘கர்மயோகி’ கார்யஸ்தலம்
வெள்ளாளத் தெரு,
புதுச்சேரி

No comments:

Post a Comment