16/11/2021

ஹிந்து என்ற சொல்: தேவையற்ற விவாதம்

-தில்லை கார்த்திகேயசிவம்

    
ஹிந்து என்ற சொல்லுக்கான பழமையான ஆதாரங்கள்

    
    அண்மைக்காலமாக, தமிழகத்தில் (திமுக ஆட்சிக்கு வந்த பிறகு) ஹிந்து சமயம் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் பல வகையிலான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அவற்றுள் ஒன்றான மறைமுகத் தாக்குதல், ஹிந்து சமுதாயத்தில் உள்ள ஒரு சிலரைக் கொண்டு, சைவ- வைணவ பேதம், சைவ- சித்தாந்த சைவ பேதம், தமிழ்- சம்ஸ்கிருத பேதம் ஆகியவை தூண்டிவிடப்படுவதாகும். 

    அந்த வகையில், ஹிந்து என்பது ஒரு மதமல்ல என்றும், அந்தச் சொல்லே அயலார் நமக்கு அளித்த வார்த்தை என்றும் ஒரு பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது. இதன் பின்புலத்தில் உள்ள நாசகாரச் சதியை உணர்ந்து எச்சரிக்கிறார், இறை வழிபாட்டில் அனுபவம் மிக்க திரு. தில்லை கார்த்திகேய சிவம். அவரது முகநூல் பதிவுகளில்  இருந்து...

-ஆசிரியர் குழு
***
ஹிந்து என்ற சொல் யாரால் கொடுக்கப்பட்டது?
-ஸ்ரீ குருஜி கோல்வால்கர்

.....‘ஹிந்து’ என்ற சொல் சமீபகாலத்தில் தோன்றிய சொல் என்பதோ, அது அந்நியர்களால் நமக்கு அளிக்கப்பட்ட பெயர் என்பதோ சரியல்ல. உலகிலேயே மிகப் பழமையான நூலான ரிக் வேதத்தில் வரும் ‘ஸப்தஸிந்து’ என்ற பெயர், நமக்கும் நம் நாட்டிற்கும் அடைமொழியாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதைக் காண்கிறோம். மேலும், சம்ஸ்கிருத மொழியில் உள்ள ‘ஸ’ என்ற எழுத்து, புராதன மொழிகளிலும் ஐரோப்பிய மொழிகளிலும் ‘ஹ’ என்று மாறி வருவது நாம் அறிந்ததே. எனவே அந்தச்சொல், ‘ஹப்தஹிந்து’ என்று மாறி, பிறகு ஹிந்து என்ற சொல்லாக வழங்கி வருகிறது. ‘ஹிந்து’ என்ற சொல் நம் முன்னோர் இட்ட பெயர். பிற்காலத்தில் அந்நியர்களும் இதே பெயராலேயே நம்மை அழைத்தார்கள்.

    பிருகஸ்பதி ஆகமத்தின்படி, ஹிமாலயம் என்பதிலிருந்து ‘ஹி’ என்ற எழுத்தையும் இந்து ஸரோவர் (குமரிக்கடல்) என்பதிலிருந்து (இ)ந்து என்ற எழுத்துக்களையும் எடுத்துக்கொண்டு ‘ஹிந்து’ என்ற பெயரைத் தோற்றுவித்திருக்கிறார்கள். இவ்வாறு தேசம் முழுவதையும் குறிக்கும் சொல்லாகிறது ‘ஹிந்து’.

ஹிமாலயம் ஸமாரப்ய யாவதிந்து ஸரோவரம்
தம் தேவநிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம் ப்ரசக்ஷ்யதே /
(பிருகஸ்பதி ஆகமம்)

(பொருள்: இமயமலை முதல் இந்து ஸரோவரம் (குமரிக்கடல்) வரை பரந்துள்ளதும், இறைவனால் தோற்றுவிக்கப்பட்டதுமான நிலப்பரப்பு ஹிந்துஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது)

நெருக்கடிகள் மலிந்த ஆயிரம் ஆண்டுக் காலத்தில் ஹிந்து என்ற சொல்தான் நம்மைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. பிருதிவிராஜ் காலத்திலிருந்து நம் நாட்டுக் கவிஞர்கள், சரித்திர ஆசிரியர்கள், சமுதாயத் தலைவர்கள், அரசியல் நிபுணர்கள் அனைவரும், நம்மையும் நமது தர்மத்தையும் ‘ஹிந்து’ என்ற பெயரால்தான் குறிப்பிட்டு வருகின்றனர்.

சுதந்திரப் போராட்ட வீரர்களான குரு கோவிந்த சிம்மன், வித்யாரண்யர், சிவாஜி போன்றோரின் கனவு ‘ஹிந்து ஸ்வராஜ்ய’த்தை நிறுவுவதே. ‘ஹிந்து’ என்ற சொல் அப்படிப்பட்ட வீரர்களின் லட்சிய வாழ்க்கை, தீரச் செயல்கள் அனைத்தையும் நம் நினைவிற்குக் கொண்டு வருகிறது. இவ்னவாறு ‘ஹிந்து’ என்ற சொல், நம் மக்களின் ஒருமைப்பாட்டையும் உயர்வையும் சிறப்பையும் குறிக்கும் சொல்லாக உள்ளது. நம் சமுதாயத்தைக் குறிப்பது ‘ஹிந்து’ என்ற சொல்லே.

(ஆதாரம்: ஸ்ரீகுருஜி சிந்தனைக் களஞ்சியம், பாகம் 11, பக்: 129-130)

***
இந்து என்றால் வேதநெறி 

1) ஹிந்து மதம் என ஒரு மதம் இல்லை என திரும்பத் திரும்பக் கூறுவதும், அதை நம் ஆன்மிகவாதிகள் சிலரும் ஆமாம் என கூறுவதும் தவறு. இது கோயபல்ஸ் தியரி போல் ஒரு பொய்யை திரும்பத் திரும்பக் கூறி உண்மைபோல் நம்பவைப்பது. இந்து என்ற சொல் நம் தர்மத்தில் பல இடங்களில் உள்ளது.

2) வேதத்தை அடிப்படையாகக் கொண்டது ஹிந்துமதம். ஒருவர் சைவம், வைணவம், கௌமாரம் என எப்படிக்கூறிக்கொண்டாலும் அது வைதிக சமயமே. அதாவது ஹிந்து தர்மமே.

3) ஹிந்து மதம் இல்லை, சைவம், வைணவம், சாக்தம் என சமயமே இருந்தது என நாத்திகர்கள் கூறினாலும் சரி, ஆன்மிகர்கள் கூறினாலும் சரி, அது பிரித்தாளும் சூழ்ச்சியே. அதாவது நோக்கம் இந்துக்கள் பலம் பெற்றுவிடக் கூடாது என்பதே.

எனவே இவ்விடத்தில் நோக்கத்தைப் பாருங்கள். அந்த நோக்கம் நீங்கள் சைவராகிலும், வைணவராகிலும் உங்கள் எதிர்கால ஆன்மிக நிலைக்கு உகந்தது அல்ல என்பதை உணருங்கள்.

4)  ‘வைதீகம்’ என்றும்  ‘வேதநெறி’ என்றும் எமது சைவத்தமிழ் திருமுறைகளிலும், சித்தாந்த சாத்திரங்களிலும் ,வைணவப் பிரபந்தங்களிலும் நாயன்மார், ஆழ்வார்களால் பாடப்பட்டுள்ளதே, அதுவே இன்று ‘இந்து’ என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது. இந்தப் புரிதல், தெளிவு அவசியம்.

5)  ஹிந்திமொழி பேசுபவர்களுக்கு உரியதோ, அல்லது அவர்களைச்  சுட்டுகின்ற சொல்லோ அல்ல ஹிந்து. வேதத்தை கடைப்பிடிப்போர் அனைவரும் இந்துக்கள்.

6) சுருக்கமாய்க் கூறினால் இந்து என்றால் வைதீகம் அல்லது வேதநெறி. சைவம் உள்ளிட்ட சமயங்கள் அனைத்தும் வேதநெறி சமயங்களே.
 நால்வேதங்களை நம்புகின்ற பின்பற்றுகின்ற அனைவரும் வைதீகர்களே; இந்துக்களே. இதற்குள்  சைவர்கள்,  ஸ்மார்த்தர்கள்,  வைணவர்கள் யாவரும் அடங்குவர். எனவே இந்து என்பதில் எவ்வித குழப்பமும் ஆன்மீகவாதிகளுக்கு இருக்கக் கூடாது.

சிவார்ப்பணம்.

No comments:

Post a Comment